‘நூஸ்’

ஓவியம் அஜயன் சாலிஸேரி
ஓவியம் அஜயன் சாலிஸேரி

நாணி ஆசாரிச்சியைத்தான் ஊரிலே ‘நூஸ்’ என்றழைப்பார்கள். அதிகாலையிலேயே எழுந்துவிடுவாள். எப்போதும் ஏதாவது சில்லறை வியாபாரம் கையிலிருக்கும். வீட்டைவிட்டுக் கிளம்பும்போது காலிக்கடவம்தான். போகும் இடங்களில் சக்கைக்குரு, முருங்கைக்காய் என கொள்முதல் செய்வாள். அவற்றை விற்கப்போகும் இடங்களில் கிடைக்கும் வாழைக்காய்,கோழிமுட்டை எதையும் வாங்குவாள். வியாபாரம் முடியும்போது சமயங்களில் கடவம் நிறைந்திருக்கும். நேராக அந்திச்சந்தைக்குப் போய் அவற்றை விற்று பணமாக்கி முந்தியில் முடிந்து கடவத்திலேயே மரச்சீனியும் மீனும் அரிசியும் வெஞ்சனமும் வாங்கிக் கொண்டு அப்படியே மண்ணாத்தி வீட்டுக்குப் பின்னால் ஒதுங்கி அரை கோப்பை நாறவெள்ளம் மோந்தி ‘இப்ப என்ன நடந்து போச்சு? ஒண்ணுமில்லியே’ என்ற பாவனை முகத்தில் தெரிய வீடு திரும்புவாள். வீட்டில் ‘சப்பாணி’ குருவன் கிழவன் மட்டும்தான். பிள்ளைகள் இல்லை. வாங்குகிறார்களோ இல்லையோ எல்லா வீடுகளிலும் நாணிக்கு கணக்கு உண்டு. அவள் ஒருநாளைக்கு வராவிட்டாலும் பல பெண்களுக்கு விசித்திரமான பதற்றம் ஏறும். கைவேலியருகே நின்றுகொண்டு ”ஓ, இந்த நாணியச்சி எங்க போயி தொலைஞ்சாளோ… அசத்து . அவளும் அவளுக்க நடையும்…வரட்டு…” என்று பொருமுவார்கள்.

நாணியச்சி மிகமெல்லத்தான் இடைவழிகளின் வழியாக நடப்பாள். கால்களில் நகரும் எந்த உயிரினத்திடமும் இரண்டு சொல் பேசாமல் இருப்பதுமில்லை. ”ஓ…ஆராக்கும் அது? டீக்கனாரா? என்னவே நாடாரே, உம்ம கோயிலில ஒரு சிறுப்பக்காரிக்கு வாயு கோபம்ணாக்குமே கேட்டது? சும்மாருக்காளா?” . ”வாயுவா? என்னத்த வாயு??” ”அது கொள்ளாம் . நாடாருக்கு தெரியாத்த வாயு கோபமா? சும்மா கிட்டுதேண்ணு ஆவேற்றம் பிடிச்சு கண்டதையும் வலிச்சு உள்ள கேற்றினா அது சும்மா இருக்குமா? உள்ள கேறி பெருக்கும்… வாயு பெருப்பமானா வயறு வீங்கும். ஏக்கமும் மயக்கமும் வரும். மண்ணத் தின்னட்டா சாம்பலத் தின்னட்டாண்ணு கேக்கும்…வாயு எறங்கினா பின்ன அதுக்குண்டான பண்டுவமும் பாப்பும்…போட்டு…பொட்டு…எல்லா வாயுவுக்கும் அதுக்குண்டான மருந்தும் இருக்கே…வேதக்கோயிலானா ஆணும் பெண்ணும் கேறியெறங்கினா ஆரு கேக்குதது? நல்ல வாயு குளிகை வேங்கிக் குடும்வே நாடாரே…நீரும் ஒரு சீட்டுக்கு கையெறக்கியிருப்பிருல்லா?”. ”நீக்கம்புல போற கெளவி…நிக்கவச்சு பழையோலை சாத்தி சுடணும்…சீ போடீ”என்று டீக்கனார் பாய்ந்து ஓடையிலிறங்கி மறைவார்.

