‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 52

பகுதி எட்டு : கதிரெழுநகர்

[ 4 ]

ராதை திண்ணையில் அகல்விளக்கை ஏற்றிவைத்து உணவை வைத்துக்கொண்டு காத்திருந்தாள். அதிரதன் “அவன் வருவான்… இன்று அவன் மேல் எத்தனை கண்கள் பட்டிருக்கும் தெரியுமா? கண்ணேறு என்பது சுமை. அது நம்மை களைப்படையச்செய்யும். நான் முன்பு ரதப்போட்டியில் வென்றபோது கண்ணேறின் சுமையால் என்னால் நான்குநாட்கள் நடக்கவே முடியவில்லை” என்றார். “வாயை மூடாவிட்டால் அடுப்புக்கனலை அள்ளிவந்து கொட்டிவிடுவேன்” என்றாள் ராதை. “அன்றெல்லாம் நீ என்னிடம் அன்பாகத்தான் இருந்தாய்” என்றபடி அவர் கயிற்றுக்கட்டிலில் படுத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டார்.

அவரது சீரான மூச்சொலி கேட்கத்தொடங்கியது. இரவின் ஒலிகள் மாறிக்கொண்டே இருந்தன. அவள் வழியையே நோக்கிக்கொண்டு அசையாமல் அமர்ந்திருந்தாள். விளக்கில் எண்ணை தீர்ந்தபோது எழுந்துசென்று எண்ணை விட்டுவந்தாள். மெல்லிய குளம்படிகள் மிகத் தொலைவில் கேட்டதும் அவள் நெஞ்சைத்தொட்டு கொற்றவைக்கு நன்றி சொல்லிவிட்டு எழுந்து நின்றாள். அவள் கைவிளக்கு எழுப்பிய நிழல்கள் பின்னால் ஆட குதிரைகளின் முகங்கள் தெரிந்தன. அவற்றுக்குப்பின்னால் கர்ணன் எண்ணத்தில் மூழ்கியவன் போல நடந்துவந்தான்.

அவன் கொட்டிலில் குதிரைகளைக் கட்டிக்கொண்டிருந்தபோது அவள் அவன் வந்த வழியையே கூர்ந்து நோக்கினாள். அவனுக்குப்பின்னால் அவள் பலமுறை பார்த்ததுதான் அது. அவள் நெஞ்சு படபடத்தது. அதன்பின் அவள் இருளுக்குள் நெளிந்து சென்ற பெரிய அரசநாகத்தின் உடலைப் பார்த்தாள். கர்ணன் குதிரைகளைக் கட்டிவிட்டு வந்து “உணவை எடுத்து வைத்துவிட்டு துயின்றிருக்கலாமே?” என்றான்.  “இந்த இருளில் என்ன செய்கிறாய்? ஊரெங்கும் குடித்துவிட்டு கிடக்கிறார்கள். நீ இன்னமும் சிறுவன். மனம்போனபடி வாழும் வயது உனக்கு ஆகவில்லை…” என்று ராதை கடுகடுத்தாள். “இரவில் இந்தப்பாதையில் நாகங்கள் உலவுகின்றன. சரி, நீ பார்த்து நடந்து வந்தாய். குதிரைகள் எதையாவது மிதித்தால் என்ன ஆகும்? நம்மை முக்காலியில் கட்டி சாட்டையால் அடிப்பார்கள்.”

“உணவு இருக்கிறதா?” என்றான் கர்ணன். “இப்போது வந்து கேட்டால் உணவுக்கு எங்கே போவது? எந்நேரம் வந்தாலும் உனக்கு சமைத்த உணவு ஒருக்கமாக இருக்க நீ என்ன இந்த நாட்டுக்கு அரசனா? சூதன் சூதனாக இருக்கவேண்டும். உயரம் இருப்பதனால் நீ ஒன்றும் ஷத்ரியன் ஆகிவிடப்போவதில்லை” என்று முகத்தை சுருக்கியபடி அவள் சொன்னாள். கர்ணன் பெருமூச்சுடன் “உணவு இல்லை என்றால் படுத்துக்கொள்கிறேன்” என்றான். “படுத்துக்கொள்கிறாயா? ஏன் படுக்கமாட்டாய்? நான் இந்த இரவில் பூச்சிக்கடியில் விளக்கை வைத்துக்கொண்டு விழித்து அமர்ந்திருப்பதெல்லாம் உனக்கு ஒரு பொருட்டே அல்ல” என்று அவள் மீண்டும் வசையாடத் தொடங்கினாள். கர்ணன் “சரி அப்படியென்றால் உணவை எடுங்கள்” என்றான்.

