Home Blog Page 3

அக்ஷயபாத்திரம் கடிதங்கள்-3

அக்ஷயபாத்திரம் உணவு

அக்ஷயபாத்திரம் – கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார்,

 

அஷ்யபாத்திரம் -உணவு  கட்டுரையை மன நெகிழ்வோடுதான் வாசித்தேன் .அதுவும் “ஆகவே எவர் எதன்பொருட்டு சோறிட்டாலும் அதை ஆதரிப்பவனாகவே இருந்திருக்கிறேன். அதன்பொருட்டே இஸ்கானின் இந்த உணவுக்கொடையை முழுதுளத்துடன் வரவேற்க கடமைப்பட்டிருக்கிறேன்.” என்னும் வரிகளை வாசிக்கும்போது கண்ணில் கண்ணீர் பொங்கியது.

 

எனது 21 வயது வரை ஒரு கத்தோலிக்க அநாதை இல்லத்தில் தான் வளர்ந்தேன்.சாப்பிட்டேன்.அப்போது வெங்காயம் போடுகிறார்களா? பூண்டு போடுகிறார்களா? என நான் எண்ணியது கூட  இல்லை.  சோறு போடுகிறார்களே என சந்தோஷத்தோடு தான் சாப்பிட்டேன். வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு போலியாக கத்துபவர்களுக்கு உண்மையிலே பசி என்றால் என்ன என்று தெரியுமா?

 

இஸ்கான் உணவை சாப்பிட்டு படிக்கும் குழந்தைகளில் ஒருவராவது ஒரு நாள் நன்றியோடு உங்களுக்கு கடிதம் எழுதுவார்கள்.

 

 

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்

 

 

அன்புள்ள ஜெ,

இஸ்கான் அமைப்பின் அட்சய பாத்திரம் உணவு உதவி பற்றி நீங்கள் எழுதியதை வரவேற்கிறேன்.

சென்னையில் இருக்கும் ஒரு அரசு பள்ளியிலிருந்து, எங்கள் அமைப்புக்கு நான்கு வருடங்கள் முன்பு, ஒரு உதவி கேட்டு விண்ணப்பம் வந்தது. பொதுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பள்ளி முடிந்த பின்பு சிறப்பு வகுப்புகள் எடுக்க தயாராக, ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால், பள்ளியில் இரவு தங்கி பயிலவேண்டுமென்றால், இரவு உணவு ஏற்பாடு செய்யவேண்டும். பொதுதேர்வு நெருக்கத்தில் அதாவது, பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை, உணவு வழங்கிட முடியுமா, என்றார்கள்.  ஏழ்மையான பின்னணியில் உள்ள மாணவர்கள் என்பதால், இந்த உணவு உதவி அவர்களுக்கு பெரும்துணையாக இருக்கும் என்றார்கள். ஆசிரியர்களின் நோக்கத்தை கண்டு, அந்த உதவியை நண்பர்கள் துணையுடன் செய்யதொடங்கினோம். அந்த வருடமே, தேர்ச்சி சதவிகிதம் எழுபதிலிருந்து தொண்ணூறு ஆனது. பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய குடும்பங்களிலிருந்து படிக்கவரும் அந்த மாணவர்கள், பள்ளி இறுதிவகுப்பில் தோல்வியடைந்தால், பெரும்பாலும் முடிவடைவது குற்றசெயல்களில்தான் என்கிற சூழலில், இந்த உதவி எத்தகையது என்பதை உணர முடிந்தது. இன்று வரை அந்த உதவியை செய்துவருகிறோம்.   தமிழ் நாட்டின் தலைநகரிலேயே, இதுதான் அரசுபள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சூழல்.

இந்த சூழலில், இஸ்கான் என்றல்ல, எந்த அமைப்பு உணவிட முன்வந்தாலும், அதை என்னால் குறை சொல்ல இயலாது. அதை வரவேற்பதே கடமை என்று நினைக்கிறேன். அந்த அமைப்புக்கு என்று இருக்கும் விதிகளின்படி தானே, அந்த உணவு இருக்கும்?. தவிர, இஸ்கான் அமைப்புக்கு தானம் தரப்படுவதாக சொல்லப்படும் இடம், இந்த உணவை தயாரிக்க தானே தவிர, கோவில் கட்ட அல்ல. மொத்த உணவு செலவில் இருபது சதவீகிதத்திலிருந்து முப்பது சதவீகிதம் வரையே அரசு தர இருக்கிறது.  எழுபது சதவீகித பணத்தை இஸ்கான் அமைப்பே தருகிறது. இந்த சூழலில் டெண்டர் விட்டு, வியாபர நிறுவனங்களை தேர்ந்தெடுக்கலாமே என்பதெல்லாம் அபத்தமின்றி வேறு என்ன?

இப்படி பூண்டு வெங்காயமின்றி, ஒருவேளை உணவு கொடுப்பதுமூலம், பெரிய சதி செய்கிறது இஸ்கான் என்று கருதினால், அந்த சதியை மாலை சிற்றுண்டியாக தந்தூரி சிக்கன் பீஸ் ஒன்று கொடுப்பது மூலம் சரி செய்யலாமே, இதர அமைப்புகள்?  அல்லது நல்ல வெங்காயம் போட்ட ஒரு ஆம்லெட் இதை நிகர் செய்துவிடும்தானே?

எப்படியாவது குறைகூறி, ஏழை மாணவர்களின் வயிற்றில் அடிக்காதீர்கள் என்பது தான் வேண்டுகோள்.

ரா.செந்தில்குமார்.

 

– Senthilkumar, Tokyo

http://www.manavelipayanam.blogspot.com

 

அன்புள்ள ஜெயமொகன்,

 

அக்‌ஷய பாத்ரா காலை உணவுத் திட்டம் பற்றிய கட்டுரையைப் படித்தேன். ஒவ்வொருவரும்தனக்கு வசதியான,இசைவான,லாபகரமான கோணத்தில் மட்டுமே ஒவ்வொருபிரச்னையையும் பார்க்கிறார்கள்.நீங்கள் அவர்களுடைய கோணம் உட்பட எல்லாகோணங்களிலும் யோசிக்கிறீர்கள் என்பதே என்னை ஈர்த்த முதன்மையான ஒன்று.

 

நிறைய உண்மைகளை சொல்லியிருக்கிறீர்கள்.குழந்தைகளின் கோணத்தில் இந்தபிரச்னையை அணுக வேண்டும் என்பது முக்கியமான கருத்து.காலை உணவு சாப்பிடாமல்பள்ளிக்கு வரும் குழந்தைகளை நான் அறிவேன்.(15 ஆண்டுகளுக்கு முன் காலை ஒன்பதுமணிக்கு பள்ளிகள் தொடங்கிய காலத்தில் பல குழந்தைகள்– சாப்பிட வாய்ப்புள்ளவர்கள்உட்பட–காலி வயிற்றுடன் தான் பள்ளிக்கு வந்தனர்.) காலி வயிறு கல்வி பெற உகந்ததல்ல.சத்துணவு ஏழைக் குழந்தைகளுக்கு பெரும் வரப் பிரசாதம் என்பதில் மறுப்பில்லை.ஆனால் தரத்தை உத்தரவாதமாக சொல்ல முடியாது.சில பள்ளிகளில் சிறப்பாகவே இருந்தது.சில மாணவர்கள் பாதி சோற்றை கீழே கொட்டி விடுவதை சற்று முயன்றால் யார்வேண்டுமானாலும் காண முடியும்.ஒரு பள்ளியில் கீரையோடு புல் இருந்தது கண்டு அதிர்ந்துபோனேன். மக்கள் இதை சரி செய்ய முடியும். எதையும்.தலைமை ஆசிரியர்களால் ஒருஅளவுக்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது.அரசியல் தலையீடு யாரையும் எதுவும் செய்யஅனுமதிக்காது.

 

மதிய உணவைப் போலவே காலை உணவு மிகவும் முக்கியமானது என்பது என் எண்ணம்.பத்து ஆண்டுகளுக்கு முன் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மடத்தின் பள்ளியைச் சேர்ந்தஒரு ஸ்வாமிஜியுடன் பேசிக் கொண்டிருந்த போது அவருடைய பள்ளியில் ஏழை மாணவர்களுக்கு காலையில் தரமான உணவு மடத்தின் சார்பில் வழங்குவதாக சொன்னார்.அதைக்குறிப்பிட்டு காலை உணவு வழங்குவதன் அவசியம் குறித்து இயக்குநர் நடத்திய கூட்டத்தில்குறிப்பிட்டேன்.அதுவே என்னால் இயன்றது.

 

இஸ்கான் காலை உணவு வழங்கும் திட்டம் மிகவும் பயனுள்ளது.உள் நோக்கம் கொண்டஎதிர்ப்புகளால் அது சிறிதும் தொய்வடையாமல் மேலும் சிறப்பாக தொடர்ந்து நடைபெற வேண்டும்.

 

சாந்தமூர்த்தி.

மன்னார்குடி.

 

அன்புள்ள ஜெ

அக்ஷய பாத்திரம் குறித்த தங்கள் கட்டுரை வாசிக்கும்போது மனம் நெகிழ்ந்தது. என்னவோ தெரியவில்லை; குழந்தைகளின் பசி பற்றி யோசிக்கும் போது அழுகை வந்து விடுகிறது. நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்னும்போது நம் மேலேயே சலிப்பும் கோபமும் வருகின்றன.

ஒரு நற்செயல் நடைபெறும்போது உள்நோக்கங்களைக் கற்பித்து எதிர்க்கும் கயமை அதிர்ச்சி தருகிறது.   வெங்காயம், பூண்டு கலந்த உணவோ ,ஹலால் முறையான உணவோ , தேவனுக்கு நன்றி தெரிவித்தபின் தரப்படும் ரொட்டியோ , பகுத்தறிவு முறையில் சுடப்பட்ட அப்பமோ எதுவாயினும் குழந்தைகளுக்கு உணவு தருவதை எதிர்க்க எவருக்கும் உரிமை இல்லை

“ கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதும் இன்றிக் கெடும்”  என்னும் குறள் நினைவுக்கு வந்தது. வள்ளுவரின் அறச்சீற்றம் பி பி சி முதலிய ஊடகங்களுக்கு என்றுமே புரியாது.

 

தங்கள் எழுத்தின் சிறப்பு  தகவல்களை இணைத்துக் கொள்வது. இஸ்கான் – சைதன்யர்- அவரது தென்னாட்டுப் பயணம். – அவர் தங்கள் திருவட்டாறில் முன்னோரின் இல்லத்திற்கு அருகில் தங்கி இருந்த செய்தி என்று, தகவல்களை இணைத்து தரிசனமாக ஆக்கிக் கொள்வது சிந்தனைப் பயிற்சியாக இருக்கிறது

“ஆகார சுத்தௌ சத்வ சுத்தி” என்னும் சாந்தோக்ய உபநிடத சூத்திரத்திற்கு ராமானுஜர் “உண்ணும் உணவே மனதைச் செம்மை செய்கிறது “ என்பதால் உணவை கவனிக்க வேண்டும் என்று பொருள் சொன்னார். (ராமானுஜரின் தாக்கம் சைதன்யரின் கொள்கையில் இருந்தது என்று நினைக்கிறேன்). சங்கரர் “மனதிற்கு உணவாகிய எண்ணங்களை கவனியுங்கள்” என்றார்.

எல்லாவற்றையும் சமன்வயப்படுத்திக் கொண்டு தான் கண்ணுக்குத் தெரியாத நதியாக இந்துமதம் ஓடிக்கொண்டிருந்திருக்கிறது

பிராமணராகிய ராமகிருஷ்ண பரமஹம்சர்  பிறப்பு சார்ந்த அகந்தை வந்துவிடக்கூடாது என்பதால் துப்புரவுத் தொழிலாளரின் வீட்டுக் கழிவறையை (அவர் தடுப்பார் என்பதால் ) இரவு நேரத்தில் சுத்தம் செய்து தன் நீண்ட தலைமுடியால் துடைத்தார். இதை பெருமிதத்துடன்  சுவாமி விவேகானந்தர்  பறை சாற்றுகிறார்.

காயஸ்த குலத்தைச் சேர்ந்த விவேகானந்தர் (இன்றைய அளவுகோலில் பிற்படுத்தப்பட்ட பிரிவு) தனது குருநாதரின் அழைப்பை ஏற்று துறவு மேற்கொள்கிறார். தந்தை இறந்தவுடன் கொடும் வறுமை.  ஞானிகளுக்கும் வீட்டை விட்டு தவத்திற்குள் செல்லும்  காலம் கொடிய நினைவுதான்.

குருதேவர் இருக்கும் காளி கோயிலுக்கும் வீட்டிற்கும் வந்து போய்க்கொண்டிருக்கும் இடைக்காலத்தில் ஒரு நாள்  வீட்டில் அன்னை தான் உண்ணாமல்  நரேன் உண்பதற்காக எடுத்து வைத்திருந்த மான் கறியை உண்டதைப் பதிவு செய்கிறார். (ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்) பின்னர் அலையும் துறவியாக இந்தியா முழுவதும் சுற்றி வருகையில் கொடிய பசியில் ஒரு முஸ்லிம் முதியவர் வழங்கிய வெள்ளரிக்காயை நன்றியுடன் நினைவுகூர்கிறார்.

பசியை உணர்ந்து, தற்காலத் தேவையை அறிந்த விவேகானந்தர் –மரபின் கெட்டித் தன்மையை உடைக்கவும் மனித நேயத்தை மதத்தில் கலக்கவும்  சக்தியை ராமகிருஷ்ணரிடம் இருந்து பெற்றார்.  ராமகிருஷ்ண இயக்கம் பிரம்ம சமாஜத்தை உட்கிரகித்து செரித்து விடவில்லை என்றால் தேசத்தின் போக்கு வேறு மாதிரி ஆகி இருக்கலாம். அனைத்து மத சமரசத்தை ராமகிருஷ்ணர் சுய அனுபவத்தில் நேருக்கு நேர் பயிற்சியின் மூலம் நிரூபித்தார். அன்பின் அடிப்படையில் பரப்பினார்.

