‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12

அவைக்கூடுகை முடிந்ததுமே எந்த முறைமையையும் பேணாமல், எவரிடமும் ஒரு சொல்லாலோ விழியசைவாலோகூட விடைகொள்ளாமல், அவையிலிருந்தே யுதிஷ்டிரனும் இளையோரும் திரௌபதியும் நகர்நீங்கினர். அரண்மனையில் எவரும் துயர்கொள்ளவில்லை. எவரும் வழியனுப்பவில்லை. உடன் செல்லவும் எவருமில்லை. அந்நிலமே அவர்களை முற்றாக மறந்து வேறெங்கோ திகழ்ந்துகொண்டிருந்தது.

அரண்மனையின் தெற்குவாயில் வழியாக தெற்குக் கோட்டைமுகப்புக்கு தனிப்பாதை இருந்தமையால் அவர்கள் செல்வதை எவரும் பார்க்கவில்லை. தெற்குக் கோட்டைக்கு அப்பால் நீத்தோர் நிலம் வழியாக குறுங்காட்டுக்குள் நுழைந்து அவர்கள் கங்கைக் கரைநோக்கி சென்றனர். செல்லும் வழியெங்கும் அவர்கள் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை.

மறுநாள் முதற்காலையில் யுதிஷ்டிரனும் இளையோரும் தேவியும் அஸ்தினபுரியின் கங்கைப்படித்துறையில் அமைந்திருந்த அம்பையன்னையின் ஆலயத்தை சென்றடைந்தனர். முதற்காலைப் பொழுதில் அங்கே பூசகர் மட்டுமே இருந்தார். நெடுங்காலம் சிற்றாலயமாக இருந்த அதை அரசி சம்வகையின் ஆணையின்படி எடுத்துக் கட்டியிருந்தனர். கல்லாலான ஆலயம் மூன்றடுக்கு கோபுரமும் பதினெண்கால் முகப்புமண்டபமும் சுற்றம்பலமும் கொண்டதாக இருந்தது. அவ்வளைவுக்குள்ளேயே குகனடியாரின் சிற்றாலயமும் இருந்தது.

அஸ்தினபுரியின் புதிய குடிகளுக்கு அம்பையன்னை எவரென்று தெரிந்திருக்கவில்லை. சூதர்களால் அவர்களுக்கு சொல்லப்பட்ட கதை பலவாறாகத் திரிந்து பிறிதொன்றாக அவர்களின் உள்ளத்தில் அமைந்திருந்தது. காசிநாட்டு அரசனின் மகளாக தீத்தழலில் பிறந்த அன்னை கங்கையின் அலைகளுக்கு அடியில் வாழ்ந்த ஏழு அசுரர்களை அழித்து மீண்டும் தீத்தழலாகவே ஆனாள் என்று அக்கதை சொன்னது. பெண்குழந்தை பிறந்தால் ஓராண்டு அகவைநிறைவு நாளில் அதை அங்கே கொண்டுவந்து, நாவில் முப்புரி வேலால் எழுதி படையலிட்டு, கொடை அளித்,து வணங்கி மீளும் வழக்கமிருந்தது. அஸ்வினிமாதம் எழுநிலவு எட்டாம்நாள் அங்கே திருவிழா கொண்டாடப்பட்டது.

காலையில் செவ்விளக்கொளியில் செம்பட்டாடை அணிந்து செம்மலர்மாலை சூடி மும்முடி தலையில் எழுந்திருக்க, முப்புரிவேல் ஏந்தி அன்னை அமர்ந்திருந்தாள். எரிகழல் அணிந்த வலக்கால் சற்றே முன்னகர்ந்திருந்தது. அதன்கீழிருந்த பீடத்தில் தலை அக்காலடிக்குக் கீழே அமையும்படி அஸ்தினபுரியின் அரசனின் உருவம் செதுக்கப்பட்டிருந்தது. அது விசித்திரவீரிய மன்னரின் வடிவில் அமைந்திருந்தது. அன்னையின் வெள்ளிவிழிகளில் சுடர்கள் ஒளிவிட்டு அசைந்தன.

யுதிஷ்டிரன் குகனடியாரை வணங்கிவிட்டு அன்னையின் கருவறைக்கு முன் வந்து நின்றார். அன்னையின் தழலாடும் விழிகளை நோக்கியபோது மெல்லிய முனகலோசை ஒன்று அவரிடமிருந்து எழுந்தது. கைகளை தலைக்குமேல் கூப்பி எட்டுறுப்பும் நிலம்பட விழுந்து வணங்கினார். எழுந்து திரும்பி நோக்காமல் கங்கையை நோக்கி சென்றார். பீமனும் அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் இறுதியாக திரௌபதியும் வணங்கி அவரைத் தொடர்ந்து சென்றனர். அன்னை அவர்களை அறியாத பிறிதொரு அசையாத காலத்தில் விழிதுலக்கி அமர்ந்திருந்தாள்.

