இந்தியா இஸ்லாம்-கடிதம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு..வணக்கம்…

உங்களின் மறுமொழியில் பெரிதும் உடன்படுகிறேன்.. இந்தியாவின் சமூக கலாச்சாரத்தின் மையச் சரடாக இருப்பது பார்ப்பனீயம்தான் என்றும் அதைத் தூக்கிப்பிடிப்பது மட்டுமே இந்து மதத்தின் வேலை என்றும் ஒரு கற்பிதம் உறுதியாக இந்த நாட்டில் உருவாக்கப்பட்டுவிட்டது.. இதை நமது அறிவுஜீவிகள் எவ்விதமான மறுகேள்வியும் இன்றி ஆதரிக்கிறார்கள்..

ஆனால், இதைத் தவறு என்று சொல்லி மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது ஆய்வாளர்கள் மற்றும் சமூக அறிவியல் நிபுணர்கள் மட்டுமே.. புனைவுலகில் பயணிக்கும், எழுத்தில் மட்டுமே தனது இருப்பைக் காணத்துடிக்கும் எழுத்தாளர்கள் அல்ல என்பது எனது தாழ்மையான கருத்து.. ஏனெனில், பலநேரங்களில் எழுத்தாளர்கள் தங்களின் இயலாமையால், போதிய கருத்தியல் உபகரணம் இல்லாத காரணத்தால், மேம்போக்கான கருத்துக்களை மட்டுமே சொல்லிச் செல்ல முடியும்.. நீங்கள் கூட, சற்றே நிதானம் தவறிவிட்டதாக நான் நினைக்கிறேன்.. உதாரணமாக நீங்கள் கூறிய கருத்தை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்

“…இஸ்லாம் என்பது அடிப்படையில் ஒரு தேசியகற்பிதம்– ஒரு மதமோ வாழ்க்கைமுறையோ மட்டும் அல்ல. அது பிற தேசிய கற்பிதங்களை ஏற்காது. அந்த தேசிய கற்பிதங்களுக்குள் தனித்தேசியமாக தன்னை உணர்ந்து அவற்றை உள்ளிருந்து பிளக்கவே முயலும். அது ஈழமானாலும் சரி இந்தியாவானாலும் சரி பிரிட்டனானாலும் சரி. இதுவே நிதரிசன உண்மை. எத்தனை தலைமுறைக்காலம் ஒரு நாட்டில் வாழ்ந்தாலும் சரி, அந்த நாட்டாலேயே மேன்மை பெற்றிருந்தாலும் சரி , அந்த நாட்டை மதநோக்கில் அழிக்க அவர்களுக்குத் தயக்கம் இருக்காது என்பதைக் கண்டுகொண்டிருக்கிறது ஐரோப்பா.”

சுமார் அறுபதிற்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு இன்று இருப்பதே, தேசிய எல்லைகளை மீறி இஸ்லாம் ஒன்றும் செய்வதற்கில்லை என்பதுதான்.. அத்தனை நாடுகளும் ஒரே குடையின் கீழ் வந்திருக்க வேண்டாமா.. பாகிஸ்தானை விட்டு பங்களாதேஷ் பிரிந்த போது, தெற்காசியாவிலேயே அரசியல் இஸ்லாம் செல்லுபடியாகவில்லை..உலகெங்கும் அப்படித்தான்.. ! தாலிபான், அல்-கைதா போன்ற அடிப்படைவாத அமைப்புகளின் நோக்கமே, ஒன்றுபட்ட இஸ்லாமிய சுல்தானை உருவாக்குவதுதான்.. அதெல்லாம் சாத்தியமே இல்லை.. மத அடையாளம் ஒரு தேசிய அடையாளமாக இருக்கமுடியாது என்பது இன்று ஏற்று கொள்ளப்பட்ட சமூகவியல் நியதி..வரலாறு அதைத்தான் மீள மீள சொல்கிறது.. பாலஸ்தீன பிரச்சனையில், இஸ்ரேலுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத துரோகத்தைச் செய்தவர்கள் சக முஸ்லிம் நாடுகள்தான் – ஜோர்டான், சவுதி அரேபியா போன்ற நாடுகளின் துரோகத்தை ஒருபோதும் பாலஸ்தீனர்கள் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள்..இவர்களின் துரோகத்தால்தான், இஸ்ரேலே தேவலை என்ற முடிவிற்கு மறைந்த அரபாத் வந்தார் என்பது வரலாறு.. !

ஆக தேசிய இனப்பிரச்சனையில், இஸ்லாமிய அடையாளம் ஒரு பெரும் பங்கை செலுத்துகிறது என்பது இங்கு உள்ள அடிப்படைவாதிகளின் கூச்சல் மட்டும்தான். அது இந்து மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இருவருக்குமே பொருந்தும்..

