யானைவந்தால் என்ன செய்யும்?

4776301961_5ffda956b5_m

இடுக்கண் வருங்கால் நகுக என்று வள்ளுவர் மிகுந்த ஆசைப்பட்டுத்தான் எழுதியிருப்பார் என நினைக்கிறேன், முயற்சிசெய்துகூட பார்த்திருப்பார். பெரியமனிதர். ஆனால் இடுக்கண் வந்து கொஞ்சநாள் கழித்து நகைப்பது சாத்தியம்தான் என்று எனக்கும் தோன்றுகிறது. சொல்லப்போனால் பழைய இடுக்கண்களைப்போல சிரிப்பு வரவழைப்பது ஏதுமில்லை. முதல்விஷயம் நாம் அவற்றைக் கடந்து வந்திருக்கிறோம். உயிரோடு நலமாக இருக்கிறோம். ஊழையும் உப்பக்கம் கண்டுவிட்டால் அதன்பிறகு ஊழாவது கூழாவது.

கேரளத்தில் யானை அதிகம். மிகப்பெரிய துன்பத்தை யானைக்கு உவமிப்பதை அங்கே நாட்டார் சொலவடையாகப் பார்க்கலாம். மலையாளிகளுக்குப் பிரியமான சொல்லாட்சி “யானை வந்தா கொல்லும், மயிரையா பிடுங்கும்?”. சின்ன வயதில் நான் இதை கற்பனை செய்து பார்த்திருக்கிறேன். யானையின் துதிக்கை அவ்வளவு பெரியது, கண்டிப்பாக மயிரை பிடுங்க முடியாது. ஆனால் அது முயற்சித்துப்பார்க்கக் கூடும் என்ற பயமும் எழாமலில்லை

செல்வம் எழுதிய புலம்பெயர் நினைவுகளில் ஒருவரி. ‘சாப்பாட்டுக்கு மிகவும் கஷ்டப்பட்ட காலம், அந்நினைவுகள் இன்றும் இனிமையாக இருக்கின்றன’ இதுதான் அவரது நினைவுக்குறிப்புகளின் சாரம். யாழ்ப்பாணப் பனையுலகை விட்டு ஐரோப்பிய பனியுலகுக்கு புலம்பெயர்ந்து, கால்ப்பந்து வாழ்க்கை வாழ்ந்து, ஒருமாதிரி அமைந்தபின் அந்நாட்களை திரும்ப நோக்கி எழுந்தப்பட்ட இக்குறிப்புகளில் தொடர்ந்து இருந்துகொண்டிருப்பது சிரிப்புதான்

பாரீஸின் அறைவாழ்க்கையை என்னால் ஊகிக்க முடிகிறது. கிட்டத்தட்ட மும்பை அறைவாழ்க்கைதான். மொழிப்பிரச்சினை மட்டுமே உபரி. சேர்ந்து சமைத்து செலவைப் பங்கிட்டுக்கொள்கிறார்கள். இதற்கான பெயர் சமறி [summery என நினைக்கிறேன்] அதில் தின்பவனின் வயிற்றை அளவாகக் கொண்டு செலவைப் பிரிப்பதை ஒரு கதாபாத்திரம் தொழில்நுட்பத்துடன் பேசுகிறது.தின்றுவிட்டு கூட்டமாக நெருக்கியடித்துக்கொண்டு படுப்பது.அவ்வளவுதான் வாழ்க்கை.

இந்தவாழ்க்கை அதை வாழும்போது பலவகையான இடர்களை அளிப்பது. ஒவ்வொருவரும் ஓர் அந்தரங்க உலகை, தனிமையை கற்பனை செய்துகொண்டே வாழ்வார்கள். ஆனால் பின்னர் நினைக்கும்போது அந்தரங்கமில்லாத அந்த கும்பல்வாழ்க்கையில் இருந்த கொண்டாட்டம் நினைவுக்கு வரும். உண்மையில் எத்தனை சிக்கல்கள் இருந்தாலும் மனிதர்கள் சகமனிதர்களுடன் சேர்ந்து வாழ்ந்தால் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அந்தரங்கத்தை அழிக்கவே உள்ளூர விழைகிறார்கள். அந்தக் கொண்டாட்டம் சாமானியவாழ்க்கையில் தனிமையில் அடையும் எதிலும் இல்லை.

