Home Blog Page 2

மொழியாதது

0

திற்பரப்பு அருகே ஒரு கயம் முன்பு இருந்தது. ஓர் யானை அதில் விழுந்து செத்ததனால் அதற்கு யானைக்கயம் என்று பெயர்.அக்காலத்தில் அதில் பாய்ந்து மையச்சுழியைச் சென்று தொட்டு கரைமீள்வது ஒரு சவால். மணியன், கோபாலகிருஷ்ணன் எல்லாம் பலமுறை செய்ததை நான் ஒருமுறை முயன்றேன். சுழி நம்மை அதன் கண் நோக்கி சுழற்றி கொண்டுசெல்லும். மையத்தை அடைவதற்குச் சற்று முன்பாக எதிரோட்டத்தில் காலை ஊன்றி உந்தி விளிம்புநோக்கி தாவிவிடவேண்டும். கூடவே மையச்சுழியை கையால் தொடவும் வேண்டும். இதுதான் உத்தி

 

நான் முயன்றேன். எதிரோட்டத்திற்கும் மறுதிசைச் செல்லோட்டத்திற்கும் கணநேரமே வேறுபாடு. என் காலை நீட்ட நீர் அதை யானையின் துதிக்கை எனப் பிடித்து இழுத்துச் சென்றது. மூழ்கி கீழே போன கணம் மணியன் பாய்ந்து என் தலையை பிடித்து தூக்கி அப்பால் வீசி அவன் மையம் நோக்கிச் சென்று ‘கடைக்கல் சவிட்டி’ மேலெழுந்து மீண்டான். அதற்குள் வயிறு நிறைய நீர் குடித்திருந்தேன்

 

ஆழத்தின் நீலநிற ஒழுக்கில் நான் ஏராளமான சருகுகள் சிறகுகொண்டவை என சுழன்றுகொண்டிருப்பதைக் கண்டேன். தேங்காய்கள், சுள்ளிகள். அனைத்தும் ஒன்றை ஒன்று கவ்வியவை போல சுற்றிவந்தன.அச்சமூட்டும் ஒரு ரகசியச் சடங்கு அங்கே நடந்துகொண்டிருப்பதைப்போலத் தோன்றியது. அத்தனை பொருட்களையும் தன்னுள் இழுக்கும் ஆனைக்கயம் எதையும் உள்ளே வைத்திருப்பதில்லை. அவற்றிலிருந்து எதையோ ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு அப்பால் தள்ளிவிடுகிறது. உயிர்களிடமிருந்து மூச்சை.

 

ஆறு என்பது ஒரு மொழி. அது திற்பரப்பில் ஆர்ப்பரித்து பொழிகிறது. வெண்ணிற கதிர்விட்டு விளைந்து எழுந்து நிற்கிறது. கயம் ஒரு மௌனம். நீரின் வெவ்வேறு பாய்ச்சல்களை அங்கே காணலாம். “பல்லுகளுக்க நடுவிலே நாக்கு போலல்லா ஆறு இந்த பாறைநடுவே கெடந்து பெடாப்பாடு பெடுது” என்பார்கள். பேசும் நாக்கு, ஆகவே துள்ளல் துவளல் ஒசிதல் வளைதல் எழுதல் விழுதல். கணம் ஓய்வில்லை. ஒரு நீள்தழல். நீராலானது. அந்த நடனத்தின் ஏதோ ஒரு கணம், ஏதோ ஒரு இடம், அப்படி சுழித்துக் கயமென்றாகிவிட்டது.

 

யானை நீந்தாத பெருக்கு இல்லை. யானையே நீரின் அடையாளம்தான். ஆனால் ஆற்றில் நீந்திவந்த யானை கயத்தில் சுழித்து உள்ளே சென்றுவிட்டது. மணலில் கால்கள் புதைந்து உயிர்விட்டு மூன்றாம்நாள் உப்பி உருவழிந்து அப்பால் எழுந்தது. பாறைநடுவே பாறை என அதை தொலைவில் கண்டனர். அருகணைந்தபோது அதன்மேல் சிறிய செதில்சிப்பிகள் ஒட்டியிருந்ததைக் கண்டனர்.  “தண்ணிக்க தும்பிக்கையில்லா பெரிசு!” என்றார் பாடகரான குணமணி

கயம்

 

‘நீராடு
ஆனால் அங்கே
சுழல் இருக்கிறது.போகாதே”என்பார் அப்பா.
இங்கே நிதானமாக நடக்கும்
நதி
அங்கே ஏன் ஆக்ரோஷம் கொண்டு சுழல்கிறது?
என்று அவரிடம் கேட்பேன்..

 

ஆதி வெடிப்பு
ஒரு சுழலாய் இருந்தது.
சுழல் பிரிவதும்
பிரிகள் மீண்டும் சுழல்வதும்
இருபேரியற்கை என்றார் அவர்.

 

சொல்லிக்கொண்டு இருந்தபோதே
யாரோ செய்த
நீத்தார் சடங்கின் மாலைகள்
நதியில் மிதந்து வந்தன.

 

அவை
சுழல் நோக்கிச் செல்கின்றனவா
சுழல் விலக்கி நகர்கின்றனவா
என்று காண
எனக்குத் துணிவில்லை.

 

போகன் சங்கர்

ஆறு நிறைய சொல்லியிருக்கிறது. ஒவ்வொன்றாகப் புரிந்துகொள்ள நெடுநாட்களாகியது. இறுதியாகப் புரிந்துகொள்ளும்போது ஆற்றுடன் கலந்துவிட்டிருப்பேன். பொழிந்துகொண்டே இருக்கும் அருவி ஒரே சொல்லையே சொல்வதாகத் தோன்றும். செவிகொடுத்து நின்றல் ஒருசொல்லே மொழியென்றாகும். நள்ளிரவில் கேட்கும் திற்பரப்பு அருவின் ஓசை அச்சமூட்டுவது. வலிகொண்ட நோயாளியின் ஓலம் போல, தலை சுழற்றி வீரிடும் யட்சியின் குரல்போல. ஆனால் விடியற்காலையில் விழிப்பின் முதலோசை என அதைக் கேட்கையில் ஓர் ஆறுதல் போலத் தோன்றும். முந்தைய நாளையும் எழும் காலையையும் கோக்கும் ஒரு மெல்லிய வெள்ளி நூல்.

 

ஆனைக் கயம் ஓசையற்றது. தன்னைத்தனே சுழற்றிக்கொண்டு அங்கிருப்பது. அள்ளி இழுத்தும் தள்ள்வி விலக்கியும் ஒவ்வொன்றுடனும் விளையாடிக்கொண்டிருப்பது. அது அங்கிருப்பதையே பெரும்பாலும் உணர்வதில்லை. அருகே சென்று கண்டாலொழிய அதை எண்ணுவதில்லை. ஆனால் அது அங்கிருந்துகொண்டே இருந்தது, ஆற்றின் சொல்லப்படாத சொல்.

 

ஒருநாள்

 

 

சர்வ ஃபூதேஷு கடிதங்கள்- 4

யா தேவி! [சிறுகதை]

சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

அன்புள்ள ஜெயமோகன்

 

சர்வ ஃபூதேஷு கதை ஓர் இனிய அனுபவம். இந்தக்கதை வாசிக்கும் அனுபவத்தை இதுவரை அடைந்ததே இல்லை. அதாவது ஒரு கதை வாசிக்கிறோம். பலநாட்கள் அதைப்பற்றிய விவாதம் நடைபெறுகிறது. நண்பர்களுடன் பேசுகிறோம். கடிதங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதன்மூலம் அந்தக் கதைக்குள் ஆழமாகச் சென்றுவிடுகிறோம். எல்லா ஆன்ஸெலும் ஸ்ரீதரனும் நமக்கு மிக நெருக்கமானவர்களாக ஆகிவிடுகிறார்கள். அடுத்த கதை அந்த நீண்ட அனுபவத்தின் தொடர்ச்சியாக அமைகிறது

 

எல்லா ஆன்ஸெலின் கதாபாத்திரம் மிகச்சுருக்கமாகவே சொல்லப்படுகிறது. அதுவும் ஸ்ரீதரனின் பார்வையில். அவன் அவளை நெருக்கமாக அறியவே முயலவில்லை. அவளை அவன். Personalaize பண்ணவே இல்லை. அவளுடைய தனிவாழ்க்கை தனிமனசு எதற்குள்ளும் செல்லவில்லை. அவன் அவளை generalize தான் செய்கிறான். பெண், அன்னை, சக்தி என்று வகுத்துக்கொள்கிறான். எல்லா என்று பார்க்கவே இல்லை. ஆகவே அவளுக்கு வேறுவழி இல்லை. அவள் தன்னை அந்த பெரிய பிம்பம் நோக்கி கொண்டுசென்றே ஆகவேண்டும். இது ஒரு முறைதான்.. அலோபதி அவளை . Personalaize பண்ணும். இது அவளை generalize பண்ணுகிறது. இதுதான் வேறுபாடு.

 

எல்லா ஆன்ஸெல் இங்கே ஒரு வெறும் உடலாக வருகிறாள். உடலாக ஆகும் இன்னொரு பெரிய உள்சாரத்தை அவளுக்கு அவன் காட்டுகிறான். அவள் இயல்பாகவே அதைநோக்கிச் செல்கிறாள்.

 

ஸ்ரீதர்

அன்புள்ள ஜெ

 

சர்வஃபூதேஷு கதையில் சிக்கலான பகுதி என்பது ஒன்றுதான். அதைத்தான் கொஞ்சம் சாக்தம் இல்லாமல் புரிந்துகொள்ள முடியாது. சாக்தம் இல்லாமல் பார்ப்பவர்களுக்கு கொதிப்பையும் அளிக்கும்.

 

மாத்தன் அவளை மேர்iயாகத்தான் பார்க்கிறான். அன்னையாக பார்க்கிறான். கடைசியில் அப்படித்தான் அவள் மடியில் கிடக்கிறாள். ஆனால் அவன் அவளுடைய பொம்மையை பயன்படுத்துகிறான். அவளிடம் கேட்கிறான். அதைப் பயன்படுத்தலாமா என்று. அவள் நீ மகிழ்ச்சியாக இருந்தால் போதும் என்று சொல்லி சிரித்து முத்தமிடுகிறாள்.

 

அன்னையாகவும் காதலியாகவும் ஒரே சமயம் உருமாறும் ஒரு உருவம் இங்கே எல்லா. அவள் தேவி ஆகையால் அதுவே அவளுடைய இயல்பு. இதெப்படி என்று கேட்டால் அதற்கும் மாத்தனே பதில் சொல்கிறான்.  “அவளுடைய பொம்மைகளைத்தான் மக்கள் தொடமுடியும்”. இங்கே அன்னையாக இருப்பதும் அவளுடைய பொம்மைதான். எல்லாமே அவளுடைய பொம்மைகள்தான்.

 

எஸ்,மகாதேவன்

 

அன்புள்ள ஜெயமோகன்

 

ஃபூதேஷு   என்ற வார்த்தை சமஸ்கிருத भ    என்பதை கொண்டுள்ளது. நாம் தமிழில்  ஃபூ என்பதை ஆங்கில FU  என உச்சரிப்போம். தமிழில் சமஸ்கிருத भ  ன்பதற்க்கு இணையான எழுத்து இல்லை. அதனால் சமஸ்கிருத प , फ , ब , भ   என்ற எழுத்துகளுக்கு இணையானது ப தான் . அதனால்   பூதேஷு  என எழுதினால் போதும்.   ஃபூதேஷு என்றால்  fUthEshu    என பொருளில்லாமல் போய்விடும்

 

அன்புடன்

 

வ.கொ.விஜயராகவன்

 

 

அன்புள்ள விஜயராகவன்,

 

நான் இதை பலமுறை விளக்கி எழுதியிருக்கிறேன். சம்ஸ்கிருதத்தின் ஒலியை தமிழில் சரியாக எழுதவே முடியாது. அதன்பொருட்டே கிரந்த எழுத்துக்கள் உருவாயின. இன்று அவை காலாவதியாகியிருக்கின்றன. இன்று சம்ஸ்கிருதச் சொற்களை தமிழில் எழுதுகையில் நடைமுறையில் அவை மூல உச்சரிப்புக்கு ஓரளவு அருகே வருகின்றனவா, ஏற்கனவே இருக்கும் உச்சரிப்புமுறைகளால் வேறு சொற்களாக பொருள்கொள்ளப்படாமலிருக்கின்றனவா என்று பார்த்துக்கொள்வது மட்டுமே நாம் செய்யக்கூடுவது.

 

இன்றைய எழுத்துருவில் சம்ஸ்கிருதத்தை எழுதுவது இயல்வது அல்ல. ஆகவே  சம்ஸ்கிருத ஒலிகளை தமிழில் எழுதும்பொருட்டு ரோமன் எழுத்துரு பாணியிலான மேல் கீழ் கோடுகள் மேற்புள்ளிகள் இணைப்புள்ளிகள் போன்றவற்றை போடுவது, ஆங்கில எழுத்துக்களை கலந்து எழுதுவது என பல வழிமுறைகள் உள்ளன. ஆனால் அவை எவையுமே நிலைபெறவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிமுறையைக் கையாள்கிறார்கள். உண்மையில் அதிலேயே கூட பண்டிதர்கள் சண்டைபோட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

 

பக்தி – தியான மரபில் சம்ஸ்கிருத மந்திரங்களையும் சுலோகங்களையும் தமிழில் அப்படியே எழுதவேண்டிய அவசியம் உண்டு. அப்படி எழுதுவதற்கு மேலே சொன்ன ஏதேனும் வழிமுறையைக் கையாளலாம். மற்றபடி பொதுவாக எழுதும்போது அந்தச் சிக்கலான வழிமுறைகளைக் கையாள்வதில் பொருள் இல்லை. அப்படி எழுதினாலும்கூட செவிகளில் சொல்லப்படாமல் அந்த ஒலியைச் சென்றடைய முடியாது. ஆகவே கூடுமானவரை தமிழின் ஒலியமைவுக்குள், நம் புழக்கத்திற்குள் நிற்கும்படி உச்சரிப்பை கண்டடைவது, எழுதுவதே சிறந்தவழி.

