பெண்10, காதலர் தினமும் தாலிபானியமும்

அன்புள்ள ஜெ

 

இந்த ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்க்தள், ராம்சேனா கும்பலின் பண்பாட்டுக் காவலர் வேடத்தைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இதை வளரவிட்டால் நம் நாடு ஒரு தாலிபானிய நாடு ஆகிவிடும் அல்லவா? இவர்கள் பிறரை ஒழுங்காக நடந்துகொள்ளச்சொல்லி வலியுறுத்துகிறார்கள். மிரட்டுகிறார்கள். இவர்களுக்கு இந்த அதிகாரத்தை அளித்த்து யார்? இந்த அதிகாரத்தை இவர்களுக்கு அளித்தால் நாம் இனி இவர்களுக்குப் பயந்துதான் எல்லாவற்றையும் செய்யவேண்டுமா? 

 

சங்கர் 

 

அன்புள்ள சங்கர்,

 

உங்கள் கடிதத்தில் உள்ள கேள்வி நியாயமான அச்சத்தை முன்வைக்கிறது. இந்த அச்சத்தை நான் பகிர்ந்துகொள்கிறேன். நாடு சென்று கொண்டிருக்கும் ஆபத்தான போக்கு குறித்து எவருக்கும் நியாயமான அச்சம் கண்டிப்பாக இருக்கும். ஒரு சமூகத்தின் மீது சிறு வன்முறைக்கும்பல் மிரட்டல்மூலம் அதிகாரம்செலுத்துவதென்பது அச்சமூகத்தின் தார்மீக பலம் இல்லாமலாவதையே காட்டுகிறது. அதன் அரசாங்கம் அம்மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு அடிப்படை மதிப்பளிப்பதாக இருந்தால் அந்தக்கும்பல்களை மிகக்கடுமையாக ஒடுக்க வேண்டும்.

 

 

ஆனால் வழக்கம்போல இந்த விஷயத்தில் நம் அறிவுஜீவிகள் அனைவருமே தங்கள் வழக்கமான அரசியல் காழ்ப்பின் அடிப்படையில் மட்டுமே சிந்தனைசெய்திருக்கிறார்கள். அதன் மூலம் இந்த அடிப்படையான பிரச்சினையை வெளிப்படையாக விவாதிக்க முடியாத இடத்துக்கு சமூகத்தை நகர்த்திக் கொண்டுசென்றிருக்கிறார்கள்.

 

 

இப்பிரச்சினையைப் பற்றி நாம் சிந்திப்பதாக இருந்தால் முதலில் சில கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும். பிரச்சினை மதவாதிகளின் பண்பாட்டுக்காவலர் வேலை மட்டும்தானா இல்லை, பண்பாட்டுக்காவலர் வேடத்தை யார் போட்டாலும் அது தவறா? பண்பாட்டை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் தனிநபர்களோ குழுக்களோ முயன்றால் அதை ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறீர்களா?

 

 

இதை இன்னும் விரிவாக ஆராய்ந்தால் கேள்விகள் மேலும் கூர்மையாகும். ஒரு கருத்துக்காக எதிராக கும்பல் வன்முறையை பயன்படுத்துவதும் அச்சுறுத்துவதும் சரிதானா? அதை எவர் செய்தாலும் அதை எதிர்க்கிறீர்களா?

 

 

இன்று இப்பிரச்சினையில் அலட்டிக்கொள்ளும் நம் அரசியல்வாதிகள், இதழாளர்கள், அறிவுஜீவிகள் இந்தப்பிரச்சினையை இந்த விரிந்த நோக்கில்தான் எடுத்துக்கொள்கிறார்களா? இவர்கள் இதை இவர்களின் வழக்கமான பாரதிய ஜனதாக்கட்சி மீதான வெறுப்புப் பிரச்சாரத்துக்கான ஒரு சந்தர்ப்பமாக மட்டும்தானே பயன்படுத்துகிறார்கள்?