“சற்று நேரம் பொறு… நான் சென்று அப்பத்தை சுட்டு எடுக்கிறேன். முன்னதாகச் சுட்டால் ஆறிவிடும். பருப்புக்கூட்டையும் சூடு செய்து தருகிறேன்” என்றாள். “சூடெல்லாம் செய்யவேண்டாம்… அப்படியே சாப்பிடுகிறேன்” என்றான் கர்ணன். “நான் சொன்னதை நீ கேட்டால் போதும். எந்தக்காலத்தில் நீ நான் சொன்னதைக் கேட்டிருக்கிறாய்? அன்னை என்ற மதிப்பு இருந்தால் அல்லவா? என்னை நீ ஒரு வேலைக்காரியாகத்தான் நினைக்கிறாய்” ராதை பேசிபடியே சென்று அடுப்பைப் பற்றவைத்து குழலால் ஊதத்தொடங்கினாள். கரி செந்நிறம் கொள்ளும்போது குடிலுக்குள் ஒளியெழுந்தது. அவள் காலைவெளிச்சத்தில் நிற்பவள் போலத் தோன்றினாள்.

“உனக்கு ஏதோ மோதிரம் கொடுத்தார்களாமே… எங்கே அது?” என்றாள் ராதை. “அதை நான் ஓர் ஏழைக் குழந்தைக்குக் கொடுத்துவிட்டேன்” என்று கர்ணன் சொன்னான். ராதை திரும்பி நோக்கி “ஏழையா?” என்றாள். “ஆம்” என்றான் கர்ணன். “உன் தந்தை இங்கே துள்ளிக்கொண்டிருந்தாரே. நாளை அவரது தோழர்களை வரச்சொல்லியிருக்கிறாராம். மோதிரத்தைக் காட்டுவதற்கு” என்றாள். கர்ணன் ஒன்றும் சொல்லவில்லை. “ஏழை என்றால் கொடுக்கவேண்டியதுதான்” என்றாள் ராதை. “நீ அதை கொண்டுவந்திருந்தால்தான் வியந்திருப்பேன்” . எரிதணலில் அவள் கோதுமை அப்பங்களை சுட்டுக்கொண்டிருந்தாள். மரங்களில் எழும் காளான்குடை போல அப்பம் அனலில் வெந்து உப்பி எழுந்தது.

அடுப்பில் அகன்ற பானையில் சூடாகிக்கொண்டிருந்த பருப்புக்குழம்பை எடுத்துக்கொண்டுவந்து அவள் அவன் அருகே வைத்து அப்பங்களை இலைத்தொன்னையில் போட்டாள். அவன் சாப்பிடத்தொடங்கினான். “நீ எதற்காக ரதமோட்டச்செல்கிறாய்?” என்றாள் ராதை. “உனக்கு ரதமோட்டும் வயதாகவில்லை என்று சொல்லவேண்டியதுதானே?” கர்ணன் “அது நூற்றுக்குடையோரின் ஆணை. தந்தை அதை மீறமுடியாது” என்றான். “ஏன் மீறினால் என்ன? வாய் கிடையாது. குரல் எழுவது முழுக்க இங்கே குடிலுக்குள் வந்தால்தான். ஒரே கதையை நாள்தோறும் சொல்லிக்கொண்டு… இதெல்லாம் எனக்குப்பிடிக்கவில்லை. தந்தையும் மைந்தனும் தெருவில் கொஞ்சுவதைக் கண்டு எந்த தீவிழியாவது பட்டுவிட்டால் அதன் பின் கணிகனுக்கும் நிமித்திகனுக்கும் யார் அள்ளிக்கொடுப்பது?”

“போதும்” என்றான் கர்ணன்.ராதை சினம்கொண்டு “போதுமா? ஐந்து அப்பத்தைச் சுடவா நான் இங்கே அமர்ந்திருந்தேன்… சாப்பிடுகிறாயா இல்லையா?” என்று கூவினாள். கர்ணன் சலிப்போசையுடன் மீண்டும் அமர்ந்துகொண்டான். “பரத்தையருக்கெல்லாம் எதற்காக விழா? வணிகர்கள் அவர்களுக்கு அள்ளிக்கொடுக்கிறார்கள். தேனும் நெய்யுமாக உண்கிறார்கள். பட்டு அணிகிறார்கள். பரத்தையருக்கு நீ தேரோட்டப்போனதை நினைத்து என்னால் இங்கே அமர்ந்திருக்கவே முடியவில்லை. என் உடலே எரிந்துகொண்டிருந்தது” கர்ணன் “தேரோட்டுவதென்றால் அனைவருக்கும்தான் ஓட்டவேண்டும்” என்றான்