அவர்கள் கங்கைக் கரையோரமாக நடந்து கங்கையின் தோற்றுவாயான கங்கோத்ரியை நாற்பத்தியாறு நாட்களில் சென்றடைந்தனர். அப்பயணத்தில் அவர்கள் ஒருமுறைகூட ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. ஒருவர் விழிகளை பிறிதொருவர் பார்க்கவில்லை. ஒருவர் உடன் வருவதை பிறர் அறியலாகாது என்றும், ஒவ்வொருவரும் தங்கள் உள்ளத்தை முழுத் தனிமையுடன் வைத்திருக்கவேண்டும் என்பதும் நகர்நீங்குதலின் நெறி.

மரவுரி ஆடை அணிந்து, மண்ணில் படுத்து, மலை உணவுகளை உண்டு, ஆற்று நீரள்ளிக் குடித்து, அனைத்து நாளொழுங்குகளையும் துறந்து, கால் வெடிக்க, தலைமயிர் சடைகொள்ள, உடல் ஒளியிழந்து பொடி படிய சென்ற அவர்கள் காட்டுவிலங்குகள் போலவே மாறிவிட்டிருந்தனர். காட்டுவிலங்குகளுக்குரிய உடல் அசைவுகளும் புலன்கூர்மையும் சொல்லில்லா விழிகளும் அவர்களுக்கும் அமைந்துவிட்டிருந்தன. உள்ளுணர்வால் அவர்கள் வழி உணர்ந்தனர். மணத்தாலும் விழியாலும் தங்கள் உணவை தாங்களே தேடிக்கொண்டனர். இரவுகளில் ஒற்றைப்புலன் விழித்திருக்க துயின்றனர். ஒரு சொல்லின்றி காலையில் விழித்தெழுந்தனர்.

அஸ்தினபுரியிலிருந்து கிளம்பியபோதே அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதை நிறுத்தியிருந்தனர். பின்னர் விழிதொட்டுக்கொள்வதை முற்றாகத் தவிர்த்தனர். உள்ளத்தில் கொந்தளித்த சொற்கள் ஒழுகி வற்றி வறண்டபோது முயன்றாலும் பேசிக்கொள்ள முடியாதவர்களாக மாறினார்கள். உடல் அசைவுகளாலன்றி ஒருவருக்கொருவர் தொடர்புறுத்திக்கொள்ள இயலாதவர்களாக ஆயினர்.

முன்னரே அவர்களிடமிருந்து அரசகுடிப்பிறப்பும் நகர்வாழ்வும் அகன்றுவிட்டிருந்தது. ஆத்மாவின் மேல் எடையென ஆகி அமையும் புகழ்ச் சிறப்பும், பேரெடையாகும் தன்னுணர்வும் மறைந்தன. அதன்பின் எளிய இருப்புணர்வொன்றே எஞ்சியிருந்தது. அதுவும் அகன்றபின் அவர்கள் உடலுறுப்புகளை ஒன்றெனக் கோக்கும் உயிருணர்வொன்றே கொண்டவர்களாக மாறினார்கள்.

அவர்களை எவரும் அடையாளம் காணவில்லை. பெரும்பாலும் காட்டுவிலங்குகளைப்போல முற்காலையிலும் எழும் அந்தியிலும் மட்டுமே அவர்கள் பயணம் செய்தனர். பகற்பொழுதில் வெயிலில் குறுங்காடுகளுக்குள் புதர்களுக்குள் சுருண்டு உறங்கினர். சொல்நீத்த உள்ளங்களில் கனவுகளும் எழவில்லை. திகழ்வதில் மறைவன வெளிப்படும் கனவும் மறைந்தபோது அவர்கள் திகழ்வதை அவர்களின் திகழ்கணம் மட்டுமே அறிந்தது.

கங்கோத்ரியில் அமைந்த வசிட்டரின் குருநிலைக்கு அவர்கள் சென்றுசேர்ந்தபோது தொலைவில் அவர்கள் வருவதை பறவை அறிவிப்புகளினூடாகவே வசிட்டர் உணர்ந்துகொண்டார். மாணவர்களுடன் சொல்லாடிக்கொண்டிருந்த அவர் குருநிலையிலிருந்து எழுந்து வந்து பார்த்தபோது அவர்களின் நிழல்களிலிருந்தே அவர்கள் யார் என்று புரிந்துகொண்டார்.

அக்குருநிலைக்குள் நுழைய விரும்பாமல் அவர்கள் வெளியே இருந்த ஆலமரத்தின் அடியில் தங்கியிருந்தனர். அங்கு வந்த வசிட்டர் “வருக, உங்கள் வருகைக்காக சில நாட்களாக இங்கு காத்திருக்கிறேன்!” என்றார். “நீங்கள் இங்கு வந்துசேரும் தருணத்தில் இயற்றவேண்டியதென்ன என்பதை எழுபதாண்டுகளுக்கு முன் எனது ஆசிரியர் என்னிடம் உரைத்தார். உங்களுக்கான சொற்களுடன் இங்கு அமைந்தேன்” என்றார். “நாங்கள் இனி எந்த இல்லத்திற்குள்ளும் குருநிலைக்குள்ளும் நுழைவதாக இல்லை” என்றார் யுதிஷ்டிரன். “ஆம், ஆகவேதான் நானே இங்கு வந்தேன்” என்றார் வசிட்டர்.