எல்லாருக்கும் நாணியைப் பயம்தான். நாணியின் சிறிய பெருச்சாளிக் கண்களுக்கு யாரும் தப்பமுடியாது. ”அம்மிணி கொஞ்சம் வெளுத்துப்போச்சே… மினுமினுப்புண்டு… சுண்டில எளம் சிரி…ஏமான் நாயரு திருவோந்தரம் வேலைக்கு போயி மாசம் ஆறாச்சுல்லா? ஏக்கோபு நாடான் பனைகேறவும் வாறான். வெத்தில போட்டா நாக்கு செவக்கியது ஒரு நல்ல லெச்சணமாக்கும். அதுபின்ன அதாக்குமே….மனுஷ ஜென்மம் சந்தோசமா இருக்கணும்… அதுக்காத்தானே மேல உள்ளவன் கொண்டியையும் தாழையும் உண்டாக்கி கீழ விட்டிருக்கான்? ஏது நான் சொல்லுகது?” என்று தேங்காயெண்ணை ஊற்றுவதுபோல மென்மையாக வழுக்கி உரிய இடத்துக்கு வந்துவிடுவாள்.

ஆனாலும் நாணியை எல்லாருக்கும் தேவை இருந்தது. நாணி இல்லாவிட்டால் நாலுகரையும் நடுவயலும் கோயிலும் கொண்ட ஊருக்கு ஒன்றோடொன்று தொடர்பே இல்லை. பெண்சமைதல்கள், காதல்கள், பெண் தேடுதல்கள், கல்யாண நிச்சயங்கள், கொடுக்கல் வாங்கல்கள், மறுவீடுகள், சீர்செய்வதன் சிக்கல்கள், ஏக்கக்கொடைகள், மசக்கை, பிரசவம், குழந்தையின் சாடைகள், கள்ளக்காதல்கள், கருக்கலைப்புகள் என்று நாணி சுமந்துசெல்லும் தகவல்களுக்கு எல்லையே இல்லை. ஊரின் அயல்மகரந்தச் சேர்க்கையை நிகழ்த்தும் கொங்குத்தேர் வாழ்க்கை அஞ்சிறை தும்பி.

”அம்மிணியே இம்பிடு தேங்கா துருவிப்போட்டு கொஞ்சம் வெள்ளம் எடுக்கணும்.. கருப்பட்டி இருக்கா?” என்று கேட்டால் சுடச்சுட கஞ்சி கும்பாநிறைய வந்தாகவேண்டும். இதைத்தவிர அடிக்கடி அன்பளிப்புகள். செய்தியின் கனத்தை பொறுத்து. ”….அப்டி கெடக்கு நாடு… என்னத்தச் செல்லி என்ன எடுக்க… ஒண்ணும் கேக்காதீய. ஒரு மூணுரூவா இருந்தா எடுக்கணும் அம்மிணியே. பல்லு நோவு சகிக்கக் களியல்ல… மேலேக்காவு அய்யரிட்ட சூர்ணம் வல்லதும் உண்டோண்ணு கேக்குதேன்” மறுக்க முடியாது. மறுத்தால் நாலைந்து நாள் நாணி அந்தப்பக்கமாகச் செல்வதில்லை. முதல் மூன்றுநாள் செய்தி இல்லாமல் வரும் நிலைகொள்ளாமை. நாலாம்நாள்முதல் நாமே செய்தி ஆகிவிட்டோமா என்ற பீதி. அது ஊறியபின் நாணி அவ்வழியாக அவசரமாக வேறு இடம் செல்வாள். ”நாணியே…என்ன கண்ணுலயே காணுகதுக்கில்லியெ?” ”ஓ, நம்மள ஆரு கண்டா என்ன, காணல்லேண்ணா என்ன? சாவுகதுக்கு மாட்டாம நாம அலையுதோம்… ஒரு பல்லுவேதனைக்கு சூர்ணம் வேங்கணுமானா இப்பம் அஞ்சு ரூவா வேணும். எங்கிண போயி கேக்குதது? இந்நா கெடக்கேன் சாவும் வராம… போறேன் அம்மிணியே.. நாலு வீடு எரந்தாத்தானே நமக்கு கஞ்சி?” ”நீ கேறி வா நாணியே… பணத்துக்கு நாம வழி உண்டாக்குவோம்”