“நீ அரசனுக்கு ஓட்டு. இந்த அற்ப அங்கநாட்டரசனுக்கு உன்னை சாரதியாகக் கொள்ளும் தகுதி இல்லை. நீ மகதத்துக்கு போ. அங்கே பிருகத்ரத மன்னருக்கு பெருவல்லமை கொண்ட இளவரசன் பிறந்திருக்கிறான் என்கிறார்கள். ஜராசந்தன் எட்டு கைகள் கொண்டவன் என்று சூதர்கள் இங்கே பாடினார்கள். கொடிமரம்போல உயரமாக இருக்கிறானாம். அவனைப்போன்ற இளவரசனுடன் நீ சென்று சேர்ந்துகொள். இந்த அங்கநாட்டில் உன்னை எவருக்குத் தெரியும்?” கர்ணன் “என்ன தெரிந்துகொள்ளவேண்டும்?” என்றான். “உன்னருகே நின்றால் உன் தோள்வரைக்குமாவது மன்னனுக்கு உயரம் இருக்கவேண்டாமா?” என்றாள் ராதை.

கர்ணன் தன் கட்டிலில் பாயை விரித்து மல்லாந்து படுத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டான். “நீ விடிகாலையில் எழவேண்டியதில்லை. குதிரையை உன் தந்தையே நீராட்டுவார். களைப்பிருந்தால் அப்படியே துயில்கொள்” என்றாள் ராதை. கர்ணன் பேசாமல் படுத்திருந்தான். அவன் துயின்றுவிட்டானா என்று பார்த்துவிட்டு ராதை மெல்ல உள்ளே சென்று விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தாள்.

விண்மீன்கள் செறிந்த வானையே நோக்கிக்கொண்டு கர்ணன் படுத்திருந்தான். அவன் அகம் விம்மிக்கொண்டே இருந்தது. எந்த எண்ணமும் சிந்தனையாக திரளவில்லை. ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டு நதிநீரில் செல்லும் மரத்தடிகள் போல அவை சென்றன. சற்றுநேரத்தில் வானை நோக்குவதுதான் அமைதியின்மையை அளிக்கிறது என்று உணர்ந்தான். அகம் விரிந்து விரிந்து எல்லையில்லாமல் பரவியது. எழுந்து அமர்ந்து கொண்டு குனிந்து தரையை நோக்கினான். அப்போது அகம் குவிந்து இரும்புக்குண்டு போல எடைகொண்டது.

தலைநிமிர்ந்தபோது குடிலின் படியில் ராதை அமர்ந்திருப்பதைக் கண்டான். சிலகணங்கள் அவள் விழிகளை நோக்கியபின் அவன் தலைகுனிந்தான். அவள் ஏதாவது கேட்பாள் என அவன் நினைத்தான். ஆனால் அவள் அசைவில்லாமல் அப்படியே அமர்ந்திருந்தாள். தன் அமைதியின்மை எப்படி அவளுக்குத் தெரிகிறது என்று அவன் வியந்தான். அத்தனை அணுக்கமாக அவள் அவனுடன் வந்துகொண்டிருக்கிறாள் என்றால் அவளறியாத எதுவுமே அவனுக்கிருக்க வாய்ப்பில்லை. அவன் நிமிர்ந்து “இன்று அரசர் அவரது பாதுகையால் எனக்கு பரிசில் அளித்தார்” என்றான்.

“சூதர்களுக்கு அவ்வாறு அளிப்பது வழக்கம்” என்று ராதை சொன்னாள். “அரசரின் பாதுகம் பட்ட பரிசிலே கிடைத்துவிட்டது என்று உன் தந்தை மகிழ்ந்து கொண்டாடிக்கொண்டிருந்தாரே!” கர்ணன் அவரை திரும்பி நோக்கினான். அவர் வாய்திறந்து மூக்கின் முடிகள் தெரிய உரக்க குறட்டை விட்டு துயின்றுகொண்டிருந்தார். “அவரைப்போல இருக்க விழைகிறேன் அன்னையே. என்னால் இயலவில்லை” என்றான். அவள் பெருமூச்சுவிட்டாள். “என்னை அவர்கள் அடேய் என அழைக்கும்போது என் அகம் நாகம்போல சீறி எழுகிறது. என்னைநோக்கி ஒருவன் கையை ஓங்கினால் அக்கணமே என் கைகளும் எழுந்துவிடுகின்றன” என்றான் கர்ணன். “தந்தையும் பிறரும் அவர்களை நோக்கி கையோங்கப்படுகையில் அவர்களை அறியாமலேயே கைகளை மார்போடு கட்டி குனிந்து நிற்கிறார்கள். என் நெஞ்சு விரிந்தெழுகிறது.”

