‘இயல்’ விருதின் மரணம்

சில வருடங்களுக்கு முன்னால் ஒரு கல்லூரிக்குச் சென்றிருந்தபோது கண்ட காட்சி. கல்லூரியின் உயர்தர வரவேற்பறைக்குள் பேராசிரியர்கள் கால்மேல்கால்போட்டு அமர்ந்து ஆங்கிலத்தில் நாட்டார் கலைகளைப்பற்றி உரையாடிக் கொண்டு உயர்தர விருந்தை உண்டுகொண்டிருந்தார்கள். வெளியே மண்தரையில் அமர்ந்து நாட்டுப்புறக்கலைஞர்கள் புளிசாதப் பொட்டலங்களை வாங்கி பரப்பிவைத்து தின்றுகொண்டிருந்தார்கள். பல லட்சம் செலவில் நடந்த அந்நிகழ்ச்சியே அக்கலைஞர்களைப்பற்றி ஆராயும்பொருட்டுதான்.

தமிழ் இலக்கியத்திலும் எப்போதும் இந்நிலைதான். வாழ்க்கையின் ஆழத்திலிருந்து வேர்விட்டு எழுந்துவந்து அசலான கலைப்படைப்புகளைப் படைக்கும் கலைஞன் இங்கு எங்கும் கைகட்டி கூசி அரங்குக்கு வெளியே நிற்கவேண்டும். காரணம் அவனுக்குப் படிப்போ பதவியோ ஆங்கில ஞானமோ பெரிய இடங்களில் தொடர்போ இருப்பதில்லை. எல்லார் கண்ணிலும் அவன் எளியோன். ஏன், அவனே தன்னைப்பற்றி தாழ்வான எண்ணம்தான் கொண்டிருப்பான்.

ஆனால் அவன் எழுத்தைப் பற்றி ஆராய்பவர்கள், மொழிபெயர்ப்புசெய்பவர்கள், கற்பிப்பவர்கள் அவனுடைய எஜமானர்களாக கால்மேல்கால்போட்டு அமர்ந்து அவனை அதட்டுவார்கள். அவனுக்கு ஆலோசனைகள் சொல்வார்கள். காரணம் பணம், பதவி, அனைத்தையும் விட மேலாக ஆங்கிலம். அனைத்தையும் விடமேலாக எழுத்தாளனுக்கு என ஏதேனும் விருதோ, கௌரவமோ, பரிசோ உண்டு என்றால் அதுவும் இந்த எஜமானர்களுக்கே சென்றுசேரும். அவர்கள் தங்களுக்குள் அதைப் பிரித்துக் கொள்வார்கள். இந்நிலை வேறு இந்திய மொழிகளில் உண்டா எனத் தெரியவில்லை.

இவ்வருடத்தின் ‘இயல்’ விருது மொழிபெயர்ப்பாளர் லட்சுமி ஹாம்ஸ்டாமுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தமிழிலக்கியத்துக்கு ஆற்றிய வாழ்நாள் சாதனைக்காக! கனடிய தமிழ் இலக்கிய தேட்டமும் டொரொண்டோ பல்கலைக்கழகத்தின் தென்னாசிய கழகமும் இணைந்து அளிக்கும் விருது இது. இதன் முதல் விருது சுந்தர ராமசாமிக்கு வழங்கப்பட்டது. அதனாலேயே இதற்கு ஒரு தனி கௌரவமும் பரவலான கவனமும் கிடைத்தது. அதன்பின்னர் வெங்கட் சாமிநாதன் போன்று பொதுப்பண்பாட்டால் அங்கீகரிக்கப்படாத ஆனால் நீண்டநாள் இலக்கியப் பங்களிப்பாற்றிய முன்னோடிகளுக்கு வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் பெரும்பாலான எல்லா இலக்கிய விருதுகளும் அதிகாரத்தரகர்களால் கையகப்படுத்தப்பட்ட நிலையில் என்போன்றவர்களுக்கு இயல் விருது பெரும் நம்பிக்கையை அளித்தது. என் வணக்கத்திற்குரிய இலக்கிய முன்னோடிகள் புறக்கணிப்பின் இருளில் கிடப்பதைக் கண்டு என்றுமே மனக்குமுறல் கொண்டிருப்பவன் நான். என் மிகமிக எளிய வருமானத்தின் எல்லையை மீறியே அவர்களை கௌரவிக்க இன்றுவரை தொடர்ந்து முயற்சிகள் செய்து வருபவன். ‘இயல்’ விருது அவ்வகையில் ஒரு நல்வாய்ப்பாக அமையுமென எண்ணினேன்.