பாண்டவர்கள் அவர் அருகே அமர்ந்தனர். வசிட்டரின் மாணவர்கள் அவர்களுக்கு உணவும் நீரும் கொண்டுவந்து அளித்தனர். “உங்களிடம் எஞ்சியிருக்கும் வினா ஏதேனும் இருந்தால் கேட்கலாம்” என்றார் வசிட்டர். அவர்கள் அமைதியாக இருந்தனர். “நான் இங்கே தனித்தமர்கிறேன். ஒவ்வொருவராக வந்து என்முன் அமர்ந்து சுட்டுவிரலால் நிலம்தொட்டு அவ்வினாவை என் செவிகளுக்கு மட்டுமென உரைக்கலாம்” என்றார் வசிட்டர்.

சகதேவன் எழுந்து அவர் அருகே வந்து கைவிரலால் மண்ணைத் தொட்டு மெல்லிய குரலில் “முனிவரே, ஊழ் என இங்கே திகழ்வது, தனக்கென ஏதேனும் இலக்கு உள்ளதா? ஒவ்வொருவரின் ஊழ் என்றிருப்பது ஒட்டுமொத்தமாக எதில் சென்று அமைகிறது?” என்றான். அவர் புன்னகைத்தார். அவன் எழுந்து அகன்றபின் நகுலன் வந்து “ஆசிரியரே, இங்குள்ள இயற்கையின் ஒரு பகுதியா நாம்? அன்றி மானுடர்க்கு ஏதேனும் தனித்த நோக்கத்தை தெய்வங்கள் வகுத்துள்ளனவா?” என்றான்.

அர்ஜுனன் சற்றுநேரம் தயங்கி பின்பு அருகணைந்து “அறுதியாக அறிவதற்கு ஒன்றே உள்ளது. ஒன்றன்பின் ஒன்றென அறிவின் அலைகள் இங்கே எழுந்துகொண்டிருக்கின்றன. ஒன்று பிறிதை வென்று எழுந்து அமைகிறது. அறிவென தன்னை வெளிப்படுத்தும் ஒரு முழுமை உள்ளதா? அன்றி இவ்வலைகளே அதுவா?” என்றான். பீமன் “உத்தமரே, உறவுகளின் இந்த வலைப்பின்னலில் மானுடன் கொள்ளும் உணர்வுகள் அனைத்தையும் அறுத்துக்கொண்டால் எஞ்சுவதென்ன? அன்னம் அன்னத்துடன் கொள்ளும் உறவு மட்டும்தானா?” என்றான்.

யுதிஷ்டிரன் “அறமென மண்ணில் ஒன்று நிலைநிற்கக்கூடுமா? ஒருபோதும் அறம் நிலைகொள்ளாதென்றால் அறமென்ற ஒன்றுக்கான இப்போர்களும் பூசல்களும் என்ன பொருள்கொள்கின்றன?” என்றார். “இங்கே புதிய வேதம் ஒன்று எழுந்தது. ஆனால் அது எதையும் தலைகீழாக புரட்டிவிடவில்லை என்று தெரிகிறது. பேருருவனாக தெய்வம் எழுந்து வந்து சொன்னால்கூட எதுவும் மாறிவிடாதென்றால் வேதங்கள் எதன் பொருட்டு?”

திரௌபதி அமைதியாக அமர்ந்திருந்தாள். “கேளுங்கள், தேவி” என்றார் வசிட்டர். திரௌபதி மிக அருகே வந்து நிலம்தொட்டு “முனிவரே, சருகுகள் உதிரும் நெறி புரிகிறது, தளிர்களும் ஒடிந்து சரியும் புயலை ஏன் எழுப்புகின்றன தெய்வங்கள்? எனில் தளிர்களை அழகும் இளமையும் கொண்டு படைத்த தெய்வங்கள் வீண்செயல் புரிகின்றனவா?” என்றாள். அவள் குரல் சற்றே இடறியது. அவள் அழக்கூடும் என்று வசிட்டர் நினைத்தார். ஆனால் அவள் “ஒரு தளிர் மண்ணில் விழும்போது அது வளர்ந்து கிளையாகி மலராகி காயாகி கனியாகி விதைபெருக்கி உருவாக்கவிருந்த அந்தக் காடு எங்கே செல்கிறது?” என்றாள்.