வங்கத்தில் உணவு முறை வேறுபட்டது. ராமகிருஷ்ணர் அன்னை காளிக்கு அர்ப்பிக்கப் பட்ட ஆட்டுக்கறியை கொஞ்சமாக எடுத்துக் கொள்வார். (சாத்விக உணவிற்கு உடல் பழக்கப் பட்டு விட்டதால் அதிகம் எடுத்துக் கொள்ள முடியவில்லை என்கிறார்.) ராமகிருஷ்ணரின்  துணைவி தூய அன்னை சாரதைக்கும் அவருக்குமான தூய உறவு அக்காலத்தில் ஒரு பெண்ணுரிமைப் புரட்சி. சாரதையும் சாதிக் கொடுமைகளை உடைத்தார். மிகக் குறுகிய அறையில் தலைக்குமேல் தொங்கும் உரியில் குருதேவருக்கு சமைப்பதற்காக வைத்திருக்கும் மீன்கள் விளையாடிக்கொண்டிருப்பதைப் பதிவு செய்கிறார்.

 

துறவிகள் சாதி- வர்ணம் கடந்தவர்கள். துறவிகளின் சாதிப் பின்னணியைப் பேசும் அறவீழ்ச்சியை தற்கால விவாதங்கள் ஏற்படுத்துகின்றன.

 

புல்லுணவு – புலால் உணவு என்று பிரிந்து அடித்துக்கொள்பவர்கள் அறிமையில் ஊறிக் களிப்பவர்கள்.    குரு நித்யா உங்களிடம் ஒரு விவாதத்தில் ஒரு பக்க வாதத்தை நீங்கள் ஆவேசத்துடன் முழங்கியவுடன் “இப்போது அப்படியே எதிர் தரப்பின் சார்பில் பேசு” என்று பணித்ததை எண்ணிப் பார்க்கிறேன். மேலும் ஈரோடு விவாதப் பட்டறையில் “ஒரு கருத்து உள்ளே போகும்போதே அதன் எதிர்க் கருத்தும் சேர்ந்து புகுந்து விடுகிறது” என்று சொன்னது எவ்வளவு பெரிய உண்மை!

 

நீங்கள் பகவத் கீதையை பக்தி மட்டுமே சார்ந்து பரப்புவதில் இஸ்கான் தரப்பை  மறுதலித்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் ஒரு நற்செயல் நிகழும்போது அதன் தரப்பை முழுதும் உணர்ந்து முன் வைப்பதும் அதே சேவையை பிற மதத்தார் செய்தால் வரவேற்பதாக நிலை எடுப்பதும் மறைந்த சோ அவர்களை நினைவு படுத்துகிறது.

லயோலா கல்லூரியில் அவர் படித்த நாட்களில்  மதம் பரப்பப் படவில்லை என்றும் அவர் கோயில்களில் பிரசாதம் வழங்கப்படுவதை கிண்டல் செய்து எழுதி இருந்த கட்டுரையை கடுமையாக  பேராசிரியர் கண்டித்ததையும் பதிவு செய்திருந்தார்.  மதம் இறுகிப் பிடித்துக் கொண்டு விடாமல் இருக்க நம்பிக்கையாளர்களின் முயற்சி அதிகப் பலன் தந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

 

அனைவரும் நிறைநிலை அடையும் மறைச்சொல்லை தான் வீழ்ந்தாலும் பரப்ப வேண்டும் என்று திருக்கோட்டியூர் அஷ்டாங்க விமான கோபுரத்தில் ஏறிய ராமானுஜரின் கருணை சைதன்யர் வழியே இஸ்கான் மூலம் கசிகிறது.

எளியவர்கள் எழுச்சி பெறவேண்டும்; சமூகத்தின் நற்செயல்கள் மனதின் குறுக்கல் விகாரத்தால் கூம்பி விடக்கூடாது என்னும் ஆதங்கம் சுவாமி விவேகானந்தர் – டாக்டர் பல்பூ- சட்டாம்பி சுவாமி – நாராயண குரு – நடராஜ குரு –

(சென்னையில் தத்துவப் பேராசிரியராக இருக்கும்போது கல்லூரியை விட்டு வெளியேறி குடிசைப்பகுதியில் சென்று வாழ்ந்த) நித்ய சைதன்ய யதி  என்று  மகான்களால் அருளப் பட்டது.  அந்த ஆன்மிக -சமூக அக்கறையின் ஒரு துளி உங்கள் மூலம் வெளிப்பட்டதற்கு நன்றி.

 

ஆர் ராகவேந்திரன்

கோவை

 

அன்புள்ள ஜெ

 

அக்ஷயபாத்ரம் விவகாரம் பற்றிய விவாதங்களைக் கவனிக்கிறேன். ஒரு ஆசிரியர், நல்லவர் , இப்படி ஒரு பதிவு எழுதுகிறார். இரு வேறு சம்பவங்களில் மாணவிகள் தேர்வு அறையிலும் வகுப்பிலும் மயங்கிக்கிடக்கிறார்கள். ஏனென்றால் காலையுணவு சாப்பிடாமல் வந்துவிட்டார்கள். அவர்களுக்கு உதவியதைப் பற்றிச் சொல்கிறார். அங்கே சென்று உருகி உருகி எதிர்வினையாற்றியவர்கள் உடனே அக்ஷயபாத்திரம் திட்டம் நிறுத்தப்படவேண்டும், எங்கள் பிள்ளைகள் பிச்சைக்காரர்கள் அல்ல என்கிறார்கள். வேறு ஒன்றுமே இல்லை. சென்னையில் அதிமுகவுக்கு ஒரு பத்தாயிரம் ஓட்டு கூடிவிடும் என்ற பதற்றம். இந்துக்கள் சோறுபோடுகிறார்களே என்ற பேச்சு எங்குமே வந்துவிடக்கூடாது என்ற மதவெறி

பரிதாபமான பிறவிகள்

 

சந்திரமௌலி

 

 

 

அன்புள்ள நண்பர்களுக்கு

 

இந்த அக்ஷயபாத்திரம் விவாதத்தை முடித்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன். ஏனென்றால் விவாதம் என்றபேரில் இங்கே அளிக்கும் இடத்தை அவதூறுகளைப் பதிவுசெய்யும் வாய்ப்பாகவே பலர் நினைக்கிறார்கள். நேர்மையானவர்கள் என நான் நினைக்கும் நண்பர்கள் உட்பட எதிர்க்கருத்து கொண்டவர்கள் எவருக்கும் அணுவளவுகூட என் சொற்கள் சென்றுசேரவில்லை.  அவர்களின் மனசாட்சியை துளிகூட என்னால் தொட முடியவில்லை. அதே காழ்ப்பு. அதே அவதூறுகள், அதே அடிப்படை அற்ற ஐயங்கள், அதே தரவுத்திரிப்பு விளையாட்டுக்கள்.

 

அரசியல்நிலைபாட்டை ஒரு வகையான இறுக்கம் என்ற அளவிலேயே முன்பு கண்டிருந்தேன், இன்று அது ஒருவகை உளச்சோர்வுநிலை  என்றாகிவிட்டிருக்கிறது. அப்படி இருக்கிறது சூழல். ஒருவர் ஒரு செய்தியைப்பற்றி என்ன சொல்வார் என்பது அச்செய்தியை அவர் அறிவதற்கு முன்னரே நம்மால் உறுதிசெய்யக்கூடுவதாக உள்ளது. என்னதான் விளக்கினாலும், ஆதாரம் காட்டினாலும், அறச்சார்பை முன்வைத்தாலும் அவர் மாறப்போவதில்லை. சரி, அது அவர்களின் கருத்து, அவ்வளவுதான்.

 

இந்த விஷயத்தில் எனக்கு சற்று ஒவ்வாமை அளிப்பது ஒன்றே. அக்ஷயபாத்ரம் அமைப்பு அளிக்கும் உணவுக்கொடைக்கு நன்கொடை அளிப்பவர்களில் முதன்மையானவர்கள் மான்சாண்டோ நிறுவனம் போன்றவை. அவற்றின்மேல் எனக்கு ஐயமும் மறுப்பும் உண்டு. ஆனாலும்கூட உணவென இங்குவந்து ஏழைக்குழந்தைகளுக்கு கிடைக்குமென்றால் நன்று என்றே நினைக்கிறேன். இன்று காழ்ப்புக்கூச்சலிடுபவர்களில் சிலரேனும் சீண்டப்பட்டு எஞ்சிய குழந்தைகளுக்கு, எஞ்சியவேளைகளில் உணவிடுவார்கள் என்றால் மேலும் நன்று குறைந்தபட்சம் தமிழகத்தின் மதிய உணவுத்திட்டத்தை சிலரேனும் சென்று பார்ப்பார்கள் என்றால்,  அந்த உணவில் கொஞ்சமேனும் தரமேம்பாடு வருமென்றால்கூட நல்லதுதான்.

 

ஜெ

 

குவாலியரும் சிந்தியாக்களும்

0

 

மையநிலப் பயணம் 10

அன்புள்ள ஜெ

 

இன்றைக்கு ஜ்யோதிராதித்ய சிந்தியா பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு நண்பர் ஒரு லிங்க் அனுப்பினார். அதில் நீங்கள் மையநிலப் பயணம் செய்தபோது குவாலியர் பற்றி எழுதியிருந்த பகுதி இருந்தது. நான் அதை முன்னரே படித்திருந்தேன். குவாலியர் அரசகுடும்பத்தின் துரோகம், ஆதிக்கவெறி ஆகியவற்றை பற்றி இன்றைய மனநிலையில் படித்தபோது பதற்றமாக இருந்தது. எட்டப்பன் குடும்பம் என்றுதான் சொல்லவேண்டும். இது எட்டப்பர்களின் அரசியல் காலகட்டம். இங்கேகூட வெள்ளையர்களுடன் நின்ற புதுக்கோட்டை தொண்டைமானும், பூண்டி வாண்டையார்களும், செட்டிநாட்டு அரசர்களும், கபித்தலம் மூப்பனார்களும், வலிவலம் தேசிகர்களும்தானே சுதந்திரம் பெற்றபின் ஆட்சிக்கு வந்தார்கள்? கட்டப்பொம்மன் வாரிசுகளும் பூலித்தேவன் வாரிசுகளும் பூண்டற்று அழிந்தார்கள்.

 

மகேந்திரன்

 

எங்குமென நின்றிருப்பது

கல்பற்றா நாராயணனுடம் ஒரு சின்னப் பயணம் சென்றிருந்தேன். ஒருவர் முழுப்போதையில் சாக்கடை வழியாக நடந்து கொண்டிருந்தார். புன்னகையுடன் கல்பற்றா சொன்னார். “அப்படியும் ஒரு வழி இருக்கலாமே ”

ஆற்றூருடன் நடக்கச் செல்கையில் ஒரு பழுத்த தென்னையோலை மிக இயல்பாக, ஓசையே இல்லாமல் மரத்திலிருந்து பிரிந்து மிதந்து இறங்கியது. ஆற்றூர் சொன்னார் “முளைக்க வைத்து நீட்டுவதுதான் கஷ்டம்”

பலசமயம் கவிஞர்கள் எல்லாவற்றையுமே கவிதையெனக் காண்கிறார்கள். ஆற்றூர், கல்பற்றா நாராயணன் போன்றவர்களின் அன்றாடப் பேச்சில் அவ்வகை வரிகள் வந்தபடியே இருக்கும். அவை நினைவில் நின்றால் இப்படி பதிவாகும், அல்லது அப்படியே மறந்து போகும்.

இது கவிதை ஒரு வடிவப் பயிற்சியாக ஆனதனால் அல்ல, ஒரு மனப்பழக்கமாக ஆகிவிட்டமையாலும் அல்ல. அவர்களுக்குள் இருந்து தொடர்ந்து தேடிக் கண்டடைந்து கொண்டிருக்கும் ஒன்று இயல்பாக புறப்பொருட்களில் அதை ஏற்றிக் கொள்கிறது என்பதனால்தான்

தேவதேவனின் இன்றைய கவிதைகளில் அவருடைய விழிப்புற்ற அகம் தவிக்கும் தளிர்நுனி என தேடுவதை தொட்டவற்றில் சுற்றிக்கொள்வதைக் காண்கிறேன். எல்லாமே படிமங்களாகி விடுகின்றன. எல்லாமே அவருடைய ஆழம் ஒன்றை தன்மேல் ஏற்றிக்கொள்கின்றன.

 

ஆட்டுக்குட்டி

 

மே என்ற அதே குரலில்தான்

வலியுடன் அழுதபடிச் சென்றது

காயம்பட்ட ஒரு காலை முடக்கியபடி

ஓர் ஆட்டுக்குட்டி

 

பிற மூன்று கால்களும்

கூடுதலாகிவிட்ட பாரம் பொருட்படுத்தாது

கண்ணீருடன் காத்து சென்றனர்

அந்த ஒரு காலை

 

தன் வலியையும் மறந்து

தன்னால் தம் நலம் குன்றிவாழும்

அந்த மூவரையும் எண்ணியே

மிகுதியும் வருந்தியது

அந்த ஒற்றைக்கால்

 

நடமாடும் தன் வாழ்விற்கே

தூண்களாய் நின்றிருந்த

நால்வரையும் அணைத்தபடி

கலங்கிய விழிகளுடன் குரலுடனுமாய்

நடையிழக்காது நடந்துகொண்டிருந்தது

ஆட்டுக்குட்டி

 

மீண்டும் கல்பற்றா நாராயணனின் நினைவு. ஒருவர் அடிபட்ட கையை கட்டுபோட்டு நெஞ்சில் வைத்திருந்தார். “அடிபட்டதும் கை குழந்தையாகிவிட்டது” என்றார் கல்பற்றா நாராயணன். என்ன ஒரு அணைப்பு, எவ்வளவு கவனம், எத்தனை கொஞ்சல்! தொட்டிலில் தூக்கம்.