அதற்குத் தடையாக இருப்பது அகங்காரம். அதைப் பேணிக்கொள்ள அறைவாழ்க்கையில் ஒவ்வொருவரும் முயல்வதைக் காணலாம். தான் ரொம்பப் படித்தவன் என்று ஒருவர் சொல்கிறார். பாரீஸில் கூட அவர் ’கோர்ஸ்’ எடுக்கிறார். கொஞ்சம் கம்மியாகப் படித்த ஒருவர் போதிய துணிவை அடைந்து “என்ன கோர்ஸ்” என்று கேட்கிறார். “ இதென்ன கேள்வி கோர்ஸ் என்றால் கோர்ஸேதான். பாமரத்தனமாகக் கேட்கக்கூடாது” என்கிறார் அவர்.

மெல்ல அந்த எல்லைகள் அழிகின்றன. பரஸ்பரக் கேலி அதற்கான வழி. அக்கேலியை திறம்படச் செய்வதற்குரிய அடித்தளமாக அமைவது மது. இதை நான் கூர்ந்து கவனித்திருக்கிறேன். மும்பை அறைகளில் சனிக்கிழமை மாலையில் மனிதர்கள் உருகி ஒன்றாகி ஒரே உடல்திரவமாக ஆவதற்கு மது பெரிதும் உதவுகிறது. மதுவுடன் சமையல். இது ஆண்களால் செய்யப்பட்டு பெரும்பாலும் கடந்தகால ஏக்கம் என்னும் சுவையால் இனிதாக்கப்பட்டதாக இருக்கும்.

அபூர்வமாக நல்ல சமையல்காரர்கள் அமைகிறார்கள். அவர்கள் கொண்டாடப்படுகிறார்கள். அதோடு பாடகர்களுக்கும் தனி மவுசு உண்டு. மற்றபடி ஞாயிற்றுக் கிழமைச் சமையல் என்பது செல்வம் சொல்வதுபோல இடியாப்பத்தை முயற்சித்து முறுக்கு தின்று மகிழ்வதுதான். இதிலே ஒருவர் ரிச்கேக் செய்கிறார். அதையும் சுவைத்துத்தான் உண்கிறார்கள். ஒருவர் அதற்குத் தொட்டுக்கொள்ள ஊறுகாய் கேட்பதைத் தவிர்த்தால் அசம்பாவிதங்கள் ஏதுமில்லை.

ஊரில் சரியான ‘கடி’யாக எண்ணப்பட்டு பார்வையில் பட்டதுமே மக்கள் தப்பி ஓடுகிற தெருக்கூத்துக் கலைஞர்கள் எல்லாம் இங்கே தேவதூதர்களாகி விடுகிறார்க்ள். மண்ணின் மணம் போல இனிய மணம் ஏதுமில்லை அல்லவா. ஆனாலும் கூட ஓர் எல்லை இருக்கிறது. அரிச்சந்திர மயான காண்டத்தை போதையில் பாடுபவர் ‘மகனே லோகிதாசா, அம்மாவென்று ஒரு வார்த்தை சொல்லடா’ என்று நூறுதடவைக்குமேல் ஆலாபனையும் நிரவலும் எடுக்க செத்து மடியில் கிடக்கும் லோகிதாசன் தாளமுடியாமல் எழுந்து ‘அம்மா’ என ஆதுரத்துடன் அழைத்து கூத்தை நிறைவுசெய்கிறான்.

செல்வத்தின் இந்தச் சித்தரிப்பில் நுணுக்கமான நகைச்சுவைக்குப் பின்னால் கசப்பு ஓடிக்கொண்டே இருக்கிறது. பாரீஸ் தெருவில் சந்தித்த நபர் இலங்கையர் போலிருக்க அவரிடம் ‘தமிழ் தெரியுமா?’ என்று கேட்கிறார்கள். “அதுவும் தெரியாமல் இருந்தால் நான் என்ன செய்யமுடியும்?’ என்கிறார் கடுப்பாகி. பேச்சுகளில் வந்துகொண்டே இருக்கும் இந்த சுயகரிப்புதான் வள்ளுவர் சொன்ன நகுதலோ என்று பட்டது

