இந்தியா குறித்த ஏளனம்…

10-new-delhi

 

அன்புள்ள ஜெமோ,

இங்கு எனது வெள்ளைகார நண்பர்கள் அடிகடி கூறும் இந்தியா பற்றிய கருத்து இது தான்.  இங்கு வேலை செய்யும் பல இந்தியர்கள் இந்தியர் அல்லாதவர்களிடம் அதிகம் பழகுவது இல்லை.  பெரும்பாலனவர்க்கு நான் சொல்வது புரியுமா தெரியவில்லை.  நான் அமெரிக்க’வில் ஒரு காட்டில் படித்தவன், அங்கு இந்தியர்கள் அதிகம் இல்லாத்தினால், இவர்களுடன் பழகும் பழக்கம் பட்டவன்.

இது உண்மை தானா இல்லை ஏன் இப்படி என்று எங்களுக்கு சொல்ல முடியுமா ?

1) இந்தியா ஏழை நாடு.

2) இந்தியா சுகாதாரம் அற்ற நாடு. இந்தியர்கள் சுத்தமற்றவர்கள்.

3) இந்தியர்கள் நாற்றம் பிடித்தவர்கள், குளிப்பதில்லை. இதை அவர்கள் ஒரு வெறுப்பாக சொல்ல வில்லை. உண்மையிலேயே சொல்கிறார்கள்.  எனக்கு சீன ( நான் சைவம் ) உணவகத்துக்கு போனால் என் முகம் எப்படி மாறுமோ அப்படி இவர்கள் இந்தியர்களின் உணவு ( முக்கியமாக மசாலா ) வாசத்தை கண்டு முகம் சுழிகின்றனர். இந்தியா உணவை உண்டாலும், இவர்கள் அலுவலகத்தில்  body spray அடித்து, mint எடுத்து கொள்கிறார்கள். சில இந்தியர்கள் பக்கத்தில் வந்து பேசும் பொழுது Mint தருவார்கள்.  நீ நாற்றம் அடிக்கிறாய் என்பதை மறைமுகமாக சொல்லும் உத்தி அது ( என் கற்பனை அல்ல இந்த உத்தியை பற்றி ஒருவரின் மூலமாக கேட்டது ) . நம் இந்திய மக்களும் வெள்ளந்தியாக சிரித்து கொண்டு வாங்கி கொள்வார்கள்.

சீன , ஜப்பானிய மக்களுடன் எளிமையாக பழகுகிறார்கள். அவர்களுக்கு ஆங்கிலம் சரியாக தெரியா விட்டாலும்.  இந்தியர்கள் என்றால் ஏளனம் தான். இந்தியர்கள் நிறைய மெனக்கிட வேண்டி உள்ளது. ஒரு Dance floor சென்றால் அங்கு பல இந்தியர்கள் வெட்டியாக யாரும் இல்லாமல் ஒரு கண்காட்சி பொருளாகவே உள்ளனர். என்னை சொல்ல வில்லை, நான் என்னை மாற்றி கொண்டேன். எனக்கு இந்த பிரச்சனை இல்லாவிடிலும், சக இந்தியர்களை ஏளனமாக பார்க்கும் போது கோவம் வருகிறது. இந்தியாவை பற்றி இப்படி சொல்லும் பொழுது , என்ன சொல்வது என்று தெரிவதில்லை.  உங்கள் பார்வை தளம் அதிகம் என்பதினால், உங்களுக்கு தெரிந்ததை சொல்ல முடியுமா ?

நன்றி,

பிரகாஷ்

அன்புள்ள பிரகாஷ்,

நான் ஓரளவே வெளிநாட்டுப் பயணங்களைச் செய்திருக்கிறேன். ஓரளவே வெளிநாட்டினருடன் பழகியிருக்கிறேன். இந்த எல்லைக்குள் நின்று என் கவனிப்புகளைச் சொல்ல முயல்கிறேன்.

