‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 50

[ 12 ]

தமகோஷரின் அரண்மனையிலிருந்து வெளிவந்தபோது புரவியிலேறி சூக்திமதியின் எல்லையைக் கடந்து முழுவிரைவில் அறியாதிசை ஒன்றுக்கு பாய்ந்தகன்று சென்றுவிட வேண்டுமென்றுதான் சிசுபாலன் எண்ணினான். ஆனால் உடல்சுமந்து தளர்ந்த காலடிகளுடன் முற்றத்தில் அவன் இறங்கியபோது ஓடிவந்து வணங்கிய தேர்ச்சூதனிடம் சொல்லெழுப்பி ஆணையிடும் உளவிசை அவனிடம் இருக்கவில்லை. புரவியை கொண்டு வரும்படி கையசைத்துவிட்டு காற்றில் சரிந்த தன் தலைமயிரை நீவி காதுக்குப் பின்னால் வைத்தான். அது மீண்டும் சரிய சலிப்புடன் கையை தாழ்த்தினான்.

அவன் ஆணையை பிழையாகப் புரிந்துகொண்ட தேர்ச்சூதன் மூன்று புரவிகள் கட்டப்பட்ட அரசத்தேர் ஒன்றை அவன் பக்கத்தில் கொண்டு வந்தான். சினம் மீறி எழுந்தபோதும்கூட குரலென அதை மாற்ற அவன் நெஞ்சில் மூச்சழுத்தம் இருக்கவில்லை. கையைத் தூக்கி ஏதோ சொல்ல முயன்று தளர்ந்து தோள்முனைத் தொங்கலென விட்டு தேரில் ஏறி அமர்ந்தான். “அரண்மனைக்கா, அரசே?” என்று சூதன் கேட்ட உதடசைவையே நோக்கிக்கொண்டிருந்தான். இருமுறை அவன் கேட்டபின் ஆம் என்று கையசைத்தான்.

தேர் ஓடத்தொடங்கியபோது எதிர்காற்று உடம்பில் படப்பட மெல்ல இளைப்பாறி கால் நீட்டி கண்களை மூடிக்கொண்டான். களைப்பு எத்தனை இனியது! இருப்பின் எடையை அதைப்போல பிறிதொன்று குறைப்பதில்லை. களைப்பைப்போல் ஆறுதலளிப்பது ஏது? இறப்பா? களைப்பென்பது நீர்த்த இறப்புதானா? என்ன எண்ணிக்கொண்டிருக்கிறேன்? எங்கோ விழுவது போல, புதைவது போல, தன்னுள் என செல்லும் சிறுதுயில் மயக்கில் மீண்டும் அக்குரலை கேட்டான். “இவ்வழி! இவ்வழி! ஆம் இவ்வழிதான்!” உரத்த குழறலாக “யார்?” என்று கேட்டுக்கொண்டு அவன் விழித்துக் கொண்டான்.

தேர்ப்பாகன் திரும்பி “அரசே…” என்றான். சிசுபாலன் “எங்கு செல்கிறாய்?” என்றான். “அரசியின் அரண்மனை அணுகிவிட்டது” என்றான் தேர்ப்பாகன். “யாருடைய அரண்மனை?” என்றான். “அரசே!” என்று தயங்கி “யாதவ அரசியின் அரண்மனை” என்றான் தேர்ப்பாகன். சினம் அனைத்து தசைகளையும் அடிபட்டதுபோல் துடிக்கவைத்தாலும் சொல் நெஞ்சுக்குள்ளேயே நின்றது. அச்சினத்தின் விசையை தாங்க முடியாமலேயே மீண்டும் தளர்ந்து சரி என்பது போல் அவன் கையசைத்தான். மீண்டும் களைப்பின் மென்வெம்மை கொண்ட பிசினுக்குள் ஆழ்ந்திறங்க விழைந்தன உடலும் உள்ளமும்.
தேர்ப்பாகன் சிசுபாலனின் மூத்த அரசி விசிரையின் அரண்மனை முற்றத்தில் தேரைத் திருப்பி நிறுத்தினான். அரண்மனைக்காவலர் இருவர் தேரை நோக்கி ஓடி வந்தனர். சிசுபாலன் அவ்வசைவால் விழித்துக்கொண்டு “பத்ரையின் அரண்மனைக்கு செல்!” என்றான். திகைப்புடன் “அரசே!” என்றான் தேர்ப்பாகன். தான் சொன்னதை தானே அப்போதுதான் கேட்டவன்போல தலையசைத்து வேண்டாம் என்றபின் படிகளில் கால்வைத்து இறங்கி நின்று நிலைதிரட்டிக்கொண்டான்.

வணங்கியபடி அணுகிய ஸ்தானிகரிடம் “அரசியை நான் பார்க்கவேண்டும்” என்றான். “தாங்கள் மந்தண அறைக்கு செல்லுங்கள். அரசியை உடனே வரச்சொல்கிறேன், அரசே” என்றார் ஸ்தானிகர். கால்கள் பிசினால் தரையுடன் ஒட்டியவை போலிருந்தன. ஒவ்வொரு அடியாக உடலை ஊன்றி படிகளில் தன்னைத் தூக்கி மேலேறி தூணில் கைசேர்த்து சில கணங்கள் நின்று நிலையழிந்து வலப்பக்கமாக சரிந்த உடலை மீட்டு அவன் நடந்தான்.