 

 

காதலர்தின எதிர்ப்பை ஒரு பண்பாட்டு அடாவடியாகக் காண்பவர்கள் ஆங்கிலப்புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு எதிராக இன்றுவரை இதே அடாவடித்தனத்தை பாட்டாளி மக்கள் கட்சி செய்துவருவதைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள்? இப்போது கதறும் ஊடகங்களில் அதற்கு எதிராக என்ன குரல்கள் எழுந்தன?

 

 

சென்ற காலங்களில் சென்னை சௌகார்பேட்டையில் அங்குள்ள வட இந்தியர்கள் ஹோலி கொண்டாடுவதற்கு எதிராக தி.மு.க இதேபாணியிலான வன்முறையை கைகொண்டிருக்கிறது. உண்மையில்  இவ்வகை அரசியலை தமிழ்நாட்டில் தொடங்கி வைத்ததே திமுக தான்.

 

 

இரு நிகழ்ச்சிகளை இங்கே கவனப்படுத்த விரும்புகிறேன். 1993ல் சில சமணத் துறவிகள் சிரவணபெலகொலாவில் இருந்து கடலூர் வழியாக பாண்டிச்சேரிக்கு வந்தார்கள். அவர்களில் நால்வர் திகம்பரர்கள். நிர்வாணத் தோற்றத்தில் இருக்கும் திகம்பரர்கள் மூவாயிரம் வருடங்களாக இந்த மண்ணில் அறவோர் ஆக மதித்து வணங்கப்பட்ட தவசீலர்கள். ஆனால் அவர்களை எதிர்த்து அன்று திராவிடர் கழகம்  ஆர்ப்பாட்டம் செய்து வன்முறையில் ஈடுபட்டது. அவர்கள்மீது மலம் அள்ளி வீசப்பட்டது.

 

 

ஒரு மதத்தின் வழிபாட்டுரிமையாக அங்கீகரிக்கப்பட்டது அந்த நிர்வாணம். அது ஒன்றும் புதிதாக கிளம்பிய மோஸ்தர் அல்ல. அதற்கு விரிவான ஒரு தத்துவ விளக்கமும் பண்பாட்டுப்பின்புலமும் உள்ளது. அதற்கு அரசியல் சட்ட பாதுகாப்பு உள்ளது. ஆனால் அன்று அவர்கள் கேவலமாக வசைபாடப்பட்டு தாக்கப்பட்டபோது அவர்களைக் கைது செய்து காவலில் வைத்து எல்லையைக் கடத்திவிடுவதற்கே நம்முடைய காவல்துறை முயன்றது. அந்த வன்முறைக்கு எதிராக இங்கே உள்ள பண்பாட்டுக்காவலர்கள் என்ன எதிர்க்குரல் எழுப்பினார்கள்? அவ்வன்முறையை நிகழ்த்திய எவரேனும் தண்டிக்கப்பட்டார்களா என்ன?

 

 

சென்ற 23-12-2008 அன்று ஆசியாநெட் தொலைக்காட்சி ஒரு நேரடி ஒளிபரப்பைக் காட்டியது. திருவனந்தபுரம் அருகே கோவளம் செல்லும் வழியில் ஒரு தனியார் சுற்றுலாத் தங்குமிடம்  [டூரிஸ்ட் ரிஸார்ட்] உள்ளது. இங்கே வெள்ளையர்கள் அதிகமாக வந்து தங்குகிறார்கள்.  இந்த சுற்றுலா அமைப்பு அங்கெ ஒரு மோட்டார் சைக்கிள் போட்டி ஒன்றை நடத்திவருகிறார்கள். நள்ளிரவில் நடைபெறும் இந்தபோட்டியில் பெண்கள் மேலாடை இல்லாமல் கலந்துகொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கேரளத்தை ஆளும் மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சியின்  ஜனநாயக வாலிபர் சங்கம் [ டி.வை.எ·ப்.ஐ] தங்கள் இளைஞர்களைத் திரட்டி கட்சிக்கொடியும், கட்சி கோஷமுமாக அவர்களைத் தாக்கினார்கள்.