வசிட்டர் “இவ்வினாக்களுக்கான விடைகள் முன்னரே ஒருங்கியிருக்கின்றன” என்றார். “நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இதோ எழுந்து நின்றிருக்கும் இந்தக் குன்றின் பெயர் தேவப்பிரஸ்தம். இதன் உச்சியில் விண்ணவர்கள் வந்திறங்குகிறார்கள் என்று முனிவர்களால் சொல்லப்பட்டுள்ளது. எண்திசைக் காவலர்களாகிய அக்னியும் இந்திரனும் ஈசானனும் குபேரனும் நிருதியும் வருணனும் வாயுவும் யமனும், அழியாச் சுடர்களான சூரியனும் சந்திரனும் அங்கு தங்களுக்குரிய நாட்களில் வருகிறார்கள். ஆதித்யர்களும் வசுக்களும் அதை காவல் காக்கிறார்கள்” என்றார்.

நீங்கள் இதன்மேல் ஏறி உச்சிக்குச் சென்று உங்கள் நிறைவை அடையலாம். நிறைவெனில் அது இதுகாறும் நீங்கள் வாழ்ந்த முழு வாழ்க்கையையும் பொருளுள்ளதாக ஆக்கும் ஒரு முடிவு. இதுவரை நிகழ்ந்த அனைத்தையும் ஒன்றோடொன்று இணைத்து ஒற்றைக் கதையென மாற்றுவது. உங்கள் பிறப்பிலிருந்து தொடங்கி இதுகாறும் வருவது போலவே அத்தருணத்திலிருந்து தொடங்கி பின்னும் செல்லமுடியும். பிறப்பின் தருணத்தில் விடுபட்ட ஒன்று இங்கே நிறைவடையும். பிறப்பில் எழுந்த ஒன்று தன்னை தான் வென்று முழுதமையும்.

அறிக, உங்கள் வினாக்களுக்கு இங்கே விடை கிடைக்கும். ஆனால் அந்த விடைகளை ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ள வேண்டியதில்லை. விளக்கத் தொடங்கினால் அது சொல்லொழுங்காகும், எண்ணக்கட்டமைப்பாகும். சொல்லென்றும் எண்ணமென்றும் ஆன எதுவும் இணையான மறுப்பையும் கொண்டிருக்கும். ஓயாத அலைவுறுதலும் தொடங்கும். ஆகவே அடைந்ததை உங்களுக்குள் செலுத்துங்கள். உங்கள் உயிர் என மூச்சென அது உங்களுக்குள் மட்டும் இருக்கட்டும்.

தேவப்பிரஸ்தம் எனும் மலைமேல் ஏறி முடிவரை செல்வதற்கு வகுக்கப்பட்ட வழிகள் இல்லை. ஒவ்வொருவரும் தங்களுக்குரிய வழியை தாங்களே கண்டடைந்து செல்லவேண்டியுள்ளது. மேலே செல்பவர்கள் செல்லும் வழியில் ஏதேனும் ஒரு படியில் உடல் களைத்தோ, உளம் தளர்ந்தோ, ஆத்மா சலிப்புற்றோ நின்றுவிடுவதுண்டு. இதில் ஏறத் தொடங்குபவர்கள் லட்சத்தில் ஒருவரே உச்சி வரை சென்றடைய முடியும் என்பார்கள்.

இம்மலையின் ஐந்து தளங்களில் முதலில் எழுவது அன்னத்தாலானது. தொடர்ந்து எழுவது பிராணனால் ஆனது. அடுத்தது உள்ளத்தால் ஆனது. மேலும் உயரத்தில் விஞ்ஞானமும் அதற்கும் அப்பால் ஆனந்தமும் உள்ளது எனப்படுகிறது. உடல், மூச்சு, உள்ளம், நுண்நிலை, பெருநிலை என்னும் ஐந்தையும் கடந்தவர் அறியும் வெறுமையின் முழுமை இதன் உச்சி. ஐந்தையும் அடைந்தும் துறந்தும் இப்பயணம் அமையவேண்டும். இது அறிதலின் பயணம் அல்ல, அறிந்தவற்றை துறத்தல்.

“இதன் நெறிகளில் முதன்மையானது, ஒருவர் பிறிதொருவரின் இருப்பை உணரலாகாது, முற்றிலும் தனித்து மேலே செல்லவேண்டும் என்பது. ஒருவர் பிறிதொருவரை திரும்பிப் பார்த்தால், ஒரு சொல் உரையாடினால், அவருடன் உள்ள அனைத்து எண்ணங்களையும் துயர்களையும் எடைகளையும் தானும் கொண்டவராவார். அதன் பின் அவன் தன்னுடன் அவரையும் சுமந்துகொண்டு மேலேறவேண்டும். நீங்கள் ஐவரும் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட பற்றை அறுக்காவிடில் ஐவரும் ஐவரையும் சுமந்துகொண்டு ஏறவேண்டியிருக்கும். அவ்வெடை உங்கள் இடையை முறிக்கும். அதன் வழிகளில் சரிந்து விழுந்து மறைவீர்கள்.”

