திருச்சி நட்புக்கூடல்- விஜயகிருஷ்ணன்

நண்பர்களே,

திருச்சி நட்புக் கூடல் நன்றாகவே நடந்தது. ஜெ.எம்மின் வலைத்தளம் எந்த அளவு ஆவலுடன் படிக்கப்படுகிறது என்று இந்த நிகழ்ச்சி மூலம் புரிகிறது. நம் குழுமத்தில் எழுத்தின் மூலம் அறிமுகமான ஜப்பான் செந்தில், பூனே அசோக், போகன் போன்றோரும் பிற கூட்டங்களில் பங்குபெற்ற சாம்ராஜ், செல்வராணி, தினேஷ். ஷிமோகா ரவி என்று பல பழைய நண்பர்களை நேரில் கண்டு பழக நல்ல வாய்ப்பாக அமைந்திருந்தது.

புதியவர்கள் நாகை, நாகர்கோவில், திருநெல்வேலி, சென்னை என்று பல ஊர்களிலிருந்தும் வந்திருந்தார்கள். சராசரி வயது முப்பது.காலை எட்டு மணி அளவில் ரயில் மூலம் திருச்சி வந்து சேர்ந்தார் ஜெயம். அவரை ரயில் நிலையத்தில் சந்தித்ததிலிருந்தே உரையாடல் ஆரம்பமானது. தமிழ்நாட்டின் வரலாறு எந்தக் கால கட்டத்திலிருந்து எழுதப்படுகிறது,அகழ்வாராய்ச்சி மூலம் கிடைக்கும் ஆதாரங்கள்,இலக்கியம் மூலம் கிடைக்கும் ஆதாரங்கள் என இருவேறு ஆதாரங்களும் பல வகையில் ஒன்றோடு ஒன்று விலகி நமக்குத் தரும் புரிதல்கள் என பேச்சு நீண்டது.

ஒன்பது மணியளவில் முதல் நண்பர்கள் வந்து சேர்ந்தார்கள். சுமார் பத்து மணியளவில் பதினைந்து பேர் சேர்ந்தார்கள். மதிய உணவு நேரத்தில் இருபத்தைந்து நன்பர்கள் கூடிவிட்டார்கள். பல கேள்விகள் பல தளங்கள் என உரையாடல் சென்ற திசைகள் பல. ஆனால் எல்லாமே ஒரு புதிய கோணத்தையும் புதிய தகவலையும் புதிய புரிதலையும் சுகமாக அளித்துக் கொண்டே சென்றது. என் பிற அலுவல் காரணமாக முழு நேரமும் ஜெயமுடன் இருக்கமுடியவேயில்லை. ஆனால் ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றில் வெவ்வேறு படித்துறைகளில் மூழ்குவது போல இடையிடையில் வந்து கலந்துகொண்டேன். இரவு பதினோரு மணியளவில் காரில் சென்னை சென்றார் ஜெயம். அதிகாலை நாலரை மணியளவில் சென்னை சேர்ந்தார்.

விஜயகிருஷ்ணன்.

பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன்,

திருச்சி நட்புக்கூடலில் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. ஏற்பாடு செய்த விஜயகிருஷ்ணன் அவர்களுக்கும் நேரம் ஒதுக்கிய உங்களுக்கும் மனமார்ந்த நன்றி.

உங்களை நேரில் சந்திக்கும் அனுபவங்கள் பற்றி நீங்களே பல முறை எழுதி உள்ளீர்கள் (உதாரணத்துக்கு http://www.jeyamohan.in/?p=35188 மற்றும் http://www.jeyamohan.in/?p=26814). ஆகவே, என்ன அனுபவம் நிகழும் என்பதை ஓரளவு ஊகித்திருந்தேன் அதையும் தாண்டி ஆச்சர்யம் தந்த விஷயங்கள்:

1. உங்கள் தீவிர சிந்தனைகளுக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத மென்மையான குரல்! Youtube காணொளிகளின் வழியாக இதை அறிந்திருந்தாலும் கடிதங்களுக்கு நீங்கள் எழுதும் பதில்களில் ஒலிக்கும் தொனி ஒரு தவம் கலைந்த முனிவரின் கட்டைக்குரல்! நேரில் பேசும்போது நீங்கள் காட்டும் கனிவு அதற்கு நேர் எதிர்மறை.