ஆட்டின் அடிபட்ட காலுக்கு பிறகால்களுடனான உறவு. அவை உடன்பிறப்புகள். நான்கும் இணைந்தால் தாவல். ஒன்று புண்பட்டால் மூன்றும் சேர்ந்து தாங்குகின்றன. அடிபட்ட காலின் வலியோ அம்மூன்றும் அவ்வண்ணம் நிலைமாறி தன்னை தாங்குவதனால் கூடுதலாகிறது. நான்கையும் தன் மைந்தர்கள் என அணைத்து தன் கீழே வைத்து கொண்டுசெல்கிறது ஆட்டின் உடல்

பொருட்களில் வடிவங்களில் இருக்கும் பெருங்கனிவு ஒன்றை தேவதேவன் கண்டுகொண்டே இருக்கிறார். ஓர் உரையாடலில் எண்ணையூற்றப்பட்டு ஓசையின்றி சுழன்ற கதவுக் கீல் ஒன்றின் மென்மை கண்டு கண்ணீர் மல்கியதைச் சொன்னார். பொருட்களிலும் வடிவுகளிலும் இருப்பது ஒரு நல்லுணர்வு, ஒரு நம்பிக்கை, ஓர்  ஏற்பு. பொருளென இங்கே திகழ்வது ஒன்றுண்டு. அதன் வெளிப்பாடு

அந்தவெளிப்பாட்டை பேருருவென இன்னொரு கவிதை கண்டடைகிறது.

 

 

கடல்மீது பொழியும் மழை

 

தன்னிடமிருந்து பெற்றதே

தனக்கும் வழங்கப்படுகிறது

என்பதறியாத கடலினதும்

 

கடலில் இருந்து பெற்றதையே

கடலுக்கு வழங்குகிறோம்

என்பதறியாத

விசும்பினதும்

பெருவகைகளின் இரகசியத்தினாலன்றோ

இருக்கிறது அது

 

அது என தேவதேவன் கண்டடையும் ஒன்று. அத்தனை கவிதைகள் வழியாக தேடித்தேடிக் கண்டடைந்த ஒருமை. பேருருக்களை விளையாடவிட்டு தான் மகிழும் அதன் மகத்தான குழந்தைப் பேதமை.

 

பற்றி இழுக்கும் ரோஜாவின் முட்கிளை

தேவதேவன் கவிதைகள்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

சென்னை

 

இளங்கனிவும் முதிர்கனிவும்

சொட்டும் கணங்கள்

கவிஞனின் கைக்குறிப்புகள்

அக்ஷயபாத்ரம் -கடிதங்கள்-2

அக்ஷயபாத்திரம் உணவு

அக்ஷயபாத்திரம் – கடிதங்கள்

அன்பின் ஜெ..

அக்‌ஷய பாத்திரம் கட்டுரை படித்தேன்.

எனது கருத்துக்களைச் சொல்ல விழைகிறேன்.

முதலில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்ட முறை.

அக்‌ஷயப்பாத்ரா தமிழகத்தில் செய்யப்போகும் திட்டத்தின் விவரங்கள் வெளிப்படையாக இல்லை. க்ரீம்ஸ் சாலையில் ஒரு இடம் அவர்கள் சமையல் செய்யக் கொடுக்கப்பட்டிருக்கிறது.  இன்னும் இரண்டு இடங்கள் கொடுக்கப்பட உள்ளன என்கிறார்கள். ஆளுநர் 5 கோடி தனிநிதியை, தன் அதிகாரத்தின் மூலம் கொடுத்திருக்கிறார் என்கிறார்கள்.

உண்மையிலேயே இவர்களுக்கு, இதன் மீது கரிசனம் இருந்திருந்தால், தமிழகமெங்கும் இலவசமாகக் காலை உணவைக் கொடுக்கும் ஒரு திட்டத்தை முன்வைத்திருக்கலாம் – 1950/60 கள் போன்ற நிலையில்லை இன்று தமிழகத்தில். பல இடங்களில் தனியார் (ஷாந்தி சோசியல் சர்வீஸஸ், கோவை) பொதுநலச் சேவைகளை செய்துவருகிறார்கள். இத்திட்டத்தின் வரைவை மக்கள் முன்வைத்து முன்னெடுத்திருந்தால், பல பெரும் நிறுவனங்கள் முன்வந்திருக்கும்.  ஆளுநர் என்னும் மத்திய அரசின் கைப்பாவை, மாநில அரசுகளின் நிர்வாகத்தில் தலையிடுவது, (இது முதல் முறையல்ல என்றாலும்), மிகவும் ஆபத்தான விஷயம். இதற்கு முன்பு கலாம் இதைச் செய்ய முயன்றார். உண்மையான ஆர்வத்தோடு – Providing Urban Amenities in Rural Areas என்னும் ஒரு திட்டத்தை முன்வைத்து, அரசுகளை முன்னெடுக்க் வற்புறுத்தினார். கலாம் தன் ஆளுமையின் முழு வசீகரத்தைப் பயன்படுத்தி அதை முன்னெடுக்க வைத்தார் – அந்தத் திட்டம், நல்ல நோக்கம் கொண்டதாக இருந்தாலும், வெற்றி பெறவில்லை. பன்வாரி லால், கலாம் இல்லை.

இரண்டாவது, இது போன்ற மக்கள் நலத்திட்டங்களுக்கு போதிய நிதி இல்லாமல் அரசு திணறிக்கொண்டிருக்கிறது என்னும் வாதத்தை முன்வைத்திருக்கிறீர்கள். தமிழகத்தின் வருவாய் கிட்டத்தட்ட 2 லட்சம் கோடி. வரவு செலவுத் திட்டம், 2.5 லட்சம் கோடி. சத்துணவுக்காக ஒதுக்கப்படும் நிதி 5800 கோடி – வருமானத்தில் 3%.  அதிலும் 50% மத்திய அரசு கொடுக்கிறது. (மத்திய அரசும் தன் நிதியில் இருந்து அள்ளி வழங்கிவிடவில்லை. தமிழகத்தில் இருந்து வசூல் செய்யும் மத்திய வரியில், 40% மட்டுமே திருப்பித் தமிழகத்துக்குத் தருகிறது. தமிழகம் உலகின்  50 ஆவது பெரிய பொருளாதார அலகு). இந்தச் செலவினம் தமிழக அரசின் மிகப் பெரும் பாரம் என்பது போன்ற ஒரு தவறான கருத்து வேறில்லை.

மூன்றாவதாக, டாஸ்மாக் நிதியினால் தான் அரசு இதற்குச் செலவு செய்கிறது என்னும் வாதம்.   தமிழக அரசு சென்ற ஆண்டு செய்த மதுவிற்பனை 31 ஆயிரம் கோடி. இதில் இருந்து, 26 ஆயிரம் கோடி வருமானம் வந்துள்ளதாக அறிவித்துள்ளது. (கர்நாடக வருமானம் கிட்டத்தட்ட 18000 கோடி) அரசு வருமானத்தில் 14%.

ஜி.எஸ்.டி என்னும் மையப்படுத்தப்பட்ட வரித்திட்டத்துக்கு மாநிலங்கள் ஒப்புக் கொண்ட காரணமே, சாராயம், மற்றும் பெட்ரோல்/டீஸலின் மீதான வரிகளை விதிக்கும் அதிகாரம் மாநிலங்களுடன் இருக்கும் என்னும் பேரத்தின் மீதுதான். எனவே, தமிழகம் மட்டுமல்ல, நாட்டின் எல்லா மாநிலத்துக்குமே, சாராயத் தொழிலின் மீதான வரி ஒரு முக்கியமான வருமான வழி. சாராயத்தின் மீதான மாநிலக் கலால் வரியும், விற்பனை வரியும் மிக அதிகம் – கலால் வரி 60 முதல் 220% வரை. விற்பனை வரி 14.5%

தமிழகத்துக்கும் மற்ற மாநிலங்களுக்கும் இடையே உள்ள முக்கிய வித்தியாசம் என்னவெனில், இங்கே அரசே மதுவை நுகர்வோருக்கு நேரடியாக விற்கும் தொழிலைச் செய்கிறது. வழக்கமாக, சில்லறை விற்பனை லாப விகிதம் 15-20% வரை இருக்கும் – இதை அரசே செய்வதன்மூலம், வருடம் 5-6 ஆயிரம் கோடி உபரி நிதியை உருவாக்குகிறது.  டாஸ்மாக் இல்லையெனில், இந்த உபரி அரசுக்குக் கிடைக்காது. தனியாருக்குச் செல்லும்.

With or without midday meal scheme, liquor is an important source of income for states. Even if midday meals scheme is withdrawn, the state governments will not give up this source of income. இரண்டையும் இணைத்து அறச்சீற்றம் கொள்வதில் பிழையில்லை, ஆனால், இதுதான் உண்மைநிலை..

மூன்றாவது தமிழக மதிய உணவின் தரமின்மை – தமிழக மதிய உணவின் விலை ஒரு நபருக்கு ரூ.6.71 (இதில் முட்டை மட்டுமே ரூபாய் 4).  அக்‌ஷயப்பாத்ரா சைவ உணவின் விலை ரூ.11.42 – அதாவது தமிழக அரசின் சைவ உணவின் விலையான (முட்டையைக் கழித்து), ரூ.2.71 ஐயும், அக்ஷய பாத்திராவின் உணவு, ரூபாய்.11.42 ஐயும் ஒப்பிடுகிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும். சத்துணவில் முட்டை சேர்க்கப்பட்டது, இத்திட்ட வரலாற்றில் முக்கியமான முன்னெடுப்பாகும். தமிழகம் போன்ற மாநிலங்களில், வாரம் ஐந்து முட்டை கொடுக்கப்படுகிறது. இந்தியாவில், குழந்தைகள் நலக்குறியீடுகளில், மிகக் கீழ்மட்டத்தில் இருக்கும் மத்தியப்பிரதேசம்,ராஜஸ்தான், குஜராத், போன்ற மாநிலங்களில், பெரும்பான்மைப் பயனாளிகள் புலால் உண்பவர்களாக இருந்தும், முட்டை அளிப்பதில்லை. முட்டை, மிக விலை குறைவான, முழுமையான உணவு. இது போன்ற திட்டங்களில், ஊழல் அதிகமில்லாமல், எளிதில் வழங்கிவிடக் கூடிய ஒன்று எனத்தெரிந்தும், அதிகார வர்க்கத்தில், சைவ உணவு வெறியாளர்கள் நிரப்பப்பட்டிருப்பதால் கொடுக்கப்படுவதில்லை. முட்டைக்கெதிராக பல நிறுவனங்கள் கோர்ட் வாசலைத் தட்டிக் கொண்டிருக்கின்றன – கலாச்சாரத் திணிப்பாம். நீங்கள் சொல்லும், தரம் குறைந்த உணவும் முட்டையும் இணைந்தால் அது, அக்‌ஷயப்பத்திரம் தரும் தரமான சைவ உணவை விட மேலான சத்துக்களைக் கொண்டது.  தமிழகம் புலால் உண்ணாத குழந்தைகளுக்கு பழங்கள் தருகிறது.  புலால் உண்ணாதவர்களுக்கான மாற்று உணவைத் தர மறுப்பதில்லை.

ஜெயலலிதா அவர்கள் முன்னெடுத்த அம்மா கேண்டீன்கள், அவர் உயிருடன் இருக்கும் வரை, மிகத் தரமாக நடத்தப்பட்டன. உணவின்மைக் கொடுமையை  நேரடியாக எதிர்கொண்ட உலகின் மிக முக்கியமான திட்ட முன்னெடுப்பு. இன்று கேரள அரசுப் பள்ளிகளில், மிகத் தரமான உணவு வழங்கப்படுகிறது. அதன் மேலாண்மையில் உள்ளூர் ஆட்சி அலகுகள் இணைந்துள்ளன. நீங்கள் சொல்லும் தரவிவகாரம், கொஞ்சம் அதிக நிதியும், கவனமான நிர்வாகமும் இருந்தால், சரிசெய்யப்படக் கூடிய விஷயம்தான்.

சத்துணவுத் திட்ட வேலைக்கான ஊழல். சத்துணவு சமைக்கும் பணியாளருக்கு வழங்கப்படும் ஊதியம்  மாதம் 5000 ரூபாய். அமைப்பாளருக்கான ஊதியம் மாதம் 10000 ரூபாய். இதில் ஊழல் இருக்கிறது என் எழுதியிருந்தீர்கள். உண்டு. ஆனால், இதில் அமர்த்தப்படுபவர்கள், உள்ளூரில், இருக்கும்  படிக்காத/ அதிகம் படிக்காத பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள். தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், ஏழைகள்.

இன்று அரசுப்பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் ஏழைகளும், தாழ்த்தப்பட்டவர்களும் தான். இன்றும், ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இருக்கும் இறுதி ஜனநாயக அமைப்புகள் அரசுப்பள்ளிகளும், அரசு மருத்துவமனைகளும்தான்.

இதற்கு மாற்றாக நீங்கள் முன்வைக்கும் முறை – 400% அதிக செலவு பிடிக்கக்கூடியது. அதன் நிர்வாகம் இன்றைய அரசின் சமூக நீதிக்கு வெளியே உள்ள அமைப்பு. 27 ஆண்டுகள் தனியார் துறையில் வேலை செய்த அனுபவத்தில் (இதற்கான முறையான தரவுகள் இல்லாததால், எனது அனுபவத்தில் சொல்ல வேண்டியுள்ளது), தனியார் துறையின் ஒப்பந்தத் துப்புரவுத் தொழிலாளர்கள் தாண்டி, தாழ்த்தப்பட்டவர்கள் 0.5% கூட இல்லாத, ஜனநாயகம் துளியும் இல்லாத சனாதன அமைப்புகள். இதை நியாயப்படுத்த, சத்ய சாய்பாபா – கருணாநிதி உதாரணத்தைச் சொல்லியிருந்தீர்கள். நன்கொடை வேறு. நிர்வாகம் வேறு. இங்கே இந்த நிறுவனம், பின்வழியே நிர்வாகத்துள் நுழைகிறது. நான் முன்பு பணியாற்றிய நிறுவனத்தில், சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு  கட்டிக் கொடுத்தோம் – 40 வீடுகள். திட்டத்தின் வடிவமைப்பு அரசினுடையது. நாங்கள், அனைத்துப் பொருட்களையும், கட்டிட வேலையாட்களையும் அளித்தோம். இலவசம் என்பதால், எங்கள் வடிவமைப்பைத்தான் உபயோகிக்க வேண்டும் என எந்த நிபந்தனையும் போடமுடியாது. ஏனெனில், அது அரசின் திட்டம்.