பொதுவாக இன்னொரு நாட்டைப்பற்றி எந்த நாட்டிலும் இருக்கும் பாதிப்பங்கு மனப்பதிவு தவறானதாகவே இருக்கும். நமகு அமெரிக்கா பற்றி என்ன மனப்பதிவு இருக்கிறது? செல்வந்த நாடு. கருத்துச் சுதந்திரம் கொண்ட நாடு. கட்டற்ற பாலியல் வழக்கங்களின் நாடு. ஆனால் அமெரிக்காவை நாம் அறியும்போது இந்த நம்பிக்கைகள் பொய்யானவை என்று அறிகிறோம்.

அமெரிக்காவில் மதிய உணவுக்கு மட்டுமே பள்ளிக்கு வரும் பல லட்சம் பேர் உள்ளனர். அன்னதான சத்திரங்கள் உள்ளன. அவற்றை நானே சென்று பார்த்திருக்கிறேன் அங்கே கருத்துச் சுதந்திரம் மிக மிக வரையறுக்கப்பட்டது. அதை நான் அறிந்திருக்கிறேன்.அத்தேசத்தில் பாதிப்பேர் கட்டுப்பெட்டிகள்…

நமக்கு சீனர்களைப் பற்றி, பாகிஸ்தான் பற்றி என்ன மனப்பிம்பம் இருக்கிறதென்று பார்த்தாலும் இம்மாதிரியான தவறான சித்திரமே கிடைக்கும். அதேபோலத்தான் அவர்களும் நம்மைப்பற்றி நினைப்பார்கள் இல்லையா?  இது மிக இயல்பான ஒன்று.

இந்த மனப்பிம்பங்கள் எப்படி உருவாகின்றன என்று பார்த்தால் வரலாற்றுப்பின்னணி ஒன்றை கண்டுகொள்ள முடியும். நான் ஆய்வுமுடிவாகச் சொல்லவில்லை, இலக்கியப்படைப்புகள் அளித்த செய்திதான். நமக்கு நம்மை அடக்கி ஆண்டவர்கள் என்பதனால் பிரிட்டிஷார்மீது ஒரு மயக்கம் உண்டு. அவர்களின் கறாரானதன்மை, மிகையின்மை, மரபார்ந்த தன்மை, கட்டுப்பெட்டித்தனம் போன்ற பல விக்டோரிய யுகத்துப் பண்புகளை இன்றும் அவர்கள் மீது ஏற்றிவைத்து பார்க்கிறோம்.

அமெரிக்கா நமக்கு பிரிட்டிஷாருக்கு நேர் எதிரான ஒன்றாகக் காட்டப்பட்டுவிட்டது. ஆகவே இன்றைய மனப்பிம்பம் உருவாகியிருக்கிறது. இந்திய சுதந்திரப்போராட்ட காலம் முதலே நாம் அமெரிக்காவை பிரிட்டனுக்கு நேர் எதிரான நாடு என எண்ண ஆரம்பித்துவிட்டோம்.

மேலும் இன்று நமக்கு ஒவ்வொரு நாட்டைப்பற்றியும் இருக்கும் மனப்பிம்பம் என்பது இரண்டாம் உலகப்போரால் உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின்போதுதான் இந்தியாவின் நடுத்தர வற்கம் உலகநாடுகளைப் பற்றிக் கேள்விப்படுகிறது. இரண்டாம் உலகப்போர்தான் செய்திகளால் நெருக்கமாக பின் தொடரப்பட்ட போர்.

அதனூடாக உருவான மனச்சித்திரம் பல்வேறு வகையில் ஊடகங்கள் மூலம், உரையாடல்கள் மூலம் இளமையிலேயே நமக்கு அளிக்கப்படுகிறது. ஜெர்மனி என்றால் கட்டுப்பாடான உறுதியான ராணுவத்தன்மை கொண்ட நாடு. பிரான்ஸ் ஷோக்கான நாடு. இத்தாலி கட்டுப்பாடற்ற நாடு…இப்படியெல்லாம். பிறகு வரும் சமகாலச் செய்திகள் மூலம் அது சற்றே திருத்தப்படுகிறது. சீனா, ஜப்பான், ருஷ்யா போன்ற நாடுகளைப்பற்றிய சித்திரம் நமக்கு கொஞ்சம் மாறியது அவ்வாறே.