“ஆம், நான் கிளம்புகிறேன்” என்று யுதிஷ்டிரன் எழுந்தார். பீமனும் அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் எழுந்தனர். சற்று தயங்கி அமர்ந்தபின் திரௌபதியும் எழுந்தாள். “இன்றே, இப்போதே கிளம்புக!” என்றார் வசிட்டர். “அங்கே செல்வதற்கான நுழைவாயிலை நான் காட்டுகிறேன். வருக!” அவர் எழுந்துகொண்டு நடக்க அறுவரும் அவரை தொடர்ந்து சென்றார்கள்.

வசிட்டர் அவர்களை அடிவாரத்தில் மலைவளைவை சுற்றிச் சுழன்று சென்ற ஒற்றையடிப் பாதையினூடாக அழைத்துச் சென்றார். அவர்கள் எந்த விழைவும் மறுப்பும் அற்றவர்களாக வெற்றுவிழிகளுடன் அவரை தொடர்ந்து சென்றனர். “இந்தப் பாதை விலங்குகள் சென்று சென்று உருவானது. இங்கு மானுடர் நடமாட்டம் இல்லை. இவ்வழியே எவரேனும் நடப்பது என்பது என் ஆசிரியர் என்னை அழைத்துச் சென்று காட்டிய நாளுக்குப் பின் இப்பொழுதுதான் என்று எண்ணுகிறேன்” என்றார் வசிட்டர்.

அப்பாதை தேய்ந்து மறைந்து உருளைக்கற்களும் குட்டை முட்புதர்களும் நிறைந்த பரப்பாக மாறியது. அதனூடாக காலெடுத்து வைத்து மிக மெல்ல நடந்து வசிட்டர் செல்ல அவர்கள் அவரைத் தொடர்ந்து நீள்நிரையாக நடந்தனர். “இங்குள்ளது ஒரு குகையின் வாயில். அக்குகையினூடாக சென்று மறுபக்கம் உள்ள திறப்பை அடையவேண்டும். அங்கிருந்து இந்த மலைக்குமேல் செல்வதற்கான வழி உள்ளது. இது கர்ப்பபதம் என்று அழைக்கப்படுகிறது. கருவறையினூடாக மீண்டும் பிறந்து செல்வது இது. இது உங்களை மேலெடுத்துச் செல்லும், கீழே வீழ்த்தும், சுழல வைத்து உடல் பிதுங்க வைத்து கொண்டுசெல்லும். இது உங்களை வீழ்த்தும் இடத்திலிருந்து உங்கள் பயணம் நிகழவேண்டும்.”

அவர் அக்குகை வாயிலை அடைந்தார். அங்கிருந்த முகப்புக்கல் ஒன்றைக் கண்டு அவர்கள் நின்றனர். இரண்டுஆள் உயரம் கொண்ட பெரும்பாறை ஒன்றால் அக்குகை மூடப்பட்டிருந்தது தெரிந்தது. அக்கல்லை எவராலும் புரட்ட முடியாது என்று எண்ணி பீமன் மலைத்திருக்கையில் வசிட்டர் அக்கல்லின் அடியிலிருந்த பிறிதொரு கல்லை எளிதாக உருட்டி அகற்றினார். அக்கல்லால் தாங்கப்பட்டிருந்த பெரும்பாறை உருண்டு உரசல் ஒலியுடன் அப்பால் விழுந்து மலைப்பள்ளத்தை நோக்கி யானைபோல் சென்றது.

“நுழைக!” என்று உரத்த குரலில் வசிட்டர் கூறினார். அவர்கள் அஞ்சியவர்கள்போல் ஒருகணம் நின்றபின் பாய்ந்து உள்ளே நுழைந்தனர். பீமன் முதலில் உள்ளே செல்ல அர்ஜுனனும் திரௌபதியும் தொடர்ந்தனர். பின்னர் நகுலனும் சகதேவனும் உள்ளே செல்ல இறுதியாக யுதிஷ்டிரன் உள்ளே சென்றார். வசிட்டர் உருட்டி எடுத்த சிறு கல்லை அதே இடத்தில் வைத்தார். பிறிதொரு பெரும்பாறை மேலிருந்து அசைவு கொண்டு உருண்டு வந்து அச்சிறு கல்லில் முட்டி நின்று அக்குகையை முற்றாக மூடிக்கொண்டது.

உள்ளிருந்த இருட்டில் அவர்கள் விழியிலாது நின்றனர். பின்னர் விழிகளுக்குள்ளிருந்து எண்ணத்தின் வெளிச்சம் வந்து புறவுலகை துலங்கச்செய்தது. சித்தப்பிரகாசத்தின் தடத்தினூடாக அவர்கள் அக்குகைக்குள் சென்றனர். அக்குகை ஒன்றிலிருந்து ஒன்று தொடுத்துக்கொண்ட பல பகுதிகளாலானதாக இருந்தது. அடுத்த அறைக்குள் முதல் பேரறைக்குள் இருந்த மையிருள் மறைந்து எங்கிருந்தோ ஒளி விழுந்து சுவர்கள் துலங்கிக்கொண்டிருந்தன. உள்ளே குளிர்ந்த காற்று சுண்ண மணத்துடன் நிறைந்திருந்தது. அங்கிருந்த ஒலியின்மை ஒரு பருப்பொருள்போல சூழ்ந்திருந்தது.