இன்று இருக்கும் திட்டத்தில் குறைகள் இருக்கின்றன. அதைக் களைந்து மேம்படுத்தக் குரல் கொடுக்கவேண்டுமே ஒழிய, கவர்மெண்ட்னாலே ஊழல், அதனால எல்லாத்தையும் தனியார்கிட்ட கொடுக்கணும் என்னும் வாதம் உண்மை போலத் தோற்றமளிக்கக் கூடிய, வலதுசாரி உயர் வர்க்க வாதம். 70 ஆண்டுகளுக்குப் பின்னும், சாதாரண மனிதர்களின் குரலும், உரிமைகளும், அவர்களின் பார்வையில் இருந்து பார்க்கப்படாமல் இருக்கும் அவலம்.

அன்புடன்

பாலா

 

அன்புள்ள ஜெமோ,

 

இந்த  அக்ஷயபாத்திரம் காலை உணவு வழங்கலை நான் ஏற்கிறேன். என் நண்பர்கள் அரசு திட்ட்ங்கள் என்பது இந்த மதம் சார்ந்த ஆச்சாரங்களுக்கு அப்பால் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அவர்கள் சொல்லுவது கொள்கையளவில் சரிதான். ஆனால் நான் அதை அரசு நேரிடையாக செய்யும் ஒன்றில் கட்டயமாகவும், அரசு-தனியார் என்ற கூடடமைப்பில், குறிப்பாக அரசு செய்யம் அடிப்படைகளுக்கும் மேலதிகமான ஒன்றில், அந்த தனியாரின் “குறிப்பிடட” கொள்கைகளுக்கு ஓரளவு இயைந்து போகலாம் என்றே நினைக்கிறேன். சாலையோர பூங்காக்களை பராமரிக்க தனியார் உதவி பெரும் அரசு அவர்களது சிறிய விளம்பர பலகைகளை அங்கு வைத்துக்கொள்ள அனுமதிப்பதுபோல. எனவே இன்றையநிலையில் ISKON  இதை செய்யாவிடில் அரசு காலை உணவையும் செய்யுமா என்று பார்த்தால், அதை அவர்கள் எப்போதும் செய்ய மாடடார்கள். ISKON தவிர வேறு யாரும் இதை செய்ய இப்போது இருக்கிறார்களா என்றால், இல்லை என்றே நினைக்கிறேன் (அப்படி சாத்தியமா என்று இந்த அரசு முயன்று பார்த்ததா என்று கூட தெரியவில்லை).

 

எனவே இதை இப்போது ஏற்பதே சரி. இந்த திடடத்தை எது சார்ந்தும் விமர்சிக்கலாம், பொருளாதார அடிப்படையில்  அரசு வழங்கும் பணம், செலவுகள், போன்றவற்றை சத்துணவுக்கு இப்போது ஆகும் செலவோடு ஒப்பிட்டு என்று ஏதன் அடிப்படையிலும் விமர்சிக்கலாம். ஆனால் வெங்கயம், பூண்டு போடாமல் சமைப்பது சார்ந்து விமர்சிக்க முடியாது ஏனெனில் அது அவர்கள் கொள்கை, அவர்கள் நம்பிக்கை, அதை மாற்றி  அவர்களை இதை  செய்ய நிர்பந்திக்க முடியாது.

 

எதிர்காலத்தில் ஒருவேளை  வேறு நம்பிக்கைக்குரிய ஒரு அமைப்பு திறம்பட செய்ய முன்வந்தால் அவர்களுக்கு வழங்கலாம் ஏனெனில் அரசு சார்ந்த ஒன்று “நான் கொடுக்கிறேன் வேண்டியவர்கள் சாப்பிடுங்கள், வேண்டாதவர்கள் சாப்பிடாதீர்கள்” என்ற போக்கை கொள்ள முடியாது. திமுக அரசு முட்டையை சத்துணவில் அறிமுகப்படுத்தியபோது, அசைவம் என்று முட்டை  சாப்பிடாதவர்களுக்கு வாழைப்பழம் வழங்கவேண்டும் என்ற அரசாணையையும் போட்ட்து.

நிற்க,

என் அப்பா ஒரு ஆசிரியர், எனவே எங்களது குடும்ப நண்பர்கள் பெரும்பாலும்  பள்ளி சார்ந்தவர்களாகவும் எனது சிறுவயது முதலே நான் அவர்கள் சூலவே இருந்தேன். இன்று எனது அக்கா, அண்ணி, அத்தை  என்று என்று நெருங்கிய சொந்தங்களில் மற்றும் நண்பர்களில் ஒரு 20 பேராவது 20 வெவ்வேறு பள்ளிகளில் ஆசிரியப்பணியில் உள்ளனர். ஒவ்வொரு முறை ஊருக்கு செல்லும்போதும் இந்த பள்ளிகளுக்கு செல்வது என்பது நான் விரும்பி செய்யும் ஒன்று. ஒன்று அவர்களை பார்க்க மற்றும் பள்ளி சார்ந்து, பிள்ளைகளுடன் பேச என்று, இது வரை ஊருக்குவந்து ஒரு முறைகூட ஏதாவது ஒரு பள்ளிக்கு செல்லாமல் திரும்பியதில்லை, ஒருமுறைகூட.

 

இந்த முறை ஊருக்கு சென்றபோது கூட பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு  கீழச்சேவல்பட்டி எனும் ஊர் பள்ளிக்கு சென்றேன். நான் ஐந்தாவது படிக்கும் வரை பள்ளியில் சத்துணவுதான் சாப்பிடடேன். எனவே இயல்பாகவே நான் சாப்பிட்ட சாப்பாடு மற்றும் இப்ப எப்படி இருக்கிறது என்ற ஒப்புநோக்குதல் ஆர்வம் துண்ட ஒவ்வொரு பள்ளிக்கூடம் செல்லும்போதும் அங்கு சத்துணவு கூடத்தை பார்ப்பது, இப்ப என்ன என்ன சாப்பாடு போடுகிறார்கள், எப்படி சமைக்கிறார்கள், எவ்வளவு பேர்கள் சாப்பிடுகிறார்கள் என்று சத்துணவு அமைப்பாளரிடம் பேசுவது என்பது எனக்கு ஆர்வமான ஒன்று. இதுவரை  எந்த ஒரு பள்ளி சத்துணவும் என்னை ஏமாற்றியதில்லை. இங்கு அரசு வழங்கும் பணத்துக்கு ஏற்ற உணவு தரம் இல்லாமல் இருக்கலாம், அதன் தரத்தில் மாறுபாடு இருக்கலாம், ஒரு கிலோ பருப்பு போடவேண்டிய சாம்பாரில் 800  கிராம்தான் போடுவார்களாக இருக்கலாம், ஆனால் அந்த சாப்பாடுகள் எந்தவிதத்திலும் சாதாரண ஹோட்டல்களில் சாப்பிடும் சுவைக்கு தரத்துக்கு குறைவானது இல்லை என்பதை பல்வேறு பள்ளிகளில் சுவைத்து பார்த்த என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

 

இங்கு நான் தவறாமல் பேசசுவாக்கில் கேட்க்கும் இரண்டு கேள்விகள், ஒவ்வொரு நாள் மீந்து போகும் உணவை என்ன செய்கிறார்கள், அங்கு வேலைபார்க்கும் ஆசிரியர்கள் என்றாவது சத்துணவை சாப்பிடுகிறீர்களா என்பது. இந்த இரண்டு கேள்விகளின் நோக்கம், மோசமான காய்கறிகள், அல்லது சுத்தமில்லாமல் செய்யப்படும் சமையலாக இருந்தால் இவர்களே அதை உண்ணமாடடார்கள் என்ற எண்ணத்தில் அதை அறிந்து கொள்வதற்குத்தான். மீந்துபோகும் சிறுபகுதி உணவை அந்த அமைப்பாளர் அல்லது சமைக்கும் ஆயா இரவு உணவுக்கு எடுத்துப்போதல் சாதாரணமான ஒன்று. ஒரு மாதத்தில் ஒன்று அல்லது இரண்டு முறையாவது சத்துணவை அந்த பள்ளி ஆசிரியர்களே (என் சொந்தக்காரர்கள்) சாப்பிடுகிறார்கள்.  சமையலறையை பார்வையிடும்போது “சாப்பிட்டு பாருங்க தம்பி” என்று அவர்கள் வேலை சார்ந்த ஒரு பெருமிதத்துடன்தான் அதை நம் முன் வைக்கிறார்கள், உண்டு பார்க்க வற்புறுத்தி நாம் என்ன சொல்கிறோம் என்பது சார்ந்து அறிய விரும்புகிறார்கள்.(இந்த முறை திருப்பத்தூர் பக்கத்தில் உள்ள ஒரு பள்ளி சத்துணவு அமைப்பாளருடனான சந்திப்பு சுவாரஸ்யமான ஒன்று :-) )  இந்த சத்துணவு அமைப்பாளர்கள் அல்லது ஆயாக்களுடன் சும்மா பேசிப்பார்க்கும்போது நான் உணர்ந்தது  இந்த “குழந்தைகளுக்கு” “உணவிடுதல்” என்ற செயல்பாடு இவர்களுக்கு உணர்வுபூர்வமான ஒன்றாக இருக்கிறது, அதை நமது அன்னமிடுதல் என்ற மரபின் தொடர்சியாகவே கணிக்கிறேன். அத்தனை குழந்தைகளுக்கும் தானே உணவிடுவதான ஒரு எண்ணம் இவர்களிடம், எளிய மக்களாயிருந்து தாம் செய்வதை ஒரு பள்ளியின் கல்வி செயல்பாடோடு இணைத்தே இதை முன்னெடுக்கிறார்கள்.

 

இவ்வளவு பரந்துபட்ட ஒவ்வொரு நாளும் தயாரித்து வழங்கும் இந்த உணவு வழங்கல் செயல்பாட்டில் இதுவரை பிள்ளைகளுக்கு பாதிப்பு ஏற்பட்ட நிகழ்வுகள் என்று பெரிதாக ஏதும் இல்லை.  முறைகேடுகள் இல்லையா என்றால், அப்படி எவரொருவரும் சொல்லிவிட முடியாது.  கண்டிப்பாக இருக்கும், இன்று எந்த ஒரு துறையையும் முறைகேடு இல்லாத துறை என்று சொல்லிவிட முடியாது. ஒரு துறை கூட அப்படி இல்லை.   இதோ போன மாதம்  மிக கண்டிப்பும்,அதீத கண்காணிப்புக்குள்ளும், கடுமையான தண்டனைக்கும் உள்ளாக கூடிய இராணுவத்துறையில், இந்திய ஆர்மி-நேவியை சேர்ந்த 11 பேர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள், வெளிநாட்டுக்காக உளவுபார்த்து ரகசிய செய்திகளை கடத்தியதற்காக. எனவே இந்தியா முழுவதும் எந்த ஒரு துறையையும் முறைகேடுகள் அற்ற துறை என்று சொல்லமுடியாது. ஆனால் அதைஎல்லாம் மீறியும் சத்துணவு திடடம் ஒரு அரசின் முன்னெடுப்பாக சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது என்பதே என் அனுபவம் மூலம் நான் உணர்வது.

 

 

இதில் உண்மையிலேயே என்னுடைய குழப்பத்தை சொல்லிவிடுகிறேன். இது என் குழப்பம்தான், எந்த இறுதியான முடிவும் எனக்கு தெரியவில்லை. எது சரி, எது தவறு அல்லது தவிர்க்கப்பட வேண்டியது என்பது சார்ந்தும் எனக்கு தெளிவில்லை, நீங்கள் சொன்னதுபோல் சத்துணவு சார்ந்து  மோசமான நடைமுறைகள் இல்லையா என்றால் அப்படியும் இருக்கும்தான். பாய் பெஸ்ட்டி கவிதைகளில் எனக்கான பிரட்ச்சனை அது கவிதையாக இருக்கிறதா இல்லையா என்பது அல்ல, (ஒரு கவிஞனின் ஒரு கவிதை தொகுப்பில் 10 கவிதைகள் கவிதைகளாக இருந்தாலே அது எனக்கு போதுமானதாக இருக்கிறது, அவ்வளவு மட்டுமே என் அதிகபட்ஷ  எதிர்பார்ப்பும்)

 

 

பாய் பெஸ்டி கவிதை பெண்களின் நண்பர்கள் சார்ந்து ஒரு பொது பிம்பத்தை கடடமைக்கிறது, அந்த பிம்பம் ஒரு பிரபல நபரால், அறிவார்ந்தவராக பொதுவாக ஏற்கப்படும் ஒருவரால் பொதுவெளியில் சொல்லப்படும்போது அது ஒரு கருத்துருவாக்கத்தை நிகழ்த்துகிறது, பின்  அது ஒரு பிம்பமாக, axiom ஆக  அப்படியே ஏற்கப்பட்டு தொடர்ந்து கொண்டு செல்லப்படும், அது பெண்களின் பொதுவெளி செயல்பாடுகள், அவர்களின்  ஆண் நட்பு சார்ந்து ஒரு தடையை பொது வெளியில் உருவாக்குகிறது,  பெண்களின் ஆண் நண்பர்கள் சார்ந்த ஒரு எதிர்மறை சித்திரத்தை உருவாக்குகிறது, அவர்கள் புழங்கும் வெளியை மேலும் முடக்குகிறது. அப்படி கவிதை பேசும் பாய் பெஸ்டிகளே நிதர்சனத்தில் இல்லையா என்று தர்க்கத்துக்குள் செல்ல முடியாது, அப்படி இருந்தாலும் அது ஒரு கருத்துருவாக்கமாக நிலைபெறுவது சரியானது அல்ல என்பதே அந்த கவிதையை விமர்சிப்பதற்கான காரணம்.

 

பெண்களுக்கு எதிரான இந்த பாய் பெஸ்டி பொது பிம்ப உருவாக்கம் எப்படி கூடாது என்று நினைக்கிறேனோ அதே அடிப்படையிலேயே பொதுவாக சிறுபான்மையினர், தாழ்த்தப்படட சமூகத்தினர், விளிம்புநிலை மனிதர்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட எந்த ஒரு பகுதியினர் சார்ந்தும் செய்யக்கூடாது என்று நினைக்கிறேன்.ஏனெனில் அது ஒரு சிறு பகுதியினருக்கெதிரான ஒற்றைப்படையான கருத்துருவாக்கமாக சமூகத்தில் நிலைபெற்றுவிடுமோ என்று அஞ்சுகிறேன். அது சரியானது அல்ல.

