எங்குமென நின்றிருப்பது

கல்பற்றா நாராயணனுடம் ஒரு சின்னப் பயணம் சென்றிருந்தேன். ஒருவர் முழுப்போதையில் சாக்கடை வழியாக நடந்து கொண்டிருந்தார். புன்னகையுடன் கல்பற்றா சொன்னார். “அப்படியும் ஒரு வழி இருக்கலாமே ”

ஆற்றூருடன் நடக்கச் செல்கையில் ஒரு பழுத்த தென்னையோலை மிக இயல்பாக, ஓசையே இல்லாமல் மரத்திலிருந்து பிரிந்து மிதந்து இறங்கியது. ஆற்றூர் சொன்னார் “முளைக்க வைத்து நீட்டுவதுதான் கஷ்டம்”

பலசமயம் கவிஞர்கள் எல்லாவற்றையுமே கவிதையெனக் காண்கிறார்கள். ஆற்றூர், கல்பற்றா நாராயணன் போன்றவர்களின் அன்றாடப் பேச்சில் அவ்வகை வரிகள் வந்தபடியே இருக்கும். அவை நினைவில் நின்றால் இப்படி பதிவாகும், அல்லது அப்படியே மறந்து போகும்.

இது கவிதை ஒரு வடிவப் பயிற்சியாக ஆனதனால் அல்ல, ஒரு மனப்பழக்கமாக ஆகிவிட்டமையாலும் அல்ல. அவர்களுக்குள் இருந்து தொடர்ந்து தேடிக் கண்டடைந்து கொண்டிருக்கும் ஒன்று இயல்பாக புறப்பொருட்களில் அதை ஏற்றிக் கொள்கிறது என்பதனால்தான்

தேவதேவனின் இன்றைய கவிதைகளில் அவருடைய விழிப்புற்ற அகம் தவிக்கும் தளிர்நுனி என தேடுவதை தொட்டவற்றில் சுற்றிக்கொள்வதைக் காண்கிறேன். எல்லாமே படிமங்களாகி விடுகின்றன. எல்லாமே அவருடைய ஆழம் ஒன்றை தன்மேல் ஏற்றிக்கொள்கின்றன.

 

ஆட்டுக்குட்டி

 

மே என்ற அதே குரலில்தான்

வலியுடன் அழுதபடிச் சென்றது

காயம்பட்ட ஒரு காலை முடக்கியபடி

ஓர் ஆட்டுக்குட்டி

 

பிற மூன்று கால்களும்

கூடுதலாகிவிட்ட பாரம் பொருட்படுத்தாது

கண்ணீருடன் காத்து சென்றனர்

அந்த ஒரு காலை

 

தன் வலியையும் மறந்து

தன்னால் தம் நலம் குன்றிவாழும்

அந்த மூவரையும் எண்ணியே

மிகுதியும் வருந்தியது

அந்த ஒற்றைக்கால்

 

நடமாடும் தன் வாழ்விற்கே

தூண்களாய் நின்றிருந்த

நால்வரையும் அணைத்தபடி

கலங்கிய விழிகளுடன் குரலுடனுமாய்

நடையிழக்காது நடந்துகொண்டிருந்தது

ஆட்டுக்குட்டி

 

மீண்டும் கல்பற்றா நாராயணனின் நினைவு. ஒருவர் அடிபட்ட கையை கட்டுபோட்டு நெஞ்சில் வைத்திருந்தார். “அடிபட்டதும் கை குழந்தையாகிவிட்டது” என்றார் கல்பற்றா நாராயணன். என்ன ஒரு அணைப்பு, எவ்வளவு கவனம், எத்தனை கொஞ்சல்! தொட்டிலில் தூக்கம்.

ஆட்டின் அடிபட்ட காலுக்கு பிறகால்களுடனான உறவு. அவை உடன்பிறப்புகள். நான்கும் இணைந்தால் தாவல். ஒன்று புண்பட்டால் மூன்றும் சேர்ந்து தாங்குகின்றன. அடிபட்ட காலின் வலியோ அம்மூன்றும் அவ்வண்ணம் நிலைமாறி தன்னை தாங்குவதனால் கூடுதலாகிறது. நான்கையும் தன் மைந்தர்கள் என அணைத்து தன் கீழே வைத்து கொண்டுசெல்கிறது ஆட்டின் உடல்

பொருட்களில் வடிவங்களில் இருக்கும் பெருங்கனிவு ஒன்றை தேவதேவன் கண்டுகொண்டே இருக்கிறார். ஓர் உரையாடலில் எண்ணையூற்றப்பட்டு ஓசையின்றி சுழன்ற கதவுக் கீல் ஒன்றின் மென்மை கண்டு கண்ணீர் மல்கியதைச் சொன்னார். பொருட்களிலும் வடிவுகளிலும் இருப்பது ஒரு நல்லுணர்வு, ஒரு நம்பிக்கை, ஓர்  ஏற்பு. பொருளென இங்கே திகழ்வது ஒன்றுண்டு. அதன் வெளிப்பாடு

அந்தவெளிப்பாட்டை பேருருவென இன்னொரு கவிதை கண்டடைகிறது.

 

 

கடல்மீது பொழியும் மழை

 

தன்னிடமிருந்து பெற்றதே

தனக்கும் வழங்கப்படுகிறது

என்பதறியாத கடலினதும்

 

கடலில் இருந்து பெற்றதையே

கடலுக்கு வழங்குகிறோம்

என்பதறியாத

விசும்பினதும்

பெருவகைகளின் இரகசியத்தினாலன்றோ

இருக்கிறது அது

 

அது என தேவதேவன் கண்டடையும் ஒன்று. அத்தனை கவிதைகள் வழியாக தேடித்தேடிக் கண்டடைந்த ஒருமை. பேருருக்களை விளையாடவிட்டு தான் மகிழும் அதன் மகத்தான குழந்தைப் பேதமை.

 

பற்றி இழுக்கும் ரோஜாவின் முட்கிளை

தேவதேவன் கவிதைகள்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

சென்னை

 

இளங்கனிவும் முதிர்கனிவும்

சொட்டும் கணங்கள்

கவிஞனின் கைக்குறிப்புகள்

முந்தைய கட்டுரைஅக்ஷயபாத்ரம் -கடிதங்கள்-2
அடுத்த கட்டுரைகுவாலியரும் சிந்தியாக்களும்