அர்ஜுனன் குகைக்குள் சுவர்களில் ஓவியங்கள் இருப்பதை பார்த்தான். நீலம் சிவப்பு வெண்மை மஞ்சள் என வண்ணங்களைக் கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள். அவை ஒன்றுடன் ஒன்று ஊடுபாவென பின்னப்பட்டு ஒரு ஓவியத்தை இன்னொன்றிலிருந்து பிரித்துப்பார்க்க முடியாதபடி ஒற்றைப்பெரும்படலமாக இருந்தன. ஓர் ஓவியப்பரப்பு பல்லாயிரம் ஓவியங்களின் துளிகளால் ஆனதாக இருந்தது. அவற்றினூடாக மலைத்த சித்தத்துடன், பதறி தொட்டலையும் விழிகளுடன், வெறுமனே நோக்கிச் செல்லவே இயன்றது.

அவற்றில் அவன் அறிந்த அனைத்தும் இருந்தன. மானுடர், விலங்குகள், சிற்றுயிர்கள், நாகங்கள், செடிகள், மரங்கள், மலர்கள். சூரியனும் சந்திரனும். ஆநிரைகளும் மான்களும் கூட்டம் கூட்டமாக மேய்ந்தன. அவற்றை புலிகள் வேட்டையாடின. பருந்துகளும் கழுகுகளும் மேலே பறந்தன. மலைகள் பனிமுடி சூடி சூழ்ந்திருந்தன. குளங்களும் ஆறுகளும். அவன் தொலைவில் அலையலையென நின்ற கடலையும் கண்டான். கடலுக்குள் மீன்கள் நீந்தின. எட்டுக் கைகள் கொண்ட நீராளிகள், பேருருவ ஓங்கில்கள்.

மனிதர்கள் வாழும் சிற்றூர்கள் வண்டிகள் செல்லும் வழிகளாலும் ஆறுகளாலும் இணைக்கப்பட்டிருந்தன. சாலைகளில் வண்டிகளும் ஆறுகளில் படகுகளும் சென்றன. ஊர்களைச் சூழ்ந்த வயல்வெளிகளில் உழவர்கள் ஏரோட்டினர். பெண்கள் குனிந்து நாற்றுநட்டனர். ஆநிரைகள் மேய ஆயர்கள் குழலூதினர். திருவிழாக்களின் அணித்தேர்களில் தெய்வங்கள் அமர்ந்திருக்க முகபடாம் அணிந்த யானைகள் நிரைகொண்டன.

ஏழுநிலை மாடங்களால் ஆன தெருக்களும் ஓங்கிய காவல்நிலைகள் கொண்ட கோட்டைகளும் கொண்ட நகரங்கள். அங்காடிகள், ஆலயங்கள், அரண்மனைகள். அரசர்கள் தெருக்களில் ஊர்வலமாகச் சென்றனர். காடுகளில் யானை மேலேறி வேட்டையாடினர். யானைகளும் புரவிகளும் தேர்களுமாக படைகள் கிளம்பிச்சென்றன. கொம்புகளும் முரசுகளுமாக சூதர்கள் முகப்பில் சென்றனர். போர்க்களக் காட்சிகள் மனிதர்களை நூலெனக்கொண்டு நெசவுசெய்யப்பட்ட துணிப்பரப்பென விரிந்திருந்தன.

மிகப் பெரிய ஓவியவெளி. அத்தகைய ஒன்றை உருவாக்க முடியுமென்பதே திகைப்பூட்டியது. அதை ஒற்றை உள்ளம் உருவாக்கியிருக்க முடியாது. பல்லாயிரவர் அவரவர் கற்பனைகளை வரைந்திருக்கவேண்டும். சிதல் புற்றுகட்டுவதுபோல அந்த ஓவியத்துளிகள் பலநூறாண்டுகளாக இணைந்து இணைந்து அவ்வண்ணம் ஒரு பெருவெளியாக மாறியிருக்கவேண்டும். அந்த ஓவியப்பரப்பு ஒரு திரையென விலகி பிறிதொன்றை காட்டும் என அவன் உள்ளம் கற்பனை செய்தது.