ராதை ஒன்றும் சொல்லவில்லை. கர்ணன் “நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்று தெரியவில்லை அன்னையே. என் உயரமே என்னை சூதனாக அல்லாமல் ஆக்குகிறது. நான் இன்னும் வளர்வேன். அப்போது என்னை நோக்கி மேலும் குதிரைச்சவுக்குகள் எழும்” என்றான். ராதை “ஆம்” என்றாள். பின்பு “நீ எங்கிருந்தாலும் அன்னையையும் தந்தையையும் மறந்துவிடக்கூடாது மைந்தா” என்றாள். கர்ணன் திடுக்கிட்டு அவளை இருட்டுக்குள் நோக்கி “உங்களை மறப்பதா?” என்றான். “இப்புவியில் என்றும் எனக்கு முதல் தெய்வம் நீங்கள்தான். நான் வாழும் வரை கண்விழித்து எழுகையில் உங்கள் முகமே என் அகத்தில் எழும்.”

ராதை மெல்ல இருட்டுக்குள் விசும்பினாள். “ஏன் இந்தப்பேச்சு? என்னை நீங்கள் அறியமாட்டீர்களா?” என்றான் கர்ணன். “அறிவேன். உன் சொல் சூரியனின் சொல். இதோ இந்தக் கிழவரையும் ஒருநாளும் மறக்காதே. உன் அருளை முற்றிலும் பெற நாங்கள் தகுதியற்றவர்கள். ஆனால் சூரியக்கதிரை பெற புல்லுக்கும் உரிமை உண்டு அல்லவா?” என்றாள் ராதை. “அவர் என் மூதாதையரின் வடிவம். இவ்வாழ்நாளில் அவரது பாதங்களையன்றி பிறிதொன்றை என் சென்னி சூடாது” என்றான் கர்ணன். ராதை தலைகுனிந்து அமர்ந்திருந்தபின் கண்களை அழுத்திக்கொண்டாள். “ஏன் அன்னையே? என்ன எண்ணுகிறீர்கள்? ஏன் இந்தத் துயரம்?”

“உனக்காகத்தான் மைந்தா. நீ மாமனிதன். இந்தப் புவி யுகங்களுக்கொருமுறைதான் உன்னைப்போன்ற ஒருவனை பெறுகிறது என்று நிமித்திகர்கள் சொன்னார்கள். எல்லா மாமனிதர்களும் கண்ணீர் வழியாகவே கடந்துசெல்கிறார்கள். நான் கேட்ட கதைகளெல்லாம் அப்படித்தான். பார்கவ ராமரும் ராகவ ராமரும் கண்ணீரையே அறிந்தனர். சமந்த பஞ்சகம் பார்கவரின் விழிநீர். சரயூநதி ராகவரின் கண்ணீர்.” அவள் மூச்சை  இழுத்து தன்னை திடப்படுத்திக்கொண்டாள். “உன் கண்ணீர் எங்கே தேங்கும் என்று எனக்குத்தெரியவில்லை. தெரிந்தால் இப்போதே அங்கே சென்று ஒரு குடில்கட்டி வாழ்வேன்.”

கர்ணன் அவளையே நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். அவளுடைய கடுகடுப்பென்பது ஒரு வேடம் என அவனுக்குத்தெரியும். அவளுடைய ஆழத்துக்குள் எவரும் சென்றுவிடக்கூடாதென்பதற்காக அவள் அதை தன்னைச்சுற்றி அமைத்திருந்தாள். நினைவறிந்த நாள்முதல் அவள் அவனை அருகே அழைத்ததில்லை. அணைத்ததோ உணவூட்டியதோ கதைசொன்னதோ இல்லை. அவன் எப்போதும் அதிரதனின் தோளில்தான் இருந்தான். அவர்தான் அவனுக்கு திரும்பத்திரும்ப ஒரே கதைகளை சொல்லிக்கொண்டிருந்தார். குதிரைக்கொட்டிலில் கொண்டு சென்று குதிரைமேல் அமரச்செய்தார். சவுக்கை கையில் கொடுத்து நுகம் உடைந்த ரதங்களின் அமரத்தில் அமரவைத்து விளையாடச்செய்தார்.

