ஆகாயப்பறவை

1988ல் நான் காசர்கோட்டில் இருந்து வேலைமாற்றலாகி வந்தேன். அதன்பின்னர் அங்கே செல்ல நேரிட்டதில்லை. அந்த நண்பர்களை வேறு இடங்களில் பார்த்துக் கொண்டிருந்தது ஒரு காரணம். இந்தவருடம் காசர்கோட்டுக்குச் சென்றேன். நான் வாழ்ந்த காசர்கோடு பூமியின் மீதிருந்து அழித்துத் துடைக்கப்பட்டிருந்தது. என் கண்முன் இருந்தது வேறொரு நகரம். அந்த காசர்கோடு என் தலைமுறையின் நினைவில் இருக்கக்கூடும். ஒருவேளை நினைவுகள்கூட மாறியிருக்கலாம்.

காசர்கோட்டில் பழைய தொலைபேசிநிலையத்தின் ஓய்வறைக்குச் சென்றேன். அங்கே இப்போது ஏதோ ஓர் அலுவலகம். அங்கேதான் ரப்பர் நாவலை எழுதினேன் என்று கூடவந்த நண்பரிடம் சொன்னேன். மழை பெய்துகொண்டே இருந்த நாட்கள். அலுவலக அறையிலும் என் தனித்த இல்லத்திலுமாக எழுதிக்கொண்டே இருந்தேன்.

நாவல் வாசிப்பதும் எழுதுவதும் அழியாக்கனவை காண்பதுபோல. மாதக்கணக்கில் ஒரு கனவில் வாழும் பேரனுபவம். அவ்வனுபவத்தை எனக்களித்த மகத்தான நாவல்கள் பல உள்ளன.ருஷ்ய நாவல்களில் தோய்ந்திருந்த நாளில் ரப்பரை எழுத ஆரம்பித்தேன். 1984ல். என் இருபத்திரண்டு வயதில். பின்னர் 1990இல் அது அகிலன் நினைவுப்பரிசு பெற்று தாகம் பிரசுரத்தாரால் நூலாக ஆக்கப்பட்டது.

அந்த முதிரா இளமைக்காலத்தின் மனஎழுச்சிகள் மொழியில் இருப்பதை பார்க்கிறேன்.ஒரு கதாபாத்திரத்தை எழுதும்போது அதுவாக ஆகி அதைத்தொடர்ந்து சென்றுவிடுவது நிகழ்ந்திருக்கிறது. திரேஸாகவும் குளங்கோரியாகவும் குழந்தை பொன்னுவாகவும் மரணப்படுக்கையில் கிடக்கும் பெருவட்டராகவும் எதிரெதிர் எல்லைகளுக்குச் செல்லமுடிந்திருக்கிறது. இந்நாவலின் கலைத்தரத்தை அந்த ஒன்றுதல்களே நிகழ்த்தியிருக்கின்றன.

ரப்பர் நாவலின் மையம் பிரான்ஸிஸ்தான். ஆரம்பம் முதலே தயக்கமும் குழப்பமும் கொண்டவனாக இருக்கிறான். இயல்பான நன்மனதுக்கும் காமத்துக்கும் பல்வேறுவகையான அகச்சிக்கல்களுக்கும் நடுவே அவன் அலைமோதுகிறான். அவனில்தான் ஒரு நூற்றாண்டு திசைமாறும் தருணத்தின் தத்தளிப்பு முழுக்க உள்ளது.

அவன் அடையும் ஒரு தரிசனமே உண்மையில் இந்நாவல். ஆற்றின் குறுக்காக காரைக் கொண்டுசெல்லும்போது கூச்சலிடும் குழந்தைகளின் குதூகலம் கண்டு அவன் மலரும் கணம். இந்நாவலுக்கு உந்துதலாக இருந்ததே நான் என் இளமையில் மாறப்பாடி ஆற்றின் குறுக்காகச் சென்ற சாலையில் கண்ட ஒரு காட்சிதான். கார் மறுபக்கம் சென்றபின் சன்னல்வழியாக குழந்தைகளுக்குக் கையாட்டிச் சிரித்த அந்த இளைஞன் அவன் ஒருநாவலாக மாறியிருப்பதை அறிந்திருக்கமாட்டான்

‘ஆகாயத்துப்பறவைகள் விதைப்பதில்லை’ என்னும் பைபிள் வரியில் அவன் தன்னை உணர்கிறான். நம் தர்க்கத்தை மீறி மன ஆழத்தில் நுழையும் ஒரு வரி ஒரு மந்திரம்போல ஆகிவிடுகிறது. அந்தவரியை அர்த்தம் இழந்து அரற்ற ஆரம்பிக்கிறோம்.அவ்வரியை அரற்றும் பிரான்ஸிஸின் மனம் ‘..ஆகாயத்துப்பறவைகள். ஆகாயத்தில் ஒரு பறவை!’ என்று ஓர் உச்சத்தை வந்தடைந்து திடுக்கிட்டு நிற்கிறது. அதுதான் நாவலின் உச்சம்.

அன்றைய நான் ஒரு பிரான்ஸிஸ். நான் சென்றடைந்த புள்ளி அந்த பைபிள் வரி. அதை நாவலாக ஆக்கியபின் அந்த வரி என்னுடையதாக ஆகிவிட்டது. கிறிஸ்துவின் ஒரு வரிக்கு உரிமைகொண்டாடக்கூடியவனாக ஆவதென்பது ஒருபேறுதான்

ஜெ

[நற்றிணை வெளியீடாக வரவிருக்கும் ரப்பர் எட்டாம் பதிப்புக்கான முன்னுரை]

முந்தைய கட்டுரைநூறுநிலங்களின் மலை – 9
அடுத்த கட்டுரைநூறுநிலங்களின் மலை – 10