 

இதில் ஒருவர் கடைப்பிடிக்கும் வழி என்ன என்று உசாவலாம். அதில் புரிதல்பிழைகள் வருமென்றால் கூட்டாக மாற்றிக்கொள்ளவும் செய்யலாம். ஆனால் இங்கே இவை உடனே கீழ்த்தரமான ஆணவப்பிரகடனங்களாக நையாண்டிகளாகவே வெளிப்படுகின்றன. அத்தகைய நாலைந்து கடிதங்கள் கிடைத்தன. நான் அவற்றை பொருட்படுத்துவதில்லை. உங்கள் கடிதத்தில் அத்தகைய தொனி இருந்திருந்தால் இந்த விளக்கத்தையே அளித்திருக்க மாட்டேன்.

 

இங்கே சொல் பெரிய ஒலித்திரிபு இன்றி சென்றடைகிறதா, குழப்பம் இல்லாமல் புரிந்துகொள்ளப்படுகிறதா என்பதே பார்க்கப்படவேண்டியது. அதைவைத்துக்கொண்டு நீண்ட விவாதங்களில் ஈடுபடுவதெல்லாம் அறிவுத்தளச் செயல்பாடு அல்ல, ஒருவகை வெட்டிவம்பு மட்டுமே. பெரும்பாலும் சம்ஸ்கிருதத்திற்கு உரிமைகொண்டாடும் சாதிப்பெருமிதமே அதில் வெளிப்படுகிறது. மெய்யாகவே சம்ஸ்கிருதம் நன்கறிந்தவர்கள் இதற்கெல்லாம் வருவதில்லை

 

தமிழில் உச்சரிப்புகள் உண்மையில் எப்படி நிகழ்கின்றன என்னும் நடைமுறை அறிவிலிருந்தே இந்த எழுத்துக்களை எப்படி எழுதுவது என முடிவெடுக்கவேண்டும். உதாரணமாக காகம் என்பதிலுள்ள இரண்டாவது க ga என்றே உச்சரிக்கப்படுகிறது. இயல்பாக அது நிகழ்வதனால் அதை மாற்றவேண்டியதில்லை.

 

இதில் முதலில் உள்ள சர்வ என்பதை எவரும் charva என உச்சரிப்பதில்லை. ஆகவே அங்கே ஸ தேவையில்லை. இதையெல்லாம் நான் ஒரு நடைமுறை நோக்கிலெயே முடிவெடுக்கிறேன். நான் எழுதுவது தியான – மந்திர உச்சரிப்புகளை அல்ல. ஆகவே இதில் உட்கார்ந்து மண்டையை குழப்பிக்கொள்வதில்லை.

 

ஆனால் பூ என்பது தமிழின் புகழ்மிக்க உச்சரிப்பு – மலரைக் குறிப்பது. ஆகவே Poo என்றே அது சொல்லப்படுகிறது. Ph,Bh ஒலிகள் கொண்ட பரவலான சொற்கள் ஏதும் இங்கில்லை. ஆகவே பூதேஷு என்று என்று எழுதினால் அது பூ உச்சரிப்பையே சென்றடையும். நடைமுறையில் பூதம் என்னும் சொல்லின் பொருளையும் அடையக்கூடும். அகவே வேறுபடுத்தியாகவேண்டும்.

 

ஃ ஒலிக்கு தமிழில் முடிவான இலக்கண வரையறை இல்லை. எல்லா மெல்லொலிகளையும் அது சுட்டும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல்வேறு புதிய ஒலிகளுக்காக இலக்கணமுன்னோடிகளால் அதன் பயன்பாடு மேலும் நெகிழ்வாக்கப்பட்டது. ஆகவே அவ்வொலி இன்று இடத்துக்கேற்ப பொருள்கொள்ளப்படும். ஃபூ எனும்போது அது P என்னும் உச்சரிப்பு அல்லாத  F, Bh, Ph என்னும் ஒலிகள் அனைத்தையுமே குறிக்கும். அதாவது அது வல்லின உச்சரிப்பை மெல்லினமாக காட்டும் ஓர் அடையாளம், அவ்வளவுதான். இடத்துக்கேற்ப சற்று ஒலிமாறுபாட்டுடன் பயன்படுத்தவேண்டியதுதான். முன்னோடிகள் பலர் அவ்வாறு எழுதியிருக்கிறார்கள். ஆகவே அதை பயன்படுத்துகிறேன். இப்படி பலசொற்களை நான் பயன்படுத்துவது உண்டு. உரிய அறிஞர்களிடம் கலந்துகொள்வதும் உண்டு.

 

உங்கள் கடிதம் கண்டபின் நான்குபேரிடம் பூதேஷு என்று எழுதி வாசிக்கச் சொன்னேன். நான் எண்ணியதுபோலவே poosheshu என்றே  உச்சரித்தனர். வல்லின பூ அல்ல என உணர்த்துவதே முக்கியம் என்னும் என் புரிதலை உறுதிசெய்துகொண்டேன். என் வழிமுறை அதுவே,நீங்கள் பூ என எழுதி அது bh என  உச்சரிக்கப்படுமென்றால் அதுவும் சரியே. இம்மாதிரி உச்சரிப்புப் பூசல்களில் ஈடுபடுவதில் எனக்கு ஆர்வமில்லை.

 

ஜெ

 

ஈரோடு சந்திப்பு கடிதங்கள்-4

0

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு,2020

அன்புள்ள ஜெ,

 

ஈரோடு புதிய வாசகர் சந்திப்பு 2020, இலக்கியத்தின் முழு பரிமாணத்தையும் விளக்கக்கூடிய ஒன்றாக இருந்தது.

 

Plagiarism, தனிநபர் பத்திரிக்கைகள், இலக்கியத்திற்கும் அரசியல், சினிமா, ஓவியம் போன்ற துறைகளுக்கும் உள்ள தொடர்பு, படைப்புத் திறனை ஊக்குவிக்கும் கல்விமுறை போன்ற உரையாடல்கள்,  இலக்கியம் பற்றிய அறிவை விசாலமாக்கும் வகையில் இருந்தன.

 

சிறுகதைகளின் பொதுவான வடிவம், கனவை அடிப்படையாகக் கொண்ட கதைகள், பேய்க்கதைகள் மற்றும் நகைச்சுவைக் கதைகளில் இருக்க வேண்டிய நுட்பம், கவிதைகள் எழுதும் முறைகள், படைப்புகளை மதிப்பீடு செய்யும் முறைகள், உவமை, உருவகம், படிமம், ஆகியவை பற்றிய தெளிவும் கிடைத்தன.

 

திசைதவறி செல்லும் உரையாடல்கள், அற்பமான பார்வைகளை தவிர்ப்பதில் இருக்க வேண்டிய கவனம், ஒற்றைச் செயலும் அதன் தொடர்ச்சியால் கிடைக்கும் நிபுணத்துவமும், பன்மைத் தன்மையால் கிடைக்கும் புதிய தரிசனங்கள், நுட்பமான தருணங்களை தவறவிடும் பொருத்தமற்ற ஒப்பீடுகள், அரசியல் மற்றும் சினிமா சாயலற்ற இலக்கியத்தின் அவசியம், கலைச் சொற்களை சரியாக பயன்படுத்த வேண்டிய அவசியம். போன்ற விவாதங்கள் ஒரு சாதாரண வாசகனை உளவியல் ரீதியாக விழிப்படையச் செய்து அடுத்த கட்டமான எழுத்தை நோக்கி நகர்த்தும் வகையில் அமைந்தன.

 

இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் நிகழ்ந்த, அறிவை விசாலமாக்கும் விவாதங்களும், நண்பர்களின் கனிவான உபசரிப்புகளும், வெடிச் சிரிப்புகளும் இந்த இரண்டு நாட்களை என்றும் நினைவில் நிறுத்தும்.

 

நன்றியுடன்,

சுப்ரமணியம் குருநாதன்.

 

 

அன்புள்ள ஜெ

 

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு பற்றிய கடிதங்கள் ஆச்சரியம் அளிக்கின்றன. தொடக்கத்தில் நீங்கள் சொல்லும்ப்போது எந்த முன்னேற்பாடுகளும் பேசுபொருள் வரையறுப்புகளும் இல்லாமல் வாசகர்களை சந்திப்பது பற்றித்தான் சொல்லியிருந்தீர்கள். சும்மா பேசிக்கொண்டிருப்பதுதான் நோக்கம் என்ற எண்ணம் இருந்தது. இப்போது இத்தனை நிகழ்ச்சிகள் வழியாக என்னென்ன பேசப்படவேண்டும் எப்படி பேசவேண்டும் என்பதெல்லாம் ஓரளவு தெளிவாகி வந்துவிட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இப்போது ஒரு இலக்கியப்பட்டறை போலவே இந்நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வாழ்த்துக்கள்

 

அருண் சுப்ரமணியம்

ஈரோடு வாசகர் சந்திப்பு -கடிதம்

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு,கடிதம்-2

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 1

பகுதி ஒன்று : பொற்பூழி – 1

அரசே கேள்! சொல்லச் சொல்ல சிதறுவதும் எண்ண எண்ணப் பெருகுவதும் வகுக்கும்தோறும் மீறுவதுமான ஒன்றை அறம் என்றனர் முன்னோர். அது கண்ணீரில் தெளிவது, புன்னகையில் ஒளிவிடுவது, கனிவில் கூர்கொள்வது. பேசிப் பேசி பெருக்கியவை பொருளிழந்து உதிர்வன என்றுணர்ந்தவன் மெய்யறிந்தோன், எண்ணிப் பெருக்கியவற்றை எண்ணாது சுருக்குபவனே யோகி, ஒரு சிரிப்பில் ஒரு துளி விழிநீரில் அமைபவன் கவிஞன் என்கின்றனர். இப்புவியில் அறம் பேசப்படாத நாளே இல்லை. ஆகவே அறம் மீறப்படாத நாளும் இல்லை.

விண்ணிலிருந்து ஒளிச்சரடு என மண்மேல் விழுந்து அறத்தோர் அல்லவர் என மானுடரை இரு பிரிவென பிரிப்பது எது? இங்கு இவ்வண்ணம் மானுடர் வாழவேண்டுமென்று வகுத்தது எதுவோ அது. அறமென இங்கு தன்னை காட்டுவது, அறத்தை கடந்து சென்றாலொழிய முழுதுரு தெளியாதது, சார்ந்தோர் அறிவது, மீறியோர் மேலும் அறிவது. அது வாழ்க! அதன் வண்ணங்கள் பொலிக! அதன் வழிகள் துலங்குக! இலக்குகள் அனைத்திலும் அது நிலைகொள்க! ஆம், அவ்வாறே ஆகுக!

சதபதத்தைச் சார்ந்த ஃபூர்ஜ குலத்து இசைச்சூதன் பிரவகனின் மைந்தனாகிய கருணன் நான். பன்னிரண்டு தலைமுறைகளாக இசைப்பாடல்கள் திகழும் நா கொண்டவன். மெய்யறிவெனும் நெய் நிறைந்த கலம் எங்கள் நெஞ்சு. அதிலெழும் சுடர் எங்கள் நாக்கு. இக்கரிய சிறு உடலில் பற்றியெழுந்த தீயின் திருத்தழல் எந்தையரிலிருந்து என்னில் பற்றிக்கொண்டது. என்னிலிருந்து என் மைந்தனுக்கு நான் பொருத்திக்கொடுப்பது. எரித்தழிப்பது, அவிகொள்வது, ஒளியூட்டுவது, விண்விண் எனத் தாவுவது. அரசே, ஒருபோதும் தூய்மை அழியாதது. தூய்மை செய்வது. இருப்பதும் நிகழ்வதும் ஒன்றென்றானது. துடிப்பே தானென்றானது. கணமும் நிலைகொள்ளாதது. எனினும் ஊழ்கம் அறிந்தது. இவ்வுலகையே உண்டாலும் பெருகும் பசி கொண்டது. எனினும் தன் எல்லையை உணர்ந்தது. திசைகளில் சுடர்களாக, வெறும் வெளியில் மீன்களாக, நீரில் ஒளியாக, மலர்களில் வண்ணமாக, சொல்லில் மெய்மையாகத் திகழ்வது, இங்கு என்னில் இவ்வண்ணம் எழுந்துள்ளது. இவ்வேள்விக்குண்டத்தில் எழுந்த தழலுக்கு வணக்கம்.

பாரதவர்ஷம் கண்ட பெருவேள்வியின் கதையை இதுகாறும் சொன்னேன். அதன் ஒவ்வொன்றும் பேருருக்கொண்டது. கட்டெறும்பு நடுவே யானையென இதுவரை பாரதவர்ஷம் இயற்றிய வேள்விகள் நடுவே அது திகழ்கிறது என்கின்றனர் பாணர். அஸ்தினபுரி அந்த வேள்வியால் மண்ணிலிருந்து ஏழு அடி உயரம் விண்ணில் எழுந்துள்ளது என்கிறார்கள். அங்குள்ள மரங்களின் கனிகள் அனைத்தும் இருமடங்கு இனிமை கொண்டன. அங்குள்ள உலோகங்கள் அனைத்திலும் மும்மடங்கு இசையொலி நிறைந்துள்ளது. ஆயிரத்து எட்டு அவைகளிலாக அங்கு நூல் ஆய்ந்து தெளியப்பட்டது. பல்லாயிரம் களங்களில் அறுபத்து நான்கு கலைகளும் ஆடி முடிக்கப்பட்டன. பல்லாயிரம் பல்லாயிரம் பந்திகள் அன்னம் அமுதென நாவால் உணரப்பட்டது. அனைத்துக் கைகளிலும் பொன்னும் வெள்ளியும் திகழ்ந்தன. அனைத்து உள்ளங்களிலும் களிவெறி நிறைந்திருந்தது.

ஒருவர் எஞ்சாது அனைத்து மானுடரும் மகிழ்ந்து கூத்தாடும் ஒரு நகரில் தெய்வங்கள் வந்திறங்குகின்றன. வானில் பொன்னொளிர் முகில்கள் நிறைந்திருந்தன. அவற்றிலிருந்து கணம் கோடியென தேவர்கள் இறங்கி அங்கு நிறைந்தனர். அவர்கள் உலோகப்பரப்பில் ஒளிர்வென விழிகொண்டனர். நீரில் அலையென மகிழ்ந்தாடினர். அனலில் ஒளியென வெறி கொண்டனர். தொடுவது எதுவும், நோக்குவன அனைத்தும், அறிவன முழுவதும் தேவர்களே என்று அங்குளோர் அகத்தே அறிந்தனர். தெய்வங்கள் அந்தக் காற்றை விண்ணின் தூய்மையால் நிறைத்தனர். அதை உயிர்த்தவர் அனைவரும் தேவர்கள் என்றானார்கள். பின்னிரவில் இசையும் குளிரும் வண்ணங்களும் சுவையும் மணமும் ஒன்றே என்றான கணங்களில் அவர்களின் கால்கள் நிலம்தொடவில்லை. அதை அவர்களும் அறியவில்லை.

