புதியவர்களின் கதைகள் – பார்வைகளும் விமர்சனங்களும்[ பின்னூட்ட வசதியுடன்]

இந்த தளத்தில் தொடர்ச்சியாக பதினொரு எழுத்தாளர்களின் பன்னிரண்டு கதைகள் இதுவரை பிரசுரமாயின. அவை பல்லாயிரம்பேரால் வாசிக்கப்பட்டிருக்கின்றன.

இங்கே புதியவர்களின் கதைகளைப் பிரசுரிப்பதற்கான காரணம் முன்னர் நிகழ்ந்த ஒரு விவாதம்தான். சிற்றிதழ்கள் இன்று கதைகளை வெளியிடுகின்றன. ஆனால் சென்ற சிலவருடங்களில் சிற்றிதழ்களில் வெளியான எந்தக்கதையைப்பற்றியும் ஒரு கவனம் உருவானதில்லை. சொல்லப்போனால் சில கதைகளை நான் இந்தத் தளத்தில் சுட்டிக்காட்டியபோதே ஏதேனும் ஒரு கவனம் அவற்றுக்கு உருவானது. சிற்றிதழ் கதைகளை சிற்றிதழ் வாசகர்களேகூட கவனிப்பதில்லை என அவ்விதழ்களை நடத்துபவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

சிற்றிதழ்களில் தொடர்ந்து கதைகள் எழுதும் ஒருவர் அவ்விதழிலேயேகூட எதிர்வினைகளை எதிர்பார்க்கமுடிவதில்லை. கதைகளை வெறும் தந்திரங்களாக தரமிறக்கி அனுப்பினால் வணிக இதழ்கள் பிரசுரிக்கும். ஆனால் அவை அந்தவாரத்துடன் குப்பைக்கூடையை அடையும்.

கடைசி வழி என்பது இணையம். ஆனால் இணையத்தின் வாசகர்கள் பொதுவாக மேலோட்டமான ,சமகால விவாதங்களை மட்டுமே விரும்பக்கூடியவர்கள். 1999 வாக்கில் நான் இணையத்தில் நுழைந்த நாட்களில் இளையராஜா- ஏ.ஆர்.ரகுமான் விவாதம் சூடுபறக்க நடந்துகொண்டிருந்தது.இன்றும் அதுதான் இணையத்தின் தலையாய விவாதம். அது சார்ந்த எந்தக்கட்டுரைக்கும் முந்நூறு பின்னூட்டங்கள் வந்துவிடும். சினிமா தவிர சமகால அரசியல் வம்புக்கு சில எதிர்வினைகள் உண்டு

ஏனென்றால் தமிழகத்துப் பொதுவாசகனுக்கு ஏதேனும் சொல்வதற்கு இருக்கக்கூடிய தளம் அதுதான். பிற எதைப்பற்றியும் அவனுக்கு எதுவுமே தெரியாது. தெரிந்துகொள்ள ஆர்வமும் இல்லை. தெரியாதவற்றைப்பற்றிய இளக்காரம் என்பது ஒரு சமகால வழக்கமும் கூட.

இந்தப்பொதுப்போக்கை ஃபேஸ்புக் போன்றவை மேலும் ஊட்டி வளர்க்கின்றன. மேலோட்டமான எட்டுவரிக்குறிப்புக்கு இன்னும் மேலோட்டமான நான்குவரி எதிர்வினை என்ற வகையான அரட்டையே அங்கே சாத்தியம். அந்த மனநிலை அங்கே வேரூன்றும்தோறும் ஆழமான வாசிப்புக்கான மனப்பழக்கம் மேலும் சரிவு பெறுகிறது.இந்நிலையில் நீளமான படைப்புகளை, குறிப்பாகக் கதைகளை அதிகம்பேர் வாசிப்பதில்லை.

மேலும் இணையத்தில் எதுவும் வெளியாகுமென்ற நிலை இருப்பதனால் ஏராளமாக படிக்கக்கிடைக்கிறது. பெரும்பாலான எழுத்துக்கள் பயிற்சியோ படைப்பூக்கமோ இல்லாத முதிரா எழுத்துக்கள். அவற்றை ஓரிருமுறை வாசித்தவர்கள் மீண்டும் வாசிப்பதில்லை. ஆகவே தனிப்பட்ட வலைப்பூக்களில் கதைகள் கவனிக்கப்படுவதில்லை. இணைய இதழ்களின் கதைகளும் வாசிக்கப்படுவதில்லை

இந்த ஒட்டுமொத்த உதாசீனம்போல எழுதுபவனுக்கு ஆர்வத்தை அணைத்துவிடக்கூடிய சக்தி வேறில்லை. சென்ற கால அனுபவங்களில் இருந்து ஒன்று தெரிந்துகொண்டேன். கதைகளை நானோ அல்லது இன்னொரு இலக்கியவாதியோ சுட்டிக்காட்டினால் அவற்றை வாசிக்கிறார்கள். ஆகவேதான் இக்கதைகள் இங்கே வெளியிடப்பட்டன. எதிர்பார்த்தபடியே இவை பரவலாக வாசிக்கபட்டன என்பதை புள்ளிவிவரங்கள் காட்டின.