ஏவலர் தொடர இடைநாழியில் நடந்து படிகளில் ஏறி மந்தண அறைக்கு சென்றான். அங்கிருந்த காவலன் அவனை வணங்கி வாழ்த்துரைத்து அவன் உள்ளே சென்றதும் அமர்வதற்கு பீடத்தை ஒருக்கினான். இளங்காற்றில் மந்தண அறையின் அனைத்துச் சாளரங்களிலும் திரைச்சீலைகள் நெளிந்து கொண்டிருந்தன. மென்மயிர் சேக்கையிட்ட பீடத்தில் அமர்ந்து கால்களை நீட்டிக் கொண்டதும் உடலின் அனைத்து உறுப்புகளும் ஒன்றிலிருந்து ஒன்று விலகி உதிர்ந்துகிடப்பது போல் தோன்றியது. தலையை பின்னுக்குச் சரித்து கண்களை மூடினான். தொண்டை உப்பை உண்டதுபோலிருந்தது. நெஞ்சத்தின் ஓசை உடலெங்கும் கேட்டது.

மீண்டும் அதே விழும் உணர்வு. மீண்டும் அக்குரல் “இவ்வழி! இவ்வழியே!” என்றது. இம்முறை அதை அவன் எதிர்பார்த்திருந்தான். அதை கேட்கவில்லை, நோக்கிக் கொண்டிருந்தான். இருளசைவென அவ்வொலியை காணமுடிந்தது. “இவ்வழி! இவ்வழியே!” எங்கிருக்கிறோம் எனும் உணர்வு அம்மயக்கிலும் உடனிருந்ததை உணர்ந்தான். அவ்வாறு எண்ணும் சித்தமும் ஊடே ஓடுவதை அறிந்து அரைத்துயிலில் புன்னகைத்தான். திரைச்சீலைகளின் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. மெல்லிய சிறகு கொண்ட நாகங்கள் இருளைத் துழாவியபடி கரிய நெளிவுடன் அவன் தலைக்கு மேல் பறந்து சென்றன. பெரிய ஒளிவிடும் குமிழிகளென நீர்க்கொப்புளங்கள் அலைந்தன. இளம் குளிரலைகளாலான நீர்வெளி ஒன்றுக்குள் கருக்குழந்தையென உடல் ஒடுக்கி கண்மூடி சுருண்டிருந்தான். கண்மூடியிருந்தால் அக்கொப்புளங்களை எப்படி பார்க்கிறேன்? அவை இமைகளுக்குள் ஓடிக்கொண்டிருக்கின்றன. குருதிக்குமிழிகள் அவை.

மிக அப்பால் இனிய நறுமணம் ஒன்று அக்குரலென வந்தடைந்தது. “இவ்வழி!” எரிதலின் மணம். அரக்கு அல்லது தேவதாரு. அல்லது எரியும் தசையா? அது மணக்குமா? “இவ்வழியே!” மிக அண்மையில் எவரோ நின்றிருந்தனர். மெல்லிய கையொன்று அவன் தலையை தொட்டது. அத்தொடுகையை அக்குரலென உணர்ந்தான். “இவ்வழியே!” குரல் அவன் தோள்களைத் தொட்டு விரல் வரை வழிந்துசென்றது. “இவ்வழி!” உடலெங்கும் குருதிவழிவென அதை உணர்ந்தபடி அதற்கு தன் ஒவ்வொரு தசையையும் ஒப்புக்கொடுத்தபடி மேலும் மேலும் என தளர்ந்தான். முற்றிலும் உடலிலிருந்து விடுபட்டு பிறிதென்று எங்கோ இருந்தான். இருண்ட குகையொன்றின் சேற்றுப்பரப்பில் ஒட்டியிருக்கும் மின்மினி. மெல்லப்பெருகும் நதிவிரிவில் ஓசையிலாது அலைவளையங்களுமிலாது உதிர்ந்த சருகிலை. காற்றில் குவிந்து அதிர்ந்த சிலந்தி வலையில் கூத்திடும் சிறு துரும்பு.

கதவு கிறீச்சிட்ட ஒலி கேட்டு உடல் துள்ளி எழுந்து வாயைத் துடைத்தபடி நோக்கினான். கண்களின் படலத்தில் குருதியின் வெம்மைபடர்ந்து காட்சி தெளிவுறவில்லை. விசிரை எளிய உடையுடன் கதவோரம் தயங்கி நின்றிருந்தாள். பெரிய இடை சற்றே ஒசிய கதவைப் பற்றிய கையில் புயத்தின் மென்தசை தளர்ந்து தொங்க, சிறிய உதடுகள் அழுந்தியிருக்க அவனை நோக்கிக்கொண்டிருந்தாள். மூக்கின்மேலும் மேலுதட்டிலும் வியர்வைப்பனி இருந்தது. கழுத்து பளபளத்தது. விரைந்து படியேறியதன் இளைப்பு முலையிணைநடுவிலும் கழுத்துக்குழியிலும் அசைந்தது.

வருக என்று அவன் கை காட்டினான். அவள் சிலம்பும் கைவளையும் ஒலிக்க சிறிய காலடிகளை எடுத்து வைத்து அருகே வந்து மீண்டும் தயங்கி நின்றாள். அவள் வியர்வையின் அல்லித்தண்டு மணம் எழுந்தது. மூச்சொலியை கேட்கமுடிந்தது. “அமர்க!” என்று எதிரில் இருந்த பீடத்தை காட்டினான். அவள் ஆடையை ஒதுக்கி மெல்ல அமர்ந்தாள். உதட்டைக் கவ்வியபடி பதற்றம் தெரியும் கண்களுடன் கைவளைகளை பின்னுக்குத் தள்ளிக்கொண்டாள்.

அவன் சற்றுநேரம் அவளையே நோக்கிக்கொண்டிருந்தான். அவன் விழிகளை சந்தித்தபின் அவள் தலைதிருப்பி அலைபாயும் சாளரத்திரைச்சீலையை பார்த்தாள். அவன் நோக்கியபடி அமர்ந்திருக்கிறான் என்னும் உணர்வால் உடலில் நீர்த்துளிபோல் ஒரு நிலைகொள்ளாமை வந்தது. அதை வெல்லும்பொருட்டு மேலாடை நுனியால் வியர்த்த மேலுதட்டை ஒற்றியபின் “தாங்கள் வந்ததை ஏவலர் சொன்னார்கள்…” என்றாள்.