இந்தப்பிம்பங்கள் பெரும்பாலும் மேலோட்டமானவை. பலசமயம் பொய்யானவை. அரசியல் நோக்குடன் உருவாக்கப்பட்டவையும் உண்டு தற்செயலாக உருவானவையும் உண்டு. நீங்கள் ஏதாவது ஓர் ஆப்ரிக்க நாட்டுக்கு வேலைக்குச் செல்கிறீர்கள் என்று சொல்லிப்பாருங்கள். ”அய்யய்யோ” என்று பதறுவார்கள் சக இந்தியர்கள். எப்படி அந்த எதிர்மறைச் சித்திரம் உருவாகியது?

‘பிறன்’ என்று நாம் உருவகிக்கும் எவரையும் பற்றி எதிர்மறையாக எண்ணுவது பழங்குடிச் சமூக வாழ்க்கையில் இருந்து நமக்குக் கிடைத்துள்ள ஒரு மனக்கூறு. பிறர் அனைவருமே நம்மை விட தாழ்ந்தவர்கள், நம்மை அழிக்க நினைப்பவர்கள் என்னும் எண்ணம். ஒரு சமூகம் எந்த அளவுக்கு பழங்குடித்தன்மையுடன் இருக்கிறதோ அந்த அளவுக்கு இந்த மனநிலையும் காணப்படுகிறது.

ஏன் நாடுகளைப் பார்க்கவேண்டும். மலையாளிகள் தமிழர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? குளிக்காத, சுத்தமற்ற மக்கள். பண்பாடற்று கூச்சலிடுபவர்கள். மொட்டையாக சாரமற்று அரட்டையடித்துக் கொண்டே இருப்பவர்கள்.. தமிழர்கள் மலையாளிகளைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? சதிகார மனமுடைய தந்திரமான மக்கள். இங்கிதமில்லாதவர்கள், ஆணவம் மிக்கவர்கள், தனிநபர் ஒழுக்கம் இல்லாதவர்கள்.மலையாளப்பெண்கள் எல்லாம் ஜில்பான்ஸிகள்.

சரி , நம்முடைய சமூகத்திற்குள்ளேயே என்னென்ன மனப்பிம்பங்கள் உள்ளன? நம் அருகே வாழும் ஒரு பிற சாதியை நாம் எப்படி மதிப்பிட்டிருக்கிறோம்? சுத்தமற்றவர்கள், மோட்டாவானவர்கள், தந்திரமானவர்கள், பொறுப்பில்லாதவர்கள், கட்டுப்பாடில்லாதவர்கள் இப்படி ஏதேனும் ஒரு எதிர்மறைச் சித்திரமே நம்மிடம் இருக்கும் இல்லையா?

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு நம் ஊரிலேயே உள்ள இன்னொரு சாதியினருடைய அன்றாட வாழ்க்கை, அவர்களின் சடங்குகள் ஆசாரங்கள் பற்றி எதுவுமே தெரிந்திருக்காது. சந்தேகமிருந்தால் நீங்கள் பிறந்து வளர்ந்த ஊரில் உள்ள இன்னொரு சாதியைப்பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும் என்று பாருங்கள்.

மேலைநாடுகள்  இந்தியா மற்றும் ஆப்ரிக்காவைப்பற்றி  கொண்டிருக்கும் மனச்சித்திரம் எப்படி உருவானது? அதற்கு ஒரு வரலாற்றுப் பின்புலம் உண்டு. இந்நாடுகளை காலனியாக்கி ஆண்டவர்கள் அவர்கள். இந்நாடுகளை நிரந்தரமாக தங்கள் பிடியிலேயே வைத்திருக்க கிறித்தவ மதத்தை ஓர் ஆயுதமாக பயன்படுத்தியவர்கள்.