 

 

அக்ஷயபாத்திர உணவு ஆதரவாளர்கள் தமது நிலைப்பாட்டுக்கு வலு சேர்க்க உங்களது  உங்களது இந்த அக்ஷயபாத்திரம் உணவு பதிவின் அரசு சத்துணவு தயாரிப்புக்கு எதிரான கருத்துக்களை முன்னெடுத்து செல்கிறார்கள். அவர்களுக்கு சத்துணவு திடடத்துக்கு எதிரான எதிர்மறை பிம்ப உருவாக்க அளவு,  அக்ஷயபாத்திரத்துக்கான ஆதரவாக ஆகும் என்று நினைக்கிறார்கள். எப்போது இந்த சத்துணவை சாப்பிட்டிர்கள் அல்லது எப்போது நேரில் சென்று பார்த்திர்கள் என்ற கேள்விகளுக்கு அவர்களிடம் பதிலில்லை, ஆனால் உண்மையில் அது அவர்களுக்கு  தேவையும் இல்லை. இலவசமாக கொடுக்கும் அரசு சத்துணவு என்றாலே அது சார்ந்த கற்பிதங்கள், பிம்பங்கள் அவர்களிடம் ஏற்கனவே உண்டு. அப்படி நம்புவதற்கு அடிப்படை எல்லாம் தேவையில்லை. அரசு ஊழியர்கள் என்ற பொதுவான விமர்சனம் கூட ஒருவகையில் எனக்கு தவறாக தெரியவில்லை, ஆனால் அதில் குறிப்பிடட அமைப்பு அதிகார பலம் குறைவாக உள்ள ஒரு பிரிவினர் சார்ந்து குறிப்பிடட விமர்சனம் சரியா என்று தெரியவில்லை.

 

நான் இதன் ஆரம்பத்தில் சொன்னது போல் எனக்கு சரி, தவறுகள் இதில் தெரியவில்லை. குழப்பம் மட்டும்தான்.   முன்பு டைப்பிஸ்ட், மலையாள நர்ஸ் என்றாலே ஒரு பொது  பிம்பம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இன்று அரசு ஊழியர்கள் என்றாலே வேலை செய்யமாடடார்கள் என்று உறுதியாக நம்புகிறார்கள். அவை எல்லாம் ஏற்கனவே நிரூபிக்கப்படட உண்மைகள்.  இதை எதையும் விவாத்தளத்துக்குள் கொண்டுவரமுடியாது. இதில் யாரையும் தர்காக்கவும் முயலவில்லை, அதுமுடியவும் முடியாது,  நான் சொல்லுவதை நிரூபிக்க முடியும், அதே கணத்தில் இதற்க்கு எதிரானவைகளையும் இன்னொருவரால் நிரூபிக்க முடியும், எதையும் பெரும்பான்மை என்று நிரூபிக்க யாருக்கும் அவ்வளவு பரந்த அனுபவங்களோ ஆய்வுக்கருவிகளோ இல்லை. எனவே இதுவும் ஒரு தரப்பாக இங்கு இருக்கட்டும், உண்மையான ஆர்வம் கொண்டவர்கள்  கற்பிதங்களைத்தாண்டி பள்ளிகளுக்கு சென்று அறிந்து அவர்களுக்கான உண்மைகளை அவர்கள் அறியட்டும்.

 

அன்புடன்
சரவணன் விவேகானந்தன் 

 

 

 

 

 

 

 

 

சர்வ ஃபூதேஷு கடிதங்கள்- 1

யா தேவி! [சிறுகதை]

சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

 

யா தேவி அத்தனை விவாதங்கள் வழியாக விரிவாக வாசிக்கப்பட்ட பிற்பாடு சர்வ பூதேஷுவை எளிதாகப் புரிந்துகொள்ள முடிந்தது. முந்தையகதையில் இருந்ததைப் போலவே ஏமாற்றும் எளிமை. உரையாடல்கள் வழியாக தொட்டுத்தொட்டுச் செல்லும் கதைசொல்லல் முறை. எதையும் சிறு குறிப்பாகவே சொல்லிவிட்டுவிடுதல். ஆனால் எல்லா புள்ளிகளும் இணைந்து முழுமையான கோலமாக ஆகிவிட்டன.

 

சில வரிகளை குறிப்புகளாக எடுத்துக்கொண்டேன். ‘அவன் பூதாகரமான குழந்தை போல இருந்தான்’ என்பதுதான் முதல் க்ளூ. அவளை மேரிமாதாவின் முகம் என்கிறான். குறிப்பாக வியாகூல மாதாவின் முகம் என்கிறான். அவன் கேட்கும் பல கேள்விகள் முக்கியமானவை. “வைத்தியரே கண்ணீர்விட்டால் தூய்மை ஆகிவிடுவோமா?” அவன் சர்ச்சில் அழுபவன். ஆகவே தூய்மையானவன். அவன் சென்றடையவேண்டிய தூய மேரிமாதா அவள்தான்

 

அவன் சிலுவை ஏற்றப்பட்டவன். அவனை மடியில்தாங்கி அமர்ந்திருக்கும் அன்னையைக் காட்டி சிறுகதை முடிகிறது. பல நுட்பமான குறிப்புகள் வழியாக கதை சொல்லப்படுகிறது. ஆனால் எதுவும் வலிந்தும் சொல்லப்படவில்லை. எல்லாமே ஒழுக்காக இயல்பாக வந்தமைகின்றன. ‘வைத்தியரே அவியல்?”என்று அவன் கேட்கும் இடம் ஓர் உதாரணம்

 

எம்.பாஸ்கர்

 

இனிய ஜெயம்

 

யாதேவி சர்வ ஃபூதேஷு இரு கதைகளையும் இன்றுதான் வாசித்தேன். வாசக கடிதங்களை  இக் கடிதத்தை உங்களுக்கு அனுப்பிய பிறகே படிக்கப் போகிறேன்.  இரண்டாம் கதையை முதலில் வாசித்து   அதன் பிறகு முதல் கதையை படிக்க நேர்ந்தவன் என்ற வகையில் நான் லீலியர் வடிவம் அளிக்கும் வாசிப்பின்பம் எய்தினேன்.

 

பாவம், குற்ற உணர்ச்சி,மீட்சி.  இதுவே மாத்தச்சன் அகம் கொள்ளும் பயணம். எல்லாவைக் கண்ட முதல் பார்வையிலேயே  அவளுள் இலங்கும் அன்னையை அறிந்து விடுகிறான். அந்த அன்னையின் மடிசேர்ந்து மதலையாக மாறி அவன் கொள்ளும் துயில், அந்தத் துயில் நோக்கிய அவனது பயணமே கதை.  ‘உணமையான’ எல்லாவை அன்னை வடிவில்  கண்ட கணமே, எல்லா தவிர்த்த எல்லாவின் பொம்மைகள்,திரைப்பட பிம்பங்கள் எனும் அனைத்து  மாயையும் மாத்தச்சனை விட்டு விலகி விடுகிறது. அது விலகுவதற்கு முன்னால் அவன் புணர்ந்த பொம்மை துய்த்த திரை பிம்பம் எல்லாமே அன்னையின் உருவாகி நின்று அவனை குற்ற போதத்தில் தள்ளுகிறது. அக் குற்ற உணர்விலிருந்து [அன்னையின் முத்தங்கள் போல] அவன் எவ்வாறு மீள்கிறான் என்பதன் அழகிய கதை.

 

அந்த பாலியல் பட நடிகைக்குள் எவ்வாறு அந்த அன்னை எழுகிறாள்? அதுவே முதல் கதை. யா தேவி முதல் பார்வையில்  அக் கதைக்குள் வரும் ஆண் பெண் இருவருக்குள்ளும் அகவயமாக நிகழும் மிஸ்டிக்கான பயணம் ஒன்றை சாப்ளிமேஷன் ஒன்றை மையம் கொள்ளும் கதை இரண்டாம் பார்வையில் மேலைத்தேய மரபும் கீழைத்தேய மரபும் நிகழ்த்தும் உரையாடல் ஒன்றையும் உள்ளடக்கி இருக்கிறது.

 

ஸ்ரீதரனின் முதல் தொடுகைக்கே எல்லாவின் பாதம் கூசி நெளிகிறது. மண்மகள் அறியாப் பாதம் அது. அத்தகு தொடுஉணர்வு கொண்டவளே பாலியல் உலகில் உழல நேர்கிறது. இங்குள்ள அத்தனை ஆண்களும் தன்னைப் புணர்ந்தாலும் தனக்கு ஒன்றும் இல்லை என்பதை இவள்தான் சொல்கிறாள்.  இந்த இருவேறு  யதார்த்தங்களை சுமந்தே அவள் நோயாளி ஆகிறாள். அகம் ஈர்க்கும் ஆணுடன் காதலுடன் நிகழும் ஒரு கலவி தன்னை மீட்டுவிடும் என்பதே அவளது மீட்சிக்கான அவளது இறுதி விழைவாக இருக்கிறது. பகவதியின் நாட்டில் அவள் பெண்மை என்றால் என்ன அன்னை என்றால் என்ன என்பதை  சக்திக்கே சக்தியின் நிலையைக் கதையாக சொல்லும் ஒரு சாக்த உபாசகன் வழியே உணர்கிறாள்.

 

ஸ்ரீதரன் அவளை மருத்துவனாக நின்று நோயாளி ஆக மட்டுமே முதலில் கையாளுகிறான். பேச்சின் ஓட்டத்தில் ‘அழகாக இருப்பீர்களா’ என வினவுகிறான். உண்மையாகவே அவன் அவள் உடல் நோயாளிக்காக அன்றி வேறு விதத்தில் கருத்தில் பதியாதவனாகவே  இருக்கிறான். அவன் தான் நிற்கும் வழிபாட்டு மரபை அவளுக்கு சொல்லும் போது,வைத்தியன் எனும் நிலையில் இருந்து சக்தி உபாசகனாக மாறி விடுகிறான். அவன் உபாசகனாக மாறிய அக் கணமே எல்லா சொல்லி விடுகிறாள் ‘நீ ஒரு பெண்’ .  உபாசகன் ஸ்ரீதரன்  வசம் இறுதியாக எல்லா கேட்கிறாள் நீ அந்த பாடலை உனக்குள் இப்போது சொல்லிக் கொண்டாயா’ ‘ஆம்’ என்கிறான் ஸ்ரீதரன். ஆம் இப் புவனமாள அவள் இணையடி ஒன்றே போதுமே, அக் கழலடி அழகில் பராசக்தியை  கண்ட ஸ்ரீதரன் எப்படி அந்தப் பாடலை சொல்லாமல் இருப்பான்.

 

பிம்பங்களாலும் எண்பதாயிரம் பொம்மைகளாலும்  மாயையின் விஸ்வரூப தோற்றத்தாலும் தீர்க்க இயலாத ஒன்றை, உண்மையின் இணையடி மட்டுமே கொண்டு ஒருவன் கடந்து செல்கிறான். பெண் உடலும் அழகும் போற்றுதர்க் குரியது. அங்கே கிரேக்க மரபில் தொடங்கும் மேலை மரபு, கிறிஸ்துவ அடிப்படை வாதத்தில் சரிகையில் காமம் ஒடுக்கப் படுகிறது. ஏசுவே கன்னி மேரிக்கு பிறந்தவராக அறியப்படுகிறார். மறுமலர்ச்சி காலம் தோன்றி மதிப்பீடுகளை மாற்றி அமைக்கிறது. இந்த நெடும் மரபின் தொடர்ச்சிதான் எல்லா. மாத்தச்சன் உழலும் குற்றபோதம் அடிப்படை வாத கிறிஸ்துவத்தின் ஒழுக்கவியலால் விளைந்தது.  எல்லா எனும் பாலியல் பட நடிகையில் எவ்வாறு அவன்  அன்னையைக் கண்டு மீட்சி அடைகிறான்?  எல்லா பகவதியின் நிலத்தில் நின்றே தன்னைக் கண்டடைகிறாள்.  அன்னை அவள். படைக்கும் காமம்,  காக்கும் மோகம், அழிக்கும் குரோதம் எல்லாம் அவளின் குழந்தைகளே. அந்த மெய்மையில் நின்று எல்லா மாத்தச்சனுக்கு அளிக்கும் முத்தங்கள் வழியாகவே அவன் மீட்சி அடைகிறான்.

 

ஒரு இலக்கிய வாசகனாக,ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வாழ்க்கைத் தருணம் வழியே, புதிய அனுபவ தளம் ஒன்றை தொட்டு நடக்கும் பயணத்தில் இன்று மரியன்னைக்கும் பராசக்திக்குமான உரையாடலை நிகழ்த்திக் காட்டிய அழகிய இரு கதைகள்  வாசிக்கக் கிடைத்தது.

 

நன்றி :)

 

கடலூர் சீனு

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு,கடிதம்-2

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு,2020

 

அன்புள்ள ஜெ,

 

நான் எப்பொழுதும் என்னை குழப்பிக்கொள்வதில் தேர்ச்சிபெற்றவன். அந்த குழப்பங்களில் உழன்று அதனூடாக தன்னிரக்கம் அடைவதில் ஒருவித சுகம் பெற்றவன். அதனால்தான் ஒரு தெளிவை நோக்கியோ அல்லது என்னை கலைத்து போட செய்யும் ஓர் நிகழ்வை நோக்கியோ செல்வதில் பெரும் தயக்கத்தை கொண்டிருந்தேன். இச்சந்திப்பின் அறிவிப்பு வந்த நாள் முதல் அதில் கலந்துகொள்ளும் நாள் வரை என்னுள் தலைவிரித்தாடிய தயக்கத்தை உடைத்து, சந்திப்பில் கலந்துகொண்டதையே என்னுள் நிகழந்த பெரும் வெற்றியாக கருதுகிறேன்.