ஆனால் சென்ற சில வருடங்களாகவே இவ்விருது பற்றிய ஆழமான ஐயம் உருவாகி வந்தது. விருதுக்கு ஒரு கௌரவத்தையும் கவனத்தையும் உருவாக்கும்பொருட்டு தந்திரமாக முதலில் சில இலக்கிய முன்னோடிகள் தேர்வுசெய்யப்பட்டனரோ என்ற எண்ணம் ஏற்பட்டது. சமீபமாக இவ்விருது பெற்றவர்களின் இலக்கியப்பங்களிப்பு என்ன என்பதை என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

சென்றவருடம் ஜார்ஜ்.எல்.ஹார்ட்டுக்கு இவ்விருது அளிக்கப்பட்டபோது ஆழமான அதிர்ச்சி எனக்கு ஏற்பட்டது. தமிழ்பண்பாடு குறித்து சில மேலோட்டமான ஆய்வுகளைச் செய்தவர் ஜார்ஜ்.எல்.ஹார்ட். அமெரிக்க நவீன ஆய்வுமுறையின் சில கருவிகளை அவர் கையாண்டார் என்பதனால் அவ்வாய்வுகளுக்கு ஒரு ஆரம்பகட்ட முக்கியத்துவமும் உண்டு. ஆனால் தமிழ் பண்பாட்டின் உள்ளிருந்துகொண்டு பேராசிரியர் ராஜ்கௌதமன், பேராசிரியர் அ.கா.பெருமாள் போன்றவர்கள் செய்துள்ள அசலான ஆய்வுகளுடன் ஒப்பிடுகையில் ஒரு தமிழ் வாசகனுக்கும் ஆய்வாளனுக்கும் ஜார்ஜ்.எல்.ஹார்ட்டின் ஆய்வுகள் எவ்வகையிலும் முக்கியமல்ல.

ஜார்ஜ்.எல்.ஹார்ட் தமிழ்பண்பாட்டின் நுட்பங்களை புரிந்துகொண்டவரே அல்ல. அவருக்கு விருது என்றால் அதேபோல நூறு ஆய்வாளர்களையாவது சொல்லமுடியும். அவை மேலைநாட்டினர் தமிழகத்தை தங்கள் தேவைக்கும் நோக்கத்துக்கும் ஏற்ப புரிந்துகொள்ள செய்யும் சில முயற்சிகள் மட்டுமே. நம்மை நாம் நமது ஆய்வுகள் மூலமே புரிந்துகொள்ள முடியும். நமது படைப்புகள் மூலமே உணர்ந்துகொள்ளவும் இயலும்.

ஆனால் நமக்கு ஆங்கிலம் என்றாலே மெய்ஞானம். அதில் எழுதப்பட்டது தமிழில் எழுதப்பட்ட ஒன்றைவிட எட்டுமடங்கு எடை உடையது. உலகமே அதன் வழியாக நம்மைக் கவனிக்கிறது என்று ஒரு அசட்டுப்பிரமை. ராஜ் கௌதமனோ அ.கா.பெருமாளோ பெறமுடியாத கௌரவத்தை ஜார்ஜ். எல். ஹார்ட் பெறுவது இப்படித்தான்.

இந்த வருடத்தின் விருதுபெறும் லட்சுமி ஹாம்ஸ்டாமை நான் ஒருமுறை சந்தித்து உரையாடியிருக்கிரேன். சுந்தர ராமசாமியின் வீட்டில். அவரது நாவலை அந்த அம்மையார் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார். எனக்கு இரு விஷயங்கள் தோன்றின. ஒன்று அவருக்கு எந்த இலக்கியம் பற்றியும் சொல்லும்படியான ரசனையோ புலமையோ இல்லை. மிக மேலோட்டமான ஒரு வாசகி. இரண்டு அவருக்கு தமிழ் பண்பாடு பற்றி அடிப்படை ஞானம் கூட இல்லை

”இந்த அம்மையார் லண்டனில் இருப்பதனால் ஒருசரளமான பொது ஆங்கிலம் இவரிடம் உள்ளது. அதற்குமேல் இவருக்கு எந்த தகுதியும் இல்லை. இவர் உங்கள் நூலை மொழிபெயர்க்கத்தான் வேண்டுமா?”என்று சுந்தர ராமசாமியிடம் வாதிட்டேன்.