விழி பதறிச் சென்ற அப்பயணத்தில் ஏதோ ஒரு கணத்தில் அவன் அதில் தன்னை அடையாளம் கண்டான். அக்கணமே தொட்டுத் தொட்டு தங்கள் ஐவரின் உருவத்தையும் பார்த்தான். திரௌபதி அதற்கப்பால் தெரிந்தாள். பின்பு அன்னை, மனைவியர், மைந்தர்கள், நண்பர், பகைவர் என அனைவரையும் கண்டான். பீஷ்மரும் துரோணரும் தெரிந்தனர். பெருந்தோள்களுடன் திருதராஷ்டிரரும் பால்ஹிகரும் தெரிந்தனர். மூதாதையர் முகங்கள். மைந்தரைச் சுமந்த பாண்டு, மானை வேட்டையாடும் விசித்திரவீரியர், கங்கையைப் புணர்ந்த சந்தனு, மடியில் கங்கையுடன் பிரதீபர்…

அப்பால் நீர்நிலையில் தன் முகம் நோக்கி அமர்ந்திருக்கும் சித்ராங்கதன், நோயுற்ற தேவாபி, சிம்மத்துடன் விளையாடும் பரதன், பொன்னேர் உழும் குரு, பெருந்தோள்கொண்டு யானையுடன் மற்போரிடும் ஹஸ்தி, இளமையில் முதுமையுடன் புரு, பறக்கும் ஊர்வசியைப் பற்ற கைநீட்டிய புரூரவஸ், தேவயானியும் சர்மிஷ்டையும் இருபுறமும் நின்றிருக்க எங்கோ நோக்கி நின்றிருக்கும் யயாதி. அங்கே அனைவரும் இருந்தனர். அவர்களைப் பற்றிய அனைத்தும் தெளிந்தன. ஒன்றை நோக்கினால் பிறிதொன்று மறைந்தது. அனைத்தையும் நோக்கினால் ஒட்டுமொத்தமான வண்ணஅலையே தெரிந்தது.

அவன் விழிகள் அவனை அறியாமலேயே தேடியவரை அவன் கண்டுகொண்டான். ஆழி வெண்சங்கு ஏந்தி, பீலி முடி சூடி குழலூதி நின்றிருந்த யாதவரைக் கண்டு அவன் நின்றான். எந்த உணர்வுமில்லாமல் சற்று நேரம் அதை நோக்கிக்கொண்டிருந்தான். யாதவரின் கீழே நான்கு பசுக்கள் அவர் குழலிசைக்கு விழிமயங்கியிருந்தன. ஐந்தாவதாக ஒரு கன்று அவர் காலடியில் நின்று மேலே நோக்கியது. அவர் வேறெங்கோ நோக்கிக்கொண்டிருந்தார். அவரைச் சூழ்ந்து அரக்கரும் அசுரரும் நாகரும் நிஷாதரும் என பல்வேறு குடிகள் நின்றிருந்தனர். வானில் இந்திரனும் சூரியனும் தெளிந்திருந்தனர். அந்தப் பரப்பெங்கும் நூறுநூறு முகங்களுடன் அவரே திகழ்ந்தார்.

அவர் விழிதொட அலைகொண்ட கடல் என அங்கு நிகழ்ந்த போரின் பேரோவியம். வென்றவர்களும் தோற்றவர்களும் அழிந்தவர்களும் நின்றவர்களும் அங்கு இருந்தனர். ஒருவர்கூட எஞ்சாது அனைவரும் திகழ்ந்தனர். ஆனால் அவர்களுடன் தொடர்பற்றவர்கள் பல்லாயிரவர் அங்கிருந்தனர். அறியப்படாதவர். அவர்கள் ஒருவரோடொருவர் பின்னி இருந்தனர். ஒற்றைப் பாசிப்படர்வென மானுட உடற்திரள்.

அவர்களில் எழப்போகிறவர்களும், பிறவிகாத்து பெருவழியில் எங்கோ இருப்பவர்களும் உண்டென்று அர்ஜுனன் அறிந்தான். தான் அறிந்த நிகழ்வுகள் அப்பெரும்படலத்தின் ஒரு சிறு துளியே என்றும் அறியாத பல்லாயிரம் மடங்கு நிகழ்வுகள் அதை வகுத்தன என்றும் உணர்ந்தான். தன்னை தாங்கி நின்றிருந்த பெரும்பாலான உடல்களும் தோள்களும் தான் ஒருமுறைகூட பார்த்திராதவை என்று கண்டான். தன் உடலை தொட்டுக்கொண்டிருந்தவர்கள் அவர்களுடன் தொட்டுக்கொண்டு சரடென மேலே சென்றவர்கள் பெயராகவோ முகமாகவோ சொல்லாகவோகூட அவனால் அறியப்படாதவர்கள்.

அடுத்த அறையில் அவன் ராகவராமனை கண்டான். அவன்முன் எழுந்த பத்துதலைகொண்ட அரக்கர்கோன். அஞ்சனை மைந்தன், வாலியும் சுக்ரீவனும். கதையென அறிந்த ஒவ்வொன்றும். ஆனால் அவன் அறிந்தவை அங்கிருந்தவற்றில் துளியினும் துளியே. அங்கு ராகவராமனுக்கு நிகராக நூற்றுக்கணக்கானவர்கள் இருந்தனர். அவர்களும் ஒளியுடன் திகழ்ந்தனர். ஓவியப்பரப்பை தங்களைச் சுற்றிச் சுழித்தனர். அவர்கள் எவர்? அத்தகையோரை பாடாமலொழியுமா காவியங்கள்? எனில் ஒரு சொல்லும் இன்றி அவர்கள் எங்கு சென்றனர்?