பொதுவாக அரசியல் ஞானம் இருக்கிறது. ”அல்ஜீரியாவிலே தேவைக்கேற்ப பகிர்வும் சக்திக்கேற்ற உழைப்பும் இருக்கு அண்ணை” என்பது போன்ற அறிதல்கள் விளம்பப்படுகின்றன. “தம்பி, ஏதாவது சோஷலிச நாட்டில் இருந்தீர்களா?’ என்ற வினாவுக்கு “ஆமாம் அண்ணை, பிராகில் இருபது நாள் நின்றேன். விமானத்தை விட்டுவிட்டு ஏர்போர்ட்டுக்குள். வெளியே போகமுடியவில்லை” என்கிறான் இடதுசாரிப் ‘பெடியன்’. டிரான்ஸிட் ஏர்ப்போர்ட்டை இடதுசாரி மண் என்று சொல்லமுடியுமா என்ற உள்ளார்ந்த ஐயத்துடன் கேள்வி கேட்டவர் அமைதியாகியார்

இன்று இத்தனை காலத்திற்குப்பின்னர் இலங்கையை உலுக்கிய இனப்போரே வேடிக்கையாக மாறிவிட்டிருக்கிறது. காரணமில்லாமலும் காரணம் உருவாக்கப்பட்டும் தினம் நான்குபேர் யாழ்ப்பாணத்தில் கொல்லப்படுகையில் தத்துவார்த்தமாக சிந்தனை ஓடுகிறது -குரங்கில் இருந்து வந்தவன் மனிதனா? இல்லை குரங்கில் இருந்து வெளியேற்றப்பட்டவனா?

உலகை யாழ்ப்பாணவியல் நோக்கில் புரிந்துகொள்கிறார்கள்.அடையான் என்ற பெயர் அல்ஜீரியர்களுக்கு ஏன் அளிக்கப்பட்டது என்பதை எதிர்கால ஆய்வாளர்கள்தான் கண்டுபிடிக்கவேண்டும். யாழ்பாணம் புலம்பெயர் மண்ணிலும் வாழ்கிறது. கண்டகண்ட சாதிகெட்டவனும் வந்து பாரீஸின் தூய்மையைக் கெடுத்துவிட்டான் என்று மேல்சாதிக்காரர்கள் மனம்குமைகிறார்கள். வேறுவழியே இல்லை, அங்கிருந்து அகதியாக ஜெர்மனியோ கனடாவோ சென்றுவிட வேண்டியதுதான்.

அங்குள்ள போலீஸ்காரர்களுக்கு இவர்கள் பெரும் புதிர். ‘இவர்களை புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஜெர்மனியில் இருந்து பாரீஸுக்கு உயிரைப்பணயம் வைத்து போகிறார்கள். அதே அளவுக்கு ஆட்கள் பாரீஸில் இருந்து ஜெர்மனிக்கு உயிரைப்பணயம் வைத்து வருகிறார்கள். இருநாட்டிலிருந்தும் சுவிட்சர்லாந்துக்கு தப்பி ஓடுபவர்கள் அளவுக்கே அங்கிருந்து தப்பி இங்கு வந்துசேர்கிறார்கள்’ என மண்டைகாயும் போலீஸ்காரர் ‘இனி ஐரோப்பாவில் உலகப்போர் மூளுமென்றால் இவர்களால்தான்’ என முடிவெடுக்கிறார்

மொழி புரியாமலிருக்கையில் ஒருவகையான கனிந்த எளிமை கைகூடிவிடுகிறது. எதற்கும் புன்னகைதான், வெரிகுட் என்ற சொல்லாட்சிதான். வேலைகேட்டுச் சென்ற இடத்தில் முதலாளி வெளியேபோடா என்று கைநீட்ட காசுகொடுக்கப் போகிறார் என்று மலர்ந்து சிரிக்கிறார்கள். அவர் அந்தக்கையைப் பிடித்து இழுத்து வெளியே கொண்டு விட்டுவிட்டு தலைமுறை வசைகளைச் சொல்லும்போதும் முகம் மலர்ந்த ‘வெரிகுட்’ தான்

