சாதாரண வாசிப்பிலிருந்து இலக்கிய வாசிப்புக்கு

பிளஸ்டூ விடுமுறையில் சைதன்யா வாசித்துத் தள்ளிக்கொண்டிருக்கிறாள். ஆங்கில இலக்கியத்தில்தான் பட்டப்படிப்பு என அவளே முடிவு எடுத்துவிட்டதனால் போட்டித்தேர்வுகள் மற்றும் பயிற்சிகள் இல்லை.

ஒரு பதின்பருவ வாசகி இலக்கியத்துக்குள் நுழைவதை அருகிருந்து பார்ப்பதென்பது நுண்ணிய அவதானிப்புகள் சிலவற்றை சாத்தியமாக்குகிறது. நம் வாசிப்பின் பரிணாமமும் அதன் இடர்களும் தெளிவாகப் பிடிகிடைக்கின்றன.

நித்ய சைதன்ய யதியின் வழிகாட்டல் ஒன்று உண்டு. குழந்தைகள் குழந்தை இலக்கியத்தையும், இளமைக்கால எழுத்துக்களையும் தாண்டிவிட்டால் அவர்கள் வணிக இலக்கியத்துக்குள் நுழைவதற்குள் தரமான இலக்கியங்களை, நடை நேரடியாக இருக்கக்கூடிய பேரிலக்கியங்களை அறிமுகம் செய்வதே உகந்தது. அவை இலக்கிய அடிப்படைகளை எல்லாம் அவர்களுக்கு அறிமுகம் செய்துவிடும். ஓர் இலக்கியப்படைப்பில் எதிர்பார்க்கவேண்டியதும் அடையவேண்டியதும் என்ன, அதை வாசிப்பதற்கான மனத்தயாரிப்பு என்ன எல்லாமே தெளிவாகிவிடும்.

கிறிஸ்டோபர் பாவோலினி

மாறாக வணிக இலக்கியத்துக்குள் நுழைந்தால் அவ்வெழுத்து உருவாக்கிய மனஅமைப்பையும் வாசிப்புமுறையையும் உடைத்து மீண்டு இலக்கியத்துக்குள் நுழைவது பெரிய அறைகூவல். ஒரு பெரிய சுயநிராகரிப்பு அதற்குத்தேவையாகிறது. நம்முடைய இளம் இலக்கிய வாசகர்கள் பலர் இலக்கியம்பற்றிக் கேட்கும் ஏராளமான வினாக்கள் உண்மையில் இந்த இடறலில் இருந்து வருபவைதான். ‘இலக்கியம் ஏன் விறுவிறுப்பாக இல்லை?’ ’ஏன் புரியாம எழுதணும்?’ போன்றவை அவ்வரிசையின் தொடக்கக் கேள்விகள்.

அத்துடன் இளமைக்கே உரிய தன்னகங்காரமும் சேர்ந்துகொள்கையில் அந்த சுயநிராகரிப்பு மிகமிக அரிதாகிறது. பெரும்பாலான இளம் வாசகர்களின் விவாதம் என்பது தன்னகங்காரத்தை முன்வைத்து விவாதிப்பதுதான். ‘நான் அயன்ராண்டை வாசித்து ரசித்திருக்கிறேன். அயன்ராண்ட் இலக்கியவாதி அல்ல என்றால் நான் என்ன முட்டாளா’ என்ற வரியைத்தான் அயன் ராண்டை இலக்கியவாதி என நிறுவமுயலும் இளம்வாசகன் செய்கிறான். பெரும்பாலான இளம்வாசகர்கள் அவர்களின் முதிராவாசிப்பை ‘பாதுகாக்க’ கடுமையாக முயல்வதைக் காணலாம். விவாதத்தில் ஈடுபடத் தெரியாத நிலையில் நக்கல் கிண்டல் என இறங்குவார்கள்.

அந்த மாயத்திரையைக் கிழித்து தன்னை மறு ஆக்கம் செய்துகொள்ளும் வாசகர்கள் மிகச்சிலர். பெரும்பாலானவர்கள் அந்த ஆரம்பநிலை வாசிப்பிலேயே கடைசிவரை நீடிக்கிறார்கள். எழுபதுவயதுவரை சின்னவயதில் வாசித்த கல்கியை சொல்லிக்கொண்டிருப்பவர்கள்தான் நம்மில் பெரும்பாலானவர்கள். இப்போது முப்பதை ஒட்டிய வயதுள்ளவர்கள் சுஜாதாவை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள், கடைசி வரை சொல்வார்கள்.