ஆகவே, இந்நாடுகளின்பண்பாடுகளை கீழானது என்றும் அவர்களை சீர்திருத்தி முன்னேற்றும் பொறுப்பு தங்களுக்கு உண்டு என்றும் அந்த நல்லெண்ணத்துடன் தான் இவர்களை காலனிகளாக்கி வைத்திருக்கிறோம் என்றும் இவர்கள் வரலாறுகளை உருவாக்கினார்கள். இது ‘வெள்ளையனின் பொறுப்பு’ என்று சொல்லப்பட்டது [ White man’s burden ]

ஆரம்பகால மேனாட்டு வரலாற்றாசிரியர்கள் இந்தியாவைப்பற்றி இப்படிப்பட்ட மட்டப்படுத்தும் சித்திரத்தையே உருவாக்கினார்கள். எழுத்தாளர்கள்கூட இத்தகைய நம்பிக்கைகளை எழுதினார்கள். வெள்ளையனின் பொறுப்பு என்ற சொல்லாட்சியே மாபெரும் எழுத்தாளரான ருட்யார்ட் கிப்ளிங் உருவாக்கியது.

அதேபோல கிறித்தவ மதப்பரப்புநர்கள் தொடர்ச்சியாக இந்தியாவின் மரபு, மதம், பண்பாடு குறித்து மிக எதிர்மறையான சித்திரத்தையே அங்கே அளித்தார்கள். இந்த காட்டுமிராண்டித்தனமான அஞ்ஞானிகளுக்கு கிறித்தவ ஒளியை அளிக்கவேண்டியதன் தேவையைப்பற்றி பேசினார்கள். இந்தியாவிலும் இவர்கள் மதம் மாற்றிய சாதிகள் அனைத்துக்கும் இறந்தகாலமே இல்லாமல் ஆக்கிவிட்டார்கள்.

‘கிறிஸ்துவின் சீடர்களான இவர்களுக்கு இந்துக்கள் அப்படி என்னதான் செய்துவிட்டார்கள்? ஒவ்வொரு கிறித்தவக் குழந்தைக்கும் இந்துக்களை கொடியவர்கள் தீயவர்கள் பிசாசுக்கள் என்று நம்ப கற்றுக்கொடுக்கிறார்களே’ என்று மனம் வெதும்பினார் சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவிற்குச் சென்று.

‘பாரதேசம் முழுக்க எழுந்து நின்று இந்துமகாசமுத்திரத்திற்கு அடியில் உள்ள சேற்றை முழுக்க அள்ளியெடுத்து மேலைநாடுகள் மீது வீசினாலும்கூட நீங்கள் இன்று எங்கள்மேல் வீசும் சேற்றுக்கு பதில் செய்வதாக ஆகாது’ என்று விவேகானந்தர் சொல்கிறார்

இன்றும் அது தொடர்கிறது. ஒரு சராசரி வெள்ளையக் குழந்தை இந்தியாவைப்பற்றி இத்தகைய சித்திரத்தை பெற்றுக்கொண்டு தான் வளார்ந்து வருகிறது. அதில் இருந்து அது வெளிவருவது கடினம்.

நானே சிக்காகோவில் ஒரு தேவாலயத்தில் இந்தியா பற்றி வைக்கப்பட்டிருந்த துண்டுப்பிரசுரங்களை எடுத்து சிறில் அலெக்ஸுக்குக் காட்டினேன். இந்தியாவில் குழந்தைகளை ஆலயங்களில் பலிகொடுக்கிறார்கள்,. முதியவர்களை ஆற்றங்கரைகளில் கைவிடுகிறார்கள் என்றெல்லாம் அது சொன்னது. அவர்களை ஒளிக்குக் கொண்டுவர நிதி கோரியது

நான் பார்த்தவரையுல் மேலைநாடுகளில் யார் மதத்தில் இருந்து முழுமையாக வெளியேறியிருக்கிறார்களோ அவர்களால் மட்டுமே பிற மனிதர்களை மதிக்கவும் சமானமாக எண்ணவும் முடிகிறது. மதநம்பிக்கை கொண்டவர்கள் பிறரை கீழானவர்களாக, பரிதாபத்துக்குரியவர்களாக எண்ணி சேவை மட்டுமே செய்ய முடியும்.