 

உங்களை சந்தித்த சில நிமிடத்தில் உரையாடல்களும் விவாதங்களும் இயல்பாகவே தொடங்கிவிட்டன. அந்நொடியில், ஒரு பெரும் மலைக்கான விஸ்தரிப்பையும், அதன் செறிந்த கட்டுமானத்தையும் ஓர் கடுகையொத்த சிறு கல் அடைவதற்கான கனவை நினைத்து என்னுள் சிரித்து கொண்டேன். ஆனால், பல தரப்பட்ட உரையாடல்கள் வழியாக நீங்கள் வலியுறுத்திய தொடர் பயிற்சியும், செயலின்  தீவிரத்தையும் அமைத்துக்கொள்வதின் மூலம் அந்த கனவினை அடைவது சாத்தியமே என்பதை அறிந்துகொண்டேன். உரையாடல்கள் அரட்டையை நோக்கி நகரும் இடங்களிலும், சிந்தனைகள் சிறுமைப்படுத்தப்படும் இடங்களிலும் கவனமாக குறுக்கிட்டு, இவையெல்லாம் ஏன் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்திய விதம் ஒரு பெரும் திறப்பை என்னுள் நிகழ்த்தியது.

 

எழுத்து, வாசிப்பு அடங்கிய உரையாடல்களில் நீங்கள் முன்வைத்த கருத்துகள் அனைத்தும் பயிற்சிக்கு உரியவை. அப்பயிற்சியை என்னளவில் நிகழ்த்த முயலும்போதே அதற்கான கண்டடைதல்களை அறிய முடியும் எனபதை உணர்ந்து கொண்டேன்.

 

இலக்கியம் பேச நண்பர்கள் கிடைப்பது என்பது மிகப்பெரிய வரம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், இத்தனை காலமாக நான் கண்டுவரும் கனவு அது. இங்கு அவ்வாறான நண்பர்கள் கிடைத்தது எனது பாக்கியம். இவர்களிடம் பேசிய பிறகு இன்னும் நிறைய வாசிக்க வேண்டுமென்றும், எழுத வேண்டுமென்றும் தோன்றுகிறது. இதுவே, எனக்கான களம் என்று தோன்றுகிறது.

 

இச்சந்திப்பின் நிர்வாகம் என்னை வியப்புற செய்தது. அவர்கள் ஏற்பாடு செய்திருந்த உணவு, படுக்கை எல்லாம் பிரமாதம். நான் என்னளவில் மிகவும் நிறைவாக உணர்ந்தேன். அனைவருக்கும் நன்றியை உரித்தாக்குகிறேன்.

 

என்னை இந்நிகழ்வில் தெரிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

 

அன்புடன்,

நரேந்திரன்.

 

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

ஈரோடு சந்திப்பு அதுவும் உங்களுடன் இரண்டு நாட்கள் தங்கி உரையாடும் வாய்ப்பு என்பதற்காகவே கிருஷ்ணன் அவர்களிடம் கேட்டு வந்திருந்தேன்.

 

சனிக்கிழமை காலை முதலே நேரம் குறித்து சொல்லாமல் தொடர்ந்து (உணவு இடைவேளை , தேநீர் இடைவேளை ,நீண்ட மாலை நடையிலும்) பல்வேறு இலக்கிய போக்குகள், பத்திரிக்கை ஆசிரியர் குறிப்புகள், தொன்மைக் கதைகள், பேசுபொருள், பேசுதளம், பேசும்முறை என உரையாற்றினீர்கள்.இரண்டாம் நாள் சக நண்பர்கள் கொண்டுவந்திருந்த படைப்புகளை படித்து அதிலுள்ள போதாமைகள்,செறிவு படுத்த வேண்டிய இடங்கள் என பேசியது யாவருக்கும் கற்றுக்கொள்ள வாய்ப்பாக இருந்தது.

 

இரண்டு நாள் நிகழ்வு மிக அழகாக ஒருங்கமைக்க பட்டிருந்தது.எந்த ஒரு சூழ்நிலையிலும் வெற்று அரட்டையாகவோ, கிசுகிசுக்களாகவோ இல்லை.உங்களை தீவிரமாக கவனித்துக் கொண்டே இருந்தேன்.தீராத விருப்பத்துடன்  துளியும் சோர்வின்றி உரையாடலை நிகழ்த்திக்கொண்டே இருந்தீர்கள்.மிகுந்த நம்பிக்கையாக உணர்கிறேன். உங்களுக்கு  அன்பும்  நன்றிகளும் . உடனிருந்து அத்துணை பணிகளையும் ஒருங்கிணைத்த ஈரோடு கிருஷ்ணன் அண்ணா ,பாரி , மணாளன், அந்தியூர் மணி அண்ணா, செந்தில் அண்ணாவுக்கும் எனது நன்றிகள் …

குமார் சண்முகம்

கோவை

தானென்றாதல்

0
செம்மீனுக்காக விருது வாங்கும் பாபு சேட்

கடத்தற்கரியதன் பேரழகு

எர்ணாகுளத்தில் திரைக்கதையாசிரியர் ஜான்பால் அவர்களுடன் ஒரு படத்தின் சூழல் நோக்கும்பொருட்டு பயணம் செய்துகொண்டிருந்தபோது அவர் ஒரு மாளிகையைச் சுட்டிக்காட்டி  “அதுதான் செம்மீன் பாபுவின் இல்லம்” என்றார். திகைப்பாக இருந்தது, அது ஓர் அரண்மனை. அதன்பின் செம்மீன் பாபு என்னும் கண்மணி பாபு என்னும் பாபு மிர்ஸா இஸ்மாயில் சேட்  அவர்களின் வாழ்க்கையைப்பற்றிச் சொன்னார். பின்னர் ஜான்பால் அவர் தொலைக்காட்சியில் நடத்திவந்த நிகழ்ச்சியில் அதையெல்லம மீண்டும் சொல்வதைக் கேட்டேன். மலையாள சினிமாவில் ஒருவகையான தேவதைக்கதை போலச் சொல்லப்படுவது பாபு இஸ்மாயீல் சேட்டின் செம்மீன் கதை

 

பாபு இஸ்மாயீல் பாபு மட்டாஞ்சேரியில் மிகப்பெரிய  நிலவுடைமைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய முன்னோர்கள் கொச்சியின் புகழ்பெற்ற கடல்வணிகர்கள். அவருடைய பாட்டனார் வெள்ளிப்பல்லக்கில் பயணம் செய்தவர். அவருடைய தந்தையார் கேரளத்தில் முதலில் கார் வாங்கியவர்களில் ஒருவர். அவர்களின் நிலவுரிமை பற்றி ஒரு கதை உண்டு. அவர்கள் ஆயிரம் தென்னைத்தொழிலாளர்களை நிரந்தரமாக வேலைக்கு வைத்திருந்தனர். நாள்தோறும் தென்னைமரத்தில் ஏறி தேங்காய் பறிப்பது அவர்களின் வேலை. நாளொன்றுக்கு இருபதாயிரம் தென்னையில் தேங்காய் வெட்டப்படும். வெட்டி வெட்டி அவர்கள் தென்னந்தோப்புகளின் மறு எல்லைக்குச் சென்று முடிக்கும்போது தொடங்கிய இடத்தில் தேங்காய்கள் விளைந்திருக்கும்.

 

பாபு இஸ்மாயீல் சேட் 1946ல் மட்டாஞ்சேரியில் பிறந்தார். இளவரசர்களுக்குரிய வாழ்க்கை. விரும்பிய அனைத்தும் கையருகே. ஆனால் பாபு முழுக்க முழுக்க கலைகளில் உளம் தோய்ந்தவர். இசைப்பித்தர், இலக்கிய வெறியர். கலைஞர்களையும் இலக்கிவாதிகளையும் ஆதரித்தவர். கதைகளைக் கேட்கும்போது இளமையில் சக்கரவர்த்தி ஷாஜகான் அப்படி இருந்திருக்கலாம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. இளவரசரின் கண்ணுக்காக பெண்கள் காத்திருந்த காலம். இளவரசர் தன்னைவிட மூன்றுவயது மூத்த பெண்ணிடம் காதல் கொண்டார். நான்காண்டுகள் காத்திருந்து தனக்கு 21 வயது முடிந்தபின் அவளையே மணம் புரிந்தார்.

செம்மீனின் நாற்பதாம் ஆண்டு நிறைவு விழாவில் பாபு சேட், மது

செம்மீன் நாவலை படமாக்கவேண்டும் என்னும் எண்ணம் அன்று பலருக்கு இருந்தது. அதன் உரிமை எவரிடம் இருக்கிறது என்று தெரியாமலேயே ராமு காரியட் அதற்கு தன் 29 ஆவது வயதில் ஒரு திரைக்கதை எழுதினார். அதை படமாக்க விரும்பி அலைந்து திரிந்தார். அரசு உதவி தரவேண்டும் என கோரினார். ஆனால் கம்யூனிஸ்டுகள் அக்கதை தொழிலாளர் நலத்திற்கு உகந்தது அல்ல என்று சொல்லிவிட்டார்கள். அப்போதுதான் ஒரு கிளப்பில் அவர் பாபுவை சந்தித்தார். அப்போது பாபுவுக்கு 17 வயதுதான். செக்கில் கையெழுத்துபோடும் வயது ஆகவில்லை.ஆகவே தனக்கு 18 வயதாகும் வரை காத்திருக்க முடியுமா என்று பாபு ராமு காரியட்டிடம் கேட்டார். ராமு காரியட் ஒப்புக்கொண்டார்.

 

1964ல் பாபுவுக்கு 18 வயது நிறைந்தது. அதிகாரபூர்வமாக படத்தயாரிப்பு தொடங்கியது. ஆனால் அதற்குள் படத்தின் உரிமையை கண்மணி ஃபிலிம்ஸ் என்ற நிறுவனம் வாங்கிவிட்டிருந்தது. உரிமையை அத்தயாரிப்பாளர் விட்டுக்கொடுக்க மறுத்தார். பாபு அந்நிறுவனத்தையே ஒட்டுமொத்தமாக அதன் கட்டிடம், கடன் அனைத்துடனும் பெருந்தொகைக்கு வாங்கினார். அவ்வாறுதான் கண்மணி ஃபிலிம்ஸ் என்றபேரில் திரைப்படம் அமைந்தது. பாபு இஸ்மாயில் சேட் அதன்பின் கண்மணி பாபு என அறியப்படலானார்.

செம்மீன் படப்பிடிப்பில் தயாரிப்பு நிர்வாகிகள். கடைசியாக மார்கஸ் பட்லே

செம்மீனின் படத்தின் செலவு அன்று எடுக்கப்பட்ட ஒரு சராசரி மலையாளப் படத்தைவிட இருபது மடங்கு அதிகம். தமிழிலும் தெலுங்கிலும் அக்காலகட்டத்தில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய வணிகப்படங்களை விடவும் அதிகம். 1964ல் எடுக்கப்பட்ட மாபெரும் வரலாற்றுத் தமிழ் படமான கர்ணனை விட இரு மடங்கு முதலீடு கொண்டது செம்மீன். அப்பெரும் தொகை அன்றைய குறைந்த ஒளியுணர்வு கொண்ட படச்சுருளைக் கொண்டு கடலை அழகாக படம்பிடிப்பதற்கே செலவானது.கடலோர வெளிப்புறப் படப்பிடிப்பு மிகப்பெரிய செலவு வைத்தது. கடலுக்குள் எடுக்கப்பட்ட காட்சிகளில் ஐந்து சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட முடிந்தது. படப்பிடிப்பில் மூன்று விபத்துகள் நிகழ்ந்தன. ஒரு முறை படகு கவிழ்ந்து சத்யனும் மூன்று நடிகர்களும் கடலில் மூழ்கி வலைபோட்டு மீட்கப்பட்டனர். படக்கருவிகள் அனைத்தும் கடலில் மூழ்கின. உண்மையில் படப்பிடிப்புக்கான பணிகள் 1963ல் தொடங்கின. 1965 ல் முடிவடைந்தன. கிட்டத்தட்ட முன்றாண்டுக்காலம் மொத்தப் படக்குழுவே திரிச்சூர் அருகே நாட்டிகை என்னும் கடற்கரையில் வாழ்ந்தது. அதற்காக வீடுகள், படகுகள், வண்டிகள்  வாங்கப்பட்டன.

 

படம் வெளியானபோது பாபு இஸ்மாயீல் சேட்டுக்கு வயது 20தான். தேசிய விருது பெற ஜனாதிபதி மாளிகையில் மேடையேறிய இருபது வயதான இளைஞனிடம் ஜனாதிபதி “இவர்தான் கதைநாயகனா? சிறுவனாக இருக்கிறாரே?” என்று கேட்டார். பின்னாளில் நடிகர் மது ஒரு மேடையில் “ பாபு இஸ்மாயில் சேட் அளவுக்கு அழகான நடிகர்கள் எவரும் இந்தியத்திரைவானில் தோன்றியதில்லை, அவர் நடித்திருந்தால் மாபெரும் கனவுநாயகனாகியிருப்பார்” என்றார். பாபு இஸ்மாயில் சேட் அதன்பின் இரண்டு படங்கள் எடுத்தார். அவற்றையும் பெரும்பொருட்செலவிலேயே தயாரித்து வெளியிட்டார். அவை வணிகப்படங்கள் அல்ல, கலைச்சோதனைப் படங்கள். அவை வெற்றிபெறவில்லை.

பாபு சேட் கடைசிக்காலத்தில்

1966 ல் வெளிவந்த ஏழு ராத்ரிகள் ராமுகாரியட்டுகாக அவர் தயாரித்தது. செம்மீன் அளவுக்கு செலவு செய்யப்படவில்லை. கருப்புவெள்ளை படம். சலீல் சௌதுரி இசையில்  ‘பஞ்சமியோ பௌர்ணமியோ’ என்னும் பாடல் இன்றும் கேரளத்தின் புகழ்பெற்ற தாலாட்டு. ஆனால் படம் முற்றிலும் தோல்வியடைந்தது.