ரயிலில் டிக்கெட் எடுக்காமல் இருக்கைக்கு அடியில் படுத்து பாரீஸில் இருந்து ரோமுக்குப் பயணம் செல்வது உள்ளூர் பயணத்தை விட மலிவு. ஆனால் அதற்காக யாழ்ப்பாண வழக்கத்தை விடவா முடியும்? லுங்கி இல்லாமல் துயில்வது பண்பாடல்ல. தலைவழியாக லுங்கியை விட்டு கால்வழியாக ஜீன்ஸை கழற்றும்போது நடுவே சிக்கிக்கொண்ட ஜட்டி சகபயணியாகிய பெண்ணை அச்சுறுத்த பாலியல்பலாத்காரக் குற்றச்சாட்டுக்கு கைதாகிறார் ஒருவர்

ஆனால் செல்லும் வழியின் பசுமை அவரை பூரிக்க வைக்கிறது. நம்மூர் பசு இந்தப்புல்லைப் பார்த்தால் நெஞ்சடைத்தே சாகும் என எண்ணம் ஓடுகிறது. எங்கும் மானுடமொழியான புன்னகை. கடைசியில் அந்தப்பெண்ணே புகாரை திரும்பப்பெற்றுக்கொண்டு மன்னிப்பு கோருகிறார். காவலர்கள் மன்னிப்பு கோருகிறார்கள். திரும்பி பாரிஸுக்கே போ ராசா என கெஞ்சுகிறார்கள். ‘இல்லை, இவ்வளவுதூரம் வந்துவிட்டு ரோம் பார்க்காமல் போனால் கௌரவம் குறைபடுமே’ என்கிறார் ஊடுருவல்காரர். ஆனால் காவலரின் கண்ணீரைக் கண்டு இரக்கம் காட்டி பாரீஸுக்கே மீள்கிறார்

‘ஒரு நெஞ்சூக்கம் இருந்தால் யாரும் இங்கிலீஷ் பேசலாம். வெள்ளைக்காரனே பேசும்போது நமக்கு என்ன?’ என்று அடூர்பாசி நடித்த ஒரு நம்பூதிரிக் கதாபாத்திரம் சொல்லும். புலம்பெயர் கையறு நிலையில் நெஞ்சூக்கம் மட்டுமே துணை. ரஷ்யாவின் தெருவில் கால்வாசி ஆடை அணிந்த இவர்களைக் கண்டு அஞ்சிக் கதறும் பெண்ணை நோக்கி “ஜவகர்லால் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி’ என்கிறார் ஒருவர். ‘ஏன் அதைச் சொல்கிறாய்?’ என்றால் ‘ரஷ்யர்களுக்கு இவர்களை எல்லாம் நிரம்பப் பிடிக்கும் என்று தினந்தந்தியில் வாசித்தேன்’ என்கிறார். ‘அப்படியென்றால் வி. பொன்னம்பலம் பெயரையும் சொல். அவரும்தானே ரஷ்யா வந்தார்?’ என்று தேசப்பற்றுடன் இன்னொருவர் சொல்கிறார்

நிகராகுவாவின் தோழர்கள் சமத்துவ சுந்தர பொன்னுலகை அமைப்பதில் உறுதியுடன் இருக்கிறார்கள் என பாரீஸ் சிறையில் அவர்களுடன் தங்கிய இடதுசாரிப்பெடியன் சொல்கிறான். ‘அதையும் சைகையிலா சொன்னார்கள்?’ என்று இன்னொருவர் ஐயப்படுகிறார். நாளைய கம்யூனிஸ அகிலத்தின் மொழியாக சைகை அமையலாம் என்று தோன்றுகிறது.