“ஆம், தந்தையை சந்திக்கப்போயிருந்தேன்” என்றான். அவளிடம் அவன் ஒருபோதும் அரசுநிகழ்வுகளை சொல்வதில்லை. எளிய யாதவப்பெண் என்னும் வடிவை தனக்கென சூடிக்கொண்டு அவளும் அவற்றிலிருந்து தன்னை முற்றிலும் விலக்கிக்கொண்டிருந்தாள். “நாளைமறுநாள் இங்கே இந்திரப்பிரஸ்தத்தின் ஆகோள்படை நுழைகிறது. பீமசேனர் நடத்திவருகிறார்.” அவள் தலையசைத்தாள். அதிலிருந்த விலகலால் சினம் கொண்டு அவன் “அப்படையை நான் சென்று எதிர்கொள்ளவேண்டும் என்றும், இளையபாண்டவரின் காலடிகளை சென்னி சூடி அழைத்துவந்து சேதிநாட்டு அரியணையில் அமரச்செய்து வாளேந்தி காவல்நிற்கவேண்டும் என்றும் தந்தை ஆணையிட்டிருக்கிறார்” என்றான்.

சரி என்பதுபோல் அவள் தலையசைத்தாள். வாளை உருவி அவள் கழுத்தில் பாய்ச்சவேண்டுமென அவன் உள்ளம் எழுந்தது. நீள்தொலைவு சென்று தன்னைக் கடந்து “நான் ஒப்பமுடியாது என்றேன்” என்றான். அவள் விழிகளை நோக்கியபடி “நான் அதற்கு மாறாக பீமனுடன் தோள்கோக்கிறேன் என்று சொன்னேன். நான் அழைத்தால் படைக்கலம் தேரும் உரிமை அவருக்குரியது. கதையோ தோளோ எனில் கால்நாழிகைநேரம்கூட நான் அவருடன் இணைநிற்க முடியாது” என்றான்.

அவள் மீண்டும் சரி என தலையசைத்தாள். சிசுபாலன் “என் தலை உடைந்து சிதறும். களப்பூழியில் குருதிசிதறிக்கிடப்பேன்” என்றான். அவள் வெற்றுவிழிகளுடன் நோக்கினாள். அவன் இதழ்களைக் கோட்டி “உன் உள்ளம் உவகைகொள்வதை அறிகிறேன். நீ காத்திருந்த தருணம்” என்றான். “யார்?” என்றாள் அவள் புருவம் சுருங்க. “உன் வஞ்சம் ஈடேறுகிறது” என்றான். “என்ன சொல்கிறீர்கள்?” என்று அவள் மெல்லியகுரலில் கேட்டாள். “ஏன் இப்படியெல்லாம் சொல்கிறீர்கள்? நான் என்ன பிழை செய்தேன்…? நான் இதற்குமேல் என்ன செய்வேன்?”

மெல்ல விசும்பி அவள் அழத்தொடங்கினாள். அவ்வழுகை நோக்கி அவள் வந்துகொண்டிருந்தாள் என்பதனால் தடைகளற்று கண்ணீர் வழிய தோள்கள் குலுங்க கொதிகலனில் ஆவியென விசும்பல் ஓசைகளுடன் அழுதாள். உதட்டைக் கவ்வி அழுகையை நிறுத்த முயன்று கழுத்து அதிர திணறி மீண்டும் அழுதாள்.

“நான் உன் பிழையென அதை சொல்லவில்லை” என்று தணிந்தகுரலில் சிசுபாலன் சொன்னான். “என் பிழையைச் சுட்டவே அதை சொன்னேன்.” அவள் கழுத்தின் மென்மயிர்ப்பரப்பை நோக்கியபோது அவனுள் காமம் எழுந்தது. “செய்தவை அனைத்தும் எழுந்துவந்து என்னை சூழ்கின்றன. எது பிழை எது சரி என எண்ணக்கூடவில்லை. ஆணவம் கொள்ளவேண்டும், மேலும் ஆணவம் கொள்ளவேண்டும் என எனக்கே ஆணையிட்டுக்கொண்டிருந்தேன். விழியறியா எதையோ சீண்டிக்கொண்டிருந்தேன்” என்றான். “இனி செய்வதற்கோ சொல்வதற்கோ ஏதுமில்லை. இவ்வாறு முடியும்போது அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்து இசைவுகொள்ளுமென தோன்றுகிறது.”

அவள் “என்ன பேசுகிறீர்கள்? நீங்கள் வெற்றிகொள்வீர்கள்… நீடூழி வாழ்வீர்கள்” என்றாள். “நான் வேண்டிக்கொள்கிறேன்… என் தெய்வம் உடனிருக்கும்.” அச்சொற்களிலிருந்த பேதைமை அவனை மீண்டும் சினம் கொள்ளச்செய்தது. சற்றே எழுந்த கனிவு மறைய “வெற்றியா? நான் சாவதற்காக செல்கிறேன். நீ வேண்டிக்கொள்வதன்படியே சாகவிருக்கிறேன்” என்றான். “இல்லை…” என்று அவள் சொல்லத்தொடங்க “செல்…” என்று கைநீட்டி கூவினான். “உன்னிடம் ஏன் இதை சொல்லவந்தேன்! உன்னிடம் போய்… செல்க…!” என்று இரைந்தபடி எழுந்து நின்றான்.