சமீபத்தில் ரயிலில் மார்ட்டின் கெர்ஜோ·ப் என்ற டச்சுக்காரரைச் சந்தித்து நண்பரானேன். அவர்தான் இந்த விஷயத்தை மிக உறுதியாகச் சொன்னார். மதமனநிலையை வைத்துக்கொண்டிருக்கும் வரை இந்தியர்களையோ ஆப்ரிக்கர்களையோ பிறரையோ வெள்ளையர்களால் ‘தாங்கிக்கொள்ள’ முடியுமே ஒழிய இயல்பாக சமாமாக எண்ணவும் விரும்பவும் முடியாது என்றார் அவர்.

இவ்வளவுக்கும் பிறகு நம்முடைய சிக்கல்கள் உள்ளன. ‘இந்தியா ஏழை நாடு’ என்றால் அது உண்மைதானே? இன்றும் இந்தியாவின் பெரும்பகுதி அச்சமூட்டும் வறுமையில்தான் மூழ்கிக் கிடக்கிறது. எலிவளை போன்ற வீடுகளில் மெலிந்து கறுத்த மனிதர்கள் நடைபிணங்கள் போல வாழ்கிறார்கள். ஒரு வேளைச் சோறு கொடுக்கப்பட்டால் முண்டியடித்து நூற்றுக்கணக்கில் உயிரை விடுகிறார்கள்.

அந்த வறுமையைக் கண்டு நாம் வெட்க வேண்டும். வேதனை கொள்ளவேண்டும். அந்த வறுமை இல்லை என்று வாதிடுவதையோ அந்த வறுமைக்கு காரணங்கள் கண்டுபிடிப்பதையோ ஒருபோதும் செய்யக்கூடாது. குறைந்தது ஒரு வெள்ளையன் சொல்லும்போதாவது நமக்கு அது உறுத்தட்டுமே.

இந்தியா சுத்தமில்லாத நாடு என்றால் அது மேலும் உண்மை. நான் அறிந்த வரையில் சுகாதார உணர்வே இல்லாத மக்கள் என்றால் இந்தியர்களே. இந்தியாவில் குடியிருப்புகளைச் சுற்றி நான் பார்த்த குப்பைமலைகளை  உலகில் எங்குமே பார்த்ததில்லை. இதில் செல்வம் கல்வி என எதுவுமே விலக்களிப்பதில்லை. ஒரு சர்வதேச விமானநிலையக் கழிப்பறையை நம்மால் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியவில்லை. தேசமக்களில் பாதிப்பேர் தெருக்களில் மலம் கழிக்கிறார்கள். எங்கும் துப்பி வைக்கிறார்கள். இந்திய நகரங்கள் மலைபோலக் குப்பைகள் சூழ்ந்தவை. தலைநகரான டெல்லி உட்பட.

ஆகவே நம் வணிகர்கள் அமெரிக்க ஐரோப்பிய குப்பைகளை இறக்குமதிசெய்து இங்கே நகரங்களில் ஏற்கனவே உள்ள குப்பைமலைகளுடன் சேர்த்துக்கொட்டி பணம் சம்பாதிக்கிறார்கள். உள்ளூர் அதிகாரிகள் லஞ்சம் வாங்கீக்கொண்டு அனுமதி கொடுக்கிறார்கள். அரசியல்வாதிகள் பேசாமலிருக்கிறார்கள்

சிககோ நகரத்து கக்கூஸ் நாப்கின்கள் தூத்துக்குடிக்கு வந்து தாமிரவருணிக்கரைகளில் கொட்டப்படும்போது நாம் எப்படி சுத்தமான நாடாக இருக்க முடியும்? நம்மை அசுத்தமானவர்கள் என்று சொல்ல சிக்காகோ வாசிகளுக்கு என்ன தகுதி இருக்க முடியும்?