அவள் அவனை எப்போதும் எதற்கும் வசைபாடினாள். அவனுடன் பேசுவதற்காகவும் விளையாடுவதற்காகவும் அதிரதனை கண்டித்தாள். ஆனால் வசையாடும்போதுகூட அவள் விழிகள் அவனுடைய இருதோள்களைத்தான் மாறிமாறித்தொட்டு அலைபாய்ந்துகொண்டிருக்கும். அவன் அருகே சென்றால் ஏதோ ஒன்றைச் சொல்லி வசைபாடியபடி அவன் உடலைத் தொடுவாள். “அழுக்காகத்தான் இருப்பாயா? போ, போய்க்குளி” என்பாள். “குதிரையைத் தொட்டபின் அப்படியே வீட்டுக்குள் வராதே என்றால் கேட்கமாட்டாயா?” என்று சீறுவாள். சற்று வளர்ந்தபின் அவன் அறிந்தான். எப்போதும் எதையும் கேட்டுப்பெறும் நிலையில் அவன் இருந்ததில்லை, அவை முன்னரே அவனுக்காக அவளால் ஒருக்கப்பட்டிருக்கும். ஒருபோதும் அவன் தன் அகத்தை அவளுக்கு விளக்கநேர்ந்ததில்லை. அவன் சொல்வதற்குள்ளாகவே அவள் அறிந்திருந்தாள்.

கர்ணன் “அன்னையே, மாமனிதர்கள் என்பவர்கள் ஏன் கண்ணீர் விடநேர்கிறது?” என்றான். ராதை சிலகணங்கள் இருளை நோக்கி இருந்துவிட்டு “அவர்கள் மனிதர்களைவிட மிகப்பெரியவர்கள் மைந்தா. மனிதர்கள் எலிகளைப்போல. வளைகளுக்குள் பிற எலிகளுடன் கூடியும் ஊடியும் வாழ்கிறார்கள். மாமனிதர்கள் மத்தகம் எழுந்த பெருங்களிறுகள். அவர்களுக்கு இவ்வுலகம் மிகச்சிறியது” என்றாள். பின் பெருமூச்சுவிட்டு “ஆகவேதான் அவர்கள் வெளியேறிச்சென்றுகொண்டே இருக்கிறார்கள். பரசுராமர் பாரதம் முழுக்கச்சுற்றினார். ராகவராமர் காட்டுக்குள் அலைந்தார்” என்றாள்.

“ஆகவேதான் நானும் சென்றுவிடுவேன் என அஞ்சுகிறீர்கள் இல்லையா?” என்றான் கர்ணன். “ஆம், நீ சென்றுவிடுவாய் என்பதில் ஐயமே இல்லை. ஆனால் நீ இன்னமும் சிறுவன். உன் உடல் வளர்ந்திருக்கும் அளவு உள்ளம் வளரவில்லை. உனக்கு நல்ல கல்வியை அளிக்கவும் எங்களால் இயலவில்லை” என்றாள் ராதை. “இன்னும் சற்றுப்பொறு. நீ வெளியேறவேண்டிய நேரம் வரும்வரை காத்திரு… அதைத்தான் அன்னை உன்னிடம் சொல்வேன்.”

“அன்னையே, நான் ஆபத்துகளில் அகப்பட்டுக்கொள்வேன் என்றா அஞ்சுகிறீர்கள்?” என்றான் கர்ணன். ராதை “இல்லை மைந்தா. உனக்கு எந்நிலையிலும் ஆபத்துகள் வராது. நடைபழகும் குழந்தைக்குப்பின்னால் பதறிய கைகளை விரித்துக்கொண்டு அன்னை செல்வது போல உன் பின்னால் என்றும் அறத்தேவதை வருவாள். உன்னை குனிந்து நோக்கி உன் தந்தை சூரியதேவன் புன்னகைசெய்வார்” என்றாள். “நான் அஞ்சுவது நீ அவமதிக்கப்படுவாய் என்றுதான். உன் பொருட்டல்ல. எங்கள் பொருட்டு. நாங்கள் எளிய சூதர்கள். தலைமுறைதலைமுறையாக குதிரைச்சாணத்தின் வாசனை படிந்த உடல்கொண்டவர்கள்.”