கருவூலம் ஒழிய, கைதளர, உளம் நிறைய அள்ளி அள்ளிக் கொடுத்து பெருஞ்செல்வனானார் அஸ்தினபுரியின் பேரரசரான யுதிஷ்டிரன். அந்தணர் வாழ்த்த, குடிகள் வணங்க அரியணை அமர்ந்தார். மூதாதையரை வணங்கி முனிவரை பணிந்து நற்சொல் பெற்றார். அஸ்தினபுரியின் அரண்மனை பாரதவர்ஷம் தன் நெஞ்சில் அணிந்த மணியாரத்தின் பொற்பதக்கத்தின் மையத்தில் ஒளிரும் அருமணியென்றாகியது. அதன் பேரவைக்கூடத்தில் ஹஸ்தி அமர்ந்த அரியணையில் மணிமுடி சூடி யுதிஷ்டிரன் கோலேந்தினார். அவர் அருகே அமர்ந்தாள் ஐம்புரிக் குழல் முடித்து மணிமுடிசூடிய பாஞ்சாலன் கன்னி. மும்முடி சூடிய வேந்தனை வாழ்த்தி அந்தணர் வேதமுரைத்தனர். முரசுகள் இயம்பின. கொம்புகள் பிளிறின. பல்லாயிரம் நாவுகளால் நகர் அவர்களை வாழ்த்திக் கூவியது.

அத்தனை பருப்பொருட்களும் ஒலியெழுப்புவதை அங்கு கண்டனர். வாழ்க வாழ்க என்றன கோட்டைச்சுவர்கள். மணிமாடக்குவடுகள் ஓங்காரமிட்டன. தெருப்புழுதிப் பரப்புகள் முரசுத்தோல்களாயின. நீரோடைகள் யாழ்நரம்புகளென்றாயின. சங்குகள் என முழங்கின சாளரங்கள். பெருகி அலைத்த பசுவெளிக்காடுகள் மேல் கவிழ்ந்த வானம் சல்லரியாகியது. வாழ்த்துகள் அன்றி பிறிதொன்றை செவி கொள்ளாது அங்கிருந்தார் பாரதவர்ஷத்தின் தனியரசர். தௌம்யர் தலைமையில் அந்தணர் சூழ்ந்திருந்தனர். கௌதமர் முதன்மைகொள்ள முனிவர் அவை நிறைத்திருந்தனர். துணையரசர்கள் வாழ்த்தி அமைந்தனர். புலவரும் சூதரும் குடித்தலைவர்களும் வணிகர்களும் அங்கிருந்தனர்.

தௌம்யர் அரசரிடம் “வேதச் சொல் கனிந்த அந்தணர் தொட்டளித்த மணிமுடி அணிந்து அமர்ந்திருக்கிறீர்கள், அரசே. அருமுனிவர் அளித்த சொல்லனைத்தும் உங்களைச் சூழ்ந்திருக்கின்றன. குடிகளின் வாழ்த்து பீடமென உங்களை ஏந்தி நிற்கிறது. இத்தருணத்தில் இப்புவியில் இவ்வண்ணம் பிறிதொரு மானுடர் திகழ்ந்ததில்லை. இங்கு இந்திரன் நீரே என்றுணர்க!” என்றார். யுதிஷ்டிரன் மகிழ்ந்து தலைவணங்கினார். “என் மூதாதையரும் என் குடியினரும் இதன்பொருட்டு ஆன்றோர் அனைவருக்கும் நன்றிக்கடன் கொண்டிருக்கிறோம். என் கொடிவழிகள் இன்றுரைக்கப்பட்ட சொற்கள் ஒவ்வொன்றையும் செல்வமெனக் கொள்க! அவர்கள் சித்தம் களஞ்சியமாகுக!” என்றார்.

கௌதமர் “அரசே, முடிசூடும் அரசர் அனைவரும் ஒருகணமேனும் இந்திரனெனத் திகழ்ந்து மீண்டாலொழிய விண்ணேக இயலாதென்கின்றன நூல்கள். வெற்றிவேலேந்தி அறமுரைத்து அமர்கையில், தந்தையென உளம் பெருகி குடிபுரக்கையில், அந்தணர் முன் சொல்பணிகையில், முனிவர் அடிசூடுகையில், புலவர் வாழ்த்துகையில் அரசன் இந்திரனாகிறான். நீயோ இப்போது இந்திரனென்றே அமர்ந்திருக்கிறாய். அருகே உன் பொருட்டு இத்தருணத்தில் இந்திரன் தன் மணிமுடி கழற்றி வைத்து விண்ணில் நின்றிருக்கிறான். இனி எப்போதும் பாரதவர்ஷத்தில் முடிசூடும் எவரும் உன் பெயர் உரைத்தே கோலேந்துவர். பேரறத்தான் என்று இந்நிலத்தெழுபவர் நினைவில் என்றும் நிலைகொள்வாய். ஆம், அவ்வாறே ஆகுக!” என்று வாழ்த்தினார்.

அவை நிறைந்திருந்த குடிகள் போற்றினர். அண்டைநாட்டு அரசர்கள் மகிழ்வோசை எழுப்பினர். நிரைவகுத்திருந்த முனிவர்கள் யோகக்கழி தூக்கி வாழ்த்தினர். வேதம் எழுந்தது அந்தணர் நாவுகளில். கங்கைநீருடன் அரிமலர் பொழிந்தது. எழுந்து கை கூப்பியபோது யுதிஷ்டிரன் விழிநீர் உகுத்துக்கொண்டிருந்தார். சூழ்ந்து நின்றிருந்த இளையோர் உளம் பெருகி இருந்தனர் என விழிகள் காட்டின. அருகமர்ந்திருந்த அரசி கல்லெனச் சமைந்திருந்தாள். அவள் கண்கள் மட்டும் கூர் கொண்டிருந்தன. “எங்குளர் எனினும் நிறைக என் அன்னையர் இருவரும் பெருந்தந்தையும்! மகிழ்க என் பேரமைச்சர் விதுரர்! விண்ணிலிருந்து வாழ்த்துக என் உடன்பிறந்தார் கர்ணனும் சுயோதனனும் தம்பியர் நிரையும்! களிகொள்க என் மைந்தர்!” என்றபோது யுதிஷ்டிரன் உளம் விம்மி கூப்பிய கைமலர்மேல் நெற்றி வைத்து உடல் அதிர்ந்து அழுதார்.

வேள்வியை நிறைவுசெய்யும் சடங்குகள் மூன்று என்று மறையோர் அறிவித்தனர். வேள்வியின் பொருட்டு அவைசூழப்பட்டு நிலைநிறுத்தப்பட்ட நெறிநூல்களை குடிகளுக்கு அளித்தருளல், அன்ன நிறைவு செய்தல், வேள்விச் சாம்பலை கங்கைப் பெருக்கில் கரைத்து விண்ணோருக்கு நன்றி கூறி நிறைவேற்றுதல். யுதிஷ்டிரன் ஆகுக என ஆணையிட்டார். அவைக்கு இரு பெரும் அடுக்குகளாக செம்பட்டு சுற்றப்பட்டு பொற்தாலங்களில் ஏந்தி கொண்டுவரப்பட்ட நிறுவுகை நூல்களையும் அமைதி நூல்களையும் அவைமுன் வைத்தார். தௌம்யர் அவையில் எழுந்து “ஆன்றோரே, பீஷ்மரால் நிறுவப்பட்ட நூல்கள் ஓர் அடுக்கு. வேள்வியின் நிறைவென அமைக்கப்பட்ட அமைதி நூல்கள் இன்னொரு அடுக்கு. அறிஞர் அமர்ந்த அவைகள் ஆய்ந்து பழுது நீக்கி அவையேற்பு செய்து அளித்திருப்பவை இவை. அவற்றை அரசர் தன் செங்கோலால் இங்கிருக்கும் குடித்தொகை அனைத்திற்கும் மேல் நிலைகொள்ளச்செய்க! இனி இப்பாரதவர்ஷம் இந்நூல்களால் ஆளப்படுவதாக!” என்றார்.

அவை மேடையில் பொன்னாலான துலாத்தட்டொன்று நிறுவப்பட்டது. அதன் இரு தட்டுகளில் இடத்தட்டில் நிறுவுகை நூல்களும் வலத்தட்டில் அமைதி நூல்களும் வைக்கப்பட்டன. அவை முற்றிலும் நிகர்எடை கொள்வது வரை சுவடிகளை அடுக்கினர். முள் அசைவிலாது நின்றபோது அவையில் அமர்ந்திருந்த குடிகள் அனைவரும் எழுந்து தங்கள் கோல்களையும் கைகளையும் தூக்கி வாழ்த்தொலி பெருக்கினர். “அழியா நெறிகள் வாழ்க! வெல்க நாராயணப் பெருவேதம்! நிலைகொள்க வேத நெறி!” என்று கூவினர். யுதிஷ்டிரன் எழுந்து “இதோ இந்நூல்கள் இங்கே நிலைகொள்கின்றன. அஸ்தினபுரியின் மணிமுடியும் செங்கோலும் உடைவாளும் கொடியும் இந்நூல்களின் காவலென, சான்றென, ஊர்தியென என்றும் நின்றிருக்கும். ஆம், அவ்வாறே ஆகுக!” என அறிவித்தார். “ஆம்! ஆம்! ஆம்!” என முழக்கமிட்டது அவை.

தௌம்யர் சொன்னார் “ஒன்று மூதாதையர் அளித்தது. பிறிதொன்று நாம் கண்டடைந்த மெய்மை. ஒன்று பிறிதை நிகர் செய்யும். தந்தை மைந்தரை என ஒன்று பிறிதை வாழ்த்தும். மைந்தர் தந்தையை என ஒன்று பிறிதொன்றை பேணும். சாந்தியும் அனுசாசனமும் செஞ்சிறகுகள் என்றாக பாரதவர்ஷமெங்கும் பறந்தெழுக இந்த விண்பருந்து! ஆம், அவ்வாறே ஆகுக!” அவை வாழ்த்தொலி எழுப்பியது. யுதிஷ்டிரன் எழுந்து தன் செங்கோலை அத்துலாவின் இரு தட்டுகளுக்கும் குறுக்காக வைத்தார். பின் அதன் முன் மண்டியிட்டு மும்முறை தலைவணங்கினார். தன் வாளுடன் அதனருகே நிலைகொண்டார். அந்தணரும் முனிவரும் குடிகளும் மலர் அரியிட்டு வாழ்த்தி அத்தருணத்தை தெய்வங்களுக்குரியதாக்கினர்.

பின்னர் அவை கலையும் அறிவிப்பு எழுந்தது. யுதிஷ்டிரன் மும்முறை வணங்கி, வாழ்த்துப் பேரொலியும் மங்கல இசையும் அலையலையென எழுந்து அள்ளிக்கொண்டு செல்வதுபோல் திரும்பி அவையொழிந்து வெளியேறினார். சிற்றறையில் சற்றே ஓய்வெடுத்து இன்நீரும் பிடியன்னமும் அருந்தி மணிமுடி மாற்றி உண்போர் ஒழிந்த அன்னசாலை நோக்கி நடந்தார். நூற்றெட்டு எச்சில் இலைகளை தன் கையாலேயே எடுத்து கூடையிலிட்டு அன்னசாலையை அவர் தூய்மை செய்யவேண்டுமென நெறியிருந்தது. தம்பியர் கைகூப்பி உடன் வர ஒவ்வொரு இலையாக நின்று வணங்கி எச்சில் இலையை இரு கைகளாலும் எடுத்து அருகே நின்றிருந்த ஏவலனின் கூடையில் இட்டார்.

அச்சடங்குக்கென அந்தணரும் பிற குடியினரும் உண்டு முடித்து எழுந்த ஏழு அன்னசாலைகளில் இலைகள் அவ்வண்ணமே எச்சில் நிறைந்து வைக்கப்பட்டிருந்தன. இரண்டாவது அன்னசாலைக்குள் யுதிஷ்டிரன் நுழைந்தபோது அங்கே ஒரு கீரி எச்சில் இலைகளின் மேல் உருண்டு புரள்வதை கண்டார். எவ்வண்ணம் அது அங்கு வந்ததென்று திகைத்து நோக்கினார். அவர் நோக்குவதைக் கண்டே பிறர் அதை உணர்ந்தனர். அதை விரட்டும் பொருட்டு ஏவலர் கூச்சலிட்டபடி ஓடினர். திரும்பி நின்று மென்மயிர் உடல் சிலிர்த்து மணிவிழி உருட்டி அவர்களை அது பார்த்தது. வீரர் கோல்களுடன் கூச்சலிட்டு அதை துரத்த முற்பட்டனர்.

“நில்லுங்கள்!” என்று யுதிஷ்டிரன் கூவினார். அக்கீரியின் ஒருபுறம் பொன் என சுடர் விட்டது. “இது எளிய கானுயிர் அல்ல. கந்தர்வரோ தேவரோ மாற்றுருக்கொண்ட முனிவரோ என்று தோன்றுகிறது. இவ்வண்ணம் பொன்னுடல் கொண்ட கீரியொன்றை முன்பு கண்டதில்லை, நூலிலும் அறிந்ததில்லை” என்று யுதிஷ்டிரன் கூறினார். தௌம்யரும் அப்போதுதான் அதை கண்டார். “ஆம், இது எளிய விலங்கு அல்ல” என்றார். பிறரை விலக்கி கைகூப்பியபடி அருகணைந்து முழந்தாளிட்டு அக்கீரியின் அருகே அமர்ந்து “தாங்கள் யாரென்றறியேன். எனது அரசப் பெருவேள்வியின் அன்னநிலையில் வந்து இவ்வண்ணம் புரள்வது எதன் பொருட்டு என்று கூறுக!” என்றார்.