 

 

தொலைக்காட்சியினரை வரச்செய்து அவர்கள் நேரடியாக ஒளிபரப்பச் செய்து அவர்களை அடித்து நொறுக்கினார்கள். விடுதிகளுக்குள் புகுந்து அடித்து துவைக்கும் பயங்கரக் காட்சிகளை கேரள மக்களே நேரடியாகக் கண்டுகொண்டிருந்தார்கள். தொலைக்காட்சி முன்னால் வந்து ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் ஏன் அதைச் செய்கிறோம் என்று விளக்கினார். கேரளப்பண்பாட்டைக் காப்பாற்றுவதற்காக! அதைக் கட்சி நியாயப்படுத்தவும் செய்தது. எந்த வழக்கும் தொடுக்கப்படவில்லை.

 

 

கேரளா, வங்கம் இரு மாநிலங்களையும் அறிந்தவர்கள் அங்கே மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக்கட்சி அனேகமாக மாதம் ஒரு பண்பாட்டு காவல் வன்முறையில் ஈடுபடுவதை, அதை நியாயப்படுத்துவதை அறிவார்கள். ஆசியாநெட் தொலைக்காட்சியை பார்த்தாலே போதும், பாதிப்போராட்டம் இதற்காகவே அங்கே நிகழ்கிறது. வேதசகாயகுமார் வேலைபார்க்கும் கேரள பல்கலைகழகக் கல்லூரியில் மாணவிகள் ஜீன்ஸ் அணிவதற்கு எதிராக ஜனநாயக மாணவர் சங்கம் அடிதடிப்போராட்டம் நிகழ்த்தியது. ஆனால் இப்போது  இந்துத்துவர்கள் இந்தியாவை தாலிபானியமயமாக்குகிறார்கள் என்று அனேகமாக தினமும் செய்தி வெளியிட்டு ஒப்பாரி வைக்கிறது தீக்கதிர்.

 

 

இந்த முற்போக்காளர்கள் உண்மையான தாலிபானியம் இங்கே வேரூன்றிவருவதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். அவர்களின் மேடைகளில் சென்று முழங்குகிறார்கள். இப்போது நாற்பது வயது தாண்டியவர்களுக்குத்தெரியும், தமிழ்நாட்டில் ஒரு பிரிவு இஸ்லாமியர்கள் மட்டுமே புர்க்கா என்னும் முகத்திரை வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். பிற முஸ்லீம் பெண்கள் வேலைசெய்வதும் பொதுப்பணிகளில் ஈடுபடுவதும் இங்கே சாதாரணமாக இருந்தது. திரையரங்குகளில் இஸ்லாமியப் பெண்களைப் பார்ப்பதுகூட சாதாரணமாக இருந்தது.

 

 

ஆனால் இன்று புர்க்கா  அனைத்து முஸ்லீம் பெண்களுக்கும் கட்டாயமாகிவிட்டிருக்கிறது. பெண்கள் பொது இடங்களில் தோன்றுவதற்கே அஞ்சும் சூழல் உருவாகியிருக்கிறது. எப்படி இந்தப் பண்பாட்டு வன்முறை இங்கே வேரூன்றியது? அரசில் பணியாற்றும் இஸ்லாமியப்பெண்கள் புர்க்கா போடும்படியும் இல்லையேல் ராஜினாமா செய்யுமப்டியும் வற்புறுத்தப்படுகிறார்கள். இது எந்தத் தொழிற்சங்கமும் இன்று அன்றாடம்  சந்தித்துவரும் பிரச்சினை, ஆனால் வெளியே பேசமுடியாது

 

 

இந்துப்பண்பாட்டுடன் இஸ்லாமியர்களுக்கு பலவகையான தொடர்புகள் இங்கே இருந்தன. ஆலயங்களில் திரைகள் செய்வது முதல் நாதஸ்வரம் வாசிப்பது வரை. அவற்றைச் செய்துவந்த இஸ்லாமியர்கள் அனைவரும் அச்சுறுத்தப்பட்டு அதிலிருந்து விலக்கப்பட்டு வருகிறார்கள். பலமுறை ஊடகங்களில் அக்கலைஞர்களே இதைச் சொல்லியிருக்கிறார்கள். ஏன், இஸ்லாமிய மணவிழாக்களில் மற்ற மதத்தவர்கள் கலந்துகொள்வதே அச்சுறுத்தி விலக்கப்பட்டிருக்கிறது. கடைசியாக நீங்கள் கலந்துகொண்ட இஸ்லாமிய திருமணம் எது என்பதை நினைத்துப்பாருங்கள்.