“அன்னையே, உங்கள் பொருட்டு நான் அவமதிக்கப்படுவேன் என்றால் அதுவே எனக்கு என் தெய்வங்கள் அளிக்கும் மாபெரும் வெகுமதி. அத்தனை எளிதாக பெற்றோருக்கான கடனில் ஒரு துளியையேனும் திருப்ப முடியும் என்றால் அதைவிட என்ன வேண்டும்? ஆனால் என் முன் எந்தையை ஒருவன் அவமதிப்பதை இனி நான் பொறுக்கமுடியாது” என்றான் கர்ணன். ராதை ஒன்றும் சொல்லாமல் புன்னகை செய்தாள். பின்னர் திரும்பி வாயை சப்புக்கொட்டியபடி திரும்பிப்படுத்த அதிரதனை நோக்கி முகம் விரிந்து நகைத்து, “எளியசூதன். அவனுடன் விளையாடுகிறது காலம். அவன் பெயரையும் முடிவின்மை வரை இப்பாரத வர்ஷம் நினைக்கவேண்டுமென விழைகின்றன தெய்வங்கள்” என்றாள்.

கர்ணன் திரும்பி தந்தையைப் பார்த்துவிட்டு பேசாமல் அமர்ந்திருந்தான். இருவரும் இருளுக்குள் நெடுநேரம் இருந்தனர். அரண்மனைக் கோட்டைவாயிலில் விடியலுக்கான சங்கு முழங்கியது. சூரியனார்கோயிலின் மணியோசை சேர்ந்தெழுந்தது. “நான் நீராடி வருகிறேன்” என்றான் கர்ணன். “துயிலவில்லையா?” என்று ராதை கேட்டாள். “துயில் வரவில்லை. நீராடிவந்து உணவுண்டால் துயில் வரலாம்” என்று எழுந்து மரவுரியை எடுத்துக்கொண்டு கர்ணன் நடந்தான். தான் காலெடுத்து வைக்கும் பாதையாக விரிந்தது அவள் விழிகளே என உணர்ந்தான்.

கங்கைக்கரை மரத்தடி ஒன்றில் அவன் ஒளித்துவைத்திருந்த மூங்கில் வில்லையும் அம்பறாத்தூணியையும் எடுத்துக்கொண்டான். கருக்கிருட்டுக்குள் மரங்கள் காற்றில் உலையும் ஒலி எழுந்துகொண்டிருந்தது. கரிச்சானின் முதற்குரல் கேட்டு வானை நோக்கினான். எங்கோ முதல்பறவை சிறகடித்து இரவு உதிரத்தொடங்குவதை உணர்ந்தது. கால் தளர்ந்த நடையுடன் அவன் கங்கையின் கரையை அடைந்தான். நீரில் இறங்கத்தோன்றாமல் கரையில் நின்று இருளுக்குள் மங்கலான ஒளியலைகளாகச் சென்றுகொண்டிருந்த கங்கையை நோக்கிக்கொண்டிருந்தான். நடுப்பெருக்கில் பாய்களை விரித்து பெரும்படகுகள் செந்நிறவிழிகள் நீரில் பிரதிபலிக்க ஒன்றுடன் ஒன்று முட்டும் வாத்துக்கூட்டங்கள் போல நிரைத்துச் செறிந்து சென்றுகொண்டிருந்தன.

பின்னர் ஒரு வேப்பங்குச்சியை ஒடித்துக்கொண்டு படித்துறையில் இறங்கி பல்துலக்கிவிட்டு நீரில் இறங்கினான். இளவெம்மை கொண்டிருந்த கரையோரத்து நீரில் மூழ்கி கைவீசி நீந்தி குளிர்ந்த கனத்த நீர் ஓடும் மைய ஒழுக்கை அடைந்து திரும்பி நீந்தி வந்தான். மூழ்கி ஆழத்தில் ஓடிக்கொண்டிருந்த ஓசையற்ற நீரிருளைக் கண்டு நெடுந்தூரம் சென்று பின் எழுந்து திரும்ப வந்தான். நீரில் நீந்தும்தோறும் நெஞ்சுக்குள் செறிந்திருந்தவை கரைந்து செல்வதை, உடல் எடையிழப்பதை அறிந்தான். சற்றுநேரத்தில் நீரில் விளையாடும் உடல் மட்டுமேயாக அவன் இருந்தான்.

