இணையத்தின் குரல்கள் -கடிதங்கள்

மூடர்களின் நாக்கு

சென்னை கண்டனக்கூட்டத்தில்…

அன்புள்ள் ஜெ..

 

உங்கள் கட்டுரை ஒன்றில் இந்த வரியை கண்டேன்

’இந்துத்துவ வெறியன்,  இஸ்லாமை அழிக்க முயல்பவன் என்றெல்லாம் கூச்சலிட்டவர்கள் மிகப்பெரும்பாலும் இஸ்லாமியர் அல்ல. முற்போக்கினரும் திராவிட இயக்கத்தவரும்தான்””

 

இதில் திராவிட இயக்கம் என சுடடி இருப்பது மக்கள் ஆத்ரவு அற்ற சில லெட்டர்பேடு இயக்கங்களை என நினைக்கிறேன்..

 

திராவிட இயக்கம் என மக்கள் நினைப்பது எம் ஜி ஆர் இருந்த தி மு கவையும் அதன் பின் அவர் உருவாக்கிய அதிமுக- வையும்தான்..

 

அதனால்தான் அவர் இறந்து பல்லாண்டுகள் ஆகியும் ( பல குழப்பங்களுக்கும் , ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் ) அதிமுகவே தமிழகத்தின் பிராதான கட்சியாக உள்ளது

 

அதிமுக ஓட்டுகள் பிரிவதால் அவ்வப்போது பிற கட்சிகள் வெல்லலாம்.. ஆனால் எம் ஜி ஆருக்கு நிகராக  யாரையும் சொல்ல முடியாது

 

எனவே மக்கள் மத்தியிலில் அதிமுக திராவிட இயக்கமாக திகழ்ந்தாலும் அறிவு ( ??!! ) உலகில் சிறு குழுக்க்ளையே திராவிட இயக்கம் என குறிப்பிடுகிறார்கள்.. ( நீங்கள் உட்பட )

 

அதேபோல , முற்போக்கு வாதிகள் என குறிப்பிடுவது ,  அந்த காலத்திலேயே சாதி மறுப்பு மறு மணம் செய்து சமூக சேவை செய்த டி எஸ் சௌந்திரம் போன்றவர்களை அல்ல

 

http://www.pichaikaaran.com/2019/04/blog-post_13.html

 

ஊடகங்கள்தான் சில லாபங்களுக்காக இபப்டி செய்கின்றன என்றால் தனி நபர்களும் எதிர்கால ஊடக வாய்ப்புகளை கருத்தில்கொண்டு இதே பாணியை பின்பற்றுகின்றனர்

 

இந்த நச்சு சூழலில் . ஓரளவு விடுதலை அளிப்பது இணையம்தான்…

அதையும் நச்சு சக்திகள் ஆக்ரமித்தாலுமகூட காந்தியவாதிகளை எளிமையானவர்களை பற்றி   ஓரளவாவது பேசும் வாய்ப்பை இணையமே அளிக்கிறது

 

ஆனால் நீங்கள் எப்போதும் இணைய எழுத்தை எதிர்மறையாக குறிப்பிட்டு வருவது சற்றே வருத்தம் அளிக்கிறது

 

அன்புடன்

பிச்சைக்காரன்

 

 

அன்புள்ள ஜெ

 

 

சமீபத்திய கட்டுரைகளில் நீங்கள் தொடர்ச்சியாக திராவிட இயக்கத்தவர், முற்போக்கினர், இந்துத்துவர் இணையத்தில் இப்படிச் சொல்கிறார்கள் என எழுதுகிறீர்கள். இவர்களை திராவிட இயக்கத்தவர் முற்போக்கினர் இந்துத்துவர் என நீங்கள் எப்படிச் சொல்கிறீர்கள்? இவர்கள் தங்களை அப்படிச் சொல்லிக்கொள்கிறார்கள். அது ஒரு போஸ் மட்டும்தான். அவர்களுக்கும் அந்த ஐடியாலஜிகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

 

இணையத்தில் எழுதப்படுவதை கவனித்து வருபவன் நான். இவர்களில் ஒருசாரார் சின்னச்சின்ன எழுத்தாளர்கள். இவர்கள் வெறிகொண்டு எழுதிக்கொண்டே இருப்பார்கள்.அவர்களுக்கு எழுத்தால் எவரையும் கவரும் ஆற்றல் இல்லை. தன்னம்பிக்கையும் இல்லை. ஆகவே நிராகரிக்கப்படுகிறார்கள். அதிலிருந்து கடுமையான காழ்ப்பை சேகரித்துக்கொள்கிறார்கள். அந்தக் காழ்ப்புடன் காலையில் முகநூலுக்கு வருகிறார்கள். அந்தக்காழ்ப்புடன் பகல் முழுக்க அதில் இருக்கிறார்கள்

 

அதிலும் உங்கள் மேல் தனிப்பட்ட காழ்ப்பு கொண்ட ஒரு பெருங்கூட்டம் இருக்கிறது. உங்களால் நிராகரிக்கப்பட்டவர்களும் கண்டுகொள்ளப்படாதவர்களும்தான் மிகுதி.  ‘ஜெயமோகன்வெறுப்பு’தான் இவர்களின் ஒரே ஐடியாலஜி. அதற்கு முற்போக்கு திராவிட ஆதரவு இந்துத்துவம் என ஏதாவது ஒரு முகமூடி தேவை. அதுதான் ஆதரவாளர்களைக் கொண்டுவரும். நீங்கள் என்ன செய்தாலும் எதை எழுதினாலும் வசைதான்.

 

ஆனால் இந்த மனச்சிக்கல்காரர்கள் அந்த சம்பந்தப்பட்ட ஐடியாலஜிக்களுக்கு மிகப்பெரிய தீங்கை இழைக்கிறார்கள். நான் மார்க்ஸிய ஆதரவாளன். எனக்கு உங்கள் மேல் விமர்சனம் உண்டு. ஆனால் இந்த காழ்ப்புமனங்கள் காலையில் எழுந்த்துமே எடுக்கும் வாந்தியைக் கண்டால் எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை. இவர்களால் மார்க்ஸியம்தான் சிறுமைப்படுத்தப்படுகிறது.

 

முகநூல் பெரும்பாலும் தோற்றுப்போனவர்கள் வெட்டியாக இருப்பவர்கள் புலம்பிக்கொண்டிருக்கும் ஓர் இடம். அங்கே நிறைய வாசிப்பவர்களும் இல்லை. செயல்படுபவர்களும் இல்லை. பகல்முழுக்க அத்தனை முகநூல் பதிவுகளுக்கும் லைக் போட்டு கமெண்ட் எழுதுபவருக்கு வேறு உலகமே இல்லை. அவர்களை தமிழ்நாட்டின் எந்த ஒரு சிந்தனைக்கும் பிரதிநிதியாக கொள்ளமுடியாது

 

 

டி.எஸ்.செந்தில்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-29
அடுத்த கட்டுரைவானிலைப் புனைவு