 

 

இந்த அப்பட்டமான தாலிபானியக் கருத்துக்கள் வெளிப்படையாக மேடையில், ஊடகங்களில் முன்வைக்கப்படுகின்றன. புர்க்கா இல்லாத பெண் வேசி என்று இங்கே பொதுத்தொலைக்காட்சியில் பேச முடிகிறது. தென்காசி ஊரில்மட்டும் வருடத்துக்கு பதினைந்து வன்முறைகள் பெண்களுக்கு எதிராக நிகழ்கின்றன என்று காவல்துறை சொல்கிறது. இந்த தாலிபானியத்துக்கு எதிராக என்ன செய்தார்கள் நம் முற்போக்காளர்கள்? எந்த ஊடகங்கள் இதற்கு எதிராக ஒரு வரியேனும் எழுதின? அவர்களை வளர்த்து அல்லவா விடுகிறார்கள்?

 

 

பாரதிய ஜனதாக் கட்சியின் உதிரி அமைப்புகள் தங்களை இந்துப் பண்பாடின் காவலர்களாகக் காட்டிக்கொள்ளும் பொருட்டு வன்முறையில் ஈடுபடுவது தொடர்ந்து நடைபெற்றுவருவது. இவர்கள் பெரும்பாலும் நகர்ப்புற வன்முறை உதிரிகள். இந்தக் கும்பல் எந்தக் கட்சியில் இருந்தாலும் கும்பல்சார்ந்த வன்முறை மூலமே செயல்படும். பாரதிய ஜனதாக் கட்சி குறுகிய அரசியல் நோக்கத்துக்காக உருவாக்கிய இந்த இந்த வன்முறைக்கும்பல் அவர்களின் கட்டுக்குள் நிற்பதாகவும் தெரியவில்லை.

 

 

ஆனால் பாரதீய ஜனதாக் கட்சியையே இந்த வன்முறைக்கும்பலை வைத்து அடையாளப்படுத்தும் பிரச்சார வேலையைத்தான் மற்ற அரசியல்கட்சிகளும் ஊடகங்களும் செய்து வருகின்றன. ஆகவேதான் கர்நாடகத்தில் ஒரு சிறு கும்பல் ஒரு மதுக்கடையை தாக்கிய செய்தி தேசிய விவாதமாக ஆகிறது. சொல்லிச் சொல்லி மிகைப்படுத்தப் படுகிறது. அதே வகையான செயல்களில் இடதுசாரி பண்பாட்டுக் காவலர்கள் நடந்துகொள்ளும்போது அது கவனிக்கவே படுவதில்லை.

 

 

ஒட்டுமொத்தமாக இந்த காதலர் தினத்துக்கு எதிராக பாரதிய ஜனதாக் கட்சியின் துணை அமைப்புகள் செய்த போராட்டங்களை மிகச்சிறிய உதிரிச்செயல்பாடுகள் என்றுதான் சொல்லமுடியும். ஆனால் அவற்றுக்குக் கிடைத்த தேசிய கவனம் பலமடங்கு பிரம்மாண்டமானது. ஒரு மதுக்கடையைத் தாக்கிய சிறிய கும்பலின் தலைவர் தேசிய அளவில் புகழ்பெற்றார். இது எந்த ஒரு கீழ்மட்ட அரசியல்வாதிக்கும் பெரும் கவற்சியை அளிக்கும் விஷயம்தான். சிறிய சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகக் கையாள வேண்டிய ஒரு விஷயம் இது. ஆனால் ஊடகங்கள் அளிக்கும் ஆதரவின்மூலம் ஓர் அரசியல் சக்தியாக மாறிய ராம்சேனாவின் தலைவர் அதை ஒரு அரசியல்- பண்பாட்டுப் பிரச்சினையாக ஆக்கிவிட்டிருக்கிறார். அவரை வளர்த்துவிட்டு, பாரதியஜனதாக் கட்சியை அவரது கட்சியாகக் காட்டி, எதிர்மறையாக வர்ணிக்க ஊடகங்கள் முண்டியடிக்கின்றன.