2. உங்கள் கட்டுரைகளில், கதைகளில் படிக்காத, காணொளிகளில் கேட்காத ஆங்கிலம் கலந்த தமிழ்! இது சற்றும் எதிர்பாராதது. உங்கள் வலைப்பக்கத்தில்தான் பல ஆங்கில வார்த்தைகளின் சரியான தமிழ் சொல்லாக்கத்தைக் கற்ற என் போன்றவர்களுக்கு நீங்கள் பேசும் ஆங்கிலம் கலந்த தமிழ் வித்தியாசமாக இருந்தது. உரையாடலை எளிமைப்படுத்த நீங்கள் இப்படி இறங்க வேண்டிய சூழலில் நாங்கள் இருக்கிறோம்…என்ன செய்ய!

3. கேமராவைப் பார்த்த உடன் திடீர் என்று உதிக்கும் ‘ஙே’ பார்வை! இத்துடன் உங்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் இணைத்துள்ளேன். மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் படம்….நன்றிகள் பல!

அறம், தன்னறம் பற்றிய உரையாடல்கள் சிறப்பாய் அமைந்தன. சொத்து விவரம் கூட ரகசியமான விஷயம் இல்லை எனத் திறந்த புத்தகமாய் உங்கள் வாழ்க்கையை எங்கள் பார்வைக்கு வைக்கிறீர்கள்! அந்த நேர்மைக்கும் எளிமைக்கும் தலை வணங்குகிறேன்.

சென்னைக்கு மதியமே திரும்ப வேண்டி இருந்ததால் உங்களுடன் முழு நாளும் இருக்க முடியவில்லை. அடுத்த நட்புக்கூடலுக்காகக் காத்திருக்கிறேன்.

லட்சுமணன்

நண்பர்களே,

திருச்சி சந்திப்பை நண்பர் விஜயகிருஷ்ணன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். ஒரு பத்துப்பேரை எதிர்பார்த்துத்தான் ஓட்டல் ஏற்பாடு செய்திருந்தோம். என் கணிப்பு அது. 25 பேர் வரை வந்திருந்தமையால் ஒரு கட்டத்தில் எல்லாரும் தரையில் அமரும்படி நேரிட்டது. அது கொஞ்சம் சங்கடமாக உணரச்செய்தது, அது என்னுடைய பிழைதான். அடுத்தமுறை இதில் கவனமாக இருக்கவேண்டும்.

இத்தகைய சந்திப்புகளில் பேசும் தலைப்பு என ஏதுமில்லாததனால் பேச்சு அலையடித்துக்கொண்டே இருக்கும். அதிகமாகப்பேசக்கூடியவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள். இது ஒரு விவாத அரங்கோ உரையரங்கோ இல்லை. சும்மா தெரிந்துகொள்வதற்கான இடம்தான். ஆகவே இது ஒரு தொடக்கம் என்று மட்டும் கொண்டால் போதும். சிலர் ஒன்றுமே பேசாமலிருப்பதை கவனித்தேன். வேறு வழி இல்லை

என் வரையில் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக இருந்தது. விஜயகிருஷ்ணன் தனிப்பட்ட முறையில் இந்த ஏற்பாடுகளைச் செய்திருந்தார். அவரது குடும்பநிகழ்ச்சி வேறு அன்று இருந்தது. அவருக்கு நான் தனிப்பட்ட முறையில் நன்றிகளைத் தெரிவிக்கவேண்டும்.

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைநித்யாகுருகுலம் பற்றி…
அடுத்த கட்டுரைபிம்பங்கள்-கடிதம்