விஷ்ணுபுரமும் மனுஷ்யபுத்திரனும்

ஜெ

எதிர்காலத்தில் தனக்கு வழங்கப்படவிருக்கும் விஷ்ணுபுரம் விருதை இப்போதே திருப்பியனுப்புபதாக மனுஷ்யபுத்திரன் சொல்லியிருக்கிறாரே? உங்கள் எதிர்வினை என்ன?

ஜெயராமன்

images

அன்புள்ள ஜெயராமன்,

உண்மையிலேயே மனுஷ்யபுத்திரனுக்கும் சாரு நிவேதிதாவுக்குமெல்லாம் விஷ்ணுபுரம் விருது வழங்கவிருக்கிறோம். சீனியாரிட்டிதான் பிரச்சினை. சாரு நிவேதிதா மறுக்கமாட்டார் என நினைக்கிறேன், அவருக்கு வேறு எவரும் விருது வழங்க வாய்ப்பே இல்லை. மனுஷ்யபுத்திரன் மீது எங்களுக்கு பெருமதிப்புண்டு, பல்லாயிரம்தான் இருந்தாலும் அவர் நல்ல கவிஞர் அவருக்கு அவர் ஆற்றும் சொற்பொழிவுகளுக்காக திமுக விருதுகள் வந்துகொண்டே இருக்கின்றன.

ஆகவே அவர் எதிர்காலத்தில் நாங்கள் வழங்கவிருக்கும் விருதை இப்போதே திருப்பித்தருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ரூ ஒருலட்சத்திற்கான காசோலையுடன் அவரது கடிதத்தை எதிர்பார்க்கிறேன். விஷ்ணுபுரம் விருதை கஷ்டப்பட்டு நிதி திரட்டி ஒருங்கிணைக்க மூச்சுத்தள்ளிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மிகுந்த உதவியாக இருக்கும் அந்தத் தொகை.

மனுஷ்யபுத்திரன் சாகித்ய அக்காதமி விருதுபெற்ற திமுக எழுத்தாளர்களான அப்துல் ரகுமான், மு.மேத்தா, வைரமுத்து,ஈரோடு தமிழன்பன் போன்றவர்கள் விருதை திருப்பியளிக்கும்படி கலைஞர் வற்புறுத்தவேண்டும் என்று கோரியிருப்பதை அறிந்தேன். மேலும் கலைஞர் தான் அவ்விருதைப் பெறுவதற்கு இனிமேலும் முயலக்கூடாதென்று கண்ணீர் மல்க கோரியிருப்பதும் தெரியவந்தது.

ஒரு அடையாளமாக மனுஷ்யபுத்திரன் சம்ஸ்கிருதி சம்மான் விருதை திருப்பியனுப்பலாமென்று நினைக்கிறேன். அது ஜெயின் சமூகத்தாரால் வழங்கப்படும் விருது. மாட்டிறைச்சித்தடை கோரி வற்புறுத்தும் எதிராக மிகக்கடுமையான நிலைப்பாடு கொண்டவர்கள் அவர்கள்.மேலும் சம்ஸ்கிருதி சம்மான் நிறுவனம் இதுவரை இவ்விஷயத்தில் ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை.

ஜெ

மனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்கள்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் முன்னுரை பற்றி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 30