எதற்கு சொல்கிறேன் என்றால், எனது இந்தியா என்ற கட்டுரையினை நீங்கள் மறுபிரசுரம் செய்திருக்கிறீர்கள்..சமூக, அரசியல், வரலாற்றுக் கோட்பாடுகள், கருத்தியல் வரையறைகளின் துணையின்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் சில உள்ளன.. அதற்கு ஆய்வாளர்கள் இருக்கிறார்கள்.. ஆராய்ச்சியாளர்களின் வேலையே முன்னர் சொல்லிய ஆய்வு முடிவுகளை மறுப்பதுதான்.. ஆகையால் அதற்கு ஆயுள் குறைவு.. உங்களைப் போன்ற எழுத்தாளர்களின் கவித்துவத்திற்கு முடிவில்லை.. உங்களின் “ஜெகன்மித்யை’ போன்ற ஒரு சிறுகதை பல ஆய்வுகளுக்கு சமம்..உங்களின் எழுத்துக்களை ஆராதனை செய்யும் வாசகர்கள் அனைவருக்கும் அது மட்டுமே உவப்பானதாக இருக்கும் என்று நம்புகிறேன்..

அன்புடன்
விடுதலை

அன்புள்ள விடுதலை,

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. சமூகக் கருத்துக்கள் அல்லது அரசியல் கருத்துக்கள் சொல்வது என் வேலை அல்ல. நான் சொல்வன முறையான ஆய்வின் பின்பலம் உள்ளவையும் அல்ல. அதை நான் நன்கறிவேன். எப்போதும் அதைச் சொன்ன பின்னரே என் கருத்துக்களைச் சொல்கிறேன்.

ஆனால் நான் சொல்லும் இந்தக் கருத்துத்தரப்பு பிற எவராலும் சொல்லப்படுவதில்லை. இங்கே பொதுமக்களில் மிகக்கணிசமானவர்கள் ஆன்மாவில் உணரும் ஒரு கருத்துக்கு அறிவுலகில் குரலே இல்லை. இங்குள்ள கருத்துச்செயல்பாடு என்பது முழுக்கமுழுக்க ஒற்றைப்படையானது. உள்நோக்கம் கொண்டதும்கூட

இந்த இடைவெளியே என்னைப்பேசவைக்கிறது. இதைவிட ஆதாரபூர்வமாக இன்னொரு குரல், ஒரே ஒரு குரல், இந்த விவாதச்சூழலில் ஒலிக்குமென்றால் நான் இவ்விஷயங்களில் ஈடுபடவே மாட்டேன். ஏனென்றால் எனக்கு இந்த ஒவ்வொரு விவாதமும் முடிந்தபின் ஒரு பெரும் வீண்வேலை என்ற நினைப்பே எஞ்சுகிறது

இஸ்லாமியசர்வதேசியம் பற்றிய என்னுடைய எண்ணங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொண்ட நாடுகள் எல்லாம் ஒன்றாக இயங்குகின்றன என்ற அடிப்படையில் சொல்லப்பட்டதல்ல. மாறாக அந்த மதத்தைத் தீவிரமாக முன்வைக்கும் அத்தனை இதழ்களும் வெளிப்படையாகவே ஓர் இஸ்லாமிய அகிலத்தை அமைப்பதற்காக அறைகூவுவதைக் கருத்தில்கொண்டு சொல்லப்பட்டது. இது ஒன்றும் ஆய்வுக்கருத்து அல்ல. அவர்களே எல்லா ஊடகங்களிலும் வெளிப்படையாகச் சொல்லக்கூடியதுதான்

அப்படி ஓர் இஸ்லாமிய அகிலம் நடைமுறைச் சாத்தியமா என்று கேட்டால் இல்லை என்றே நானும் சொல்வேன். ஆனால் அந்த மதத்தின் இன்றைய பிரச்சாரகர்கள் சாமானியர்களுக்கு அளிக்கும் அந்தக் கனவு பிற தேசியங்கள் மீது ஐயம் கொண்டவர்களாக இஸ்லாமியர்களை ஆக்குகிறது என்பதே என் கூற்று.

அது பல்வேறு இழப்புகள் அழிவுகள் வழியாக ஒருவாறாக உருவாகிவந்த தேசியங்களை உடைக்கிறது. அதன்மூலம் மேலும் அழிவுகளை நோக்கிக் கொண்டுசெல்கிறது. பொருளியல்வளர்ச்சி அடையவேண்டிய சமூகங்கள் வெற்று அடையாளங்களுக்காக மோதி அழிய வழிவகுக்கிறது. நான் சுட்டிக்காட்டியது அந்த தீவிரவாத இஸ்லாமியதேசிய நோக்கை, அதை ஆதரிக்கும் நம்மூர் கூலிப்படைகளை.

நீங்கள் சொல்வதைக் கருத்தில்கொள்கிறேன்

ஜெ

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு..