சுயநிராகரிப்பு மூன்றுவகையில் நிகழும். ஒன்று அவர்கள் உண்மையிலேயே மதிக்கும் ஒரு பெரிய ஆளுமையால் அவர்கள் உடைக்கப்படுவார்கள். அதனூடாக மறுபரிசீலனைக்குச் செல்வார்கள். அல்லது அவர்களின் வாழ்வனுபவங்கள் அவர்களை நேரடியாக முதிர்ச்சியை நோக்கிக் கொண்டுசெல்லும். மிக அபூர்வமாக ஆழமான ஒரு பேரிலக்கியத்தை ஏதோ காரணத்துக்காக தற்செயலாக வாசித்து அகம் திறக்கப்படுவார்கள்.

ஆனால் அந்த சுயநிராகரிப்பு நிகழாதவர்கள் முக்கியமான இலக்கியவாதிகளை வாசிக்கையில் சலிப்பு, களைப்பு, எரிச்சல் போன்றவற்றையே அடைகிறார்கள். மிக எளிய நடையில் நேரடியாக எழுதும் அசோகமித்திரன் ‘டல்லா எழுதறார்’ என்று சொல்லி எனக்கு தினம் ஒரு கடிதம் வந்துகொண்டிருக்கிறது!

ஜான் கிரிஷாம்

ஒன்பதாவது விடுமுறையில் சைதன்யா Eragon (Christopher James Paolini) என்ற நாவலை பாதிவாசித்து ’போர் அடிக்குது’ என்று விட்டுவிட்டபோது அவளுக்கு தல்ஸ்தோயின் போரும் அமைதியும் நாவலின் signet classics edition-ஐ அளித்தேன். ஒருமாதத்தில் அவள் அதை முழுமூச்சாக வாசித்து முடித்தாள். அதன்பின் தல்ஸ்தோயின் அனைத்து நாவல்களும். அத்துடன் வாசிப்பு பற்றிய எல்லா பயிற்சிகளும் அவளுக்குக் கிடைத்தன.

இந்தவிடுமுறையில் அவளுக்காகவே எழுதப்படும் முதற்கனல் நாவலை பத்துநாட்களில் வாசித்து முடித்தாள். அடுத்து சற்று இளைப்பாறட்டும் என ஜான் க்ரிஷாமின் testament என்னும் நாவலை அளித்தேன். நூறுபக்கம் தாண்டமுடியவில்லை. ‘போட்டு அறுக்கிறாரு’ என்றாள். ஆச்சரியமாக இருந்தது. சரி என்று டெஸ்மண்ட் பேக்லியின் fly away நாவலை கொடுத்தேன். ‘போப்பா…ஒரே ஃபார்முலா. போர்’ என்றாள்.

Bore என்ற சொல்லின் பொருளே புரியவில்லை. யோசித்துவிட்டு ஆல்டஸ் ஹக்ஸ்லியின் Brave new world ஐ கொடுத்தேன். ‘நல்லா இருக்கு….ஆனா கொஞ்சம் பழசா தெரியுது’. வியந்தபடி இவான் துர்கனேவின் முதல்நாவலான Rudin ஐ கொடுத்தேன். ‘சூப்பர்பா!’ நான் சற்று ஐயத்துடன் ‘பழசா இல்லியா?’ என்றேன். ‘இல்லியே. இப்ப பலபசங்க இப்டித்தான் இருக்கானுக… என் ஃப்ரண்டு ஒருத்தனோட அண்ணாகூட இதே கேஸ்தான்..’

ரூடின் என்ற கதாபாத்திரத்தின் குணச்சித்திரத்தை மட்டுமே சொல்லக்கூடிய ஒருநாவல் அது. அவன் ஒரு நிலையற்று அலையும் கனவுஜீவி. எதையும் முழுமைப்படுத்த முடியாதவன். மற்றபடி கதை என்றோ பரபரப்பான நிகழ்வுகள் என்றோ ஏன் தொடர்ச்சியான ஓட்டம் என்றோ அதில் ஏதுமில்லை. பரபரப்பான நிகழ்வுகள் மட்டுமே கொண்ட நாவல்களை போர் என்று சொன்னவளுக்கு இது ஏன் சலிப்பூட்டவில்லை?

அதைப்பற்றிப் பேசினேன். அந்த பரபரப்பான நிகழ்வுகள்தான் சலிப்பூட்டுகின்றன என்றாள். அந்த நிகழ்ச்சிகளில் தானும் பங்குகொள்ளும் அனுபவமே இல்லை. ‘ரூடின் வாசிக்கிறப்ப அந்த ரஷ்யகிராமத்திலே நாமும் இருக்கிற மாதிரி இருக்கு. ஜான்கிரிஷாம் என்னமோ சொல்லிட்டே போறார். ஒருத்தர் பேசிட்டே ஓடுற மாதிரி இருக்கு’ என்றாள்.