அவள் எழுந்து தலைகுனிந்து கைகூப்பியபடி கதவைநோக்கி சென்றாள். அவள் கை எழுந்து கதவுத்தாழை தொட்டபோது அவன் ஏனென்றறியாது மீண்டும் கனிந்தான். “விசிரை, என் மேல் சினம் கொள்ளாதே. இவை நாமறியாத ஊழென்று எண்ணுக! என் மைந்தனிடம் சொல், அவனை நான் இப்புவியில் முதன்மையான உறவென எண்ணினேன் என்று” என்றான். அவள் கைதாழ்த்தி நெஞ்சைத் தொட்டு தலைகுனிந்து விம்மினாள். “அழாதே… செல்க!” என்றான். அவள் தலையசைத்தபின் தாழை விலக்கினாள். மிக இயல்பாக கை சென்று கன்னத்தில் சரிந்த குழலை அள்ளி ஒருமுறை சுழற்றி காதில் செருகியது.

அவ்வசைவு அவனை திடுக்கிடச்செய்தது. நெஞ்சு அறைபட அவன் ஒரு காலடி எடுப்பதற்குள் அவள் வெளியே செல்ல கதவு மூடிக்கொண்டது. கதவைத்திறந்து பின்னால் ஓடி அவளைப்பற்றி இழுத்துத் திருப்பி ‘என்ன செய்தாய்? இப்போது என்னசெய்தாய் என அறிவாயா?’ என்று கூவவேண்டுமென உளம் பொங்கியது. பின்பு தளர்ந்து தன் இருக்கையில் வந்தமர்ந்துகொண்டான்.

[ 13 ]

களிந்தகத்தை ஆண்ட அந்தகக் குலத்து யாதவ மன்னர் சத்ராஜித்தின் மகள் சத்யபாமையை மணக்க விழைந்து ஹரிணபதத்திற்குச் சென்று அவள் முன் வலிப்புகொண்டு விழுந்து சிறுமைக்காளாகி மீண்டபின் சிசுபாலன் சினத்தால் நிறைந்தவனாக இருந்தான். அவன் சூக்திமதிக்கு திரும்புவதற்குள்ளாகவே அங்கே என்ன நிகழ்ந்தது என்பது அந்நகரை வந்தடைந்துவிட்டிருந்தது. தமகோஷர் அவனிடம் ஒருசொல்லும் கேட்கவில்லை. அமைச்சரோ பிறரோ அச்செய்தியை அறிந்தவர்களாக காட்டிக்கொள்ளவுமில்லை.

அவன் அன்னை சுருதகீர்த்தி மட்டும் அவன் விழிகளை நோக்காமல் அதைப்பற்றி உசாவினாள். “உன் உடல்நிலையை மருத்துவர்களிடம் காட்டி அறிந்துகொள்வதில் பிழையொன்றுமில்லை” என்றாள். அவள் முன் அமர்ந்திருந்த சிசுபாலன் “என்ன?” என்றான். “நீயே அறிவாய்…” என்று சொல்லி அவள் எழுந்துகொண்டாள். “எரிந்துகொண்டிருக்கிறாய். முடிவிலாது எரிய ஆதித்யர்களாலும் இயலாது என்று சூதர் சொல் உண்டு.” அவன் அவள் செல்வதை நோக்கிக்கொண்டிருந்தான்.

சூக்திமதியில் விழிகள் சூழ இருக்கமுடியாமல் அவன் சௌவீர நாட்டுக்கு சென்றான். ஆனால் அங்கு அவனுக்கு முன்னரே அனைத்துச்செய்திகளும் சென்றுவிட்டிருந்தன. சௌவீரபுரிக்குள் நுழைந்ததுமே இளவரசனாகிய சுப்ரதீபன் அவனிடம் “களிந்தகத்தின் இளவரசி இளைய யாதவனை மணம்கொள்ளும்பொருட்டு துவாரகைக்குச் சென்றிருப்பதாக நேற்று செய்தி வந்தது, சிசுபாலரே” என்றான். அக்கணமே அங்கிருந்து புரவியைத்தட்டித் திருப்பி விரைந்தகலவேண்டுமென அவன் உள்ளம் சீறியது. பற்களைக் கடித்து புன்னகை என இதழ்களை விரித்து “ஆம், அறிந்தேன்” என்றான்.

சௌவீரபுரியின் தெருக்களினூடாக மக்களின் வாழ்த்தொலிகளை ஏற்று தேரில் அரண்மனைக்குச் செல்லும்போது அவன் கால்கள் நீர் விரையும் குழாய்கள் என அதிர்ந்துகொண்டிருந்தன. பாறையின் பச்சோந்திபோல விடாய்கொண்ட நா தவித்தது. ஒவ்வொரு கணமாக அந்தப் பயணத்தை முடித்து அரண்மனைக்குச் சென்று நீராடி மீளும்போது மெல்லிய வலிப்பு வந்தது. காலடி நிலம் மரவுரிபோல இழுபடுவதாக உணர்ந்தான். நின்றிருந்த தூண்கள் வளைந்தன.

நிலையழிந்து விழுந்த அவனை ஏவலர் ஓடிவந்து தூக்கினர். அரை நினைவு மீண்ட அவன் “விலகுங்கள்! விலகுங்கள்!” என்று கூவி அவர்களை ஓங்கி அறைந்தான். அவர்கள் விலகியதும் எழ முயன்று கால்கள் உடலுடன் ஒட்டாமல் நழுவியகல மீண்டும் விழுந்து நினைவழிந்தான். பற்கள் நாவை இறுகக் கடித்திருக்க அவன் இடது தோள் நடுங்கிக்கொண்டிருந்தது. நெற்றியின் நடுவே ஆழமான வெட்டுபோல ஒரு சுளிப்பு உருவாகியிருக்க அவன் உடல் அறைபடும் முரசென அதிர்ந்துகொண்டிருந்தது.

ஏழுநாட்கள் சௌவீரத்தின் மருத்துவர் குடிலில் அவன் இருந்தான். அவன் நரம்புகளின் முடிச்சுகள் அவிழ்ந்திருப்பதாக மருத்துவர்கள் சொன்னார்கள். “பிறவியிலேயே இப்படி அமைவதுண்டு. தாளாத உளக்கொந்தளிப்புகளாலும் வருவதுண்டு” என்றார் மருத்துவர். “எனக்கு ஒன்றுமில்லை, நான் சூக்திமதிக்கே செல்கிறேன்” என்றான். “தங்களால் இப்போது பயணம்செய்யமுடியாது, அரசே” என்றார் மருத்துவர். “நான் கிளம்பியாகவேண்டும். இங்கே என்னால் இருக்கமுடியாது” என்றான் சிசுபாலன்.

