எம்.டி.முத்துக்குமாரசாமி-கடிதம்

அன்பிற்குரிய ஜெயமோகன்:

உங்கள் நல்வரவு கட்டுரையை வாசித்தேன். குற்றாலம் கவிதைப் பட்டறையில் மௌனி-பார்ப்பாரக்குட்டி காமெண்ட் நான் சொல்லவில்லை. கட்டுரை முழுக்க நான் பேசாததையோ, எழுதாதையோ -மற்றவர்கள் சொன்னதை என் மேல் ஏற்றி-‘திரண்ட பொருள்’ காண வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். தினமணி சுரா கட்டுரை செய்ததாக நீங்கள் வருத்தப்பட்ட தவறை நீங்களே செய்யக்கூடாது.மற்றபடி நான் எழுதியதை உங்கள் விருப்பம் போல் வாசிக்கலாம். நகுலன், மௌனி கட்டுரைகள் உட்பட.

இன்னொரு தகவல் பிழை உங்கள் விஷச்செடி கதை பற்றி நான் ஒன்றும் விரிவான வாசிப்பை முன் வைக்கவில்லை. மேலும் இதழ் பேட்டியொன்றில் கேட்ட கேள்விக்கு பதிலாய் சொன்னேன். அதற்கு நீங்கள் 40 பக்க கடிதம் பதில் எழுதினீர்கள். அதில் மேலாண்மை பொன்னுசாமி பற்றிய குறிப்பு இல்லை. இப்போது நீங்கள் quote செய்யும் வரி கூட உங்களைப் பற்றியில்லை உங்களைத் தாண்டிய ரசனை விமர்சனம் பற்றித்தான் என்பதை நீங்கள் கவனிக்கவேண்டும்.

மற்றபடி நகைச்சுவையோடு, தனிப்பட்ட தாக்குதல்களில் இறங்காமல் உரையாட எனக்கும் விருப்பம்தான். என்ன உங்களைப் போல் உடனடியாக பல பக்கங்களை எழுதிவிட முடியாது. நான் பதிலெழுதுவதற்குள் தாமிரவருணியில் தண்ணீர் நிறைய ஓடிவிடும்தான். தட்டுத் தடுமாறி effective-ஆன ஒரு பத்தி பதிலை எப்போதாவது எங்கேயாவது எழுதிவிடுவேன். மதிப்பில்லாமல் உரையாடுவது எனக்கும் பழக்கம் இல்லை.

நல்வரவுக்கு வந்தனம்,

அன்புடன்,
எம்.டி.முத்துக்குமாரசாமி

அன்புள்ள எம்.டி.எம்,

குற்றாலம் கவிதை அரங்கில் நீங்கள் சொல்லி சிரிக்க நானே கேட்ட வரி அது என்பதே என் நினைவு. ஆனால் நீங்கள் அதைப் பதிவுசெய்யாதபோது அதை மறுப்பீர்கள் என்றால் நான் அதை சொல்ல மாட்டேன். எடுத்துவிடுகிறேன். மன்னிக்கவும்

நான் உங்களுக்கு விரிவான கடிதங்கள் பல எழுதியிருக்கிறேன். அவை அன்று நான் உங்களிடம் எல்லாவற்றையும் விவாதிக்க விரும்பியதன் விளைவு. தனிப்பட்ட எல்லாக் கடிதங்களிலும் உங்களிடம் தெரிந்துகொள்ள விரும்புபவன் நிலையிலேயே நின்று எழுதியிருக்கிறேன்.

டார்க்தீனியம்கதை பற்றி நீங்கள் சொன்னவற்றுக்கு என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் மேலாண்மை பொன்னுச்சாமியே போதுமே என்று மட்டுமே பதில் சொல்லியிருந்தேன்.

என்னுடைய அணுகுமுறை எப்போதுமே எதிலுமே முழுத்தீவிரத்துடன் இறங்குவது. ஆகவே நீங்கள் சொல்வதை முழுக்க உடைப்பதற்கே நான் முழுமூச்சுடன் முயல்வேன். ஆனால், நீங்கள் என்னை உடைக்க முடிந்தால் அது எனக்கு நல்லதே என்றும் நினைப்பேன். ஏனென்றால் எப்போதுமே விவாதங்களில் நம்பிக்கை கொண்டவன், அதுவே முன்னகரும் வழி என நினைப்பவன், என்னுடன் விவாதித்த எவரையுமே எனக்குக் கற்பித்தவர்களாக நினைப்பவன். உங்களையும் அந்த இடத்திலேயே வைத்திருக்கிறேன்.

இச்சூழலில் நான் எழுத வந்து இருபத்தைந்தாண்டுகளாகிறது. இதற்குள் எறத்தாழ எல்லாரையுமே மதிப்பிட்டு வைத்திருக்கிறேன். சுயமாக ஏதாவது சொல்வதற்கு இருக்கக்கூடிய, இலக்கிய ஆக்கங்களின் தன்னிச்சைத்தன்மையையும் உள்ளோட்டங்களையும் புரிந்துகொள்ளக்கூடிய, ஒருவரிடம் மட்டுமே நான் விவாதிக்கமுடியும். ஆகவேதான் இந்தக்கட்டுரை

என்னை இந்த விஷயத்தில் உங்களிடம் கற்றுக்கொள்வதற்காக உங்களிடம் மோதும் ஒருவராகவே எடுத்துக்கொள்ளுங்கள். மொழி எப்போதுமே சிக்கலானது. படைப்பாளியின் மொழி வர்மாணியின் கை போல. நினைக்காத இடங்களில் நரம்புகளைத் தீண்டிவிடலாம். அதற்காக முன்னரே மன்னிப்புக் கோருகிறேன். அவை உங்கள் மேல் மதிப்பில்லாமல் எழுதப்பட்டவை அல்ல.

நீங்கள் தொடர்ந்து எழுதவேண்டும். குறைந்தது இலக்கியம் பற்றிப் பேச இலக்கிய ஆக்கங்களைப் படித்திருக்கவேண்டும் என்பதையாவது நம்மவர்கள் புரிந்துகொள்ளட்டும் உங்கள் வழியாக

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்:

மௌனி பற்றி அந்த வரியைக் கூறியது வேறொரு நண்பர். அந்தத்தகவலை சரி செய்யும் பொருட்டு என் கடிதத்தை என் தளத்தில் வெளியிட்டு இருக்கிறேன்.

எந்தக் கருத்தையும் முடிந்த முடிபாகப் பிடித்துத் தொங்கி எனக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை. நீங்கள் சொல்வது சரியென்று பட்டால் அதை ஒத்துக்கொண்டு மேலே செல்வதற்கு, கற்றுக்கொள்வதற்கு நான் தயாராகவே இருக்கிறேன். நீங்கள் நான் தொடர்ந்து எழுதவேண்டும் என்று விரும்புவதற்கு நன்றி.

அன்புடன்,
எம்.டி.எம்

முந்தைய கட்டுரைநாகர்கோயில் எக்ஸ்பிரஸ்
அடுத்த கட்டுரைஎம்.டி.முத்துக்குமாரசாமியின் விமர்சன அடித்தளம்