கீரி அவரை நோக்கி மெல்லிய குரலில் அவர் மட்டும் கேட்கும்படியாக கூறியது “வேந்தே, முன்பொரு நாள் வசிஷ்டர் அடர்கானகத்தில் வேள்வி ஒன்றை நிகழ்த்தினார். சித்திரை முழுநிலவு நாளில் அவ்வேள்வியை நிகழ்த்துவது அவர் மரபு. அனைத்து அவிப்பொருட்களுடன், அனைத்து அந்தணர் முறைமைகளுடன், முனிவர் குலங்களனைத்தும் இடம்பெற, ஆயிரம் பேர் அன்னமுண்டு அமைய, ஆயிரம் சூதர் சொல் பெற்றுச் செல்ல, அனைத்துக் கலைகளும் திகழ அதை நிகழ்த்துவது அவர் வழக்கம். ஆனால் அம்முறை வடமலை தேடிச்சென்ற அவர் அங்கொரு தவம் முடித்து கீழிறங்குகையில் வழி தவறிவிட்டிருந்தார். பன்னிரு முறை வழி தேர்ந்து கீழிறங்கிய பிறகும்கூட சென்றடைய வேண்டிய இடமல்ல தான் வந்தடைந்தது என்று உணர்ந்தார்.”

எனில் தன்னை மீறிய ஆடல் ஒன்று அதிலிருப்பதை உணர்ந்து உளம் அமைந்து அங்கே ஒரு சிற்றோடைக் கரையில் அமர்ந்தார். நாள் கணித்து நோக்கியபோதுதான் அது சித்திரை முழுநிலவு நாளென்று தெரிந்தது. அவ்வேள்வியை அங்கேயே நிகழ்த்த அவர் எண்ணினார். அவ்வேள்விக்குரிய பொருட்கள் எதுவும் அன்று அவரிடம் இல்லை. அன்னமென ஒரு மணி எஞ்சியிருக்கவில்லை. அக்காட்டில் ஒரு கனியோ ஒரு கிழங்கோ இருக்கவில்லை. உணவென்று எதுவும் அவருக்குக் கிடைத்து மூன்று நாட்களாகியிருந்தன. ஆனால் வேதச்சொல் அவர் உளத்தில் நிறைந்திருந்தது. சூழ நோக்கிய பின் விறகு தேர்ந்து அடுக்கி இரு கல்லெடுத்து உரசி எரியெழுப்பி வேதம் உரைத்து வேள்வி நிகழ்த்தினார். கல்முனையில் தன் கைவெட்டி சொட்டும் குருதியை நெய்யென்று உதிர்த்து அவியாக்கினார்.

அவ்வேள்வி முடித்து எழுந்தபோது அங்கே விண்ணிலிருந்து தவழ்ந்து என சுழன்று மண் வந்து தொட்ட சிறகொன்று கந்தர்வனென எழுந்தது. அவரை வணங்கி “முனிவரே, என் பெயர் நீலவன். இக்காட்டில் இத்தருணத்தை எதிர்நோக்கி தவம் இருந்தவன். தூய வேதம் திகழும் கணமொன்று இங்கு அமைந்தால் நான் விண்புகக் கூடும் என சொல் இருக்கிறது. மண்ணில் தூய வேதம் திகழும் தருணங்களை எதிர்நோக்கி அலைந்து இவ்விடத்தை கண்டடைந்தேன். மானுடர் எவரும் வராத இங்கே எவ்வண்ணம் வேதம் திகழும் என்று அறியாது அச்சொல்லை மட்டுமே நம்பி இங்கு இருந்தேன். இன்று அது நிகழ்ந்தது. நான் வீடுபேறடைந்தேன். என் உருக்களில் ஒன்றே தங்கள் முன் திகழ்கிறது” என்றான். பின்னர் மீண்டும் இளநீல நிறத் தூவலென மாறி மண்ணில் கிடந்தான்.

புன்னகையுடன் அவனை வணங்கி வாழ்த்தியபின் வழி தெளிந்து தெற்கு நோக்கி நடக்கலானார் வசிஷ்டர். நான் புதருக்குள்ளிருந்து அந்த வேள்வியை பார்த்துக்கொண்டிருந்தேன். அவர்கள் சென்ற பின்னர் அருகணைந்து அந்த வேள்விக்குளத்தின் வாடாத அனலை முகர்ந்தேன். மீண்டும் திரும்பி புதர்களுக்குள் சென்று வேட்டையாடி உண்டேன். திரும்புகையில் அன்று குளிர் மிகுந்திருப்பதை கண்டேன். என் வளைக்குள் புகுந்தபோதும்கூட உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அப்போதுதான் அந்த வேள்விக் குழியில் அனல் எஞ்சியிருப்பதை நினைவு கூர்ந்து அங்கு சென்றேன். அருகணைந்தபோது அச்சாம்பலிலும் மணலிலும் வெம்மை எஞ்சியிருப்பதைக் கண்டு அதன் மேல் படுத்து புரண்டேன். அதன் வெம்மையில் மயங்கி அன்றிரவு துயின்றேன்.

மறுநாள் விழித்துக்கொண்டபோது என் உடல் பாதிப்பங்கு பொன்னென மாறியிருப்பதை கண்டேன். நான் அதை உணரவில்லை. என்னைக் கண்டதும் என் குலத்தார் அஞ்சி ஒலியெழுப்பியபடி விலகி ஓடியதைக் கண்டபோதுதான் என் உடலில் ஏதோ மாற்றம் நிகழ்ந்திருப்பதை உணர்ந்தேன். கங்கை நீரில் சென்று என் உருவை நோக்கி நிகழ்ந்ததை உணர்ந்து திகைத்தேன். அவர்களிடம் சென்று “இது என் பிழையல்ல, நம் குடிக்கு வந்த மாண்பென்று கொள்க! இன்னமும் என் உடலில் பாதி நம் குடியினரைப்போன்றே இருப்பதை உணர்க!” என்றேன். அவர்கள் அஞ்சி ஓடினர். நான் அவர்களிடம் “என்னை விலக்காதீர்கள். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கூவினேன். “நம் குடிக்கு வந்த தெய்வக் கனிவல்லவா நான்?”

அவர்களில் குடிமூத்தவர் என்னை நோக்கி “ஆம், ஆனால் உன் உடலில் பாதி பொன்னென்று ஆகிவிட்டிருக்கிறது. பொன்னானவன் எங்களுடன் வாழ முடியாது. நாங்கள் உலகியலார். பழிகொள்ளாது வாழ இயலாதவர். பிழைகளினூடாகவே கற்பவர்கள். குருதியும் அழுக்கும் கொண்ட உடல் எங்களுடையது. நொடியோசையில் உடல் சுருட்டி ஒளிந்துகொள்ளவேண்டியவர்கள் நாம். ஒளிரும் இவ்வுடலுடன் உன்னால் ஒளிய முடியுமா என்ன? உன்னை உடனமைத்து இயல்பாக வாழ எங்களால் இயலாது” என்றார்.

நான் திகைத்து நின்றேன். “நீ தெய்வமாகும் செலவு கொண்டவன். உன் உடல் களைந்து பொன்னென்றே ஆகுக! ஒளியுடன் வந்து எங்கள் ஆலயத்தில் அமர்க! அன்றி, அப்பொன்னைக் களைந்து மீண்டும் நம் குடிக்கே வருக! சேறணிந்து குருதி உண்டு எங்களில் ஒருவன் என்றாகு! பொன்னென்றும் உடலென்றும் திரிந்த உரு கொண்டு ஒருவன் இங்கு எங்களுடன் வாழ இயலாது” என்றார். “ஆம், செல்க!” என்றனர் என் குடியினர். “இவன் அச்சமூட்டுகிறான்” என்றாள் என் அன்னை. “இவன் எங்களையும் காட்டிக்கொடுப்பான்” என்றனர் உடன்பிறந்தார். “நீ பொன்கொண்டவன், எனினும் கீரி. பொன்னை விரும்புவோர் உன்னை கொல்லவும் கூடும்” என்றார் முதுதந்தை ஒருவர். “உன்னை காத்துக்கொள்க! எங்களால் உனக்கு காவலளிக்க இயலாது.”

அவர்கள் என்னை விட்டு விலகிச்சென்ற பின் துயருற்றவனாக நான் வசிஷ்டர் சென்ற திசைக்கே சென்றேன். அவரது காலடிகளை மணம்கொண்டு விரைந்து இரவும் பகலும் ஓடி தெற்கே நெடுந்தொலைவு சென்றுவிட்டிருந்த அவரை சென்றடைந்தேன். கங்கை நதிக்கரையில் ஊழ்கத்திலிருந்த அவர் அருகே அணைந்து காலடிகளை வணங்கி நின்றேன். விழி திறந்து அவர் என்னை கண்டார். நிகழ்ந்ததென்ன என்று அவர் முன்னரே உணர்ந்துகொண்டார். “முனிவரே, என்னை வாழ்த்துக! எஞ்சிய உடலையும் பொன்னென்றாக்கி அருள்க!” என்றேன். “நான் அதற்கு ஆற்றல் கொண்டவன் அல்ல. அது தெய்வவிளையாட்டு” என்றார்.

அவர் என்னை தவிர்க்கிறார் என உணர்ந்தேன். “அந்தணரே, என்னை வாழ்த்துக! என்மேல் கனிக!” என மன்றாடினேன். “நீயே உணர்க, நான் இயற்றிய வேள்வியில் நீ பாதிப்பங்கே பொன்னாகிறாய் எனில் அதன்பொருள் என்ன? என் ஆற்றலின் எல்லை அதுதான் என்றல்லவா? பாதிப்பங்கு பொன்னானவன் நீ மட்டுமல்ல. எஞ்சியதைப் பொன்னாக்கவே நானும் இங்கு தவமியற்றிக்கொண்டிருக்கிறேன்” என்றார். “என் எஞ்சிய உடலை பொன்னென்றாக்குவது எவ்வண்ணம்?” என்று நான் கேட்டேன். “இவை நம் வழியாக நிகழும் நம்மைக் கடந்தவை. உன்னை பொன்னென்றாக்கியது நான் நிகழ்த்திய வேள்வி. அதற்கு நிகரான பிறிதொரு பெருவேள்வி ஒன்றை சென்றடைக! அங்கு எரி மிச்சத்தில் இவ்வண்ணம் புரள்க! அது உன்னை முற்றிலும் பொன்னென்றாக்கும்” என்றார்.

நான் அவரை வணங்கி அங்கிருந்து கிளம்பினேன். அரசே, என் அகவை ஆயிரம் ஆண்டுகள் என்று உணர்க! என் உடல் பொன்னென்று ஆகியிருப்பதால் எனக்கு சாவில்லை. நான் இதுவரை நூற்றெட்டு பெருவேள்விகளை சென்றடைந்து அவ்வனலில் புரண்டிருக்கிறேன். அவை எவையுமே அறநிறைவு கொண்டவை அல்ல என்பதனால் என் உடல் பொன்னென்று ஆகவில்லை. சலித்து துயருற்று இங்கு வந்தேன். யயாதியும் தசரதனும் கார்த்தவீரியனும் செய்த வேள்விகளால்கூட நான் பொன்னுரு பெறவில்லை.

ஒருநாள் அறிந்தேன், இங்கு இப்பெருவேள்வியொன்று நிகழவிருப்பதை. எனவே இந்நகர் நாடி வந்தேன். இவ்வேள்வி அனைத்து வகையிலும் நிறைவு கொள்வதை எதிர்பார்த்து காத்திருந்தேன். கலை திகழும் அவைகளில் சென்று வேள்வி நிறைவின் கணம் அங்கு எழுகிறதா என்று பார்த்தேன். இல்லையென்று அறிந்தேன். எரி ஓம்பிய களங்களுக்கு சென்றேன். அங்கு சாம்பலில் விழுந்து புரண்டேன். அங்கும் நிறைவடையவில்லை இவ்வேள்வி என்று உணர்ந்தேன். உன் அவைக்கு வந்து அங்கு நிகழ்ந்த சொல்லை கேட்டேன். அங்கும் நிறைவடையவில்லை என்று உணர்ந்து இங்கு அன்னசாலைக்கு வந்தேன். இங்கு விரிந்திருக்கும் இந்த எச்சிலில் புரண்டால் என் உடல் பொன்னென்றாகும் என்று எண்ணினேன். இல்லை இங்கும் இவ்வேள்வி நிறைவடையவில்லை என்றே கண்டேன்.

“என் தவம் முழுதுறவில்லை. பொன்நிறைவு கொள்ளாமல் இதோ உன் முன் நின்றிருக்கிறேன். இந்த வேள்வி நிறைவுறவில்லை என்று உணர்க!” என்றது கீரி.

கோடையின் சுவை

என் வீட்டுக்கு நேர்முன்னால், எதிர்வீட்டு வளைப்புக்குள் ஒரு மாமரம் நிற்கிறது . அதற்கு ‘சீசன்’ எல்லாம் பொருட்டல்ல. பெரும்பாலும் ஆண்டு முழுக்க ஓரிரு காய்களாவது இருக்கும். அது ஓர் ஆச்சரியம் என்று வேளாண்துறை நண்பர்கள் சொன்னார்கள். சீசன் தொடங்குவதற்கு முன்னரே காய்த்துக் குலுங்கும். சீசன் முடிந்த பின்னரும் “என்னது, முடிஞ்சிருச்சா? அதுக்குள்ளயா?” என்று காய்களுடன் நின்றுகொண்டிருக்கும்.

 

நான் சின்னவயசில் சில அக்கா, மாமிகளை இப்படிப் பார்த்திருக்கிறேன். எப்போதும் கையில் இடையில் வயிற்றில் குழந்தைகள் இருந்துகொண்டிருக்கும். இந்த மாமரம் எனக்கு ஏராளமான நினைவுகளை அளிப்பது. ஆகவே ஒரு தனிப்பட்ட உறவு உண்டு. கௌரவமெல்லாம் பார்ப்பதில்லை, நான் அந்த மாமரத்தைக் கடந்துசெல்லும்போதும் வரும்போதும் ஒரு மாங்காய் என் கையில் இருக்கும்

 

என் வீட்டில் நான் மட்டுமே பச்சை மாங்காய் தின்பவன். கோடையில் எனது முதன்மையான மகிழ்ச்சியே மாங்காய்தான். நடைசெல்லும் இடத்தில் ஒரு மாமரம் உண்டு. அதுவும் காய்நிறைவதுதான். பச்சை மாங்காயை பல வடிவங்களில் சாப்பிடுவேன். கொட்டை முதிரா மாங்காய் முதல் அரைக்கனிவரை. அந்த அளவுக்கு எனக்கு மாம்பழம் மீதுகூட ஆர்வம் இல்லை.