அதுதான் வேறுபாடு. ஜான் கிரிஷாம் போன்றவர்கள் சரசரவென நிகழ்ச்சிகளாகச் செல்லும் தொடர் ஓட்டத்தை உருவாக்குகிறார்கள். எதையும் நுட்பமாகச் சொல்வதில்லை. நிலக்காட்சிகள், சூழல்கள், மனித மனஓட்டங்கள் எதுவுமே இல்லை. அவை கதையின் வேகத்தைக் குறைக்கும் என்பதனால் அவற்றை மிகச்சுருக்கமாக ஒரிரு வரிகளில் சொல்லி கதையை முன்னெடுக்கிறார்கள். உலகமெங்கும் வணிக எழுத்தின் விதிகளில் முதன்மையானது இதுவே – நுண்மைகள் இருக்கலாகாது.

இரண்டாவதாக, அவர்கள் வாசகன் ஊகிப்பதற்காக ஒரு மர்மத்தை அல்லது சிக்கலை விட்டுவைக்கிறார்கள். கால்பந்தாட்டத்தில் வீரர்கள் பந்தை தட்டிச்செல்வதுபோல அந்த மர்மத்தை அல்லது சிக்கலை மட்டும் அனைத்துக் கதைமாந்தர்களும் தட்டித்தட்டி கொண்டுசெல்கிறார்கள். அந்தப் பந்து எங்கே எப்படிச் சென்று விழும் என்பதுதான் வாசகனின் பதற்றத்தை அதிகரித்து அவனை கடைசிவரை வாசிக்கச்செய்கிறது.

அந்தப்பதற்றமும் ஆர்வமும் நீடிக்கவேண்டுமென்றால் அதில் மட்டும் வாசகக் கவனம் நிற்கவேண்டும். அதைத்தவிர அனைத்துமே குறைந்த அளவில் மட்டும் சொல்லப்பட்டிருக்கவேண்டும். ஒவ்வொரு கதைமாந்தரிலும், கதைத்தருணத்திலும், விவரணையிலும் வாசகன் கண்டுகொள்ளும் நுட்பம் என ஏதும் இருக்கக்கூடாது. இது இரண்டாவது விதி – மறைபிரதி என ஏதும் இருக்கக்கூடாது.

இலக்கியப்படைப்பு இவ்விரு விதிகளுக்கும் நேர் எதிரானது. அது நுண்மைகளால் மட்டுமே தொடர்புறுத்துவது. மறைபிரதியை முதன்மையாக முன்வைப்பது. இலக்கியப்படைப்பு அதன் வாசகனை அத்தனை வரிகளிலும் நுட்பங்களை கவனிக்கும்படிச் சொல்கிறது. சொல்லப்படாத மறைபிரதியை அவன் கற்பனைசெய்யக் கோருகிறது. ஆகவே அவன் அந்த நூலில் ஒரு கதாபாத்திரம்போல அதற்குள் சென்று அந்த வாழ்க்கையை வாழ்கிறான். ஒரு சகஆசிரியன் போல புனைவில் பங்கெடுக்கிறான்.

இக்காரணத்தால்தான் இலக்கியவாசகன் பரபரப்பு நாவல்களை வாசிக்கையில் ஏமாற்றமும் சலிப்பும் அடைகிறான். ‘நாற்பது பக்கம் வாசித்தாகிவிட்டது, ஒன்றுமே கிடைக்கவில்லை, அந்த மர்மம் மட்டும் விரைந்து முன்னால் ஓடுகிறது’ என்று எண்ணுகிறான். அவனுடைய கற்பனைக்கோ புனைவுத்திறனுக்கோ அங்கே இடமில்லை. அங்கிருப்பது ‘தெரிந்துகொள்ளும்’ ஆர்வம் மட்டுமே. தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை நிறைவுசெய்த ‘டாவின்ஸிகோட்’ சைதன்யாவை ஓரளவு கவர்ந்தது என்பதை நினைவுகூர்கிறேன்.