மூச்சுவாங்க நீர் வழியும் உடலுடன் அவன் படிக்கட்டை அடைந்து ஏறியபோது இருளே உடலாக ஆனவன் போல படிக்கட்டின் மீது ஒருவன் நிற்பதைக் கண்டான். அவன் “இந்த முன்னிருளில் ஒரு மானுடனை இங்கே காண்பேன் என்றே எண்ணவில்லை” என்றான். கர்ணன் புன்னகையுடன் “நீர் மானுடரல்லவா?” என்றான். அவன் சிரித்தபடி தன் கைகளை விரிக்க மாபெரும் காகம் ஒன்று சிறகு விரிப்பது போல அடுக்கடுக்காக கரங்கள் விரிந்தன. “என்பெயர் சஹஸ்ரபாகு” என்றான். “கருக்கிருட்டின் தெய்வம் நான்”

கர்ணன் “நான் அங்கநாட்டு தேரோட்டி அதிரதனின் மைந்தன் வசுஷேணன்” என்றான். “இக்கணமே இங்கிருந்து விலகிச்செல். நான் ஒளியின் அரசனின் வருகையை அறிவிப்பவன். அவனுடைய பாதையை நான் தூய்மைசெய்யும்போது மானுடர் எவரும் காணலாகாது என்பதற்காகவே கருக்கிருட்டை உருவாக்குகிறேன். உன் விழிகள் என்றும் இவ்விருளிலேயே நிலைக்கச்செய்ய என்னால் முடியும்” என்றான் சஹஸ்ரபாகு. “நான் எவருடைய எல்லையையும் மீறவிரும்பவில்லை. ஆனால் என் பாதங்கள் தொட்ட மண்ணை இன்னொருவர் ஆணைக்கேற்ப விட்டுவிட்டு விலகமாட்டேன்.”

“என்னுடன் போருக்கெழுக!” என்று கூவியபடி சஹஸ்ரபாகு மேலும் கைகளை விரித்து இருளில் எழுந்தான். இருளுக்குள் பரவிய கரிய கைகள் முடிவில்லாமல் பெருகின. கர்ணன் தன் வில்லை எடுத்து நாணேற்றி அம்பு தொடுத்து எதிர்த்து நின்றான். அவனைச்சூழ்ந்திருந்த இருள் மேலும் செறிந்து நிறைய முற்றிலும் விழிகளை இழந்து அகம் ஒன்றேயாக அங்கே நின்றான். சஹஸ்ரபாகுவின் சிறகோசையை மட்டுமே இலக்காகக் கொண்டு அம்புகளைத் தொடுத்தான். இருளாக வந்த சகஸ்ரபாகுவின் கைகள் அவனை அறைந்து தெறிக்கச்செய்தன. விழுந்த கணமே புரண்டு எழுந்து மீண்டும் அம்புகளை விட்டான்.

அவன் தொடுத்த அம்புகள் கரிய உடலில் தைத்து செங்குருதியாக வழிவதைக் கண்டான். அம்புதேடிச்சென்ற வலக்கை ஒழிந்த தூளியைக் கண்டதும் அவன் அருகே இருந்த நாணலைப்பிடுங்கி அம்புகளாக்கினான். குருதி வழியும் சஹஸ்ரபாகுவின் உடல் மேலும் செந்நிறம் கொண்டது. பின்பு அச்செந்நிறம் ஒளிகொண்டது. குருதி பெருகப்பெருக அவன் ஒளி ஏறியபடியே வந்தது. அச்செவ்வொளியில் அவன் ஆடைகளும் குழலும் பொன்னிறம் கொண்டன. பொன்வடிவாக மாறி ஆயிரம் பொற்கரங்களை விரித்து “என்னை ஹிரண்யபாகு என்றும் சொல்வார்கள்” என்றான்.

கர்ணன் கைகளைக்கூப்பி “எந்தையே” என்றான். உடலெங்கும் தைத்த அம்புடன் சூரியன் “மைந்தருடன் தந்தை ஆடும் சிறந்த ஆடல் போரே” என்றான். வில்லை நிலம் தாழ்த்தி கர்ணன் சூரியதேவனை வாழ்த்தினான். வானம் பொன்வெளியாக விரிந்திருக்க பின்னால் கங்கையில் அவ்வொளி எதிரொளித்து பொற்பெருக்காக வழிவதை அவன் அறிந்தான். “இந்தக் குருதி போல இனிதாவது ஏதுமில்லை” என்றான் சூரியன். “எந்தையே, தங்களை நோக்கி விழிநிறைக்கும் பெரும்பேறை அடைந்தேன்” என்றான் கர்ணன்.

“இது ஹிரண்யவேளை எனப்படுகிறது. இக்கணம் நான் தொடும் அனைத்தும் பொன்னாகும். என் மைந்தனாகிய உனக்கு நான் இப்பரிசை அளிக்கிறேன்” என்று சூரியன் திரும்பி அங்கே கிடந்த ஒரு கனத்த கருங்கல்லை நோக்கினான். அக்கணமே அது பொன்னொளியுடன் சுடரத் தொடங்கியது. “இந்தப்பொன்னால் ஒரு ரதத்தையே செய்யமுடியும். இதைக்கொண்டு நீ உன் வாழ்க்கையை நிறைவடையச்செய்யலாம். கொள்க!” என்றான்.