இருளிலிருந்து இருளுக்கென நடக்கையில் தன் தலைக்கு மேல் எழுந்த குகைச்சுவர்கள் மட்டும் உள்ளிருந்து எழுந்த ஒளியால் என துலக்கப்பட்டிருப்பதை கண்டான். மேலும் மேலுமென மடிப்பு நிமிர எழுந்து வந்த அறையில் உலகளக்க எழுந்த குறியோனை, சிம்மமுகத்து அண்ணலை பார்த்துக்கொண்டே சென்றான். புவிமகளை தோளில் வைத்து நின்றிருக்கும் பன்றிமுகப்பெருமான். ஆமை என மீன் என. ஆனால் கண்டவை கடலில் துமியே. நூறுநூறாயிரம் முகங்களில் எழுந்திருந்தவன் ஒருவனோ என்று மயங்கியது உள்ளம்.

நாகப்பேருரு என, பருந்து என, சிட்டுக்குருவி என, எண்கால் சிலந்தி என, எறும்பு என, விழிவெறித்த புழுவென, அணுவடிவச் சிற்றுயிர் என, மலையென எழுந்த கடலுயிர் என தோன்றித்தோன்றி நிறைந்திருந்தான். ஆயிரம்கோடி உயிர்களில் ஆயிரமாயிரம்கோடிமுறை பிறந்தெழுந்து விளையாடி மீண்டவன். பல்லாயிரம்கோடி மொழிகளில் பல்லாயிரம்கோடி வேதங்களை செய்தவன். வேதங்களை அழித்தவன். வேதமென்றாகி வேதம்கடந்தவன். கோடிகோடி வேதங்களின் மெய்ப்பொருளை அழிக்கும் மாபெரும் பொருளின்மையின் பொருள்.

இருளில் காலெடுத்து வைத்து, இருளை மிதித்து, மேலும் இருளில் புதைந்து எழுந்தெழுந்து வந்த அறைகளுக்கு சென்றான். இருளில் புதைந்து கிடந்த அவ்வறைகள் இன்னும் அடைகாக்கப்படாத முட்டைகள் என்று தோன்றின. விலங்குகளும் மானுடரும் கலந்த உருவங்கள். நாகர்கள் நாகினிகள். சிறகெழுந்த சிம்மங்கள். சீறி எழுந்த பாம்புப்பல்லிகள். எட்டுகால்மானுடர், முதலைமானுடர், பூச்சிமானுடர். எண்ணிநோக்கவே முடியாத உயிருடல்கள். சித்தம் செயலறச் செய்யும் வடிவக் கொந்தளிப்பு. என்றோ எவரோ வரைந்தது. அன்று மானுடன் தானும் முழுதுருப் பெறாது இருந்திருக்கவேண்டும். ஒவ்வொரு உயிரிலும் நுழைந்து ஒவ்வொரு உடலையும் நடித்து அவன் தன்னை நிகழ்த்தியிருக்கவேண்டும்.

மேலும் முன்னால் சென்றபோது அவன் கண்ட ஓவியங்களிலிருந்த முழுமையும் தெளிவும் இருக்கவில்லை. ஒவ்வொரு உருவமும் சற்றே உருப்பெற்று, மறுபகுதி சிதைந்து பிறிதொன்றுடன் கலந்திருந்தது. கோடுகளும் வண்ணங்களும் தங்களைத் தாங்களே அழித்துக்கொண்டு விளையாடின. மேலும் தொல்காலம். அன்று மானுடர் தேவரிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் திரண்டு உருப்பெற்று வந்துவிட்டிருக்கவில்லை. அந்த ஓவியவெளி மேல் பதறிப் பதறிச் சென்ற விழிகளுக்குள் ஓர் உருவம் தட்டுப்பட அவன் உளமழிந்து நின்றான்.

விலங்குகளும் மானுடரும் வேறுபாடின்றி மறைந்த அப்பெருவெளியில் ஆழிவெண்சங்கு ஏதும் இன்றி, ஆனால் பீலி முடி சூடி, குழலூதி ஒருவன் மலைப்பாதை ஒன்றில் அமர்ந்து சேய்மை வானை நோக்கிக்கொண்டிருந்தான். அவன் கால்கள் சிம்மங்களுடையவை போலிருந்தன. அவன் தலையில் காளைகளுக்குரிய கொம்புகள் இருந்தன. அவன் புன்னகை மட்டும் அர்ஜுனன் நன்கறிந்ததாக இருந்தது.

வெண்முரசு விவாதங்கள் தளம்

முந்தைய கட்டுரைஅன்னியநிதியும் போலிச்சிந்தனைச்சூழலும்
அடுத்த கட்டுரைஅருகே கடல், வரம்- கடிதங்கள்