சென்ற வாரம் சீனாவிலிருந்து தூத்துக்குடிக்கு வந்த மாபெரும் குப்பைமலையை அடையாளம் கண்டார்கள். ஆனால் இறக்குமதி செய்தாகிவிட்டது. திருப்பி அனுப்ப முடியாது. தூத்துக்குடி முதல் குமரிவரை கடலோரமாக அவற்றைக் கொட்டி வைப்பார்கள் [சி.பி.எம் ஆட்களிடன் கொடுத்தால் விரும்பி வாங்கி வீட்டுக்குள் கொட்டி வைப்பார்கள். ‘தி இந்து’வில் என் ராம் சீனா இந்தியாவுக்கு ஒரு மாபெரும்  செல்வத்தை அள்ளி தந்திருப்பதாக கட்டுரை வனைவார்]

இந்தநிலையில் உலகிலேயே சுகாதார உணர்வற்ற அசுத்தமான நாடுகளில் ஒன்றுதான் இந்தியா என்ற உண்மையை நாம் ஒருபோதும் மறைக்க முடியாது. ஒரு சுற்றுலாப்பயணி ஒருமுறை கன்யாகுமரிக்கு வந்தால் அதன் பின் அவன் சாப்பாட்டு நேரத்தில் இந்தியா என்றே நினைக்க விரும்ப மாட்டான்.

வருடத்துக்கு ஐந்துகோடி ரூபாய்க்கு கன்யாகுமரியில் கான்கிரீட் வேலைகள் செய்பவர்கள் மாதம் ஐம்பதாயிரம் செலவிட்டு குப்பையை அள்ளவோ, நான்கு வாட்ச்மேன்களைப் போட்டு மலம்கழிப்பவர்களை தடுக்கவோ முனைவதில்லை. சுற்றுலா அமைச்சரின் சொந்த தொகுதி இது. நமக்கு சுத்த உணர்வில்லை என்பதற்கு மேலதிக ஆதாரம் எதற்கு?

நம்முடைய உணவு வீச்சம் மிக்கது. பொதுவாக பூமத்திய ரேகைநாடுகளின் உணவே காரமும் வாசனையும் மிக்கது. கண்டிப்பாக அது பிறருக்கு கஷ்டமாக இருக்கும். நாம் அதற்காக நம்மை தயாரித்துக்கொள்ளத்தான் வேண்டும்.

ஆக, இந்த எதிர்மறை பிம்பங்களை இயல்பாக எடுத்துக்கொள்வதே நல்ல மன்நிலை. அது மானுட இயல்பு. கூடவே அவ்விமர்சனங்களில் ஏதேனும் உண்மை இருக்குமென்றால் அதை நாம் கருத்திகொண்டு நம்மை திரும்பிப்பாக்கவும்வேண்டும்.

*

ஆனால் இந்த விஷயத்தில் இன்னொரு கோணமும் உண்டு. வெறுப்பு அல்லது ஏளனத்தில் இருந்தே இந்த விஷயங்கள் பெரிதாகத் தெரிகின்றன. சென்ற கால்நூற்றாண்டுக்கு முன்னால்வரை சீனாவைப் பற்றி இதைவிட படு மோசமான மனச்சித்திரமே ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இருந்தது. இன்று சீனத்தவர்கள் உலகின் வல்லரசாக ஆகிவிட்டிருக்கிறார்கள். அவர்களும் இந்தியாவுக்கும் ஆப்ரிக்காவுக்கும் குப்பைமலைகளை அனுப்பும் தகுதி பெற்றுவிட்டிருக்கிறார்கள். ஆகவே இன்று சீனாவைப் பற்றிய பிம்பம் மாறிவிட்டது. இன்று சீனன் நாறுவதில்லை.

நாமும் வெல்லும்போது நறுமணம் வீச ஆரம்பிக்கலாம். ஆப்ரிக்காவிற்கு குப்பைகளை அனுப்பி வைக்கலாம். சுத்தமற்ற ஆப்ரிக்கர்களை நோக்கி நமுட்டுப்புன்னகை செய்யலாம்.

ஜெ

 

மறுபிரசுரம் /முதற்பிரசுரம் Mar 9, 2010

முந்தைய கட்டுரைவெள்ளையானையும் கொற்றவையும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 15