 

அதிலும் இந்த இரு மரத்து மாங்காய்களும் மென்மையான இதமான புளிப்பு கொண்டவை. வெள்ளரிப்பதம் என எங்களூரில் சொல்வார்கள். சில மாங்காய்கள் பொட்டில் அறையும் புளிப்பு கொண்டவை. அவற்றை வாயில் வைத்தால் குடல் உலுக்கிக்கொள்ளும். உப்பை அள்ளி அள்ளிச் சேர்த்தால் மட்டும்தான் அவற்றை சாப்பிட முடியும். அவையெல்லாம் நம்மீது கொஞ்சம் பகை கொண்டவை. இந்த மாங்காய்கள் நமக்காக உளம் கொண்டவை

இந்த ஆண்டு மாங்காய் காய்த்துவிட்டது. ஆனால் எனக்குச் சிக்கல். என் கடைவாய்ப் பற்களை பத்தாண்டுகளுக்கு முன் பிடுங்கியிருந்தேன். அவற்றில் பல்லை பொருத்தலாம் என்றார் டாக்டர். ஆகவே சிலநாட்களுக்கு முன் ’பல்லாஸ்பத்திரி’ சென்றேன். என் வாயை கிளிப் போட்டு திறந்து மல்லாத்தி வைத்து நான்கு பெண்கள் நீர் இறைக்கும் வாளி உள்ளே விழுந்துவிட்ட கிணற்றுக்குள் எட்டிப்பார்ப்பதுபோல பார்த்து என்னென்னவோ செய்தார்கள்

 

ஈறை அறுத்து எலும்பைத் துளைத்து நான்கு திருகாணிகளை பொருத்தியிருக்கிறார்கள். அவை எலும்பின் கால்சியத்துடன் இணைந்து ஊறி எலும்பின் இரும்புமுனை என ஆக மூன்றுமாதம் ஆகும். அதுவரை கடுமையாக எதையும் சாப்பிடக்கூடாது. சிக்கன் மட்டன் பட்டாணி எதுவும். கடுமையான பழங்கள் காய்கறிகள்கூட. குழைந்த சோறுதான் பெரும்பாலும் உணவு. ஆகவே இவ்வாண்டு பச்சை மாங்காய் இல்லை. எனக்கு பல் பொருத்தப்படும்போதும் இந்த மாமரத்தில் காய் எஞ்சியிருக்கவேண்டும்

 

ஒவ்வொருமுறை சென்று மீளும்போதும் கையெட்டும் தொலைவில் பசுமையின் ஒளியுடன் தெரியும் மாங்காய்களைப் பார்த்து பெருமூச்சுவிட்டு திரும்பி வருகிறேன். அதை பார்க்கக்கூடாது என்று மறுபக்கம் திரும்பிக்கொள்வேன். ஆனால் பார்த்துவிட்டிருப்பேன். அது கடந்துசென்றபின் கண்ணில் அப்பசுமைக்காய்கள் எஞ்சியிருப்பதிலிருந்து தெரியும்.

 

நேற்று ஒரு கனவு. பச்சைமாங்காயை உப்புடன் சாப்பிட்டபடி வெயிலைப் பார்த்துக்கொண்டு சாய்வுநாற்காலியில் அமர்ந்திருக்கிறேன். விழித்துக்கொண்டபோது ஒரு பரவசம், அந்த மாங்காய் அத்தனை சுவையானது. உண்மையில் அதை எங்குமே சாப்பிடமுடியாது.

வைக்கம் முகமது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும், இளம் பருவத்துத்தோழியும்

:

வைக்கம் முகமது பஷீரின் ஒரு கதாபாத்திரம் குழந்தையாக இருக்கும்போது பள்ளியில் ஆசிரியர் கேட்கிறார் “ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் என்ன வரும்டா?” குழந்தை தன் ஊரில் குன்றுமேலேறி நின்று இரு ஆறுகள் இணைவதைப் பார்த்த ஞாபகத்தில், “இன்னொரு பெரிய ஒன்று’ என்று பதில் கூறுகிறது. அடிவிழுகிறது. எவ்வளவு சொல்லியும் குழந்தைக்குப் புரியவில்லை. இரண்டும் இணையாமலிருக்கும் போதுதான் இரண்டு. இணைந்துவிட்டால் எப்போதும் மிஞ்சுவது ஒன்றுதானே?

முதிர்ந்து பழுத்தபிறகு பஷீர் எழுதிய கதையில் ஒரு கதாபாத்திரம் அறிகிறது `நான் நீ என்ற இரட்டை நிலையிலிருந்து நீ மட்டும் எஞ்சுவதே மரணம்’. அவரது படைப்பிலக்கியத்தின் தொடக்கமும் முடிவும் இவ்விரு அறிதல்களில் உள்ளது. இவ்விரு அறிதல்களும் வேறுவேறு அல்ல. பஷீரின் உலகம் குழந்தைக் கண்களால் அறியபடும் வாழ்க்கைத் தரிசனங்களினால் ஆனது. பஷீர் தன் கடைசிநாள் வரை அந்த குழந்தைவிழிகளை தக்கவைத்துக் கொண்டார். ஆகவே வேடிக்கையும் வியப்பும் மட்டும் கொண்டதாக முற்றிலும் இனியதாக இருந்தது அவருடைய உலகம்.

பஷீரின் இலக்கிய உலகம் முற்றிலும் அவரை மையமாக்கி இயங்குவது. பஷீர் தான் நேரடியாகவும் வேறு பெயரிலும் அவருடைய படைப்புலகு முழுக்க நிரம்பியிருக்கிறார். மலையாள மொழியைக் கற்கத் தொடங்கும் வாசகன் முதலில் வாசிக்கக்கூடிய எழுத்து பஷீருடையது. மிகமிக எளிமையான நடை. அவருடைய மிக நீளமான நாவல்கூட அதிகபட்சம் 80 பக்கம் நீளம் உடையதுதான். மலையாளப் புத்திலக்கியத்தின் முழுமையை அறிந்த பிறகு ஒரு வாசகன் இறுதியில் பஷீரிடம் திரும்பிவந்து அவரே அதன் உச்சகட்ட சாதனை என்பதை அறிய நேரும். பஷீரில் தொடங்கி பஷீரில் முடியும் இந்தப் பயணம் போன்ற ஒன்றை பிறமொழி இலக்கியங்களில் அடையமுடியாது. இதுவே பஷீரின் சிறப்பம்சமாகும்.

கோட்டயம் அருகே தலையோலப் பறம்பு என்ற ஊரில் பிறந்த வைக்கம் முகமது பஷீர் வசதியான மரவியாபாரியின் மகன். வாப்பாவின் வியாபாரம் நொடித்து பரம ஏழையாக ஆகிறது குடும்பம். கோழிக்கோட்டுக்கு வரும் காந்தியை பார்க்கச் செல்கிறார் பள்ளி மாணவனாகிய பஷீர். நகரும் ரயிலுடன் ஓடி காந்தியின் கரத்தை பாய்ந்து தொட்டுவிடுகிறார். அந்த தொடுகை அவரை மாற்றுகிறது.அந்தக்கையை தூக்கியபடி வந்து அம்மாவிடம் ”உம்மா நான் காந்தியை தொட்டேன்!”என்று கூவுகிறார். உம்மாவுக்கு பயம். ‘தலை தெறித்த’ பையன் புதிதாக என்ன வம்பை தொட்டுவிட்டு வந்திருக்கிறானோ என்று.

பஷீர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தீவிரவாத அமைப்புகளை உருவாக்கினார். சிறை சென்றார். சூ·பி துறவியாக பிரிவுபடாத இந்தியாவில் அலைந்து திரிந்தார். பின்பு எழுத ஆரம்பித்தார். இறுதிவரை ஆழமான இஸ்லாமிய சூ·பி நம்பிக்கையும் காந்தியப் பற்றும் அவரிடம் இருந்தது. அவர் தேசப்பிரிவினை கடைசிக்காலம் வரை ஏற்கவேயில்லை

பஷீரின் எழுத்தை வெறும் சுவாரஸியத்திற்காக, நகைச்சுவைக்காக படிக்கலாம். [ஆரம்ப காலங்களில் பஷீர் தன் நூல்களை தானே சுமந்து சந்தைகளில் விற்பதுண்டு. தன் நூல்களை சிறியதாக எழுதுவதன் காரணத்தையும் அவரே சொல்லியிருக்கிறார். பேருந்து காக்குமிடத்தில் நூலை விற்றுவிட்டு அதை வாங்கியவன் வாசித்து முடிக்கும்வரை அருகேயே நின்று அவனிடம் பேசி அதை மீண்டும் அன்பளிப்பாக பெற்றுக்கொள்ளுதல். ஒரு நூலை குறைந்தது நான்குதடவை விற்றால்தான் வாழமுடியும்! ] ஆனால் கூர்ந்த இலக்கிய வாசகனின் பார்வையில் உள்வாசல்கள் திறக்க விரிவடைந்தபடியே செல்லும் உலகம் அது. திறனாய்வுகளின் மூலம் புதிய புதிய இலக்கிய முறைகளில் பஷீர் மலையாளத்தில் இன்று மீண்டும் மீண்டும் கண்டுபிடிக்கப்படுகிறார். எ.இ. ஆஷர் அவர்களின் மொழிபெயர்ப்பில் (My grandpa had an elephant and other stories.) ஆங்கிலத்தில் வெளிவந்து பரவலான கவனத்தையும் ஈர்த்துள்ளது பஷீரின் படைப்புலகம்.

பஷீரின் இரண்டு சிறு நாவல்களின் மொழிபெயர்ப்பு ஒரு நூலாக தமிழில் குமாரி சி.எஸ். விஜயம் மொழிபெயர்ப்பில் தேசிய புத்தக நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. பஷீரை மொழிபெயர்ப்பது பெரிய சவால். கெ. விஜயம் மொழிபெயர்ப்பில் குறிப்பிடும்படியான வெற்றி பெறவில்லை என்றே கூறவேண்டும். பஷீர் கதை எழுதுபவரல்ல; அவர் கதை சொல்லி, அவ்வகையில் அவர் இ. ராஜ நாராயணனைப் போன்றவர். அவருடைய மொழியில் கோழிக்கோட்டுப் பகுதி முஸ்லீம் உரையாடல் மொழியின் அழகுகள் மிகுதி. குழந்தைகளின் மழலைப் பேச்சையும் பல்வேறுவிதமான கொச்சைகளையும் உபயோகிப்பதில் அவரது ரசனை வியப்பிற்குரியது.

வாசலில் வந்து நிற்கும் ஊதல் இசைக்கும் பக்கிரியைப்பார்த்துவிட்டு ஒருவயது ஷாஹினா வீட்டுக்குள் ஓடிவந்து கூவுகிறது ”பீப்ளி பீச்சண மிஸ்கீன்!” [பீப்பி ஊதும் சாமியார்] இதில் உள்ள சொற்கள் குழந்தையே உருவாக்கிக் கொண்டவை. இதில் குழந்தையின் கீச்சுக்குரலும் உள்ளது. இதை எப்படி தமிழாக்கம் செய்வது? ‘நான் பைசாவ எடுக்கலை இக்கா” என்று ஹனீபா சொல்ல கூடவே அப்பாவுக்கு நிரந்தர ‘கண்ணால் கண்ட சாட்சி ‘யான அபிபுல்லாவும் சொல்கிறான் ‘த்தா பறேணது பி ண்டு ‘ [அப்பா சொல்வதை அபி கண்டேன்] குழந்தைகளின் உலகில் பஷீர் குழந்தையாக சகஜமாக இறங்கிச்செல்கிறார். என் வாசிப்பில் உலக இலக்கியத்தில் மிகச்சிறந்த குழந்தையுலகை பஷீர் படைப்புகளில்தான் கண்டிருக்கிறேன். சகஜமான, நளினமான அவருடைய கதை கூறலை மொழிபெயர்க்கும்போது எப்போதுமே சற்று செயற்கைத்தன்மை வந்து விடுகிறது. இம்மொழிபெயர்ப்பிலும் அது உள்ளது.

இருப்பினும் இவ்விரு நாவல்களின் வழியாக பஷீரின் உலகு குறித்து ஒரு நுட்பமான புரிதல் வாசகனில் ஏற்பட முடியும். `இளம் பருவத்துத் தோழி’ ஒரு எளிய காதல் கதை. கதாநாயகன், பஷீர் போன்ற, மஜித். கதாநாயகி சுஹாரா. அவர்களுடைய காதல் பிள்ளைப்பிராயத்தின் தூய்மையில் பிறந்து மலர்ந்தது. வாழ்வின் கொடுந்துயரங்களினால் நசுக்கி அழிக்கப்பட்டது. இவ்வெளிய கதை ஒருவேளை இன்றைய வாசகனுக்கு உவப்பின்றிப் போகலாம். ஆனால் கதை நகர்வினூடாக பற்பல நுண்ணியத் தருணங்கள் நிகழ்கின்றன.

ஓர் உதாரணம். நொடித்துப் போன தந்தை மகன் வெற்றிகரமான வியாபாரியாக வேண்டும் என்று விரும்பும்போது மஜீத் வாழ்வில் தோல்வியுற்று அலைந்து திரும்பி வந்து ரோஜாத் தோட்டம் அமைக்கிறான். அது அவனுடைய ஆத்மாவின், நுண்ணுனர்வுகளின் மலரல். அதை தனக்கெதிரான ஒரு கேலியாகவே அவர் தந்தையால் பார்க்க முடிகிறது. ‘ நீ என்ன சம்பாதித்தாய்?’ என்கிறார் அவர். மஜீத் சம்பாதித்தது வானம் போல விரியும் பூக்களை மட்டுமே. அபத்தமாக உலகில் மலர்ந்து நிற்கும் அழகுகளை.

மஜீத் வெகுகாலம் கழித்து வந்து பார்க்கும்போது நோயுற்று மறையும் சுஹாரா சொல்ல வந்து சொல்லாமல் உதட்டில் உறையவிட்டுப் போன ஒன்று – அது என்ன எனும் வினாவுடன் முடிகிறது இந்நாவல். மலையாள விமரிசகர் ஒருவர் எழுதினார்; `குமாரன் ஆசானின் அமரகாவியம் `உதிர்ந்த மலரி’ல் உதிர்ந்து விழுந்த மலர் கண்டு கவிஞன் மனம் விரிகிறது. உயிரின் நிலைமையில் தொடங்கி பிரபஞ்சத்தின் நித்தியத்துவம்வரை அது தொட்டுச் செல்கிறது. ஒவ்வொரு உதிர்ந்த மலரிலும் பிரபஞ்ச இயக்கத்தின் மாபெரும் ரகசியம் பொதிந்துள்ளது. சுஹரா ஓர் உதிர்ந்த மலர்.’