நாணியச்சியின் நுண்ணோக்கும் கற்பனை வளமும் இரு தளங்களைச் சேர்ந்தவை. ஒன்று சின்னஞ்சிறு தகவல்களில் இருந்து செய்திகளை ஊகிப்பது. அதாவது பேனில் அவதரிக்கும் பெருமாள். இரண்டு செய்திகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து தொடர் செய்தியாக்குவது. அதாவது மொட்டைத்தலை முழங்கால் கோட்பாடு. எதிலும் செய்தி உறங்குகிறது. ”… அம்மிணியாணை அம்மிணியே, நான் கள்ளம் சொல்ல மாட்டேன்..நான் கண்ணு கொண்டு கண்டதாக்கும். நான் கேறிவாற நேரத்தில அந்நா அந்த குட்டி நிண்ணு ஓக்கானமிடுதா… அவ அம்மை நிண்ணு இடுப்பு தடவுதா… என்னைக் கண்டதும் ஒண்ணு பம்மினா… நான் என்னத்துக்கு இதையெல்லாம் போயி சொல்லுதேன்? நமக்கு என்னத்துக்க கேடு? ஆரு ஆருகிட்ட கொளுவி என்னத்த வாங்கி வச்சா எனக்கென்ன? உண்டாக்கினவ அளிப்பா. என்ன சொல்லிதீய?” ”ஆரு நாணியே? ராதாமணியா? டைப்பு படிக்கப் போறாளே அவளா?”. ”என்னத்த டைப்பு அடிச்சாளோ, ஆரு அடிச்ச டைப்போ? நமக்கென்னத்துக்கு? நாம நம்ம சோலிய பாத்து கிஷ்ணா ராமாண்ணு ஜீவிச்சுதோம்…”. ‘

‘சும்மா அபவாதம் சொல்லாத நாணியே… பிள்ளை ஒரு துண்டு சக்கையோ மாங்கையோ திண்ணு வயத்துக்குப் பிடிக்காம ஆயிருக்கும்…. அது வச்சு நாக்கெடுத்து வளைச்சு சொல்லிப்போடுகதா? இப்பம் இவளுக்கும் முந்தா நேத்து ஒரு வயறுகடியும் ஓக்கானமும். கேட்டா சக்கைக்குரு சுட்டு தின்னிருக்கா… ” சொல்லிவரும்போதே பங்கஜவல்லி மாமிக்கு உறைத்து, நாக்கு கடிபடுகிறது. நாணியின் கண்களுக்குள் ஒரு சிறு ஒளிவந்து உடனே அணைந்து விடுகிறது. ”சீ ! செண்ணு நாக்க கழுவணும் அம்மிணியே… ஆருகிட்ட ஆர நிறுத்தி பேசுகது? எனக்க தங்கம் இப்பம் குருத்த பட்டு வாழையெலையில்லா? அந்த மூதேவிகிட்ட எனக்க தங்கக்கொடத்தை உபமானம் சொன்னா பின்ன நான் ஆரு என்னாண்ணு பாக்க மாட்டேன்…”. நாணி சீறியபின் உஷாதேவியக்காவுக்கு திருஷ்டி முறித்துவிட்டு ”நான் என்னத்துக்கு இல்லா வசனம் சொல்லுகேன்? எனக்கு என்ன கேடு? பின்ன நான் வாறப்ப என்னத்துக்கு அவ அம்மை ஓடி ஒளிச்சா பிள்ளயையும் வலிச்சுகிட்டு? அது போட்டு… ஏந்தின பாத்திரம் எறக்கும். எல்லா பூட்டுக்கும் உடைய தம்புரான் தாக்கோலும் செய்திருப்பானுல்லா? கொலையானைக்கும் அதுக்கான கம்பும் கொண்டு பாகன் வாறானே… நல்லா இருக்கட்டும்… நான் வாறேன் அம்மிணியே சோலி கெடக்குல்லா? ஒரு அஞ்சு ரூபா எடுக்கணும் அம்மிணியே… கெளவனுக்கு நல்ல சுகமில்ல. இருந்து சுமைக்குதான்…” ஐந்தென்ன அம்பது கொடுக்காமல் இருக்க முடியாது. மூன்றாம் நாள் தகவல் வளர்ந்திருக்கும்.

