புனைவு, முழுமை

உங்களின் “நவீன தமிழிலக்கிய அறிமுகம்” நூல் மூலமாகவும், உங்களின் இணைய தளத்தில் உள்ள இலக்கிய கட்டுரைகளின் வழியாகவும் கற்றுக்கொண்டதில் புதுக்கவிதையை குழப்பமில்லாமல் ஓரளவிற்கு வாசிக்க முடிகிறது. சற்று குழப்பமாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் படிக்கும் போது அதை என் அனுபவம் சார்ந்து புரிந்துகொள்ள முடிகிறது. கவிதைகள் சில பல வார்தைகளில் இருப்பதால் தொடர்ந்துபடிப்பதன் மூலம் அதில் உள்ள படிமம், குறியீடு போன்ற விசயங்களையும் கண்டுகொள்ள முடிகிறது.

ஆனால் சிறுகதை, நாவல் போன்று பக்கம் பக்கமாக வாசிக்கும்போது மொழிக்குறிய அந்த நுட்பமான குறியீடு, படிமம் போன்ற விசயங்கள் என எதுவும் தென்படுவதுபோன்று தோன்றுவதில்லையே! என்ன எழுதியிருக்கிறதோ அதை அப்படியே படித்த உணர்வுதான் ஏற்படுகிறதே தவிர கவிதையில் உணரும் நுட்பமான விசயங்களை, அனுபவங்களை சிறுகதை, நாவலில் உணர முடியவில்லையே! அனுகுமுறையில் அல்லது வாசிப்பு முறையில் ஏதேனும் மாற்றம் தேவையா!

நன்றி

பூபதி

அன்புள்ள பூபதி

கவிதைக்கும் புனைவெழுத்துக்கும் அடிபப்டையான வேறுபாடுண்டு. கவிதையை நாம் வெளியே நின்று வாசிக்கிறோம். அதை ஒரு மொழிநிகழ்வாக நம் முன் வைத்து அது அளிக்கும் அனுபவத்தை அடைகிறோம்.

மாறாக நாவல் கதை போன்றவற்றை உள்ளே சென்று வாசிக்கிறோம். அவற்றை வாசிக்கையில் நம் கற்பனை அவற்றை நம்முடைய அனுபவங்களாகவே ஆக்கிக்கொள்கிறது. ஆகவேதான் அவற்றை உடனடியாக நம்மால் புறவயமாக பார்க்கமுடியவில்லை

ஆனால் எந்த ஒரு புனைவிலக்கியத்தையும் அப்படி நம் அனுபவமாக ஆக்கி வாசித்து முடித்தபின் ஒரு வெளியே நின்று பார்க்கமுடியும். நம்முடைய சொந்த அனுபவத்தை கொஞ்சகாலம் தாண்டியதும் நாமே வெளியே நின்று பார்ப்பதுபோல. அப்போது அந்த வாசிப்பனுபவம் இறுக்கமானதாக ஆகி நம்முடைய கைக்குள் அடங்குகிறது. அதை நம்மால் புரிந்துகொண்டு மதிப்பிட முடிகிறது

இலக்கிய ஆக்கங்களை விவாதிப்பது அவற்றை புரிந்துகொள்ள உதவும். உண்மையில் இலக்கிய விமர்சனம் என்பதே அதற்காகத்தான். இலக்கிய அரங்குகள் , சொற்பொழிவுகள் எல்லாமே இலக்கியத்தை அப்படி புறவயமாக பார்ப்பதற்கான பயிற்சிகளை அளிப்பவையே

ஜெ

ஜெயமோகன் அவர்களுக்கு

’’மெட்டி ஒளிசிதற மெய்யெல்லாம் பொன்விரிய செட்டி குலவிளக்கு செய்ததவம்” முழு கதையையும் படிச்சிட்டு இந்த வரிய வாசிக்கும் போதும் ஏற்பட்ட அதிர்வுகளை எப்படி சொல்றதுன்னு தெரியல, ரெம்ப ஒருமாதிரி இருந்தது. . .! ஏற்கனவே யானை டாக்டர் படிச்சப்பவும் கண்ணுல தண்ணி வந்துடுச்சு அப்போ ஒருவிதமான கருணை எதிர்பார்த்து,ஒரு மானுட தெய்வத்தின் முன் உடல் மனம் சேர்த்து உள்ள இருக்குற உயிரும் அவர் காலுல அப்படியே விழனும், அவருக்கு இருந்த அந்த புரிதலில் ஒரு துளியில் ஒரு அணு பகுதியாவது நமக்கும் கிடைக்கணும் அப்புடிங்கிற ஏக்கமும் பிராத்தனையும் கண்ணீராக வெளிப்பட்டது.

“மெட்டி ஒளிசிதற மெய்யெல்லாம் பொன்விரிய செட்டி குலவிளக்கு செய்ததவம்” படிக்கும் பொது ஒரு அருள் வந்த மாதிரி உடற் மயிர் எல்லாம் சிலிர்த்து கண்ணீர் வந்திடுச்சு. . .! உங்களோட இந்த ரெண்டு கதையும் அறிவு மற்றும் மனம் தாண்டிய ஒரு விதமான உணர்வு அனுபவத்தை தந்தது. . .ரெம்ப சந்தோஷம் ஜெயமோகன் சார். . .ரெம்ப நிறைவா இருக்கு. . .!
உங்களோட எல்லாப் படைப்புகளையும் இனி படிக்கணும்.