*

ஆனால் எதிர்வினைகள் எனக்கு ஏமாற்றம் அளித்தன. மொத்த எதிர்வினைகளும் இருபது பேருக்குள் இருந்து மட்டும்தான் வந்தன. அவை முக்கியமான எதிர்வினைகள். காரணம் அவர்கள் ஏற்கனவே நிறைய வாசிக்கக்கூடியவர்கள். நிறைய எதிர்வினையாற்றக்கூடியவர்கள். அவர்களில் சிலருக்கு நானே கதைகளை மின்னஞ்சலில் அனுப்பி எதிர்வினைகள் பெற வேண்டியிருந்தது மற்றபடி பரவலாக எதிர்வினைகள் எழவில்லை.

இணையத்தில் 1500க்கும் மேல் தொடர்பவர் வைத்திருக்கும் சிலர் இங்கே எழுதினார்கள். அவர்களுக்குக் கூட தனிப்பட்ட முறையில் பெரிய எதிர்வினைகள் வரவில்லை. அவரது நெருக்கமான நண்பர்கள்கூட கம்மென்று இருந்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். என்னுடைய இணையக்குழும நண்பர்களும் அமைதியாக இருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம். டிவிட்டரில் பகிரலாம். வாசகர்களும் நண்பர்களும் கூட அதைச்செய்யவில்லை. சொந்தக்கதையை பகிர்வதைத்தவிர இன்னொரு கதையை எவருமே பகிரவில்லை என்று கேள்விப்பட்டேன். இங்கே வந்து வாசித்துச்சென்றவர்களில் பத்துசதவீதம்பேர் கதைகளைப்பற்றி பேசியிருந்தால்கூட இணையத்தில் இவ்வெழுத்தாளர்கள் கவனிக்கப்பட்டிருப்பார்கள்.

ஏன் யாரும் பேசுவதில்லை? ஒன்று, பேசத்தெரியவில்லை. நன்றாக இருக்கிறது, அவ்வளவாகச் சரியாகவரவிலலை என்பதற்குமேலாக எவருக்கும் எதுவும் சொல்லத்தெரியவில்லை. ஆகவே சும்மா இருக்கிறார்கள். அது ஓரளவு உண்மை.அத்துடன் வேறு ஏதோ ஒன்றும் உள்ளது. அது ஆரோக்கியமான மனநிலையே அல்ல. அந்த மனநிலையில் உள்ள கீழ்மையைப்பற்றி நாமே நம்மை விசாரணை செய்துகொள்ளவேண்டும்.

*

இன்னொன்று என் கவனத்தில் வந்தது. கிட்டத்தட்ட நூற்றுநாற்பத்தெட்டு கதைகளை வாசித்தேன். கதைகளை அனுப்பியவர்கள் அறுபத்திரண்டுபேர். அவர்களில் நான்குபேர் மட்டுமே வேறுகதைகளை வாசித்து ஏதேனும் எதிர்வினையாற்றியிருக்கிறார்கள். பிறர் மற்ற கதைகளை வாசித்தார்களா என்பதே சந்தேகம்தான்

நான் வாசிக்க நேர்ந்த கதைகளில் நூறுக்கும் மேல் கதைகள் மிக மிக ஆரம்பநிலையில் உள்ள ஆக்கங்கள். தொடர்ச்சியாகக் கதைகளை வாசிப்பவர்கள் அப்படிப்பட்ட கதைகளை எழுதினாலும் பொதுப்பிரசுரத்துக்கு அனுப்பமாட்டார்கள். ஏன் இந்த தரச்சரிவு என யோசித்தபோது அதற்கும் இவ்வாறு வாசிக்காமல், எதிர்வினையாற்றாமல் இருப்பதற்கும் தொடர்புண்டு என தோன்றியது. வாசிக்காமல், விவாதிக்காமலிருக்கும் ஒருவருக்கு அவர் எங்கே இருக்கிறார் என்பதே தெரிவதில்லை. அவர் எழுதியிருப்பது அபூர்வமான ஒரு படைப்பு என்ற நம்பிக்கை நீடிக்கிறது.