கர்ணன் அதை ஒரு கணம் நோக்கியபின் புயங்கள் தெறிக்க குதிகால்கள் அதிர அதைத்தூக்கிக் கொண்டு படிகளில் இறங்கி அங்கே நின்றிருந்த படகொன்றில் வைத்து அதன் கயிற்றை அவிழ்த்தான். படகு அலைகளில் ஆடியபடி செல்லத்தொடங்கியது. கர்ணன் நீரைத்தொட்டு “கங்கையே, வாழ்நாளெல்லாம் பிறர் பசியைப்பற்றி மட்டுமே எண்ணுபவன் ஒருவன் இன்றுகாலை உன்னில் நீராடுவானென்றால் அவன் கையில் இதைக்கொண்டுசென்று கொடு. இதை அளித்த கர்ணன் அந்த மாமனிதனின் பாதங்களில் மும்முறை பணிந்தெழுந்து இதை அவனுக்குக் காணிக்கையாக்கினான் என்று சொல். ஆணை! ஆணை! ஆணை!” என்று சொல்லி ஒரு துளி எடுத்து சென்னியில் விட்டுக்கொண்டு திரும்பினான். “எந்தையே, பெருஞ்செல்வத்தைக் கொண்டு நிறைவடையும் வழி இது ஒன்றே.”

சூரியன் புன்னகை புரிந்தபோது அவன் பொன்னொளி வெள்ளிப்பெருக்காக மாறியது. “ஆம், நீ என் மைந்தன். நீ இதை மட்டுமே செய்யமுடியும்” என்றான். புன்னகையுடன் படிகளில் இறங்கி வந்து சூரியன் கர்ணனின் தோள்களில் கையை வைத்தான். கர்ணன் உடலும் ஒளிகொண்ட படிகம் போல சுடரத் தொடங்கியது.

சூரியன் “உன் நாவில் பிறிதொன்று எழாதென்று அறிவேன். நீ நான் கொண்ட சிறப்பெல்லாம் மானுடவடிவமென்றானவன்” என்று சொல்லி கர்ணனை ஆரத்தழுவிக்கொண்டான். “ஒவ்வொரு கணமும் உன்னை வாழ்த்தும் ஒரு சொல் எங்கோ எழுந்துகொண்டிருக்கும். எனவே ஒருபோதும் நீ தோல்வியடையமாட்டாய்” என்று அவன் செவிகளில் சொன்னான். வைரம் வழியாக ஒளி கடந்துசெல்வதுபோல அத்தழுவலில் அவன் மைந்தன் உடலினூடாக கங்கையை சுடரச்செய்து, மறுகரை மரங்களை பசும்பேரொளியாக்கி, மேகங்களை பளிங்குவெளியாக்கி, எழுந்து மறைந்தான்.

கர்ணனின் கூந்தலில் இருந்து வழிந்து செவிமடல்களில் சொட்டி நின்ற இரு நீர்த்துளிகள் ஒளிகொண்டு வைரக்குண்டலங்களாக மாறின. அவன் மார்பில் படிந்திருந்த ஈரம் பொற்கவசமாக மாறியது. அவன் தன் கைகளைத் தூக்கி நோக்கியபோது அவை செந்தாமரை இதழ்கள்போலச் சிவந்திருப்பதைக் கண்டான். திகைப்புடன் சுற்றுமுற்றும் நோக்கி அவையனைத்தும் கனவா என்று எண்ணினான். காலையொளியின் முழுமையில் திளைத்து நின்றன மரக்கூட்டங்களும் நாணல்கொண்டைகளும் புதர்மலர்களும் கூழாங்கற்களும் நீரலைகளும்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

அவன் குனிந்து கங்கையின் நீரைக் கண்டான். அதில் காதுகளில் மணிக்குண்டலங்களும் மார்பில் பொற்கவசமும் கொண்ட அவனுடைய தோற்றம் தெரிந்தது. அவன் தலைமுடியில் இருந்து விழுந்த நீர்த்துளியில் அந்த நீர்ப்பாவை புன்னகையுடன் அசைந்து நெளிந்தது.

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரை‘XXX’ தொல்காப்பியம்
அடுத்த கட்டுரைபனிமனிதன் -ரெங்கசுப்ரமணி