விடைபெறுகையில் சௌவீர மன்னர் சத்ருஞ்சயரை சென்று வணங்கி முகமன் உரைத்தான். “இளையவனே, அரசர்கள் பகடையாடுபவர்கள். அவர்கள் பகடைக்காய்களாக ஆகக்கூடாது” என்று அவர் சொன்னார். அவன் அவர் விழிகளைத் தவிர்த்து “ஆம், அவ்வண்ணமே” என்றபின் சுப்ரதீபனின் தோளைத் தொட்டு “கிளம்புகிறேன்” என்றான். சுப்ரதீபன் அவனுடன் நகர் எல்லை வரை வந்தான். “உங்களுடன் மலையாட்டு ஒன்று செய்யலாமென எண்ணினேன், சிசுபாலரே. மலையுச்சிகளில் வெண்பனி இறங்கும் பருவம் இது” என்றான். சிசுபாலன் “மீண்டும் வருகிறேன்” என்றான்.

சௌவீரத்திலிருந்து ரைவத மலைக்குச் செல்லலாம் என்று சிசுபாலன் கிளம்பியபின்னர் முடிவெடுத்தான். அவனுடன் வந்த காவலர்தலைவர் கீர்மீரர் “ஆணை!” என்று தலைவணங்கினார். அவன் புரவியில் நிமிர்ந்து அமர்ந்து விழிகள் நிலைகுத்தியிருக்க ஊர்வலம் செல்லும் தெய்வச்சிலை போல அவர்களுடன் வந்தான். தங்களுடன் தெய்வம் ஒன்று உடன்வரும் எண்ணமே அவர்களிடமிருந்தது. அவனிடம் படைத்துணைவர்கள் தேவையின்றி ஒரு சொல்லும் பேசவில்லை. எச்சொல்லும் அவன் ஆன்மாவின் மிக மென்மையான புண் ஒன்றில் மட்டுமே சென்று தைக்கும் என்று அறிந்திருந்தனர்.

ஒளிந்தவிழியால் அவனை கீர்மீரர் நோக்கிக்கொண்டே வந்தார். இளைப்பாறும் சோலைகளில் தனித்துச் சென்றமர்ந்து தலைமயிர் முகத்தில் சரிய விழிகள் மெல்லிய ஈரத்துடன் உருள அவன் எதை எண்ணிக் கொள்கிறான்? தலையை அசைத்து அசைத்து தனக்கெனவும் தன் மேல் எழுந்து நிற்கும் வானுக்கெனவும் எதை மறுக்கிறான்? பித்தனைப்போல் அவன் இதழ்கள் திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிருக்கும் ஓசையிலா சொல் எது? பின்னி நெருடிக் கொள்ளும் விரல்கள் வெறி எழுந்து முறுகி நரம்பு புடைக்க செறிந்து பின் தளர்ந்து அடையும் பதைப்புதான் என்ன?

உள்ளத்தின் துன்பத்தை உடல் அறிகிறது, கருக்குழந்தையின் நோய் அறியும் அன்னை போல என்ற சூதர்மொழியை கீர்மீரர் எண்ணிக்கொண்டார். “அவருடன் நாமிருப்பதை அவர் உணரவேண்டியதில்லை” என்று ஆணையிட்டார். அணுக்கர் சிசுபாலனை ஓசையின்றி சூழ்ந்து விழிகளாலேயே தங்களுக்குள் சொல்லாடி வலசைநாரைகளின் படலமென மாறி அழைத்துச் சென்றனர்.

அன்றுகாலை எழுந்ததுமே உள்ளம் அசைவிழந்து குளிர்ந்து கிடந்தது. மெல்ல எண்ணங்களால் அதை எழுப்பி செயல்கொள்ள வைத்தான். ஆனால் ஒவ்வொரு கணமும் என அவன் உள்ளம் சோர்ந்து தணிந்துகொண்டிருந்தது. சௌவீரத்திலிருந்து கிளம்பியபோது சிசுபாலன் நெய்யூற்றி பற்றவைக்கப்பட்ட பசுமரம்போல் பொசுங்கி படபடத்து அதிர்ந்து கொண்டிருந்தான். எரிதழலாக மாறி தன்னைத் தானே உண்டு அணைந்து முழுவெறுமையை அடைந்தான். கண்களில் பார்வையும் செவிகளில் ஒலிகளும் உடலில் இட உணர்வும் இருக்கும்போதே அவற்றுக்கு அப்பால் எங்கோ இருந்து தன்னிலை திகைத்துக் கொண்டிருந்தது.

வெறுமை பெருவிசைகொண்டு ஈர்ப்பது. வெள்ளம் அடியிலா குழியை என வெறுமையை நாடிச்செல்கிறது உள்ளம். இனியில்லை, இதுவே, இவ்வாறே என அரற்றிய சொல்நிரை என அகம். கண்கனியும் அளவுக்கு உருகி நீர்மைகொண்டது இருப்பு. வீரிட்டலறியபடி தலையில் ஓங்கி ஓங்கி அறையவேண்டுமென நெஞ்சு எழுந்தது. அடுத்த கணமே வாளெடுத்து கழுத்தை வெட்டிக் கொள்ளப்போகிறான் என்று நுனிகொண்டது சித்தம். அவ்வுச்சத்திலும் அள்ளித்திருப்பும் விசையென எஞ்சும் இருப்பிற்கான விழைவுதான் என்ன? சூழ்ந்திருந்த பொருட்கள் அனைத்தும் உள்ளுறையும் அறிவணுவை இழந்து அவன் எண்ணமெனும் அலைகளில் நெற்றுகளாகி அப்பால் அப்பால் என விலகிச் செல்ல இன்மையால் சூழப்பட்டு நின்றிருந்தான்.