எந்த ஒரு கலையிலும் , அறிவுத்தளத்திலும் அதன் பொதுச்சூழல் மிகமுக்கியமானது. அந்தப் பொதுச்சூழலில் திரண்டு வரக்கூடிய ரசனையும், வடிவப்பிரக்ஞையும் , கருத்துக்களும்தான் ஒவ்வொரு கலைஞனையும் செயல்படச்செய்கின்றன. ஆகவேதான் எந்தக்கலைஞனும் தன் பொதுச்சூழல் பற்றிய கூர்ந்த கவனத்துடன் இருப்பான். அதனுடன் மானசீகமாக உரையாடிக்கொண்டிருப்பான்

இசைமாணவனாக இருந்த ஜானகிராமனிடம் ஆசிரியர் தொடர்ந்து கச்சேரிகளுக்கு போகச்சொல்வார் என ஜானகிராமன் எழுதி வாசித்திருக்கிறேன். திரும்பும்போது கேட்ட கச்சேரியைப்பற்றி விமர்சிக்கச்சொல்லி கேட்பாராம். அந்தக் காலகட்ட இசை என்பது அந்தக்கச்சேரிகள் வழியாக பொதுவாக திரண்டு வருவது. அங்கே என்ன நிகழ்கிறது என்ற அறிதலும் அதைப்பற்றிய சுயமான ஒரு விமர்சனமும் உருவாகும்போதே ஒரு தனித்தன்மை கொண்ட கலைஞன் உருவாகிறான்.

நான் என் ஆரம்பகாலக் கதைகளை வெளியிட்ட நாட்களில் தமிழில் அன்று எழுதிக்கொண்டிருந்த அத்தனைபேரும் எதிர்வினையாற்றியிருக்கிறார்கள்.சிற்றிதழ்ச்சூழல் சிறியதாக இருந்தாலும் தீவிரமான படைப்புகள் வெளிவரக் காரணம் அதுவே. கோணங்கி, பாவண்ணன், சுப்ரபாரதிமணியன், சுரேஷ்குமார் இந்திரஜித் , ந.ஜெயபாஸ்கரன், சமயவேல், யுவன் சந்திரசேகர் ,எஸ்.சங்கரநாராயணன், பவா செல்லத்துரை போன்றபலரிடம் எனக்கு மிகத்தீவிரமான கடிதத்தொடர்பு இருந்தது. அசோகமித்திரன், சுந்தர ராமசாமி , ஆ.மாதவன் நாஞ்சில்நாடன் வண்ணதாசன் போன்றவர்கள்கூட தொடர்ந்து கடிதங்களில் எதிர்வினையாற்றியிருக்கிறார்கள்.

அன்றெல்லாம் என் சக எழுத்தாளர்களிடமிருந்து ஒவ்வொருநாளும் கடிதங்கள் வரும். தபால்காரனை எதிர்பார்த்து எட்டுமணி முதலே மெல்லிய பதற்றத்துடன் காத்திருந்த நாட்கள் அவை. ஒரு கதைபிரசுரமானால் பல மாதங்களுக்கு கடிதங்கள் மூலம் தொடர் விவாதங்கள் நிகழும். கட்டுக்கட்டாக இவர்களின் கடிதங்கள் என்னிடமிருந்தன. ஒருமுறை பெட்டியை துழாவுகையில் சுரேஷ்குமார் இந்திரஜித் எழுதிய முப்பதுக்கும் மேற்பட்ட கடிதங்களைக் கண்டு நானே அதிர்ந்தேன்.

அந்த எதிர்வினைகள்தான் என்னை உருவாக்கின. எங்கோ காசர்கோட்டில் இருந்த நான் அவற்றின் வழியாகவே சமகாலத் தமிழ் இலக்கியசூழலில் வாழ்ந்தேன்.என்னுடைய அதிருப்திகளையும் விமர்சனங்களையும் உருவாக்கிக் கொண்டேன். அந்த விமர்சனக்கருத்துக்கள் வழியாகவே நான் என் எழுத்துமுறையைக் கண்டுகொண்டேன்.