 

அந்தப்படம் பற்றி ஒரு செய்தியை ஜான்பால் சொன்னார். அந்தப்படத்தின் கதைநாயகனாக அறிமுகம் செய்யப்பட்டவர் ஜேஸி. ஜேஸி அதற்குமுன் ‘பூமியுடே மாலாக’ என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார், அது வெளிவரவில்லை. ராமு காரியட் ஏழு ராத்ரிகளுக்கு கதைநாயகனாக ஜேஸி நடிக்கலாம் என்று எண்ணினார். ஆனால் ஜேஸி ஓர் இதழாளராக செயல்பட்டபோது செம்மீன் படத்தை மிகக்கடுமையாக தாக்கி விமர்சனம் எழுதியிருந்தார். அது மூடநம்பிக்கையைப் பரப்புகிறது, அப்படி ஒரு நம்பிக்கை அக்கடற்கரையில் உண்மையில் இல்லை என்பது அவருடைய வாதம். ஆகவே பாபு அவரை நடிக்கவைக்கவேண்டாம், மது நடிக்கட்டும் என்றார். ஆனால் அப்படி சொல்லப்பட்டதனாலேயே ராமு காரியட் பிடிவாதம் பிடித்து படம் எடுத்தால் ஜேஸிதான் கதைநாயகன் என்றார். இயக்குநர் ஓங்கிச் சொன்னதனால் பாபு ஒத்துக்கொண்டார். படம் வெளியானது, எவருக்குமே கதைநாயகனைப் பிடிக்கவில்லை. மது நடித்திருந்தால் ஓடியிருக்க வாய்ப்புள்ள படம் மண்ணைக் கவ்வியது. ஜேஸி மேலும் சில படங்களில் நடித்தபின் இயக்குநராகி முப்பது படங்களுக்குமேல் இயக்கிநார்

 

சில ஆண்டுகள் படத்தயாரிப்பில் இருந்து விலகியிருந்த பாபு அதன்பின் 1983ல் இன்னொரு இளம் இயக்குநருக்காக அஸ்தி என்னும் படத்தை இயக்கினார். ஒரே ஒருநாள் ஒரு நிறுவனத்தின் தலைவராக ஆகநேர்ந்த கடைநிலைத் தொழிலாளரின் வாழ்க்கையைச் சொல்லும்படம். ரவிகிரண் பின்னாளில் படத்தொகுப்பாளராக புகழ்பெற்றார். ஆனால் அஸ்தி தோல்வியடைந்தது. பரத் கோபி கதைநாயகன். பாபு அதன்பின் படங்களை தயாரிக்கவில்லை. எர்ணாகுளத்தில் கவிதா என்னும் திரையரங்கை உருவாக்கினார்.

பாபு சேட்

 

இன்று செம்மீனுக்காகவே பாபு அறியப்படுகிறர். செம்மீன் பாபு என்றே அவர் அழைக்கப்பட்டார். 2005ல் தன் 62 ஆவது வயதில் அவர் மறைந்தபோது செம்மீன்பாபு இறப்பு என்றே செய்திகள் வெளிவந்தன. செம்மீன்பாபுவின் வாழ்க்கையை இன்று பார்க்கையில் ஒன்று தோன்றுகிறது, அதற்கு செம்மீனின் துயரநாயகனாகிய பரீக்குட்டியின் வாழ்க்கையுடன் நெருக்கமான உறவு இருக்கிறது. வணிகக் குடியில் பிறந்த பரீக்குட்டியின் உள்ளமெல்லாம் இசைதான். இசையின் உணர்வுநிலையாக கறுத்தம்மா. பாபு இசையில் தோய்ந்து வாழ்ந்தவர். செம்மீன் பாபுவும் இசையும் காதலுமாகவே வாழ்ந்தவர். வணிகச்சூழலில் மனம் அமையாதவர்.

பாபு வாழ்நாளெல்லாம் பணத்தை அள்ளி அள்ளி இறைத்துக்கொண்டிருந்தார். பெருங்கொடையாளி என இன்று அவரை சொல்கிறார்கள். நடிகர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் என பலரை பல இக்கட்ட்டுகளிலிருந்து அவர் மீட்டிருக்கிறார். செம்மீனில் பரீக்குட்டியும் முன்பின் எண்ணாது அள்ளிக் கொடுப்பவராகவே இருக்கிறான். இப்போது பார்க்கையில் பரீக்குட்டியாக மதுவின் முகம் அன்றிருந்த பாபுவின் முகத்தை மிக ஒத்திருக்கிறது. பாபுவை தயாரிப்பாளராக அள்ளி அள்ளிச் செலவழிக்கச் செய்தது அவர் பரீக்குட்டியாக மாறி கறுத்தம்மாவை காதலித்தது தானா? அந்தப்படம் தயாரிக்கப்படும்போது பாபு படத்தின் வெறியிலும் காதலின் போதையிலும் அலைக்கழிந்துகொண்டிருந்தார்.படம் வென்றபோது அவருடைய காதலும் வென்றது.

 

பலவகையிலும் செம்மீன் பாபுவுடன் ஒப்பிடத்தக்க ஒர் ஆளுமை தமிழ்நாட்டில் உண்டு – சொக்கலால் ராம்சேட் பீடி உரிமையாளர் ஹரிராம் சேட். [ வட இந்தியர் அல்ல. தமிழர். முக்கூடல் என்னும் ஊரைச்செர்ந்தவர். பெயரை வட இந்தியத்தன்மையுடன் சூட்டிக்கொண்டவர்]  தியாகராஜ பாகவதர் உட்பட பல இசைவாணர்கள். நடிகர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர். வணிகராக இருந்தாலும் இசையில் கலையில் தோய்ந்தவர். ஒரு பெருங்கொண்டாட்டமாகவே வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். கொடைவள்ளல். ஆனால் அவர் பெயரை இன்று அவர் குடும்பத்தவர் அன்றி எவரும் நினைவுகூர்வதில்லை. ஏனென்றால் அவர் ஆற்றியது என சொல்லிக்கொள்ள செம்மீன் போன்ற ஒரு காலம்கடந்து நிற்கும் சாதனை இல்லை.

 

எண்ணிப்பார்க்கையில் ஒன்று தோன்றுகிறது. சொக்கலால் ஹரிராம் சேட்டுக்கும் பாபு சேட்டுக்கும் என்ன வேறுபாடு? ஹரிராம் சேட் கொண்ட கலையார்வம் என்பது சாதாரணமாகத் தமிழர்கள் கொள்ளும் திரைப்பிரபலங்கள் மீதான மோகம்தான். எவர் ஏற்கனவே புகழ்பெற்றிருக்கிறார்களோ அவர்களுடன் தங்கள் செல்வப்பெருமையைக் கொண்டு அணுக்கம் சாதிப்பது. அதில் மகிழ்வது, அவர்களை உபசரிப்பது, அதன்பொருட்டு பெரும்பணத்தைச் செலவிடுவது. அதன் வழியாக அவர்களும் தானும் நிகரானவர்கள் என்று கருதிக்கொள்வது. கலை ஈடுபாடு என்பது அப்பெருமையில் மறைந்துவிடுகிறது

 

இத்தகைய செல்வந்தர்களை இன்றும் திரைவாழ்க்கையில் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். அவர்கள் பிரபலங்களுடனான தொடர்பை பேணுவதற்குச் செலவிடுவதில் சிறுபகுதியை நல்ல படங்களுக்குச் செலவிட்டிருந்தால்கூட தமிழில் ஒர் அரிய கலைப்பட இயக்கம் உருவாகியிருக்கும். அவர்களுக்கும் காலம் கடந்து நிற்கும் பெருமை வந்தமைந்திருக்கும். ஆனால் அவர்களிடம் அதைச் சொல்லிப் புரியவைக்கவே முடியாது. நான் பலமுறை சொல்லி ஏமாந்திருக்கிறேன். சமீபத்தில்கூட ஒரு தயாரிப்பாளர் சொன்னார், தோல்வி அடையும் என்று தெரிந்தே நட்புக்காக ஒரு படம் எடுத்து நான்குகோடி ரூபாயை இழந்தார் என்று. பத்து நிமிடம் பார்க்கமுடியாத பயிற்சியே அற்ற அசட்டு வணிகக்கேளிக்கைப் படம் அது.

 

இந்த வேறுபாடு எங்கிருந்து வருகிறது? மீண்டும் பாபு சேட்டுக்கே செல்லவேண்டியிருக்கிறது. பாபுசேட் இலக்கியவாசகர். மலையாள நவீன இலக்கியத்தின் மையத்தில் ஒரு சிறந்த வாசகராக என்றும் இருந்தவர். கலையார்வம் ஒரு வகையில் ‘அறிவுத்தரம்’ தேவையற்றது. இலக்கியம் அப்படி அல்ல. அது ஒரு வரலாற்றுப்புரிதலை, ஒரு நுண்ணுணர்வை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. பாபு சேட்டை செம்மீன் நோக்கி கொண்டுவரச் செய்தது தகழியின் நாவலின் கதைத்தலைவனாக அவரே ஆனதுதான். அப்படி ஓர் இலக்கியப்படைப்பினூடாக தன்னை கண்டடைதல் என்பது ஒரு தரிசனம்.

பஞ்சமியோ பௌர்ணமியோ!

 

சினிமாவின் பாரி

அருந்தவச் செல்வர் அரிராம் சேட்

தந்தை காட்டிய வழி

மீண்டும் கங்கைக்கான போர்

0

கங்கைக்காக ஒர் உயிர்ப்போர்

நீர் நெருப்பு – ஒரு பயணம்

நெருப்பு தெய்வம், நீரே வாழ்வு

கங்கைப்போர் முடிவு

 

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

சுவாமி ஆத்மபோன்ந்த்.ஒவ்வொரு முறை இந்த பெயரை நினைக்கும் போதே மனம் எல்லாம் அதிர்ந்து கிடக்கும்,27வயது இந்த இளம் மனிதனின் முகம் அதில் நிரம்பி இருக்கும் வைராக்கியம் மிகப்பெரியது.கங்கை நதியை பாதுகாக்க 48 நாட்கள் நீர் கூட அருந்தாமல் தொடர் உண்ணாவிரதம் இருக்கும் இவர் எங்கள் அனைவரின் தூக்கத்தையும் கலைத்து போடுபவர்.

ஏற்கனவே நெருப்பு தெய்வம் நீரே வாழ்வு புத்தகத்தின் வழியே இவரைப்பற்றியும் இந்த நீண்ட நெடிய போரத்தில் உயிர் துறந்த மற்ற துறவிகள் பற்றியும் எழுதி இருந்தாலும்,கடந்த இரு மாதமாக இவர்கள் அனுபவிக்கும் துயர்கள் எங்கள் மனதை இன்னும் நிலைகுலைய செய்கிறது.

இவருடன் சக பெண் துறவி சாத்வி பத்மாவந் அவர்கள் தனது 71வது நாள் உண்ணா விரதத்தில் இருக்கிறார். இவரின் அதிகபட்ச உணவு எலுமிச்சையும் தேனும் கலந்த ஒரு டம்ளர் நீர் மட்டுமே அதுவும் இரு வேளை என மனது திரும்ப நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது.

.ஆனால் அவர்கள் முன்னெடுத்து இருக்கும் இந்த போரட்டம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்த்தது,இந்திய நிலத்தின் உயிர் நாடியான கங்கை நதியை.எப்படியாவது காப்பாற்றி விட முடியாதா,தனது குருவுக்கு ஒரு புள்ளி மனநிறைவையாது அளிக்க இயலுமா என சற்றும் மனம் சலிக்காத வேதாளத்தை போல மீண்டும் மீண்டும் இந்த அரசிடம் போராடி தோற்றுக் கொண்டே உள்ளனர் இந்த மாத்ரி சதன் அமைப்பினர்.

கங்கை நதிக்கிரையின் ஓரத்தில் அமைந்துள்ள இந்த எளிய ஆசிரமத்தின் நுழைவாயிலின் அருகே அமர்ந்து அதன் குரு சிவானந்த அங்கு வரும் அனைவருக்கும் அவர்களின் இந்த போரட்டத்தை பற்றியும் அதன் அவசியம் பற்றியும் ஒரு வரி விடாமல் திரும்ப திரும்ப பேசிக்கொண்டு இருந்த அவர்,இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் காத்து கொண்டு இருக்கின்றார்.மீண்டும் மீண்டும் ஒரு சொல்லிலோ எழுத்திலோ இந்த அறப்போரட்டத்தை பற்றி மேலும் அவர்களின் ஒரு நாளில் ஏற்படும் துயர்களையோ வெளி உலகத்திற்கு சொல்லி விடமுடியாது.இன்று உலகமே உற்று கவனிக்கும் மிக முக்கிய தொடர் போரட்டத்தினை முறியடிக்க நடக்கும் செயல்கள் மனதை உச்சபட்ச பதற்றத்திற்கு உள்ளாக்குகிறது.

நீங்கள் மற்றும் வாசகர்கள் உங்கள் தளத்தில் எழுதி இருந்த கட்டுரைகள் தாண்டி,இன்று வரை தமிழ்ச் சூழலில் இது குறித்து யாரும் எதுவும் எழுதவோ பேசவோ விவாதிக்கவோ இல்லை.ஒரு ஆண்டு இல்லை இரு ஆண்டு இல்லை தொடர்ந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாக கங்கை நதிக்கரையின் மிக முக்கிய பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகளில் இருக்கும் கல்குவாரிகளை மூடச்சொல்லியும்,தொடர்ந்து இராசயனக்கழிவுகளை கங்கை நதியில் கலப்பதை தடை செய்யக்கோரியும் போராடி வருகின்றனர்.இன்னும் முக்கியமாக தேவையற்ற தடுப்பனைகளை வர விடாமல் தடுக்கவும் சட்டரீதியாகவும் மிக முக்கிய பணியினை செய்து வருகின்றனர்.

சென்ற ஆண்டு ஆத்மபோனந் அவர்கள் இந்த கோரிக்கைகளுக்காக விரதம் இருக்க துவங்கி 127 நாட்கள் கடந்து இருந்த சமயம் ,நாங்கள் அனைவரும் அங்கு  இருந்தோம்.ஊர் திரும்பும் போது அவரைமீண்டும் பார்க்க முடியுமா என்ற கனத்து கிடந்தது மனது.பிறகு அவரின் இந்த உன்னா நோன்பு  197வரை நீடித்து அதிகாரிகளுக்கு பெரும் நெருக்கடியான பின்பு,கங்கை நதிக்கான பாதுகாப்பு கவுன்சில் எழுத்து பூர்வமாக கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியளித்தனர்,அதனால் பெரும் மனநிறைவுடன் இருந்தோம்.ஆத்மபோனந் உடல் ஈரிதியாக மீண்டுவர பெரும் மெனக்கிடலுக்கு உள்ளாகி இருந்தார்.