அந்த ஒருகணம் மயங்கி பிறிதொரு கணம் எழும் எனில் இறப்பே என உணர்ந்த உச்சப் புள்ளியில் விழித்தெழுந்து கொடுங்கனவில் இருந்து என தன்னைக் கிழித்தெடுத்து தன்னிலையை திரட்டிக் கொண்டான். அதை சினமென வஞ்சமென ஆக்கி மேலும்மேலும் வெறி கொள்ளச்செய்து உருவடையச்செய்தான். சினம் போல் திரட்டிக்கொள்ள எளிதானது பிறிதொன்றுமில்லை. நெடுநேரம் அச்சினமாகவே தன் அனைத்திருப்பையும் மாற்றினான். சினம் ஓர் எண்ணமாக, பின்பு ஒரு பொருண்மையாக, பின்பு பற்றி எரியும் வலியாக, பின்பு எரிதலின் பேருவகையாக மாறி எரிந்து எரிந்து அணைந்து சாம்பலாகிப் பறந்து ஒழிந்து மீண்டும் அதே வெறுமை.

சீதவாகினி ஆற்றின் கரையில் அவனும் வழித்துணைவர்களும் புரவியிறங்கி மரநிழலில் வேர்களில் அமர்ந்து இளைப்பாறினர். களைத்த புரவிகளுக்கு வீரர்கள் சிலர் நீர் காட்டிக் கொண்டிருந்தனர். சிலர் பச்சையிலை பறித்து அவற்றின் உடல்தசைகளை நீவினர். கால் மாற்றி உதைத்தும் செவியடித்தும் அவை சீறின. திரும்பி உழிபவனை நக்கி தலை குலுக்கின. அவன் அச்செய்கைகளை பொருளெனத் திரளா உள்ளத்துடன் நோக்கிக்கொண்டிருந்தான்.

ஆற்றின் மறுகரையில் கொம்பும் முழவும் எழுந்தன. மரக்கிளைகளுக்கு நடுவே வண்ணங்கள் கலந்தும் தெளிந்தும் அசைந்தன. நெடுமரத்தின் மேல் ஏறி நோக்கியபின் ஒரு வீரன் கீர்மீரரிடம் சொல்ல அவர் வந்து சிசுபாலன் அருகே பணிந்து “அரசே, கோபாகத்தை ஆளும் அந்தகக் குலத்து சிற்றரசர் பஃப்ருவின் கொடி அது. வெண்ணிற பிறை இருப்பதனால் அவர் அரசி வருகிறார்களென தெரிகிறது. கோபாகத்தின் அரசி விசிரை மாமங்கலைப் பூசனைக்காக சௌவீர நாட்டிற்கு வரவிருப்பதாக நேற்று அங்கே பேசிக் கொண்டிருந்தனர்” என்றார்.

சிசுபாலன் ஆர்வமில்லாமல் “நன்று” என்றபின் மெல்ல அசைந்து அமர்ந்து “நாம் ஏதேனும் முறைமை செய்ய வேண்டுமா?” என்றான். “வேண்டுமென்பதில்லை. பஃப்ரு உண்மையில் அரசர் அல்ல, யாதவர்களின் குடித்தலைவர் மட்டுமே. முடியும் கொடியும் முரசும் கொண்டு தன்னை ஓர் அரசரென்று அவர் அறிவித்திருந்தாலும் பாரதவர்ஷத்தின் அவைகள் எதிலும் அவருக்கு மன்னர்களுக்குரிய பீடம் அமைக்கப்படவில்லை” என்றார் கீர்மீரர்.

“ஆனால் தாங்கள் விழைந்தால் ஓரிரு நற்சொற்களை அரசியிடம் சொல்லலாம். அவர் பெண்ணென்பதனால் அது நன்றென கொள்ளப்படுகிறது. அக்குடிக்கும் அது பெருமை” என்ற கீர்மீரர் ஒருகணம் இடைவிட்டு “தங்கள் அன்னையும் அதை விழையக்கூடும்” என்றார். விழிதூக்கி நோக்கியபின் மெல்ல உறுமி சிசுபாலன் திரும்பிக் கொண்டான்.

ஆற்றின் மறுகரையில் யாதவர்களின் பசுக்கொடி நன்றாக தெரிந்தது. பல்லக்குகளை போகிகள் ஆற்றங்கரை புல்பரப்பில் இறக்கி வைத்தனர். அதிலிருந்து வண்ண ஆடைகளுடன் இறங்கிய அரசியும் தோழியரும் மரவேர்களில் அமர்ந்தனர். அவர்கள் ஆற்றைக்கண்டு அடைந்த உவகையை உடலசைவுகளிலேயே காணமுடிந்தது. அங்கிருந்து ஒரு வீரன் நீள்மரமொன்றின் மேலேறி கொடியை ஆட்டி இக்கரையில் இருந்த படகுக்காரர்களை அழைத்தான். மாற்றுக்கொடி அசைத்தபின் படகோட்டி வந்து கீர்மீரரிடம் “நாம் சென்றால்தான் அவர்கள் இக்கரைக்கு வரவியலும், வீரரே” என்றான்.