”எனக்க மண்டைக்காட்டு பகவதியாண சத்தியம் அம்மிணீ… இது நான் கண்ணு கொண்டு கண்டதாக்கும். நான் போறப்ப அந்த தெங்குக்க மேலே இருக்கது ஆரு? நம்ம லாரன்ஸுப்பய… அவனைக் கண்டப்பவே நான் எண்ணி வச்சதாக்கும். அவனுக்க நிப்பும் நடப்பும் படுவரும்… அவனையெல்லாம் நிக்க வச்சு சுடணும்.. குடும்பம் கலக்கி… பாவப்பெட்ட பெண்ணுகளுக்க ஜீவிதமில்லா வச்சு களிக்கான்? இதைக்கேக்க இங்கிண சாமியில்லியே… போட்டு.நமக்கென்ன? நம்ம சோலி உண்டு நம்ம வவுறுண்டு… பின்ன தவளை பாம்புக்குள்ள தானே கேறாதுல்லா? அதுவும் நாம பாக்கணுமே…” அடுத்தநாள் அடுத்த செய்தி. ”அம்மிணியே கேட்டுதா இந்த லாரன்சுப்பய நேத்து சர்காராசுபத்திரிக்குப் போயி ஊசி போட்டிருக்கான்…சீக்குல்லா? அந்தக்குட்டிக்க கெதி இனி என்னமோண்ணு நெனைச்சா எனக்கு சங்கு கலங்குது. அம்மிணி கேட்டிருக்கியளா நம்ம ஒலப்பறம்புல கிரேஸியம்மைய? அவளுக்கு வால்பாறை எஸ்டேட்டில இருந்து சீக்கு கிட்டிப்போச்சு…சாம்பல்குழியில கெடக்கப்பட்ட நாயி போலயில்லா நரகிச்சு செத்தா? ஓரோ விதி..”

நாணியம்மையை வாயடைக்கச் செய்ய யாராலும் முடிவதில்லை. அவளை பலர் அடித்திருக்கிறார்கள். அவளை அடிப்பது பீயில் கல்லைவிட்டெறிவது போல என்பார்கள். அவளுக்கு அது இன்னும் சூடான செய்தி. ”இந்த அநியாயத்த கேட்டுதா அம்மிணியே? அந்த கோரோயில் முருகனும் மண்டைக்காட்டு பகவதியும்தான் நிண்ணு கேக்கணும்… அவன் என்னை நிறுத்தி அடிச்சுப்போட்டான்… அவனுக்க பெஞ்சாதியப்பத்தி நான் இல்லாவசனம் சொன்னேன்னு சொல்லுகான்… நான் என்ன சொன்னேன்? அவளுக்கு வாளை மீனு இஷ்டம். இவனுக்க நெத்தோலி அவளுக்கு வேண்டாம்… நானா சொல்லுகேன்? திண்ண சோற நீ கையிலயும் காலிலயும் வச்சிருக்கேல்லா? அந்த ஊற்றத்தை வேற எடத்துல கொண்டுட்டு போறதுக்கு வல்ல மருந்தோ மாயமோ உண்டுண்ணாக்க செய்யி… அதில்லாம நடக்கமுடியாத கெளவிய அடிக்க வந்தா உனக்க கை புளுக்காதா?” ”அப்பம் சங்கதி அதாக்கும் இல்லியா நாணியே?”என்று கேட்கும் அக்காக்களின் கண்களில் என்ன ஒளி.