 

 

கர்நாடக பாரதிய ஜனதாக் கட்சி ராம்சேனா போன்ற அமைப்பை நிராகரித்திருக்கிறது. கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. முன் ஜாக்கிரதையாக கைது நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. இதற்கு மேல் எந்த அரசும் செயல்படவும் முடியாது. ஆனால் இங்கே கொந்தளிக்கும் நம் கும்பல் அந்த விஷயத்தைக் குறிப்பிடுவதே இல்லை. இங்கே இருப்பது கலாச்சார சுதந்திரம் பற்றிய அக்கறையே அல்ல, வெறும் கட்சி அரசியல்.

 

 

**

 

 

கடைசியாக காதலர் தினம் குறித்து. எனக்கு அதில் எந்தவகையான எதிர்ப்புணர்வும் இல்லை. பாரதிய ஜனதாக் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி போன்ற கலாச்சார அடிப்படைவாதிகள் அதை ஓர் அன்னியப் பண்பாட்டு படையெடுப்பு என்கிறார்கள். கேரள இடதுசாரிகள் அதை ஊடக-முதலாலித்துவப் படையெடுப்பு என்கிறார்கள். அதை ஏன் அஞ்சவேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. இங்கே இந்திரவிழா, வசந்த விழா, மஞ்சள்நீர் ஊற்றும் விழா  போன்ற காதல்விழாக்கள் தொன்றுதொட்டே இருந்திருக்கின்றன. ஹோலி இப்போதும் அப்படித்தான். பெண்கள் கடுமையாக ஒடுக்கப்பட்ட நடுக்காலகட்டத்தில் அந்தவகையான களியாட்டங்கள் இல்லாமல் ஆயின. மீண்டும் பெண்கள் சுதந்திரம் அடைந்துள்ள இன்று அவை மீண்டு வருவதையே இவ்விழாக்கள் காட்டுகின்றன என்று ஏன் கொள்ளக்கூடாது?

 

 

அவை முதலாளித்துவ உருவாக்கங்களா, ஊடகச் சதிகளா என்பதை விவாதிப்பது நல்லதுதான். எந்த ஒரு விஷயத்துக்கும் மறுபக்கத்தைக் காணமுயல்வதும் கண்காணிப்பதும் பண்பாட்டின் நடக்க வேண்டியவையே. ஆனால் ஒரு சமூக நிகழ்வு பல்வேறு காரணங்களால் இயல்பான முறையில் உருவம் கொள்ளக்கூடியது. அது ஏதோ சதி என்று சொல்வது சமூக இயக்கத்தை சிறுமைப்படுத்திப் பார்ப்பதாகும். நம்முடைய சமூகத்தின் இளைய தலைமுறையினருக்கு இவ்விழா தேவையாக இருக்கிறது. ஊடகங்கள் சர்வதேசமயமாக்கபப்ட்டுவிட்ட இன்று சர்வதேச அளவில் இத்தகைய கொண்டாட்டங்கள் பிறந்து பரவுகின்றன. இதை யார் எப்படி தடுக்க முடியும்?

 

 

மனித உறவுகள் அவை நிகழும் சமூகப்பொருளியல் அடிப்படைகளுக்கு ஏற்ப மாற்றம் கொள்ளக்கூடியவை. இன்று நம் பொருளியல் சூழல் அதிவேகமாக மாறி வருகிறது. பெண்கள் குடும்பத்தின் முக்கியமான பொருளாதார மையங்களாக ஆகியிருக்கிறார்கள். அவர்களின் உரிமைகளும் உணர்வுகளும் பிறரால் கணக்கில்கொள்ளப்பட்டே ஆக வேண்டும் என்ற நிலை உருவாகியிருக்கிறது. ஆண்கள் மேலிடத்தை வகிக்கும் ஆண்பெண் உறவுகள் கலைந்து இருபாலினமும் சரிசமமான இடத்தை வகிக்கும் ஆண்பெண் உறவுகள் உருவாகி வருகின்றன.