நான் எழுதிய ஆரம்பகாலக் கதை கிளிக்காலம். அதற்கு அன்று மாணவராக இருந்த எஸ்.ராமகிருஷ்ணன் வாசகர்கடிதம் எழுதியிருந்தார். எஸ்.ராமகிருஷ்ணனின் ஆரம்பகாலக் கதைகளுக்கெல்லாம் நான் எழுதிய வாசகர்கடிதங்கள் பிரசுரமாகியிருக்கின்றன. பின்னர்தான் அந்த ராமகிருஷ்ணன்தான் இவர் என நான் அறிந்தேன். சிற்றிதழ்ச்சூழலில் இருந்த அந்தத் தீவிரமே எழுத்தாளர்கள் உருவாகி வரக் காரணமாக அமைந்தது

சக எழுத்தாளர்கள் மீது ஆழ்ந்த கவனமும் தொடர்ந்த விமர்சனமும் இல்லாமல் நல்ல எழுத்தாளர் உருவாகி வரமுடியாதென்றே நினைக்கிறேன். ஒரு காலகட்டத்தின் இலக்கியப்பரப்பில் ஒவ்வொரு எழுத்தாளனும் வெவ்வேறு இடத்தை நிரப்புகிறார்கள். அதைஎழுத்தாளன் கண்டுகொள்வது இந்த விவாதங்கள் வழியாகவே. சொல்லபோனால் சக எழுத்தாளனை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதுமான ஒரு சமன்பாடு வழியாகவே எழுத்தாளனின் வெளிப்பாட்டுமுறை உருவாகிறது.

இன்றையசூழலில் சமகாலஎழுத்து மேலும் எழுத்தாளர்கள் மேலும் எழுதவருபவர்களுக்கு இருக்கும் கவனமின்மை, விவாதமே இல்லாத வெறுமை ஆகியவை இணைந்து சூம்பிப்போன எழுத்துக்களை உருவாக்கித்தள்ளுகிறது என நினைக்கிறேன்.

எழுதவேண்டுமென நினைக்கும் இளம் எழுத்தாளர்களிடம் வலுவாக ஓங்கிச்சொல்ல என்னிடம் ஒரு விஷயம்தான் உள்ளது. ஃபேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் நான்குவரி,ஒற்றைவரி சர்ச்சைகளில் ஈடுபடுவதை அறவே ஒதுக்குங்கள். சமகால அரசியல், சினிமா வம்புகளில் இருந்து முழுமையாக விலகுங்கள். இலக்கியமரபை கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் பொருட்படுத்தும் சமகால எழுத்தாளர்களிடம் முழு உயிராற்றலாலும் மோதுங்கள். விவாதியுங்கள். பிற கதைகளைப்பற்றி விவாதிக்காத ஒருவருக்கு தன் கதைகள் விவாதிக்கப்படவில்லை என்று சொல்ல அருகதை இல்லை.

கலைசார்ந்த ஒட்டுமொத்தமான ஒரு விவாதச்சூழலே கலைகளை உருவாக்க முடியும். ஒரே தரத்திலான வேகம் கொண்ட ஐம்பதுபேர் இருந்தால்போதும் இலக்கியம் வாழும், வளரும். அந்த எண்ணிக்கைகூட இன்றிருக்கிறதா என்ற ஆழமான ஐயம் எனக்கு உள்ளது

*

புதியவர்களின் கதைகள் குறித்த பார்வைகளையும் கருத்துக்களையும் விமர்சனங்களையும் இங்கே பகிர்ந்துகொள்ளலாம். அதற்காக இங்கே பின்னூட்டப்பெட்டி திறக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்தாளர்களுக்கு கருத்துக்கள் உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்

ஜெ

கதைகள்

12. பயணம் . சிவேந்திரன் [email protected]

11. வாசுதேவன் சுனீல்கிருஷ்ணன் [email protected]

10. வேஷம் பிரகாஷ் சங்கரன்

9. கன்னிப்படையல் ராஜகோபாலன் [email protected]

8. சோபானம் ராம்

7. வாசலில் நின்ற உருவம் கே ஜே அசோக் குமார்

6. வாயுக்கோளாறு ராஜகோபாலன் [email protected]

5. பீத்தோவனின் ஆவி வேதா

4. தொலைதல் ஹரன் பிரசன்னா [email protected]

3. காகிதக்கப்பல் சுரேந்திரகுமார் [email protected]

2. யாவரும் கேளிர் சிவா கிருஷ்ணமூர்த்தி [email protected]

1. உறவு தனசேகர் [email protected]

முந்தைய கட்டுரைபுதியவர்களின் கதைகள் 12, பயணம் -சிவேந்திரன்
அடுத்த கட்டுரைகதைகள் ஒரு விமர்சனக்கடிதம்- பிரதீப் பாரதி