`பாத்துமாவின் ஆடு’ உற்சாகமான ஒரு குடும்பசித்திரம். மனநிலை பிறழ்ந்து, சிகிச்சைக்குப்பிறகு, ஓய்வெடுக்கும் பொருட்டு தன் குடும்ப வீட்டுக்கு வந்து தங்குகிறார் பஷீர். அங்கு அவருடைய உம்மா, தம்பி ஹனீபா, அவர் மனைவி, தங்கை, அவள் கணவன் இவர்களுடைய குழந்தைகள் மற்றும் உம்மாவின் வளர்ப்புக் கோழிகள் உள்ளனர். பக்கத்தில் தங்கை பாத்துமாவும் அவள் குழந்தைகளும் கணவனும் அவளுடைய செல்ல ஆடும் வசிக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணாதிசயம். ஒவ்வொருவரும் ஒருவரையருவர் சார்ந்திருக்கிறார்கள். ஏமாற்றுகிறார்கள். ஏமாறுகிறார்கள். அன்பு செலுத்துகிறார்கள். இந்த குடும்ப நாடகத்தை அற்புதமான நகைச்சுவையுடன் கூறுகிறார் பஷீர். இந்நாடகத்தில் மையக்கதாபாத்திரம் பாத்துமாவின் ஆடுதான்.

பஷீரின் படைப்பியக்கத்தின் சிறப்பான இடங்கள் குழந்தைகளையும் மிருகங்களையும் அவர் காட்டுமிடங்கள்தான். இந்நாவல் அதற்கு சிறந்த உதாரணம். விமரிசகர் கல்பற்றா நாராயணன் எழுதுகிறார் “அபாரமான பசியுள்ளது பாத்துமாவின் ஆடு. பசியில் அதற்கு ருசி வளர்கிறது. எல்லா இலையும் தித்திக்கும் பெருங்காடு அதன்முன் விரிந்து நிற்கிறது. பலா இலை, சாம்ப மரச்சருகுகள், பஷீரின் புத்தகங்கள், அபியின் சட்டை எல்லாமே அதற்கு இனிய உணவுதான்” [ ஏதிலையும் மதுரிக்குந்ந காடுகளில்] அந்த அற்புதமான ஆடு வேறு ஏதுமல்ல, பஷீரின் கனிந்த ஆன்மாதான். மானுடம் மீதான அளவிறந்த அன்பே பஷீரின் தரிசனம். மனிதனின் குரூரத்தை, சுயநலத்தை, அற்பத்தனத்தை அது முடிவின்றி மன்னிக்கிறது. உளம் திறந்து நேசிக்கிறது. அந்தப் பிரியத்தின் ஒளியில் குரூரமான வாழ்வுநாடகம் இனிய நகைச்சுவை அரங்காக மாறிவிடுகிறது. பஷீரின் மொத்த படைப்புலகிலும் தீமையின் துளிகூட இல்லை. கசப்போ கோபமோ எங்கும் இல்லை. தேவர்களின் பார்வையில் மானுட வாழ்வு இப்படித்தான் இருக்கும் போலும்.

ஆனால் இந்த அன்பும் கனிவும் மனித வாழ்க்கையின் குரூரங்களைக் காணாத மழுங்கிய தன்மையின் விளைவா? சுய ஏமாற்றா? இல்லை. பஷீர் அளவுக்கு மானுடக்குரூரத்தைக் கண்டவர் குறைவே. அவருடைய ‘சப்தங்கள்’ போன்ற ஆக்கங்கள் குரூரத்தையே சித்தரிக்கின்றன. அதிலிருந்து தாண்டிவந்து அனைத்தையும் எல்லையில்லாது மன்னிக்கும் மார்போடணைத்து நேசிக்கும் மனவிரிவை அவர் அடைந்தார். பாத்தும்மாவின் ஆடு நாவலில் கூட பஷீரின் குடும்பம் எப்படி இருக்கிறது? அவர் நோயுற்று [எனக்கு நல்ல சுகமில்லை. கொஞ்சம் பைத்தியம். வேறொன்றுமில்லை] வந்து தங்கியிருக்க அவரது மொத்த குடும்பமே அவரைத்தேடிவந்து காசு கேட்டுக் கொண்டிருக்கிறது. ‘இத்தா பெரிய எழுத்தாளர். புத்தகமெல்லாம் அச்சிட்டு விற்கிறார். அப்படியானால் பூத்த பணம் கைவசமிருக்கும். பிள்ளையா குட்டியா, கொடுத்தால் என்ன?’ என்பது அவர்களின் நினைப்பு.

எந்தக் கதாபாத்திரமும் பஷீரைக் காணும்போது பேச்சின் முடிவில் ‘ இத்தா எனக்கு ஒரு அம்பது ரூபா தா’ என்றுதான் சொல்கிறார்கள். அம்மா சொல்கிறாள் ” நீ எனக்கு ஒரு அம்பது ரூபா கொடு. பாத்தும்மா அறிய வேண்டாம். அபுபக்கர் அறியவேண்டாம். ஹனீபா அறியவேண்டாம்…” கொடுத்த பணம் சுடச்சுட பாத்துமாவால் கண்டுபிடிக்கப்பட்டு கொள்முதல் பண்ணப்பட்டுவிடும். இந்த அம்மாதான் தலைமறைவாக திரியும் மகன் பசித்து வருவான் என சோறு வைத்துக் கொண்டு ஒருநாள் தவறாமல் வருடக்கணக்காக இரவெல்லாம் காத்திருந்தவள்!

மைத்துனன் ஹனீபா மைத்துனர்களுக்கே உரிய மனோபாவத்தின்படி பஷீருக்கு உரிய எல்லா பொருளும் தனக்கு உரியதே என எண்ணுகிறான். கேட்டால் மொத்தமாக ஒரே பதிலைச் சொல்கிறான் ”என்னை உங்களுக்கு வேண்டாமென்றால் நான் பட்டாளத்துக்கு போறேன். இந்திய அரசாங்கத்துக்கு என்னோட தேவை இருக்கு” அவன் மனைவி சொல்கிறாள் ”நானும் பட்டாளத்துக்குபோய் கஞ்சி காய்ச்சிக் கொடுக்கிறேன்.” அபியும் ஆமோதித்துச் சொல்கிறான் ”அபியும் பட்டாளத்துக்கு போரேன்!”

பாத்துமா மொத்தமாகவே பிறந்த வீட்டை சுரண்டிக் கொண்டிருக்கிறாள். ஆடு காலையிலேயே இங்கே வந்துவிடும். கஞ்சித்தண்ணி, உதிரும் இலைகள் ,சப்தங்கள் புத்தகத்தின் பிரதிகள் முதலியவற்றை தின்னும். பால் கறக்க பாத்துமா கூட்டிப்போய்விடுவாள். அதைறைங்கேயே ரகசியமாகக் மடக்கி கறந்து குழந்தைகளுக்கு பால்காப்பி போடப்படுகிறது. பாத்தும்மா கண்ணிருடன் சொல்கிறாள். ”இந்த அநியாயம் உண்டா? இப்படி சொந்த ஆட்டிலேயே திருடுவார்களா?” அதன் பின் குழந்தைகல் நேரடியாகவே ஆட்டுபபல் அருந்துகின்றன. பாத்தும்மா அண்ணாவை கூட்டிக் கொண்டுபோய் சாப்பாடு போடுவது கூட காசுக்காகவே. இந்த மொத்த சுயநலப்போராட்ட்டத்தையும் நன் பிரியம் மூலம் ஒரு வேடிக்கை நாடகமாக மாற்றிக் கொள்கிறார் பஷீர்.

மார்போடு அணைக்கத் துடிக்கும் கரங்களுடன் பார்க்கும் பார்வையில் சித்தரிக்கப்பட்டவை பஷீரின் குழந்தைகள். அவர்களுடைய மன இயக்கங்களை பஷீர் சித்திரிக்கும் விதமே அலாதி. வீட்டின் குழந்தைகளை பட்டாளமாகக் கூட்டிக்கொண்டு பஷீர் குளிக்கச்செல்கிறார். எல்லாருமே முழு நிர்வாணம். ஆற்றில் குளித்து முடித்து கரையில் நிற்கும் போது அபிக்கு வெட்கம். ” பெரிய வாப்பா எனக்கு வேட்டி வேணும்” ஏன்? காரணம் அபியின் சமவயது குழந்தை இடுப்பில் துணி அணிந்து சற்று தள்ளி நிற்கிறது. பஷீர் ஒரு துண்டை அவனுக்கு உடுக்க வைக்கிறார். உடனே மற்ற குழந்தைகளுக்கும் வெட்கம் பிடுங்கித் தின்கிறது. ஒவ்வொன்றுக்காக துண்டு பனியன் என உடுக்க வைத்தால் கடைசியில் எஞ்சுவது பஷீருக்கு இடுப்பிலிருப்பது மட்டுமே

ஆனால் தூய்மை நிரம்பிய குட்டி தேவதைகளாக குழந்தைகளை பஷீர் காட்டவில்லை என்பது மிக முக்கியமான விஷயம். குழந்தைகள் மனிதகுலத்தின் தீமைகளும் பாவங்களும், பாவனைகளும் விதை நிலையில் உறங்கும் நிலங்களாகவே அவர் படைப்புலகில் வருகிறார்கள். நுணுக்கமாக பெரியவர்களின் இருட்டுக்களை அவர்கள் பிரதியெடுக்கிறார்கள். அபி ஹனீ·பாவின் நடமாடும் சாட்சியாக ஆக்கப்பட்டிருக்கிறான். இயற்கையான மிருக இயல்புகளை செய்முறைகளாக மாற்றிக் கொள்ள பயிற்சி எடுக்கிறார்கள் குழந்தைகள்.

உண்மையில் பஷீரின் குழந்தைகளைக் கூர்ந்து பார்க்கும்போது அவர் மனித குலம் மீது கொண்டிருந்த கணிப்பு என்ன என்ற வினா எழுந்து நம்மை துணுக்குற வைக்கக்கூடும். மனிதனின் அடிப்படையான இருண்மை குறித்து இந்த அளவுக்குப் புரிதல் கொண்ட ஒரு படைப்பாளியை ஐம்பதுகளின் நவீனத்துவர்களிலேயே தேட முடியும். ஆனால் இந்த தரிசனத்திலிருந்து இருண்மை நிரம்பிய பார்வைக்கு பதிலாக பிரகாசம் கொப்பளிக்கும் இனிய நோக்கு ஒன்று பிறந்து வருவதன் ரசவாதமே படைப்பிலக்கியச் செயல்பாட்டின் நீங்காத மர்மம்.

‘பாத்தும்மாவின் ஆடி’ல் கதை என ஏதுமில்லை. பஷீரின் குடும்ப அனுபவங்கள் தன்னிலையாகச் சொல்லப்படுகின்றன. உறவுகள் வழியாக பஷீர் அவரை அலைக்கழித்த தரிசனங்களின் பைத்தியவெளியில் இருந்து மீண்டு வருகிறார். உறவுகளை பஷீர் ஒரு மனிதனை அணைத்துப் புகலிடம் கொடுக்கும் மரநிழலாக காண்கிறார் என இந்நாவல் காட்டுகிறது. மனிதன் தனியாக இருக்க முடியாதவன் என, பிரியததை கொண்டும் கொடுத்தும்தான் அவனால் வழ்ழ முடியும் என. இதுதான் பஷீரின் வாழ்க்கை நோக்கா?

பஷீரின் படைப்புலகு குறித்து அப்படி எளிதான முடிவுகளுக்கு வந்து விடமுடியாது. அவர் வாழ்வை நேசித்தாரா என்றுகூட திட்டவட்டமாக கூறிவிட முடியாது. ஒருவேளை ஒரு மேற்கத்தியமனம் பஷீரை நெருங்கவே முடியாது போகக்கூடும். ஏனெனில் பஷீர் சூ·பிமரபில் வந்தவர். சூனியப் பெருவெளியின் தரிசனத்தை சில தருணங்களிலேனும் அறிந்தவர். பாலைவனவெளியில் தகதகத்துச் சுழலும் மாபெரும் நிலவைக் கண்டு, “அல்லா! உனது மகத்துவம் என்னை கூச வைக்கிறது. அதை தாங்கும் சக்தி எனக்கில்லை” என்று கூவியபடி கதையன்றில் நகரின் சந்துகளுக்குள் ஓடுகிறார் பஷீர்.

ஆம், வெறுமையில் மகத்துவத்தையும் மகத்துவத்தில் வெறுமையையும் கண்டு தெளிந்த சூபிதரிசனத்தின் பின்னணியில்தான் பஷீரை புரிந்து கொள்ளமுடியும். எந்த நவீனப் படைப்பாளியையும் விட பஷீருடன் ஒப்பிடத்தக்கவர்கள் குணங்குடி மஸ்தான் சாகிப் முதலிய சூ·பி துறவியர்தாம். ஆன்மிகம் உயரிய அங்கதத்தைச் சந்திக்கும் இடம் இதில் முக்கியமானதாகும். பஷீரின் சிரிப்பு ஆயிரம் வருடங்களாக கீழை ஞனமரபில் இருந்து வரும் சிரிப்பு. ஜென் கதைகளிலும் சித்தர் பாடல்களிலும் மீண்டும் மீண்டும் தென்படுவது அது. அற்பத்தனத்திலும் குரூரத்திலும் அகங்காரத்திலும் மூழ்கிய மானுடத்தைக் கண்டு பிரியத்துடன் புன்னகைத்துச் சென்ற சூபி பஷீர்.

[பாத்தும்மாவுடைய ஆடும் இளம் பருவத்துத்தோழியும் : வைக்கம் முகமது பஷீர். தமிழாக்கம் குமாரி கெ.விஜயம். நேஷனல் புக் டிரஸ்ட்

 

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Jan 29, 2007

தனிமையின் முடிவில்லாத கரையில்…

பஷீர் : மொழியின் புன்னகை

பஷீர் ஆவணப்படம்

பஷீர் காணொளி

 

சர்வ ஃபூதேஷு கடிதங்கள்- 3

யா தேவி! [சிறுகதை]

சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

 

சர்வ ஃபூதேஷு கதையை படித்தபின்னர்தான் யா தேவி படித்தேன். அதன்பின் மீண்டும் இந்தக்கதையை வாசித்தேன். முதல்கதையின் நீட்சி. இரண்டாம் கதையில் முதல்கதை தொடாத ஒன்று இருக்கிறது – முதல்கதையில் எல்லா ஆன்ஸெலை அன்னைவடிவமாக ஸ்ரீதரன் பார்க்கிறான். இரண்டாம் கதையில் அவளே அன்னைவடிவமாக ஆகிவிடுகிறாள்.