 

 

இந்த மாற்றம் நிகழும்போது உருவாகும் உரசல்கள், உடைவுகள், பூசல்கள் பல உள்ளன. மாறுதலின் காலகட்டத்தில் அவை இயல்பே. அவற்றையும் மீறி சமூகம் மறுவடிவம் அடைகிறது. பெண்கள் பொது இடங்களுக்கு வருவதும் தொழில்களில் சமபங்கு வகிப்பதும் தவிர்க்க முடியாமல் நிகழும் வளர்ச்சிப்போக்குகள். இந்நிலையில் ஆண்பெண் உறவுக்கு புதியதளங்கள் தேவையாகின்றன. ஓரக்கண்ணால் பார்த்துக்கொள்வதும் ரகசியமாகக் காதலிப்பதுமெல்லாம் சென்ற காலத்துக்கு உரியனவாக மாறிவிட்டிருக்கின்றன போலும். அவர்களுக்கு புதிய வெளிப்படையான பரிமாற்ற மையங்கள் தேவைப்படுகின்றன போலும். அந்த தேவை இருக்கும் போது அதற்கான இடங்களும் வழிகளும் உருவாகவே செய்யும். அவற்றை தடுக்க முயல்வது காலமாற்றத்துக்கு எதிராக கைவிரித்து நிற்கும் மூடத்தனம் மட்டுமே.

 

 

ஆகவே காதலர்தினம் விமர்சினையாகக் கொண்டாடப்படட்டும். காதலர்கள் உருவாகட்டும். மனச்சிக்கல்கள் இல்லாமல் அவர்கள் தங்கள் உணர்வுகளை பரிமாறிக்கொள்ளட்டும். மேலான உறவுகள், சமநிலையில் உருவாகும் உறவுகள், உருவாகட்டும். சென்ற கால மனநிலைகளில் இருந்து விடுபட்டு, வரும்காலகட்டத்துக்கான மனநிலைகளை உருவாக்கிக்கொள்ளும் சந்தர்ப்பங்களாக அ¨வை அமைவதாக.

 

 

உடனே நம் ஆண்கள் கற்பைப் பற்றிக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள். உண்மையில் இந்தப் பண்பாட்டுக்கவலைகளின் அடியில் இருப்பதெல்லாம் பெண்கள் கற்போடு இருப்பார்களா என்ற பதற்றம் மட்டும்தான். நம்முடைய பெண்– சகோதரி,மனைவி, மகள்– கற்போடு இருக்கவேண்டுமே என்ற துடிப்பு மட்டும்தான். பெண்ணின் கற்பு அவளுடைய சொந்த விஷயம். அதை பாதுகாக்கும் பொறுப்பை அவளிடமே விட்டுவிடலாம். புது உலகை எதிர்கொள்ள அவளால் முடியும் என்றால் தன் ஒழுக்கத்தைப் பாதுகாக்கவும் அவளால் முடியும்.

 

இந்த ஆசாமிகளுக்காக வள்ளுவர் சொன்னார்

 

 

சிறைகாக்கும் காப்பு என் செய்யும்? மகளிர்

நிறை காக்கும் காப்பே தலை!

 

 

[காவல் மூலம் உருவாவது என்ன பாதுகாப்பு? பெண்கள் தங்கள் நிறைநிலை மூலம் தாங்களே கொள்ளும் பாதுகாப்பே முதன்மையானது]

 

ஜெ

முந்தைய கட்டுரைஐரோப்பாவும் விடுதலைமனநிலையும்
அடுத்த கட்டுரைசெக் குடியரசின் வாழ்க்கை [பிரகாஷ் சங்கரன்]