நாணிக்கு தெரியாத உலக விஷயங்கள் கிடையாது. ”பாம்பு பத்தியெடுத்தா கொறே நேரம் நிண்ணு ஆடிட்டுல்லா கொத்தணும் அம்மிணியே? அதுக்கு வளியிருக்கு. நல்ல காஞ்சிரம் சாறெடுத்து கொஞ்சம்போல கடுகும் குறுந்தோட்டியும் சேத்து காய்ச்சி பசையாக்கி பூசி விட்டா பின்ன அது ஆசானுக்க செலம்புக்கம்புல்லா? நிண்ணு மடங்குமா? காட்டுபொத்தையில சங்கரனுக்கு கரும்பனைமாதிரி பெஞ்சாதி நாலாக்கும். பின்னையும் அவனுக்கு நெறையல்ல. காஞ்சிரம் களிக்குத களி… காஞ்சிரத்தில் சாறெடுத்து கடுகொடு தோட்டிவேரில் காய்ச்சினால் காண்பாயடீ காஞ்சனப்பூமகளே… அதாக்கும் கதை” ‘குட்டிக்கூரா’ அப்புபோத்தி போகாத இடமில்லை. ஆனால் போத்தியைப்பற்றி நாணி வாயே திறப்பதில்லை. ”அதெந்து களி போத்தியே?” என்று கோபாலன் நாயர் கேட்டார் ”இந்த நுயூஸ் பேப்பர் கொண்டு மனுஷனுக்கு ஜீவிக்க வழியில்லாம கெடக்கே? போத்தியக்கண்டா அவ பம்முதாளே? என்னவாக்கும் சங்கதி ?”

”அது ஒரு ரகசியமிருக்கு மக்கா. அதைச்சொன்னா பின்ன அது அங்காடிப்பாட்டாக்குமே? அந்த வெடி நம்ம கையில இருக்கப்பட்ட வரைக்குமுல்லா யட்சி நம்ம ரெத்தம் குடிக்காம போவா?” போத்தி கடைசிவரை ரகசியத்தைச் சொல்லவேயில்லை. நானும் போத்தியும் ‘தஙகமலைரகசியம்’ பார்த்துவிட்டு நள்ளிரவில் திரும்பிக் கொண்டிருக்கும்போது போத்தி யாருக்கும் தெரியாமல் ஓடைக்குள் சென்று ஒரு மிடறு ‘மோந்தி’ விட்டு வந்தார். நல்ல ஏப்பங்களாக வந்துகொண்டிருந்தன. ”இந்த சாதனத்தில உள்ள சொகம்ணாக்க இந்த ஏப்பமாக்கும் மக்கா…எனக்கு சக்கைக்குரு பிடிக்கும் கேட்டியா? சுட்டு தின்னா பின்ன ஒருநாள் முழுக்க நல்ல எதமான குசு விட்டு ரெஸிக்கலாமுல்லா?” போத்தி சொன்னார். அங்காலமுக்கு வருவதற்குள் அவரில் மெய்ஞானம் ஓங்க ஆரம்பித்துவிட்டது. ”மக்கா சொல்லுகேண்ணு தப்பா நெனைக்காதே…நான் உனக்கு மூத்தவன். உனக்க அப்பன் எனக்கு கொறே நல்லது செய்திட்டுண்டு. நீ எனக்க தம்பி மாதிரியாக்கும். அதனால சொல்லுகேன்” ”சொல்லுங்க போத்தி..” ”லே மக்கா ஜீவிதம் ஒரு பொகையாக்கும் கேட்டியா? பொகை”‘ அந்த தத்துவம் வழியாக வெகுதூரம் சென்றார் போத்தி.