 

அவளுடைய பல வடிவங்கள். பலரால் காமம்கொள்ளப்படுபவை. ஆனால் இந்த வடிவம் அன்னை. வியாகூல மாதா. மகனுக்காக கண்ணீர்விடும் தாய். இதை அவள் அறிந்திருக்க மாட்டாள். ஆனால் அவளே அப்படி ஆகிவிட்டாள். மெல்லமெல்ல அதைநோக்கி வந்துவிட்டாள். அவன் அவளுக்கு அளித்த சிகிச்சை என்பது அவளிடமிருந்து அந்த அன்னையை வெளியே கொண்டுவந்ததுதான்.

 

சத்யமூர்த்தி

சென்னை

அன்புள்ள ஜெ,

 

சர்வ பூதேஷு கதையில் நான் கண்ட ஒரு விஷயம். இது முக்கியமான வாசிப்பா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் தொழில்முறை மருத்துவன் ஆகவே இதை என் அனுபவமாகக் கொள்ளலாம்

மாத்தனின் பிரச்சினையே உணவுதான். பசிதான். அந்த வகையான பசி என்பது உண்மையில் உடலில் உள்ள பசி அல்ல. அது வேறேதோ பசி. அதை உடல்பசியாக ஆக்கிக்கொள்வார்கள். டிப்ரஷன் நோயாளிகள் நிறையச் சாப்பிடுவார்கள். அலுப்பு காரணமாக சாப்பிடுவார்கள். அன்பு கிடைக்காதவர்கள் சாப்பிடுவார்கள். குழந்தைப் பருவத்தைவிட்டு வெளியே செல்லவே மனமில்லாத செல்லப்பிள்ளைகளும் ஜாஸ்தியாகச் சாப்பிடுவாrகள். சாப்பாடு நோயாக ஆகும் கணம் இது

மாத்தன் கனவில் காண்பதெல்லாம் சாப்பாடுதான். மீன் சந்தைக்கு கூட்டிச் செல்கிறான். பீஃப் பொரியல் பற்றி பேசுகிறான். அது ஸ்பிரிச்சுவல் ஆன ஒரு பசி. அந்தப்பசியின் உடல்வடிவம். அவனுடைய அந்தப்பசியைத்தான் எல்லா இல்லாமலாக்குகிறாள். அதுவரை அவள் காமப்பசி கொண்டவர்களுக்கு உடலை அளித்தவள். இப்போது இவனுடைய பசிக்கு தன்னை அளிக்கிறாள்

எல்லாமே அன்னையின் வடிவங்கள்தான்.அன்னை செய்யும் வெவ்வேறு பணிகள்தான்.

 

மகேஷ்

 

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு- கடிதங்கள்-3

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு,2020

ஈரோடு வாசகர் சந்திப்பு -கடிதம்

 

அன்புள்ள ஆசிரியர்க்கு,

ஈரோடு புதிய வாசகர் சந்திப்பின் வெற்றி என்பது உங்களுடன் இரு நாட்கள் தங்கியிருந்தது தான். உங்களின் பதிவுகளை நூல்களை படிக்கும் போது பிறக்கும் உத்வேகத்தில் பலமுறை நான் நினைத்ததுண்டு நீங்கள் ஏதேனும் குருகுலம் ஆரம்பித்தால் முதல் ஆளாகப் போய்ச் சேரவேண்டும் என்று. அங்கேயே கிடந்து சேவை செய்து கற்றறிந்து புதிய ஆளாக வரவேண்டும் என்று. வாசகர் சந்திப்புக்கான இவ்விரு நாட்கள் அவ்வாசையை தீர்த்துக் கொள்ள ஒரு சிறு வாய்ப்பு. அதை மிகச்சிறப்பாக எங்களுக்கு ஏற்படுத்தித் தந்த உங்களுக்கும் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

நம் சூழலில் தீவிரமாகச் செயல்படுபவர்களைச் சந்திப்பது அரிது. எத்துறையினராயாலும் அவர்களிடம் சிறிது நேரம் உரையாடினாலே நமக்கும் அந்த உற்சாகம் கைகூடும். நாம் செய்ய வேண்டியவற்றை நமக்கு ஞாபகப்படுத்தி தீவிரமாகச் செயல்படுத்தத் தூண்டும். நம் உச்ச மனநிலையை கரைத்துச் சாதாரணமானவனாக நம்மை மாற்றும் சூழலில் உங்கள் தளத்தில் வரும் ஒரு  கட்டுரையைப் படித்தால் போதும் எனக்கு மீண்டும் அம் மனநிலையை மீட்க. அதன் ஆழமும் அதற்காக நீங்கள் அளிக்கும் சிரத்தையும் உழைப்பும் பிரமிக்க வைக்கும்.

முகாமில் நீங்கள் பேசி விளக்கிய ஒவ்வொன்றும் செறிவும் கூர்மையும் நிறைந்தவை. எங்களைப் போன்ற இளம்வாசகர்கள் அறிந்திருக்க வேண்டிய அடிப்படை விவாத முறைமைகள், ‘Metafiction’  முதலான இலக்கிய அடிப்படைகள் முதல் ‘Jane Goodall’, தமிழ்வாணன் காமிக்ஸ் என்று தகவல்கள் வரை. அங்கே பேசப்பட்ட நகைச்சுவைகள் எல்லாம் நினைவில் வரும் போதெல்லாம் சிரிப்பை அடக்கச் சிரமத்தைக் கொடுப்பன. நீங்கள் அடிக்கடி குறிப்பிடும் ஈரோடு கிருஷ்ணன், சனீல் கிருஷ்ணன், சிவகுருநாதன் முதலான நண்பர்களை நேரில் சந்திக்க முடிந்தது. சந்திப்பு முடித்து நண்பர் கார்த்தியுடன் சென்னை பஸ்ஸிற்காக காத்திருக்கும் போது மிக நிறைவாக உணர்ந்ததாகச் சொல்லிக்கொண்டோம்.

பணிவன்புடன்,
ஜெயராம்

அன்புள்ள ஜெ ,

 

ஈரோடு புதிய வாசகர் சந்திப்பு இனிதே அமைந்தது, உங்களை பலமுறை கூட்டங்களில் முகமுன் செய்திருந்தாலும் பெரியதாக பேசாதத்துற்கு எனது தயக்கமே காரணம், அதே தயக்கத்துடன் சனிக்கிழமை காலை நண்பர்களுடன் ஈரோடு செந்தில் அவர்களின் பண்ணை வீட்டிற்குவந்தோம் , நீங்கள் எங்களுக்கு முன்னர் வந்து வாசலில் அமர்திருந்திர்கள். தயக்கத்துடன் வந்த பொழுதும் அதை அறிந்தவராக உங்களின் வேடிக்கை பேச்சு எங்களை இயல்பு நிலைக்கு வரவைத்தது .

 

சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக அங்கேயே இலக்கியம், கல்வி, சங்கீதம்   பற்றிய சுவாரசியமான பேச்சை தொடர்ந்தோம். பின்னர் சுவையான உணவு, உங்களின் இலக்கியம் என்றால் என்ன எதெற்கு இலக்கியம் போன்ற எளிய கேள்விகளுக்கு, ஒரு ஆசானாக எங்களை போன்ற தொடக்க நிலை வாசகர்களுக்கு இனிதே புரியவைத்தீர்கள். அறத்து பால் நமக்கு இலக்கியத்தை போதிக்கும் ஆனால் இலக்கியமே அறத்தை உணரவைக்கும் என்பதை சிறுவர்களுக்கு புரிய வைப்பதை போன்று புரியவைத்தீர்கள். முந்தைய நாள் பேருந்து பயணத்தில் சரியாக தூங்கவில்லை என்றாலும் உங்களின் பேச்சு எங்களை நாள் முழுவதும் விழிப்பாக வைத்திருந்தது. உண்மையான வேடிக்கை என்றால் என்ன என்பதனை உங்கள் பேச்சின் மூலமாக கண்டடைந்தோம்..

 

மாலை நேர நடை உங்களின் உரையை கேட்பதுமாக மற்றும் புதிய நண்பர்களுடன் உரையாட ஒரு நல் வாய்ப்பாக அமைந்தது. இரவு ஒரு நல்ல கதை எவ்வாறாக அமையவேண்டும், மற்றும் எங்களின் கதை கருக்களை கேட்டு அதை வைத்து விவாதமும் மற்றும் எவ்வாறு ஒரு சிறுகதை அமையவேண்டும் என்ற விவரிப்பும் எங்களின் வாசிப்பை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்ல உதவும். இரவு பேய்கதையும் வெடிச்சிரிப்புமாக இனிதே நிறைவு பெற்றது, ஞாயிறு காலை எங்களின் ஆக்கங்களின் விமர்சனம் நாங்கள் எதை இலக்கியத்தில் செய்ய கூடாது என்பதை தெளிவு படுத்தியது. நீங்கள் இந்த இரண்டு நாட்களை எவ்வாறு முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கொடுத்து அறிவுரை இலக்கியத்திற்கு மட்டும் அன்றி வாழ்விற்கும் ஒரு படிப்பின்னை.

 

 

சினிமா நகைச்சுவை மட்டுமே அறிந்த எனக்கு , உண்மையான நகைச்சுவை என்ன என்று உணர்த்தினீர்கள் (அதை உங்களின் பல கட்டுரைகளில் அறிந்திருந்தாலும் நேற்று தான் நேரில் கண்டேன் ). உங்களின் உன்னதமான இரண்டு நாட்களை எங்களை போன்ற ஒரு ஆரம்ப நிலை வாசகர்களுக்ககாக ஒதுக்கியதற்கு வணங்குகின்றேன். இதற்கு ஏற்பாடுகள் செய்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் .

 

 

யாதேவி சிறுகதை பற்றிய பேச்சு வரும்பொழுது ஆன்ஸெல் மேரி மாதாவாக உருவகப்படுத்த பட்டதாக உணர்ந்ததை சொன்னேன், அப்பொழுது உங்களின் எதிர்வினையை என்னால் உணரமுடியவில்லை . இன்று காலை சர்வ பூதேஷு கதையில் மாத்தன் “ஆன்ஸெல் முகம் மாதாவின் முகமமாக  இருக்கிறது” என்று கூறுகையில், நான் அடைந்த பரவசத்திற்கு அளவு இல்லை, அது ஒரு வாசகன் தனது ஆசிரியரை கண்டடைந்த பரவசம்.

 

நன்றி ,

கார்த்திகேயன் A.M

கொரோனோ

0

 

ஒரு சினிமாச் சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது. மலையாளம். அங்கிருந்து அழைத்தார்கள். “சார் வருந்நுண்டோ? கொறோணயல்லே? கொறோணயாணே!” நான் “எந்து கொறோணா?” என்றேன். ‘கொறோணயாணே!” நான் வருவதாகச் சொன்னேன். அவருக்கு சந்தேகம். கொறோணா இருப்பதனால்தான் வருகிறேன் என்று சொல்கிறேனா? என்ன இருந்தாலும் மலையாளி அல்லவா?. “ஞங்ஙள்கு கொறோணா இல்ல…” என்றார். நான் “எனிக்கும் இல்ல… பின்னெந்து பிரஸ்னம்?” என்றேன். “ஆ, பின்னெந்தா பிறஸ்னம்?” என்று சொல்லிவிட்டு “ஏதாயாலும் வேண்டா. நமுக்கு ஏப்ரல் கழிஞ்ஞிட்டு காணாம்” என்றார்

 

மலையாளிகளைப்போல கொரோனோவை அஞ்சி, பீதி கிளம்பியிருப்பவர்கள் வேறு எவருமில்லை. முக்கியமான காரணம் ஊடகப்பெருக்கம். நாளிதழ், தொலைக்காட்சி, கணினி,சமூகவலைத்தளங்கள், வாட்ஸப், குறுஞ்செய்தி, பக்கத்துவீட்டு பார்கவியக்கா, சாயாக்கடை சாந்தப்பன் என சகலவழிகளிலும் செய்திகளை சேகரித்துக்கொண்டே இருக்கும் வழக்கம் அவர்களுக்கு உண்டு. அத்துடன் செய்திகளை மிகைப்படுத்திக் கொள்வார்கள். மிகைப்படுத்திய செய்தியை சுடச்சுடப் பகிர்ந்து அதை மற்றவர்கள் மிகைப்படுத்த வாய்ப்பும் அளிப்பார்கள்.  “சங்கதி ஒந்நுமில்லா” என்றுதான் பேச்சை ஆரம்பிப்பார்கள். “வலிய சேதம் ஒந்நுமில்ல, தலைய காண்மானில்ல” என்பது அவர்களின் பாணி.

 

சில ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை நான்குநாட்கள் கேரளத்தில் ஒரு விடுதியில் தங்கியிருந்தேன். நான்குநாட்களும் மொத்த ஊடகப் பரப்பிலும் ஒரே செய்திதான்.. ஒர் அமைச்சரின் மனைவி அவர் தன்னை அடித்துவிட்டார் என்று மணமுறிவு கேட்கிறார். அவர் அங்கே அழுகிறார், இவர் இங்கே நடக்கிறார், இவர்கள் என்ன சொல்கிறார்கள், மற்றவர்களுக்கு ஏன் ஒன்றும் சொல்வதற்கில்லை, என்ன நினைக்கிறது கற்றறிந்த கேரளம், என்ன நடக்கிறது இங்கே? இப்படியே. மறுநாள்காலை கேரளம் இருக்குமா இருக்காதா என நான் பதற்றப்பட்டேன். மொத்தக் கேரளத்திலும் அதைப்பற்றி அதிகம் பதற்றப்படாதவர்கள் அந்த அமைச்சரும் மனைவியும்தான் என தொலைகாட்சி காட்சித்துளிகள் காட்டின. மலையாளிகளுக்கு அன்று வேறெதிலும் ஆர்வமில்லை. கேரளத்தில் பலாக்காய் ‘சீசனில்’ கூட்டு, கறி ,குழம்பு ,களி, வறுவன், பொரியல், அவியல் ,துவரன் என எல்லாமே பலாக்காயாக இருக்கும். அது அவர்களின் பண்பாடு.