உங்களின் மறுமொழி கண்டேன்.. உங்களிடம் இருக்கும் இந்த நேர்மைதான் உங்களின் எழுத்துக்களைத் தனித்துவமாக ஆக்குகிறது என்று நினைக்கிறேன்.. நான்தான் என் எழுத்து அல்லது என் எழுத்துதான் நான் என்னும் பட்டவர்த்தனமான நேர்மை எழுத்தாளனின் அடிப்படை ஆளுமையாக இருக்க வேண்டும்.. இருப்பவர்கள்தான் எழுத்தாளர்கள்.. இதுவரை உங்களை நேரில் சந்தித்ததில்லை.. பல நேரங்களில் நீங்கள் சுந்தர ராமசாமியைத்தான் நினைவு படுத்துகிறீர்கள்.. உண்மை..! இது என் அந்தரங்கமான உணர்வு.. அவரையும் நான் அதிகம் சந்தித்தது இல்லை.. ஓரிரு முறைகள் மட்டுமே.. அதுவும் அதிகம் பேசமுடியாத நிகழ்வுகளில்..! நீங்கள் அப்படியே அவரின் வார்ப்பு என்றுதான் நான் நினைக்கிறேன்.. சிரிக்க வேண்டாம்..!

இஸ்லாம் எனும் கொள்கையின் அடிப்படையில் ஒரு தேசம் உருவாக்கப்படவேண்டும் என்பது அடிப்படைவாதிகளின் குரலாக மட்டுமே இருக்க முடியும்.. அதாவது மதத்தை ஒரு Ideology என்று கற்பிதம் செய்துகொண்டால் அதுவழக்கம் போலத் தனது ஒன்றிணைக்கும் பணி அல்லது பிளவு படுத்தும் பணியை செய்யத் தொடங்கிவிடும்.. ஆனால் தேசம் என்பது ஒருபடித்தான, தட்டையான கோட்பாடு அல்ல.. ஆரோக்கியமான ஜனநாயகம் எப்படி வலிந்து கருத்தொற்றுமையினை உருவாக்காமல், சிறப்பான விவாதத்தை உருவாக்குமோ, தேசியமும் அப்படித்தான். இன்னும் சுருக்கமாகச் சொல்லப்போனால், தேசியம் எப்போது தனது எல்லைக்கு வெளியே இருப்பவரைப் பற்றி மட்டும் பேசாது..மாறாகத் தனது வரையறைக்கு உள்ளே இருப்பவர்களின் நிலை பற்றியும் பேசும்..

உதாரணமாக இஸ்லாம் என்னும் கோட்பாட்டின் கீழ் ஒரு தேசியம் உருவானால், அது இஸ்லாமைச் சேராதவர்கள் யார் என்பது பற்றி மட்டும் பேசாது.. மாறாக இஸ்லாத்திற்கு உள்ளாக செய்யப்படவேண்டிய மாற்றங்கள் பற்றி மட்டுமே பேசும்.. அதுதான் முற்போக்கான, ஆக்கபூர்வமான தேசியம்.. அதனடிப்படையில் பார்க்கும் போது, உண்மயான தேசியவாதிகள் யார் என்ற கேள்வி இன்னமும் முழுமையாக தீர்மானிக்கப்படவில்லை என்றுதான் சொல்லுவேன்…மேலும், உண்மையான தேசியம் எது என்ற கேள்வியும் இன்னமும் தொக்கி நிற்கிறது..

ஆக, நம்ம ஊரில் பேசும் பேச்செல்லாம் வெறும் அபத்தம் மட்டும் அல்ல..மாபெரும் வரலாற்றுப் பிழை என்று கூட சொல்லுவேன்.. நீங்கள் சொல்லுவதுபோல, அதைத் தவறு என்று சொல்லக் கூட ஆள் இல்லை.. இறுதியாக உங்களுக்கு மிஞ்சும் விரக்தி என்னால் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியதே.. வேறு வழியில்லை.. கழக தேசத்தில் இதை எல்லாம் சகித்துதானே ஆகவேண்டும்..

இலக்கியமும் தத்துவமும் ஒரு சூட்சுமமான புள்ளியில் முயங்கும் எழுத்து உங்களுடையது.. என் போன்ற வாசகர்களுக்கு அதுதான் மிகவும் உவப்பானதாக இருக்கிறது.. அதுவே உங்கள் இடமும் கூட.. !
என்றும் அன்புடன்
விடுதலை

அன்புள்ள விடுதலை,

உங்கள் கருத்துக் கொண்ட பல வாசகர்கள் உள்ளனர்

மேலும் சில நாட்களில் பெரிய சில பணிகளை ஆரம்பிக்கவிருப்பதனால் அரசியல் சமூகவியல் சர்ச்சைகளைத் தொடரவும் முடியாதென்று நினைக்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைஅய்யப்பண்ணனும் ஆச்சியும்
அடுத்த கட்டுரைபாடபேதம்