வாழ்க்கை ஒரு புகை. எது எரிந்தாலும் புகை வரும். ஆனால் எல்லா புகையும் ஒன்றுதான். புகை பெரிய மலைபோல தெரியும் ஆனால் அதற்கு உடம்பே இல்லை. புகை நம் கண்களை மறைத்து உண்மையான மலையையே காணாமல் ஆக்கிவிடும். புகை என்பது உடல்நலத்துக்கு தீங்கானது. ஆனால் சொக்கலால் ராம்சேட் பரவாயில்லை. ப்ளேசர் சிகரெட் உத்தமம். கத்திரி மார்க் சுமார். செய்யது, காஜா போன்றவை துலுக்கர்கள் செய்பவை. குலநாயர்களும் பிராமணர்களும் கையால் தொடக்கூடாது. ஆனால் குளிருக்கு அவசரமென்றால் பிடிக்கலாம். செய்யது பீடி சிறப்பாக மலம் வரவழைக்கும். காரணம் அதற்குக் காரம் அதிகம். ஆகவே என்ன சொன்னேன், வாழ்க்கை என்பது ஒரு புகை… ”நான் ஒரு கிண்ணனாக்கும்னாக்கும் ஊருக்குள்ள பேச்சு… என்னத்த கிண்ணன்? லே மக்கா, குருடன் மாமரத்துல கல்லெறிஞ்சதுபோலயாக்கும். சிலசமயம் வாடலோ காக்கா கொத்தினதோ வந்து விளும். கல்லுவந்து தலையில விழுத கதையாக்கும் கூடுதல். ஒண்ணு சொல்லுகேன் கேட்டுக்கோ. இந்த பொம்பிளவீரனுக சொல்லுகது முக்காலும் பச்சப்பொய்யாக்கும். பாதி இவன் நெனைச்சு உண்டாக்கி சொல்லி பரப்புகது. மீதி இவனுக்க மேல மத்தவனுக கேற்றி வைக்குதது. பொம்பிளைவீரனுக பத்துபேரு அவன் கண்ட அனுபவங்களை சத்தியமாட்டு வெளிய சொன்னான்னாக்க நாட்டுல உள்ளவனுக எல்லாவனும் நல்லவனாகிப் போடுவாண்டே… நக்குத நாய்க்கு நாப்பதெடத்துல கல்லெறியும் ஒரெடத்தில எச்சில் எலயும் தான் கிட்டும்…என்ன சொல்லுதே? நான் வாரியலால அடி வேங்கியிருக்கேன்டே… அது எந்த மன்மதனா இருந்தாலும் மகாராஜாவா இருந்தாலும் பொம்பிளைக்கா எறங்கினா செருப்படி உறப்பாக்கும்…”

போத்தி நடுச்சாலையில் குந்தி அமர்ந்து தேம்பி அழ ஆரம்பித்தார். என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் நகம் கடித்தபடி நின்றேன். ”போத்தி வரணும்..” என்று பலமுறை அழைத்தேன். அவர் எழுந்து கண்களை துடைத்துக் கொண்டு ஒரு பீடி பற்றவைத்தார். ”போத்தியை நம்ம நூஸ் பேப்பர் ஒண்ணுமே செய்யுகதில்லையே” என்றேன். ”என்னவாக்கும் மந்திரம்?” ”மந்திரமும் இல்ல மயிரும் இல்ல. நம்மப்பத்தியும் சொல்லிட்டு அலைஞ்சாள். ஓடையில அவள மறிச்சு அவளுக்க சீலையை பிடிச்சு உரிஞ்சேன்…அதுக்குப்பிறவு பொத்திகிட்டா” ”ஏன்?” ”அவளுக்க சங்கதி எனக்கு தெரிஞ்சுபோச்சுல்லா? ” ”என்ன சங்கதி?” போத்தி சிரித்தார். என்னைப்பார்த்துவிட்டு பீடிப்புகையை ஊதிவிட்டபின் இடுப்பில் கை வைத்து பயங்கரமாகச் சிரித்தார் ”அதுவா? அவளுக்கு நாணப்பன்னு ஒரு தம்பி உண்டு…அவன நான் பாத்தேன்…”

மறுபிரசுரம்/முதற்பிரசுரம் Nov 30, 2001 

*

முந்தைய கட்டுரைபிரபுத்தபாரதம்
அடுத்த கட்டுரைபகற்கனவின் பொன்