 

இப்போது கொரோனோ. பிணராயி வேறு பள்ளிகளுக்கு விடுப்பு விட்டுவிட்டார். சினிமா அரங்குகள் மூடப்படவேண்டும் என்று சொல்லிவிட்டார். பகவதிகளுக்கும் சாஸ்தாக்களுக்கும் கொஞ்சநாள் திருவிழா இல்லை. தர்ணா, ஊர்வலம், சாலைமறியல், பொதுக்கூட்டம் உண்டா என்று தெரியவில்லை. கேரளம் தொடங்கியபின் இதுவரை ஒருநாள், ஒருமணிநேரம்கூட, வர்க்கப்போராடம் இல்லாமலிருந்ததில்லை. ஓர் ஆறுமாதம் இல்லாமலிருந்தால் இங்குலாப் சிந்தாபாத் மறந்து போய்விடாது?

 

ஆனால் பிவரேஜ் கார்ப்பரேஷன் சுறுசுறுப்பாக இயங்குகிறது.  அதை மலையாளிகள் மறப்பதில்லை. மரபணுக்களில் ஏற்கனவே ஏறிவிட்டது.  “மலையாளியுடே ஆவரேஜ் எந்நால் பிவரேஜா” மிமிக்ரி நெல்ஸன். ஏனென்றால் சாராயம் நல்ல கிருமிநாசினி. குடியனாகிய ஐயப்ப பைஜுவின் ஆலோசனை.  “ஏன் சார், மொத்தக் கேரளத்தின் மொத்த ஜனங்களையும் ஒரேநாள் ஒரே வேளையில் நல்ல பொள்ளாச்சி ஒரிஜினல் எரிசாராயத்தால் முழுமையாக குளிப்பாட்டிக் கழுவிவிட்டோம் என்றால் கொறோணோ போய்விடுமல்லவா?” அவர் ஏற்கனவே அதைக்கொண்டு மும்முறை கழுவிக்கொண்டு தூய்மையாகத்தான் இருக்கிறார். “எதுக்கு கையை கழுவணும்? நான் ஃபுல்லா கழுவிடுவேன். உள்ளும் புறமும்”

 

கேரளத்தில் ஏற்கனவே ஏராளமான வைரஸ்கள். கம்யூனிஸம், சபரிமலை போல எளிதில் தொற்றுபவை மிகப்பழையவை. ஏற்கனவே அங்கே பறவைக்காய்ச்சல் உக்கிரமாக இருக்கிறது. பன்றிக்காய்ச்சல், டெங்கு, சிக்கன்குனியா, சார்ஸ் எல்லாமே முதலில் கேரளத்திற்குத்தான் வரும்.ஏனென்றால் அங்கே எல்லாருக்குமே நோய்ப்பயம். நோய் பற்றிய ஊடகப்பயம். இன்னொருபக்கம் மிதமிஞ்சிய மருத்துவ வசதி. ஒரு சிற்றூர் முச்சந்தியில் பொதுவாக இரண்டு டீக்கடை, நான்கு பீடாக்கடை, ஒரு ஃபேன்ஸி ஸ்டோர் ஆகியவற்றுடன்  ஐந்து டாக்டர்களும் போர்டு மாட்டி கண்ணாடிமாட்டி அமர்ந்திருப்பார்கள். எந்த நோய்க்கும் எடுத்த எடுப்பிலேயே அந்த நோயின் சிறப்புநிபுணரையே நாடுவார்கள் மல்லுக்கள். வலக்கண்ணுக்கு வலக்கண் நிபுணர். இடதுசாரியின் இடதுகண்ணுக்கு தீவிர இடதுசாரி நிபுணர்.

 

ஒரு டாக்டர் இன்னொரு டாக்டரை மயிரிழையில் முந்தியாகவேண்டும். அப்போதுதான் பெயர் பரவும். “நேற்று கைகால் ஒருமாதிரியாக இருந்தது. ஒரு மூச்சுப்பிடிப்பு. டாக்டர் குஞ்ஞுசெந்தாமராக்ஷனை போய்ப் பார்த்தேன். ஒரு டோஸ் மெதில்ப்ரிட்னிஸோலோன். பிரேக் சவுட்டியதுபோல நின்னுட்டுது”. அதற்கு “டாக்டர் மாத்தன் மத்தாயியை சும்மா போய் பார்த்தாலே போதும். பிரேக் அதுவே சவிட்டிக்கொள்ளும்” என்று பதில் வந்தாகவேண்டும். ஆகவே எங்கும் எதற்கும் ஸ்டீராய்ட். இந்தியாவின் ஸ்டீராய்ட் உற்பத்தியே கேரளத்தை நம்பித்தான். பொதுவாக வைரஸ்களுக்கு ஸ்டீராய்ட்தான் மருந்து. கேரளத்திற்கு வரும் வைரஸ் சாயங்காலமானால் சோம்பல் முறித்து புன்னகையுடன் “எந்தருடே அளியா, வைந்நேரம் ஒரு நல்ல ஸ்டீராய்டொக்கே வேண்டே மோனே?” என்று மோகன்லால் குரலில் நம்மை கேட்கும்.

கூட்டமான இடங்களுக்கு போகாமலிருக்கலாம் என்கிறார்கள். ஆனால் எங்கேதான் கூட்டம் இல்லை. டவுன்பஸ்கள் என்பவை மக்கள் ஒருவரோடொருவர் எறும்புப்பந்து போல கவ்விக்கொண்டு செல்வதற்கான அடிப்படைச் சட்டகத்தை மட்டும் அளிப்பவை. கேரளத்தின் மக்கள்நெரிசலைக் கருத்தில்கொண்டு நாலைந்துபேர் சேர்ந்து அமர்ந்து மலம்கழிக்கும் கழிப்பறைகளை அமைக்கலாம் என்றுகூட ஓர் யோசனைகூட சொல்லப்பட்டது. அவசரத்தில் மற்றவருக்கு கழுவி விட்டுவிடமாட்டோமா என்று ஐயமும் எழுந்தது. சொல்லப்போனால் வீடுகளேகூட நெரிசலானவைதான். துபாயில் சம்பாதித்து காசு அனுப்ப  ‘கெட்டியோன்’ உள்ள பெண்டிர் வீட்டிலேயே இருக்கலாம். மற்றவர்கள் என்ன செய்யமுடியும்?

 

அடிக்கடி கைகழுவவேண்டும் என்கிறார்கள். ஆனால் அடிக்கடி தண்ணீர் கிடைக்கவேண்டும். சிறுநீர் கழித்து அந்த நீரிலேயே கையை கழுவிக்கொள்ளலாம் என்று இயற்கை மருத்துவமுறை உண்டா? சிறுநீரும் கிருமிநாசினிதானே? கைகுலுக்கலாம், அந்தக்கைக்கும் நோய்ப்பாதுகாப்பு கிடைக்கிறது. இந்தியாவின் முடிவில்லா நடைமுறைச் சிக்கல்கள், பண்பாட்டுப்பழக்கங்கள் ஆட்சியாளர்களுக்கு தெரிவதில்லை. அவர்கள் வேறு நாடு போல. காலைநடை செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் சீறி கனைத்து பிளிறி உறுமி முனகி மூக்கு சிந்தியும் துப்பியும் செல்கிறார்கள். தெருநாய்களுக்குக்கூட கொரோனோ வருவதற்க்கு வாய்ப்பு. ஓடும்பேருந்தில் இருந்து தலையை வெளியே நீட்டி சர்ர் என மூக்கு சிந்தி பின்னால் பைக்கில் வருபவனை உபசரிப்பவர்கள் நாம்.

ஆகவே கவலைப்படவேண்டியதில்லை என்ற முடிவை எடுத்தேன். மருத்துவர் சுனீல் கிருஷ்ணன் நடத்தும் இலக்கியக் கூட்டங்கள் கொரோனோ வைரஸால் ரத்துசெய்யப்பட்டுள்ளன. ஆனால் விஷ்ணுபுரம் இளம்வாசகர் சந்திப்பு அடாத கொரோனோவிலும் விடாது நடைபெறும். நேற்று குடும்பத்துடன் நாகர்கோயில் சக்ரவர்த்தி திரையரங்குக்குச் சென்றிருந்தோம். [கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்—அதுவே கொரோனோவுக்குரிய தலைப்பு] கழிப்பறைகளில் எங்கும் கைகழுவ நீர் இல்லை. கைகழுவும் இடமே இல்லை. மொத்தத்தில் தண்ணீரே இல்லை. இதுதான் தமிழகம் முழுக்க நிலைமை, கோடை வேறு வந்துவிட்டது. தண்ணீர் தண்ணீர் வசன மாதிரியில் “இங்கே குடிக்கவே தண்ணியில்ல. கொரோனோவுக்கு குண்டிகழுவ தண்ணி கேக்கறானுக”

 

முப்பது ரூபாய்க்கு ஒரு குடிநீர் புட்டி வாங்கி கையை கழுவினேன். ஆனால் கைகழுவாத நூறுபேர் தொட்டுத்திறந்த கதவைத்தான் நான் தொட்டுத்திறக்கவேண்டும். முகத்தில் அந்தக் கையை வைக்காமலிருக்கலாம். அடப்பாவி என்ற உணர்வு எழும்போது கையை வேறு எங்கேதான் வைப்பது? அந்த உணர்வு நமக்கு அரைமணிக்கு ஒருமுறை வந்துகொண்டும் இருக்கிறது.

சர்வ ஃபூதேஷு கடிதங்கள்- 2

யா தேவி! [சிறுகதை]

சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ,

 

சர்வ பூதேஷு அழகான ஒரு நீட்சி. முந்தைய கதையின் அதே சரளமான எளிமையான ஓட்டம். அதில் உட்குறிப்புக்கள் எல்லாம் அவளுடைய காலை அவன் தொடும்போது நிகழும் உரையாடல்களில் இருந்தன. இந்த கதையில் உரையாடல் வழியாக அந்த குறிப்புக்கள் வந்துகொண்டே இருக்கின்றன. கொச்சுமாத்தன் கண்ணீர் வழியாக தூய்மை ஆவதைப் பற்றிச் சொல்வது ஓர் உதாரணம்.  “அவளுக்கு என்னை எப்படி தெரியும்?” என்று அவன் கேட்டான். நான் “அவளுக்கு எல்லாரையும் தெரியும்” என்றேன். எல்லாரையும் அறிந்த அன்னை.

 

ஆனால்வள் வியாகூல மாதா. அவளுக்கு வியாகூல மாதாவின் முகம் இருக்கிறது. ஒரு அங்கியை போட்டு அமரவைத்தால் மடியில் சிலுவையிலேறிய ஏசுவை போட்டுவிடலாம்” என்கிறான் மாத்தன். அவள் ஏன் துயர்கொண்டிருக்கிறாள்? அவள் துயர்கொண்டிருப்பது எதனால். மாயையாக பெருகி உலகை நிறைத்திருப்பவளின் ஒரு தோற்றம்தான் அந்த துயரமும்.  “எல்லாமே துயரத்தைத்தான் தரும்” என்கிறான் ஸ்ரீதரன்.

 

இந்த உரையாடல்களில் வரும் குறிப்புக்களை வாசித்தால் கதை உள்ளுக்குள் விரிந்துகொண்டே செல்கிறது

 

ஆர்.ராஜசேகரன்

அன்புள்ள ஜெ.

 

சர்வ பூதேசு சிறுகதையை வாசித்தேன். அதை பற்றிய என்னுடைய பகிர்வு.

 

கொச்சு மாத்தன் பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடைந்தவன். தாம்பத்தியத்தில் ஈடுபட ஏதோவொரு காரணத்தால் இயலாதவனாக இருக்கிறான். மன அழுத்தத்தில் இருக்கிறான். ஆனால் உடல்ரீதியான உறவே நிறைவை தரும் என முயற்சிக்கிறான். இது ஒரு தரப்பு.

எல்லா ஆன்செல் பாலியிலையே தொழிலாக கொண்டிருந்தவள். மென்மையான உண்மையான உடலுக்காவும் உறவுக்காகவும் ஏங்குபவள். இது ஒரு மற்றொரு தரப்பு.

இந்த இரு தரப்புகளை ஒன்றையொன்று எதிர்கொள்ளும் நிகழ்வே இந்தச் சிறுகதை.

மேற்கண்ட இரண்டு தரப்புகளையும் இவ்வாறு எடுத்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன்.

கொச்சு மாத்தன் தன் வாழ்க்கையின் நிறைவுகள் அனைத்தையும் அன்னமயமாக பார்க்கும் அன்னமய கோசத்தில் இருக்கிறான். சக நோயாளியான முத்துபாண்டியின் நீராவி குளியலை கூட வேக வைக்கப்பட்ட மரவள்ளிக்கிழங்காதான் பார்கிறான். தன் கனவில் வரும் எல்லாவோடு கூட மீன் சந்தைக்குதான் செல்கிறான்.

எல்லா ஆன்செல் தன் வாழ்வை மென் உணர்வால் நிறைக்கும் மனோமய கோசத்தில் இருக்கிறாள்.

இந்த இருவருக்கும் திருமணம் தீர்வாக இருக்கும் என ஸ்ரீதரன் நினைக்கிறார். ஆனால் கொச்சு மாத்தன் அதை கண்டு அஞ்சுகிறான். எல்லா ஆன்செல் கூட கொச்சனை பற்றி  ஸ்ரீதரனிடம் கூட பகிர்ந்து கொள்வதில்லை.

ஆனால் எல்லாவுக்கும் கொச்சனுக்குமான உறவு  ஒரு  நிறைவை நோக்கி (ஆனந்தமய கோசம்) நகர்கிறது. மாத்தனுக்கு முதலில் வியாகூல மாதாவாக தெரியும் எல்லாவின் முகம் ஒளிகொண்டிருக்கும் மேரி மாதாவாக கதை முடிவடைகிறது. பாலியல் படத்தில் நடித்தது எல்லா என்பதை மாத்தன் ஏற்ககொள்ளாத போதும்  (ஆலிஸ் என ஏற்றுக்கொள்கிறான்). அவர்களுக்கிடையேயான மாற்றம் ஏன்? எப்படி? என்ற கேள்வியோடு கதை தொடர்கிறது. இந்த ஆனந்தமும் ஒரு கோசம் (உறை) தான்.  அதை ஸ்ரீதரனும் புரிந்துகொள்கிறான்.

 

சந்திரசேகரன்.

ஈரோடு