”அவரது நடை ஆங்கில வாசகனை கவர்வதாக இருக்கிறது. நம்மூர் மொழிபெயர்ப்பாளர்களிடம் அது இல்லை”என்றார் சுந்தர ராமசாமி. ”சார், இவர் அங்குள்ள சராசரி நடைக்கு எல்லா படைப்புகளையும் மாற்றுவார். சிவசங்கரி ஹெமிங்வேயை இங்கே மொழிபெயர்த்தால் எப்படி இருக்குமோ அப்படி. எல்லா நுட்பங்களையும் மழுங்கடித்துவிடுவார். இங்குள்ள ஆங்கிலப் பேராசிரிய மொழிபெயர்ப்பாளர்கள் குறைந்தது நம்மிடம் உள்ள பண்பாட்டு நுட்பங்களை மொழியாக்கம்செய்ய முயற்சியாவது செய்வார்கள். அதன் மூலம் அவர்கள் நடை வெளிநாட்டு வாசகர்களுக்கு அன்னியமாக இருக்கலாம்.ஆனால் அது நேர்மையான செயல்…”என்றேன்.

ஆனால் சுந்தர ராமசாமிக்கு லட்சுமி ஹாம்ஸ்டாம் மூலம் தனக்கு உலகப்புகழ் தேடிவரும் என்ற கனவு இருந்தது.இந்த அம்மையாரின் மொழிபெயர்ப்புகளை பின்னர் படித்தபோது என் மதிப்பீடு அப்படியே உறுதியாயிற்று. அவற்றினூடாக அந்த தமிழ் படைப்புகளின் எளிய நிழல்களையே காணமுடியும். உலக இலக்கியமறிந்த எந்த வாசகனும் அவற்றை பொருட்படுத்தமாட்டான். அவற்றுடன் ஒப்பிடுகையில் இங்குள்ள சம்பிரதாயமான மொழிபெயர்ப்புகளுக்கு ஒருவகை ஆவண மதிப்பாவது உள்ளது.

லட்சுமி நல்ல மொழிபெயர்ப்பாளர் என்றே இருக்கட்டும். முன்னோடிப்படைப்பாளிகள் புறக்கணிப்பில் புழுங்கும் ஒரு மொழியில் மொழிபெயர்பபளருக்கா விருது? நாளை மெய்ப்பு திருத்தியமைக்காக விருது கொடுப்பார்களா?

யோசித்துப்பாருங்கள், நவீனத்தமிழிலக்கியத்தை தீர்மானித்த முன்னோடிப் படைப்பாளிகளான லா.ச.ராமாமிருதமோ, ஆ.மாதவனோ, நீல பத்மநாபனோ, அசோகமித்திரனோ, ஞானக்கூத்தனோ, நாஞ்சில்நாடனோ, வண்ணதாசனோ, அபியோ,தேவதேவனோ பொருட்படுத்தப்படாமல் ஜார்ஜ்.எல்.ஹார்ட்டும், லட்சுமி ஆம்ஸ்டமும் தமிழின் பெரும் பங்களிப்பாளர்களாக எப்படிப் படுகிறார்கள் இவ்விருதுக்குழுவின் கண்களுக்கு? இலக்கியமல்லாத துறைகள் என்றாலும் கூட தொடர்ச்சியாக பங்களிப்பாற்றியவர்கள் ந.முத்துசாமி, தியோடர் பாச்கரன் என எத்தனைபேரைச் சொல்லமுடியும். இத்தேர்வின் பின்னால் உள்ள அளவுகோல் என்ன? எந்த மனிதனுக்கும் தெரியும் எளிமையான விடைதான். பெறுபவர்களும் கொடுப்பவர்களும் பல்கலைக் கழகம் சார்ந்தவர்கள். பதவிகளில் இருப்பவர்கள். கொடுப்பவர்களுக்கு பதில் கொடை செய்யும் இடத்தில் இருப்பவர்கள் விருதுபெறுகிறார்கள்.