கீர்மீரர் அருகே வந்ததுமே சிசுபாலன் எழுந்து படகை நோக்கி சென்றான். குகர்கள் படகுகளின் மேல் பலகைகளை வைத்து அவன் ஏறும்பொருட்டு விலகினர். அவன் படகில் ஏறி நின்றதும் கீர்மீரர் ஏறினார். தொடர்ந்து பிற படகுகளில் புரவிகளை ஏற்றினர். பலகைகள் அருகே கொண்டுவரப்பட்டதும் சிசுபாலனின் வெண்புரவி அதை குனிந்து முகர்ந்து மெல்ல தும்மியது. கண்களை உருட்டி ஏவலனை நோக்கியபின் நின்ற இடத்திலிருந்தே காலெடுத்துவைத்து நடப்பதாக காட்டியது. அவன் அதன் கழுத்தில் வருடி முதுகைத்தட்டி மெல்லியகுரலில் ஆணையிட தயங்கியபடி காலெடுத்து வைத்தது. பலகை அசைய அஞ்சி காலை திரும்ப எடுத்தது.

ஏவலன் அதை மெல்லிய குரலில் ஊக்கினான். நினைத்திராத கணத்தில் அது பேருடலுக்கு ஒவ்வாத எளிய அசைவுடன் பாய்ந்து படகிலேறி ஊசலாடிய படகின்மேல் ஊன்றிய கால்களை அசைக்காமல் உடலை மட்டும் திருப்பி நிலைகொண்டது. அதன்பின் பிற புரவிகள் அதேபோல பாய்ந்து படகிலேறிக்கொண்டன. அவை ஏறியதும் நான்குவிரற்கடை அளவுக்கே படகின் விளிம்பு நீரில் எழுந்திருந்தது. அகன்றுசென்றபோது புரவிகள் அன்னங்கள் என நீர்ப்பரப்பில் அலைத்தடம் கிழித்து முன்சென்றன.

சிசுபாலன் அலைகளில் ஏறியமைந்து சென்ற படகில் கைகட்டி நின்று ஆற்றின் மறுகரையில் நீருக்குள் இறங்கி நின்ற ஆலமரத்து வேர்களில் வண்ணங்களெனச் செறிந்திருந்த பெண்களை அரைக்கணம் நோக்கிவிட்டு விழிதிருப்பி நீரலைகளை பார்த்தான். அவன் காற்றில் பறக்கும் கொடி கட்டப்பட்ட மூங்கில்கழி போலிருப்பதாக படகோட்டி நினைத்தான். அலைகளை நோக்கியமையால் அவன் முகத்திலும் அலைகளே தெரிந்தன. அவன் சால்வை எழுந்து படபடத்துக்கொண்டிருந்தது.

படகு மறுகரையை அடைந்தபோது கீர்மீரர் அவனை அணுகி மிக மெல்ல “அரசே” என்றார். ஓங்கி அறைபட்டவன் போல் அவன் உடல் துள்ள “ஆம்!” என்றான். “படித்துறை” என்றார் கீர்மீரர். “ஆம், ஆம்” என்று அவன் சொன்னான். படகு ஆலமரத்து வேர்பின்னி உருவான படகுத்துறையைச் சென்றடைந்து மெல்ல முட்டியது. குகன் கரைக்குப் பாய்ந்து வடத்தைப்பற்றி வேர்வளைவுக்குள் விட்டு இழுத்து அதை சேர்த்துக் கட்டினான்.

முன்னால் சென்ற படகுகள் வேர்ப்புடைப்புகளை அடைந்து தொட்டுத்தொட்டு அசைந்தன. நீட்டி நிலம் தொடவைத்த பலகைகளின் மீது சிசுபாலனின் புரவி கால்களை எடுத்து வைத்து உடல் சிலிர்க்க, பிடரி உலைய, மெல்ல நடந்து மறுபுறம் சென்று கரையில் பாய்ந்து, உறுதியான நிலத்தை உணர்ந்ததுமே கனைத்தபடி துள்ளிச் சுழன்று வால் குலைத்தது. ‘நிலம்!’ என்று முதற்புரவி சொன்னதைக் கேட்டு பிற புரவிகள் கனைத்தபடி தாவி மறுபக்கம் சென்றடைந்தன.

வேர்கள் மேல் கால் வைத்து விழுதொன்றைப் பற்றி மேலேறி நின்ற சிசுபாலன் அப்போதுதான் என அங்கிருந்த பெண்களை பார்த்தான். யார் இவர்கள் என்பதுபோல் அவன் காவலர் தலைவரை நோக்கி விழிதிருப்ப அவர் மென்குரலில் “கோபாகத்தை ஆளும் அந்தகக்குலத்து யாதவர்தலைவர் பஃப்ருவின் துணைவி என்றார். “யார்?” என்று அவன் மீண்டும் கேட்டான்.

கண்களில் ஒரு மெல்லிய நிழல் கடந்து செல்ல கீர்மீரர் தலைவணங்கி “துவாரகையின் இளைய யாதவருக்கு உடன் பிறந்தவர் முறை கொண்டவர் கோபாகத்தின் அரசர் பஃப்ரு. இளைய யாதவருக்கு முறைப்பெண்ணென பிறந்தவர், பகபிந்துவின் யாதவர் குலத்தலைவரான சுமூர்த்தரின் மகள் இவர்” என்றார். உடனே கடிவாளத்தை இழுத்து “பஃப்ருவை இவர் மணந்து ஒன்பது மாதங்களாகின்றன” என்றார்.

விழிகளுக்குள் சினம் தோன்றி மறைய “உம்” என்று சொல்லி சிசுபாலன் அடுத்த வேர்புடைப்பில் ஏறி மறுபக்கம் சென்றான். கீர்மீரர் “தாங்கள் ஒரு முறை வணக்கத்தை அளித்துவிட்டுச் செல்வது நன்று” என்றார். மெல்லிய சலிப்புடன் இடையில் கைவைத்து “ஆம்” என்று சொல்லி திரும்பினான் சிசுபாலன்.