அடுத்த மாதத்தில் சில வாக்குறுதிகள் மட்டும் நிறைவேற்றப்பட்டன.இரு அணைக்கட்டுகள் கட்டும் பணி முற்றிலும் நிறுத்திவைக்கபட்டது.ஆனால்,பெரும் கார்பரேட் நிறுவனங்களின் கைப்பிடியில் இருக்கும் கல்குவாரிகளை அதனால் உருவாகும் சூழல் சீர்கேடுகளை தடுக்க இயலவில்லை.மாத்ரி சதன் ஆசிரமவாசிகள் அனைத்து அரசு இயந்திரங்களுக்கும் தொடந்து கடிதங்கள் மற்றும் எல்லா வழி முறைகளிலும் நெருக்கடி கொடுத்தனர்,எதுவும் நடக்கவில்லை,மீண்டும் அதே சூழல்.

இம்முறை சாத்வி பத்மாந் எனும் 23வயதே நிரம்பிய இளம் பெண் துறவி அந்த குருவிற்கு பதில் உண்ணா விரத போராட்டத்தை துவங்கிவிட்டார்.கடும் நெருக்கடிகளுக்கு உள்ளாக ஆரம்பித்தார்,சிலவற்றை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை.ஆசிரமத்தில் இருந்து அவர் வெளியேற்றப்பட்ட நாளில் சுவாமி ஆத்மபோன்ந்த் விரதம் இருக்க துவங்கி விட்டார்.கடந்த ஜனவரி 22ம் தேதி அன்று உள்ளூர் அதிகாரிகளால் கடுமையான நெருக்கடிக்கு ஆட்படுத்தப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டனர்.தொடர்ந்து வளாகத்தில் தொடர் பரிசோதனைகளுக்கு உள்ளாகி வருகிறார்கள்.மேலும் அன்று முதல் ஆத்மபோனந்த அவர்களுக்கு நரம்பின் வழியே நீர் உணவு அளித்து வருகிறார்கள்.

அனுதினமும் பிரதம மந்திரி,உத்ராகண்ட் முதல் அமைச்சர் ,டெல்லி முதல் அமைச்சர் மற்றும் பிற உயர்மட்ட குழுக்களின் தலைவர்கள் என அனைவருக்கும் தங்கள் தரப்பு நியாத்தையும் ஒரு பாதுகாப்பு கூட இன்றி இருப்பதை கடிதத்தின் வழியே மிகுந்த ஆதங்கத்துடன் தெரியப்படுத்தி உள்ளனர்.நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து அவர்களை டிஸ்சார்ஜ் செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.நரம்பின் வழியே உணவு அளிப்பதும் கடந்த 72மணி நேரத்திற்கும் மேல் நிறுத்தப்பட்டுள்ளது.மிக மோசமான உடல் நிலையில் இருக்கும் அவர் அங்கிருந்து வெளியேற மறுத்து அந்த மருத்துவமனை வெளி வளாகத்தில் போரட்டத்தை தொடர்கிறார், டெல்லியின் கடுங்குளிரில் இருக்கும். அவரின் இந்த புகைப்படக்காட்சி மனசாட்சியை குடைகிறது.

நீர் என்பது அவர்களுக்கு வெறும் நீர் அல்ல அதையும் தாண்டிய ஒன்றாக அவர்கள் பரிபூரணமாக நம்பி கைத்தொழுகிற இறையாகவே இந்த கங்கை நீரை உணர்கிறார்கள்.தங்கள் கடமையாக தான் இந்த பாதுகாக்கும் செயலையும் செய்கிறார்கள்.அவர்கள் மெனக்கெடுவது இந்த தேசத்தின் அத்தனை மக்களுக்காக தான்,ஆனால் எத்தனை மக்களுக்கு இந்த உண்மை புரியும் அல்லது குறைந்த பட்சம் எவ்வளவு பேர் கவனத்தில் இந்த செய்தி சென்று சேரும் என தெரியவில்லை,ஆனால்இந்த தேசத்தின் இந்த கடைக்கோடியில் அமர்ந்திருக்கும் நாம் அணுஅணுவாய் தண்ணீருக்காக தன்னுயிரை கொடுக்கும் இந்த மக்களை தினம் ஒரு முறையாவது நினைத்து கொள்ள வேண்டும்.

அத்தனை இக்கட்டையும் தாண்டி இந்த உண்ணாவிரதம் தொடர்கிறது, இவர்கள் இந்த காரியம் கைகூடும் என நம்பிக்கையுடன் போராடுவது பெரும் வியப்பளிக்கிறது.இயற்கை இவர்களை உறுதியாக காத்து அருளும்… சென்ற ஆண்டு இதே நாளில் தான் நாங்கள் நணபர்கள் 15பேர் இந்த மனிதர்களை சென்று தரிசித்து வந்ததை திரும்ப திரும்ப நினைத்து கொள்கிறோம்.வரும் தலைமுறை இந்த தியாக மனிதர்களை இலட்சியவாதிகளை நிச்சயம் அடையாளம் கண்டுகொள்வார்கள் என உள்ளுணர்வு ஏதோ நம்பிக்கை கொள்கிறது..

 

ஸ்டாலின்

கள்ளிப்பட்டி

குக்கூ மற்றும் தன்னறம் நண்பர்கள்

=========================================================================================================

கங்கைக்கான போர் -கடிதம்

கங்கைப்போர்- நூல் பெற்றுக்கொள்ள…

கங்கைக்கான உயிர்ப்போர் – கடிதங்கள்

கங்கைப்போர்- கடிதங்கள்

கங்கைக்கான போர் -கடிதங்கள்

கங்கைக்கான போர் – ஓர் ஆவணப்படம்

அபிராமானந்தரின் கங்கை

வாழ்நீர் – கடலூர் சீனு

கங்கைப்போர்- நூல் பெற்றுக்கொள்ள…

 

நாஞ்சில்நாடன்

0

இந்நூல் எழுத்தாளர் ஜெயமோகன் அவருடைய மதிப்பிற்குரிய நண்பராகிய நாஞ்சில்நாடனைப்பற்றி எழுதியிருக்கும் ஆளுமைச்சித்திரம். நாஞ்சில்நாடனை மூத்த உடன்பிறந்தவரைப்போல் நினைக்கும் ஜெயமோகன் அன்புடனும் கேலியுடனும் நுட்பமான சித்தரிப்புடனும் அவரைப்பற்றி இந்நூலில் விவரிக்கிறார். சிரித்துக்கொண்டே வாசிக்கத்தக்க இந்நூல் மெல்லமெல்ல யதார்த்த உணர்வுகொண்ட, அன்பான ஒரு மனிதரையும் கூர்மையான கவனிப்புகளும் நகைச்சுவை உணர்வும் சமூகப்பிரக்ஞையும் கொண்ட ஓர் எழுத்தாளரையும் அறிமுகம் செய்கிறது

தாடகை மலையடிவாரத்தில் ஒருவர்

மின்னூல் வாங்க

ஈரோடு வாசகர் சந்திப்பு -கடிதம்

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு,2020

 

அன்புள்ள ஜெ,

 

திங்கட்கிழமைகள் என்பது மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு ஒருவித கலக்கத்தை அளிக்கக்கூடியவை. ஆனால் இந்த திங்கட்கிழமை மிக உற்சாகமாக உணர்கிறேன் , அதற்கு முக்கிய காரணம் ஈரோடு வாசகர் சந்திப்பு 2020. கடந்த இரண்டு நாட்களாக நடந்த நிகழ்ச்சிகளை மனம் அசைப்போட்டபடி லயித்திருக்கிறது .உங்களுடனும் வாசகர் சந்திப்புக்கு வந்த நண்பர்களுடனும் கழித்த கடந்த 2 நாட்கள் என் வாழ்வில் மறக்கமுடியாதவை ஜெ.

 

அதிகாலை பேருந்து நிலையத்திற்கு வந்திறங்கியதிலிருந்து நேற்று மாலை பெங்களூருக்கு திரும்பும் வரை பேச்சுக்களும் விவாதங்களும் இலக்கியத்தை சுற்றியே இருந்தன , ஒரு புத்தகத்தை படித்தவுடன் அதைப்பற்றி முகநூலில் எழுதிவிட்டு அதற்கு எந்தவிதமான எதிர்வினைகளோ கருத்துக்களோ வரமால் இருப்பதை பார்த்து கவலையடைந்துகொண்டிருந்த எனக்கு, நான் படித்த புத்தகங்களைப் பற்றி பேசுவதற்கு சில நண்பர்கள் இருக்கிறார்கள் என நினைப்பதே ஒரு மகிழ்ச்சியை கொடுத்தது

 

ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு செல்லவேண்டிய வாகனத்தில் ஏறி அமர்ந்தவுடன் யார் முதலில் அறிமுகம் செய்துகொள்வது என ஒருவிதமான இருக்கத்துடன் இருந்தபோது ஒரு நண்பர் திடீரெனயாரெல்லாம் வீட்டுல பொய் சொல்லிட்டு வந்திருக்கீங்கஎன்று கேட்டார் . இன்ப அதிர்ச்சியாக கிட்டத்தட்ட எல்லாருமே திருமணம் , சடங்கு போன்ற நிகழ்ச்சிகளுக்கு போவதாக சொல்லிவிட்டு வந்திருந்தனர்.நானும் அப்படிதான் சொல்லிவிட்டு வந்திருந்தேன் .வரும்வழியில் தேநீர் குடித்துக்கொண்டிருக்கும்போது நண்பர் ஒருவர் இன்று ஜெ இணையதளத்தில் தேநீரைப்பற்றி ஒரு பதிவுபோட்டிருக்கிறார் என சொல்லியதும் காலையில் துயில் எழுந்ததும் உங்கள் இணையதளத்தை வாசிப்பதை வழக்கமாகக்கொண்டுள்ளனர் என புரிந்துகொண்டேன்.

 

“Nature makes you happy ” என்னும் வாசகத்தைப்போல இயற்கை சூழ்ந்த பண்ணை வீடு மிக ரம்மியமாக இருந்தது . பண்ணை வீட்டின் வாசலுக்கு வந்ததும் உங்களின் சிரிப்பு சத்தம் எங்களை வரவேற்ப்பதைப்போல் இருந்தது .எல்லோரும் அறிமுகம் செய்துகொண்டவுடனே உரையாடல் ஆரம்பமானது.கொரொனா வைரஸ் , மேற்கத்திய இசைக்கலைஞர்களின் தற்கொலை , இந்திய , ஜப்பானிய, மேற்கத்திய கல்விமுறை என உரையாடல் மிக சுவாரஸ்யமாக நீண்டுகொண்டே இருந்தது. உங்கள் இணையதள அமைப்பும் உங்கள் மூளையும் கிட்டத்தட்ட ஓரே மாதிரியாக செயல்படுவதைப்போல எனக்கு கடந்த இரண்டு நாட்களும் தோன்றிக்கொண்டே இருந்தது.

 

உங்கள் இணையதளத்தில் எப்படி ஒரு பதிவை சொடுக்கியவுடன் அதற்கு தொடர்புள்ள செய்திகள் தயாராக இருக்குமோ அதே மாதிரி உங்களிடம் எந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேசினாலும் அதற்கு தொடர்புள்ள ஒரு செய்தி அல்லது தகவல்களை உடனே சொன்னது ஆச்சர்யமளித்தது. உதாரணமாக : அழகிய மணவாளன் என்னும் பெயர் எனக்கு பரிச்சயம் இல்லாமல் இருந்ததால் , அது அவருடைய இயற்பெயரா அல்லது புனைப்பெயரா என கேட்டவுடனே இயற்பெயர்தான் என சொன்னதோடு நிறுத்தாமல் , அந்த பெயருக்கான பின்புலத்தைப்பற்றியும் , அழகிய மணவாளரைப் பற்றிய அறிமுகத்தோடு சொன்னது.

 

நாங்கள் கேட்ட சில மொண்ணைத்தனம் நிறைந்த கேள்விகளுக்கும் பொறுமையாகவும் விளக்கமாகவும் பதிலளித்தது என கடந்த இரண்டு நாட்களாக உங்களின் ஆளுமையக்கண்டு வியந்துகொண்டே இருந்தேன் . கடந்த இரண்டு நாட்களாக சிரித்ததைப்போல சமீபத்தில் நான் சிரித்து மகிழவில்லை, இந்த சந்திப்பின் மூலம் எனக்கு கிடைத்த மிகப்பெரிய திறப்பு என்பது நாம் அடைய விரும்பும் ஒரூ விஷயத்திற்கோ கற்றுக்கொள்ள நினைக்கும் ஒன்றின் மீது நாம் காட்டவேண்டிய எல்லைகளற்ற ஈடுபாடும் , அதற்கான பித்து நிலையை அடைவது எவ்வளவு அவசியமானது என்பது. அதற்காக நீங்கள் சொன்ன உதாரணங்கள் ஒவ்வொன்றும் உத்வேகம் அளிப்பதாக இருந்தன

 

தீவிர வாசிப்புடன் எழுத வேண்டும் ஆசையும் வெகுவாக எழுகிறது. அதைப்பற்றி கனவு மட்டும் காணாமல் அதை செயல்படுத்தியே ஆக வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியிருக்கிறதுகடந்த இரண்டு நாட்களுக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் . மற்றும் கடந்த இரண்டு நாட்களை என் வாழ்வின் மிக முக்கியமான நாட்களாக மாற்றியதற்கும் , வாழ்க்கைக்கு தேவையான மிக முக்கியமான திறப்புக்களை அளித்ததற்கும் உங்களுக்கு நான் என்றும் கடைமைப்பட்டவன்சந்திப்பு முடியும் நேரத்தில் தன்னறம் அமைப்பினர் கொடுத்த அன்பளிப்பு நெகிழவைத்தது :)

 

அன்புடன்,
பாலசுப்ரமணி மூர்த்தி