மொழிப்பிரச்சினை பண்பாட்டுச்சிக்கலாக மாறும் இடங்கள் பல. ரெட்லைட் ஏரியா எங்கே என்று கேட்டால் டிராஃபிக் சிக்னலை சுட்டிக்காட்டும் பிரெஞ்சுக்காரனுடன் எப்படித்தான் பண்பாட்டுத்தொடர்பு கொள்வது. கடைசியில் தமிழனிடமே கேட்டு அவனால் வசைபாடப்படுகிறார்கள். அவனிடம் கேட்டிருக்கக் கூடாது என்று சொல்லும்போது ‘பின்ன இதையெல்லாம் சிங்களவனிடமா கேட்பது?’ என்று சீறுகிறார் கேட்டவர்

தெருவேசிகளை நோக்கியபின் “என்ன இருந்தாலும் நம்ம ஊர் பண்பாடு போல வருமா? இப்டியா தெருவில் நிற்பது?’ என்று பெரியவர் மகிழ்கிறார். ‘அங்கே நல்லூர் தெருக்களில் இப்படி நிற்கிறார்களே?” என இளையவர் ஐயம் கேட்க “நின்னாலும் இப்டியா கூப்பிடுகிறார்கள்?’ என்று சீறுகிறார் பெரியவர். “கூப்பிடுகிறார்கள்” என்று சிறியவர் சொல்ல “கூப்பிட்டாலும் இப்படி ஆபாசமாக பிரெஞ்சிலா கூப்பிடுகிறார்கள்?”. தமிழ் என்ன ஒரு அழகிய மொழி என அடுத்து சொல்லப்போகிறார் என்று எதிர்பார்த்தேன்.

புலம்பெயர்தலின் சித்திரங்களை எளிதாகக் கீறிச்செல்லும் இந்த நூலின் அழகே ‘நாய்மூஞ்சி சப்பாத்து’ என்பது போன்ற அழகிய சொல்லாட்சிகள். ‘பேய்த்தனமான எம்ஜியார் பக்தர்’ என்று வாசித்து ஒருகணம் திகைத்தேன். காலில்லாமல் பறந்துபோய் டிக்கெட் எடுக்க நிற்பாரா என. அவர் பைலட் பிரேம்நாத் படத்தில் மனைவி கண்ணாடிச்சுவருக்கு அப்பால் பற்றி எரிகையில் சிவாஜியின் நடிப்பு தரமாக இல்லை என்கிறார். எம்ஜியார் என்றால் கண்ணாடி தூள் தூளாகி இருக்கும். அது அடுத்தவன் மனைவி என்றாலும். அதல்லவா யதார்த்தமான நடிப்பு?

புலம்பெயர்ந்த வாழ்க்கையின் பெருந்துணை பகற்கனவுகள். தனி ஈழக்கனவில் தொடங்கி, ஐந்தே நிமிடங்களில் சலித்து, யாழ்ப்பாணத் தெருக்களை ஒவ்வொன்றாக எண்ணிப்பார்த்து, அவ்வழியாக கமலாடீச்சரில் சென்றடைந்து, மேற்கொண்டு மனசாட்சி உறுத்த நடிகை நதியாவுக்குச் சென்று சேரும் அந்த ‘டிராக்’ மிகத்தேய்ந்த ஒன்றாகவே இருக்கவேண்டும்

மூன்றாம் மாடிக்கும் மேல் கூரைக்கூம்புக்குள் கட்டப்பட்ட சமத்காரமான சிறிய அறையில் மறுநாள் நிகழப்போகும் அதிகாரியின் பேட்டியை எண்ணியபடி இரவெல்லாம் தூங்காமல் காத்திருக்கிறார். ஊர்நினைவுகள், உறவின் நினைவுகள். ஆனால் அனைத்தையும் மறுநாள் துறக்கவேண்டும். அகதி என்ற ஒற்றைச் சொல் அல்லாமல் பெயர்கூட சொந்தமில்லை. அந்த எண்ணத்தில் திக் என்று வந்து நிற்கும் அந்த அனுபவக்கதையில் கூரையில் வான் நோக்கி இருக்கும் சன்னல் முதன்மையாகக் குறிப்பிடப்படுகிறது. சரளமான மென்மையான சித்தரிப்பு துயரத்தின் கனத்தால் கவிதையாக ஆகும் இடம் இது.

[காலம் ஆசிரியர் செல்வம் எழுதிய அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு எழுதித்தீராத பக்கங்கள் நூலுக்கு எழுதிய வாழ்த்துரை]  முதற்பிரசுரம் May 25, 2015 

 

 

செல்வம் பேட்டி

முந்தைய கட்டுரைபேலியோ -நியாண்டர்செல்வன்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–66