கீர்மீரர் கைகாட்ட அப்பால் காத்து நின்றிருந்த சேடியர் தலைவி திரும்பி தன் குழுவினருக்கு மெல்லிய குரலில் ஆணையிட்டாள். நிரைவகுத்து திரையென நின்ற பெண்களுக்குப் பின்னால் நின்றிருந்த விசிரை தன் கூந்தலுக்கு மேல் மேலாடையை இழுத்துவிட்டபடி அவன் அருகே வந்து வணங்கி “சேதிநாட்டு அரசரை வணங்குகிறேன்” என்றாள். அவள் குரலை அவன் எங்கோ என கேட்டான். தன் புரவியின் செருக்கடிப்பொலியையே அவன் சித்தம் எடுத்துக்கொண்டது.

அவன் ஆர்வமற்ற விழிகள் அவள் முகத்தை தொட்டு விலக அவள் புன்னகையுடன் “தங்கள் அன்னை எனக்கு முறைப்படி சிற்றன்னை. சிறுமியாயிருக்கையில் குலவிழவொன்றில் அவர்களை கண்டிருக்கிறேன். அவர்களுக்கு என் வணக்கத்தை தெரிவியுங்கள்” என்றாள். சிசுபாலன் “ஆம், வணங்குகிறேன். யாதவர் பஃப்ருவிடம் என் வணக்கத்தை தெரிவியுங்கள்” என்றான். நிலைகொள்ளா விழிகளுடன் தோழியரை நோக்கிவிட்டு கீர்மீரரிடம் “புரவிக்கு நீர் காட்டவில்லையா?” என்றான்.

அவளை அறியாமலேயே மெல்லிய அசைவொன்று அவள் உடலில் கூடியது. முகவாயை அவள் தூக்கியபோது நீள்கூந்தலை மறைத்திருந்த மென்பட்டு ஆடை பின்னால் நழுவியது. வெண்ணிற கன்னங்களும் செம்முத்தாரம் அணிந்த கழுத்தும் தெரிந்தன. கண்கள் சற்று சுருங்க, சிறிய உதடுகளை வளைத்து “சேதி நாட்டரசரைப்பற்றி ஏராளமாக கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போதுதான் பார்க்க வாய்த்தது” என்றாள். விழிகளிலும் உதடுகளிலும் மென்னகை பரவ “எப்போதெல்லாம் இளைய யாதவரைப்பற்றி எண்ணுகிறேனோ அப்போதெல்லாம் தங்களின் எண்ணமும் இணைந்தே வருகிறது” என்றாள்.

சினம்கொண்டு அவன் திரும்பி அவள் விழிகளை பார்த்தான். அச்சமின்றி அவ்விழிகள் அவனை சந்தித்தன. “ஏன்?” என்று அவன் கேட்டான். தலை சரித்து மெல்ல சிரித்து “தெரியவில்லை. சூதர்கள் உங்கள் இருவரையும் சேர்த்தே பாடி அவ்வாறு நிலைநிறுத்துகிறார்கள் போலும்” என்றாள். அதை சொன்னபடியே மிக இயல்பாக தலைசரித்து கன்னத்திலாடிய குழல்கற்றையை அள்ளி காதுக்குப்பின் செருகினாள்.

“நாங்கள் அரண்மனைப்பெண்கள். பாடல்கள் வழியாகவே உலகை அறிகிறோம்.” அவன் உடல் பதற, குரலிழந்து நின்றபின் புரவியை கொண்டுவரும்படி கையசைத்தான். ஓரடி எடுத்து வைத்தபின் அவளிடம் முறைப்படி விடைபெறவில்லையோ என்று எண்ணி மீண்டும் தலையசைத்துவிட்டுச் சென்று தன் புரவியை அணுகி அதன் முதுகை ஒருமுறை தட்டிவிட்டு கால் சுழற்றி ஏறி வீரர்களுக்கு கைகாட்டிவிட்டு குறுங்காட்டுக்குள் பாய்ந்தான்.

புரவியின் குளம்படிகள் கூச்சலிடும் பறவைகள்போல தன்னைச்சூழ சென்று கொண்டிருக்கையில் பின்னால் இருந்து சுருண்டெழுந்து வந்து அறைந்து தூக்கிச் சுருட்டிச்சென்ற அலை போல ஓர் உணர்வால் ஆட்கொள்ளப்பட்டான். திமிறி மீண்டு கடிவாளத்தை இழுத்து புரவியை கனைத்துச் சுழன்று திரும்பச்செய்தான். “கீர்மீரரே” என்று காவலர் தலைவனை அழைத்துக்கொண்டே குளம்படிப்பெருக்கின் மேல் மிதந்தவன்போல விரைந்தான்.

சேடியர் படகில் ஏறியிருந்தனர். இரண்டாவது படகில் பலகை வழியாக விசிரை ஏறிக் கொண்டிருந்தாள். குளம்படிகளைக் கேட்டு திகைத்து திரும்பி நோக்குகையில் பறக்கும் தலைமயிரும் மின்னும் விழிகளும் திறந்த வாயில் வெண்பற்களுமாக அவன் வந்துகொண்டிருப்பதை கண்டாள். புடைத்த வேர்களின் மேல் தாவி வந்து அணுகிய புரவியிலிருந்தபடியே சரிந்து கைநீட்டி அவள் இடைவளைத்துப் பற்றி சுழற்றித் தூக்கி தன் புரவிமேல் ஏற்றிக் கொண்டான். அனைத்துப் பெண்களும் அலறியபடி ஓடி ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டனர்.

“அரசே… அரசே, வேண்டாம்!” என்று கீர்மீரர் கூவினார். அவளை தன் முன் அமரவைத்து அவள் கழுத்தில் அணிந்திருந்த யாதவ குலத்துக் கருகுமணிமாலையை அறுத்து சுழற்றி வீசினான். புரவியைத் திருப்பிப் பாய்ந்து தன்னைத் தொடர்ந்து வந்த காவலர்கள் விலகி வழிவிட்ட இடைவெளியினூடாக பாய்ந்து சென்றான்.

முந்தைய கட்டுரைஆதல்
அடுத்த கட்டுரைஅனிதா இளம் மனைவி -கடிதங்கள்