என்றும் அன்புடன்
கண்ணப்பன்

அன்புள்ள கண்ணப்பன்

நன்றி

அறம் வரிசை கதைகள் எல்லாமே ஒரு மன உச்சம் நோக்கிச் செல்பவை. அவை அனைத்தும் தேடும் புள்ளி ஒன்றே, வெவ்வேறு கோணங்களில்

ஜெ

திரு ஜெ

இஇன்று உங்கள் நண்பர் யானை டாக்டர் பற்றி எழுதியதைப் பார்த்தேன்,. நானும் யானை டாக்டரில் படித்து வியந்த ஒரு பகுதியைப் பற்றி கூறுகிறேன்

அது “பிரம்மாண்ட பூச்சி மனம் ” என்ற கோட்பாடு. உங்கள் வார்த்தைகள் அப்படியே இங்கே

பூச்சிகள் ஒட்டுமொத்தமான அறிவும் உணர்வும் கொண்டவை. கோடானுகோடி பூச்சிகள். நாள்தோறும் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் மாபெரும் திரள் அது. அப்படிப்பார்த்தால் அவை மனிதத் திரளைவிட பற்பலமடங்கு பெரியவை. மனிதனின் பூச்சிக்கொல்லியுடன் மோதுவது தனிப்பூச்சி அல்ல, ஒரு பூச்சிப்பெருவெளி. அவற்றின் சாரமாக உள்ள அதிபிரம்மாண்டமான பூச்சிமனம். அது அந்த பூச்சிக்கொல்லியை சில மாதங்களில் சாதாரணமாக வென்று செல்லும்.

மேலே நீங்கள் எழுதியதை தினந்தோறும் நினைத்து பிரமிக்கிறேன். இது கண்டிப்பாக ஒரு விஞ்ஞானியின் பார்வை அல்ல. ஒரு ஒட்டு மொத்தப் பார்வை. பாரத மண்ணிற்கே உரிய பல பரிமாணங்களை உள்ளடக்கும் தத்துவம். இதையே பிரான்சிஸ் பேக்கன் பிற்பாடு ‘inductive logic” என்று ஐரோப்பியர்களுக்கு அறிமுகப் படுத்தினார். இந்த தர்க்க முறை கிடைத்ததனால் தான் ஹானிமன் ஹோமியோபதியைக் கண்டடைந்தார்.

நான் ஆண்டிபயாட்டிக் உபயோகித்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. வெறும் பூச்சிதான் வியாதிக்கு காரணம் என்ற மாயையை நான் தாண்டி விட்டேன். பதினெட்டு வருடங்களுக்கு முன் என் மருந்து விற்பனை பிரதிநிதி நண்பர்களிடம் அளவளாவி அனைத்து அலோபதி மருந்துகளையும் தெரிந்து கொண்டிருந்தேன். அப்போது ‘bactrim” மற்றும் erithromycin மட்டுமே ஆண்டிபயாடிக்குகள். பிறகு அமாக்சிசிலின், பிறகு அதை விட அலைக் கற்றை திறன் கொண்ட சிப்ரோ ப்லாக்சசின், நார் ப்லாக்சசின், அமிக்காசின், என்று உயர் வீரிய மருந்துகள். பதினைந்து வருடம் முன்பு அமிக்காசின் மிக தீவிரமான நோய்த் தொற்றுகளுக்கு மட்டுமே பயன்பட்டது. இன்று அது அன்றாடம் புழக்கத்துக்கு வந்து விட்டது.

ஹானிமன் இன்றைய பூச்சி வாத தத்துவங்களுக்கு முற்பட்டவர் என்றாலும் அவர் பூச்சி வாதத்தை தாண்டிச் செல்லும் தத்துவத்தை பிரகடனம் செய்தார். இன்று வரை ஹோமியோபதி பாக்டீரியா தான் நோய்க்குக் காரணம் என்ற கோட்பாட்டை அசட்டை செய்கிறது. அதன் துணையில்லாமல் வெற்றி அடைந்துள்ளது..

இது உங்களுக்கு சாதாரணமான கதையில் எழுதும் அளவுக்கு எளிமையாகப் படலாம். எனக்கு அப்படி அல்ல. உங்களுக்கு இந்த ரகசியம் புரிபட்ட விதத்தையும் என்னால் ஊகிக்க முடிகிறது. : “யோபாம் ஆயதனம் வேத ஆயதனவான் பவதி ” என்ற வேத வரிகள் அதற்கு திறவு கோல். எவன் நீரின் ஆதாரத்தை அறிகின்றானோ , அதிலேயே நிலை பெறுகின்றான் என்கிறது அது.

உங்கள் சீடர் சீனுவுக்கும் இதே தான். அவர் ஜெயமோகனிலேயே மூழ்கி அவரின் ஆதார சுருதியைக் கண்டடைந்து விட்டார்.

வெங்கட்

அன்புள்ள வெங்கட்,

‘ஒருமையறிவு’ என்று ஒன்றுண்டு. சம்யக் ஞானம் என்று அதை நித்யா சொல்வதுண்டு. ஒரு சிறு துளி அறிதலில் இருந்து ஒட்டுமொத்த ஞானம் நோக்கி எழும் ஒரு கணமே பலசமயம் படைப்புகளில் வெளிப்படுகிறது. ஞானிகள் அங்கே அமர்ந்திருக்கிறார்கள்

ஜெ

முந்தைய கட்டுரைஓரினச்சேர்க்கையும் இந்தியப்பண்பாடும்
அடுத்த கட்டுரைஊட்டி காவிய முகாம் 2012 – பகுதி 1