இவான் துர்கனேவ்

வணிக எழுத்து என்பது பெருமளவிலான வாசகர்களிடம் சென்று சேர்ந்தாகவேண்டியது. அவர்களில் சிறிய அளவினரே சொற்களைக்கொண்டு கற்பனைசெய்துகொள்ளும் மனஅமைப்பு கொண்டவர்கள். அவர்களுக்கே எழுத்திலிருந்து சித்திரங்களை உருவாக்கிக்கொள்ளமுடியும். அனுபவங்களை அடையமுடியும். பிறர் வெறுமே தெரிந்துகொள்கிறார்கள், புரிந்துகொள்கிறார்கள். அவர்களுக்காகவும் எழுதப்படுவதனால் வணிக எழுத்துக்கள் எப்போதுமே ஒருவகை கறாரான நடைமுறை நடையில் [சுந்தர ராமசாமியின் சொற்களில் சொல்வதென்றால் matter of fact மொழியில்] பேசுகின்றன. அவற்றை நல்லவாசகன் வாசிக்கையில் அவனுக்கு கற்பனையைத் தூண்டும் எதுவும் கிடைப்பதில்லை. தொடர்ந்து நிகழ்ச்சிகளை வாசிப்பதும் மளிகை அட்டவனையை வாசிப்பதும் அவனுக்கு சமம்தான்

நம்முடைய இளம்வாசகர்களில் பெரும்பாலானவர்கள் எடுத்த எடுப்பிலேயே பரபரப்பு வாசிப்புக்கு பழகிவிட்டிருக்கிறார்கள். ஆகவே ‘அடுத்தது என்ன?’ என்ற மனநிலையை அடைந்து புனைவுகளை வாசிக்கிறார்கள். இலக்கியவாசிப்பில் ஒருபோதும் வரக்கூடாத மனநிலை என்பது அதுவே. பொறுமையற்ற, உதாசீனமான வாசிப்புபோல இலக்கியத்தை அவமதிப்பது ஏதுமில்லை—கண்களை மூடிக்கொண்டு ஓவியத்தை தடவிப்பார்ப்பது போன்றது அது.

அடுத்தது என்ன என்று எப்படி நாம் பார்க்கிறோம்?. ஒரு புனைவுப்பரப்பில் உள்ள நூற்றுக்கணக்கான விஷயங்களில் ஏதேனும் ஒன்றை மட்டும் நாம் கவனிக்கிறோம். மற்ற அனைத்தையும் விட்டுவிட்டு அது மேற்கொண்டு என்ன ஆகிறது என்று மட்டும் கவனித்து வாசித்துச் செல்கிறோம். விளைவாக அப்புனைவுப்பரப்பில் ஒரே ஒரு துளி மட்டுமே நமக்குக் கிடைக்கிறது. மற்றவை விடப்படுகின்றன. அத்தகையவாசிப்பு அப்படைப்பை அவமதிப்பதுதான்.

புனைவை வாசிக்கையில் அதன் அத்தனை நுட்பங்களையும் அள்ள நினைப்பவனே நல்ல வாசகன்.

1. அதிலுள்ள நிலக்காட்சிவிவரணைகளை அவன் தன் கனவால் விரித்து அங்கே வாழத்தொடங்க வேண்டும்.

2..கதைமாந்தர்களின் இயல்புகளைப்பற்றிய விவரணைகளை கவனித்து அவர்களை உண்மையான மனிதர்களைபோல கண்முன் காணவேண்டும்.

3. உரையாடல்களை கூர்ந்து பார்த்து அவற்றின் வழியாக அந்தக்கதாபாத்திரங்களின் மனம் எப்படி வெளிப்படுகிறது என்று பார்க்கவேண்டும்.

4. அப்புனைவுப்பரப்பில் வெளிப்படும் குறியீடுகளையும் படிமங்களையும் தன் கற்பனையால் பொருள்கொள்ளவேண்டும்

இவ்வளவையும் அந்த ஒரு புனைவுப்பரப்பில் செய்து கொண்டு முன்னகரும் போதே கொஞ்சம் கொஞ்சமாக அப்புனைத்தளங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து தன் மனதில் அந்த பெரிய புனைவுவெளியை உருவாக்கிக்கொண்டுவிடவேண்டும். உண்மையான வாழ்க்கைக்கு நிகரான ஒரு வாழ்க்கையனுபவமாக அதை ஆக்கிக்கொள்ளவேண்டும். அதுவே இலக்கிய வாசிப்பு.

இப்படிச் சொல்லலாம். வேகமாக முன்னகரும் தன்மை என்பது ஒருவகையில் இலக்கியத்துக்கு எதிரானது. ஒவ்வொரு துளியிலும் வாசகனின் கற்பனைக்கும் சிந்தனைக்கும் வாய்ப்பளித்து முன்னகர்வதே இலக்கியம். அடுத்தது என்ன என முன்னால் தாவும் வாசிப்பிலிருந்து மீளாமல் இலக்கியத்தை வாசிக்கவியலாது.


மிகையுணர்ச்சி அலங்காரம் என்பவை

முந்தைய கட்டுரை‘சிவயநம’
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 62