ஒரு பல்கலைக் கழகக் குழு தங்கள் அந்தரங்க நோக்கங்களுக்காக பரிசைக் கொடுப்பதும் பெறுவதும் அவர்களின் விருப்பம். ஆனால் அதை தமிழிலக்கியத்துக்கான ‘வாழ்நாள் சாதனை’ விருது என்று சொல்வதன் மூலம் தங்கள் ரத்தம் மூலமும் கண்ணீர் மூலமும் இலக்கியத்தை உருவாக்கிய நம் பெரும்படைப்பாளிகளை அவமானப்படுத்தவும் சிறுமைப்படுத்தவும் அவர்களுக்கு உரிமை இல்லை. நாளைக்கு தஞ்சாவூர் கோபுரத்தை புகைப்படம் எடுத்தாள் என ஏதாவது வெள்ளைக்காரிக்கு தமிழ்பண்பாட்டுக்கு வாழ்நாள் பங்களிப்பாற்றிய விருதை இவர்கள் கொடுக்கலாம். ஆனால் இலக்கியப் பங்களிப்புகளை மதிப்பிட ஆயிரம் தீவிர வாசகர்களாவது தமிழில் இருக்கிறார்கள் என்பதை இவர்கள் மறக்கக் கூடாது

இவ்விருதுக்கான நடுவர்களாக ஆ.இரா.வேங்கடாசலபதி, எம்.ஏ.நு·மான் மு பொன்னம்பலம் மற்றும் வ.ந.கிரிதரன் ஆகியோர் இருந்துள்ளனர். முதல் இருவரும் முற்றிலும் தங்கள் கல்வித்துறை சார்ந்த சுயமேம்பாட்டுக்கு அப்பால் சிந்திக்காதவர்கள் என்றே நான் எண்ணுகிறேன். இவ்விருதை அவர்கள் அதற்குத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சென்றகாலங்களில் இவர்கள் கருத்தரங்குகளுக்கும் பிறவற்றுக்கும் அந்த அம்மையாரை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதை நான் அறிவேன். இது ஒரு கீழ்த்தரமான கொடுக்கல் வாங்கல். அதிகாரமும் புகழும் இல்லாத முன்னோடித் தமிழ் படைப்பாளிக்கு இவ்விருதை அளிப்பதன்மூலம் இந்த விருதுக்குழுவினர் அடைவது ஒன்றுமில்லை.

என்னுடைய எப்போதுமுள்ள ஐயம் இது. அது எந்த விருதாக இருந்தாலும், இங்குள்ள சாகித்ய அக்காதமியோ பப்பாஸி விருதோ அல்லது புலம்பெயர்ந்த இயல் விருதோ முதல்தர எழுத்தாளர்களை , தமிழுக்கு தன்னைத் தந்து சாதனை புரிந்த படைப்பாளிகளை கவனமாக தவிர்க்கும் மனநிலை எப்படி ஒவ்வொரு முறையும் சரியாக உருவாகிவிடுகிறது? எப்படி அதற்கான மனநிலை கொண்ட தொழில்முறையாளர்கள் தவறாமல் உள்ளே நுழைந்துவிடுகின்றன?

‘இயல்’ விருது இனிமேல் அவ்வப்போது உண்மையான இலக்கியவாதிகளுக்கும் கொடுக்கப்படலாம். இலக்கிய தரகர்களால் கைப்பற்றப்பட்ட அமைப்புகள் எல்லாம் செய்வதுதான் இது. தொடர்ந்து கீழ்த்தர அரசியல் மூலம் விருதுகள் கொடுக்கப்படும்போது விருதின் மரியாதை சரிகையில் ஒரு இலக்கியவாதியை தெரிவுசெய்தல் ஒரு தப்பிக்கும் வழிமுறை. ஆனால் ஒரு இலக்கிய விருது என்றமுறையில் ‘இயல்’ விருது செத்துவிட்டது.

தமிழில் இது இயல்புதான். இங்குள்ள எல்லா முன்முயற்சிகளும் வெற்றிகரமாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டுப்பல்கலைகழகம் சம்பந்தபட்டிருப்பதனால் இயல் விருது பற்றிய ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனால் அது மூன்றுவருடம் கூட உயிர்வாழவில்லை. அடுத்த இயல் விருதை குஷ்புவுக்குக் கொடுத்தால்கூட ஆச்சரியப்படமாட்டேன்.

முந்தைய கட்டுரைநாஞ்சில் 60 நிறைவு: நூல் வெளியீட்டுவிழா
அடுத்த கட்டுரைஅச்சுபிழை, கடிதங்கள்