‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-17

ele1துரியோதனனும் துச்சாதனனும் தொடர கர்ணன் பீஷ்மரின் படுகளத்தை நோக்கி சென்றபோது விழிதுலங்கும் அளவுக்கு காலைஒளி எழுந்துவிட்டிருந்தது. “நமக்கு இனி பொழுதில்லை” என்று துச்சாதனன் மூச்சுவாங்க கர்ணனின் பின் நடந்தபடி சொன்னான். “ஆம், நாம் விரைவில் திரும்பிவிடுவோம்” என்று கர்ணன் சொன்னான். “பிதாமகர் பேச விழையலாம்” என்று துச்சாதனன் சொன்னான். “இல்லை, இத்தருணத்தில் அவர் பேச்சொழிவார் என்றே நினைக்கிறேன்” என்றான் கர்ணன்.

துரியோதனன் “விரைவாக” என்றான். அந்த இரவு மிக நீளமாக மறுமுனை தெரியாமல் விரிந்திருப்பதை துச்சாதனன் ஒரு கணத்தில் உணர்ந்தான். விடிந்த பின் ஒளியெழுவதற்கு முந்தைய பொழுதே நாள் என நீடிக்கிறது. அது ஒரு கனவா என்ன? படைகள் முழுமையாக கவசங்கள் அணிந்து படைக்கலங்கள் சூடி ஒருங்கிவிட்டிருந்தன. தூதர்கள் அங்குமிங்கும் புரவிகளில் ஓடிக்கொண்டிருந்தனர். காலையில் ஏரிமேல் எழும் நீராவிப் புகைபோல தலைக்குமேல் தூதுப்புறாக்கள் பறந்தன. படைவீரர்களுக்கு ஆணையிடும் சிறுகுழல்களும் கொம்புகளும் முழங்கின. நூற்றுவர்களும் ஆயிரத்தவர்களும் எழுப்பிய ஆணையொலிகள் இணைந்த முழக்கம் சூழ்ந்திருந்தது.

கர்ணன் துரியோதனனிடம் “நான் சொல்வதற்கொன்றுமில்லை. ஒருவேளை அவர் இது எவருடைய சொல் என்றால் அரசாணை என்று நீ சொல்லவேண்டும்” என்றான். துரியோதனன் “ஆம்” என்றான். துச்சாதனன் “ஒருவேளை அவர் நீங்கள் படைமுகம் நிற்பதை ஏற்கவில்லை என்றால்?” என்றான். மேலும் இரண்டடிகள் வைத்து “உங்களை விலக்கவேண்டும் என அவர் ஆணை பிறப்பித்தால்?” என்றான். கர்ணன் “உயிருள்ளவரை அவர் கௌரவரின் பிதாமகரே. அவ்வண்ணம் அவர் ஆணை பிறப்பித்தாரெனில் அதை தலைக்கொள்வதே நம் கடன்” என்றான்.

“மூத்தவரே!” என்று துச்சாதனன் திகைப்புடன் அழைத்தான். கர்ணன் மறுமொழி சொல்லாது நடக்க துச்சாதனன் மேலும் இரண்டு எட்டு எடுத்து அவனது நீள்காலடிகளுக்கு இணையாகச் சென்றபடி “என்ன சொல்கிறீர்கள்? உங்கள் ஆணைகள் ஓலைகளினூடாகப் பெருகி படைகளை அடைந்துவிட்டன. நமது படைசூழ்கை முறைமாறிக்கொண்டிருக்கிறது. நோக்கினீர்கள் அல்லவா? நாம் வரும்போதே படைகள் களமுகப்பு நோக்கி உருத்திரளத் தொடங்கிவிட்டிருக்கின்றன. உங்களை போர்முனையில் காணும் பொருட்டு அத்தனை வீரர்களும் விழியொருங்கிவிட்டிருக்கின்றனர். இனி எதுவும் நம் கையில் இல்லை” என்றான்.

கர்ணன் ஒன்றும் சொல்லாமல் நடக்க துரியோதனன் “எந்நிலையிலாயினும் பிதாமகரின் ஒரு சொல்லின்றி கர்ணன் களம் நிற்பது எளிதல்ல, இளையோனே. அவரது ஒரு சொல் எழும் எனில் அதுவே நமக்கு போதுமானது. கர்ணனின் மேல் ஐயம் கொண்டுள்ள அஸ்தினபுரியும் ஷத்ரியர்களும் இணைநாட்டு ஷத்ரியர்களும் அதற்குப் பின் ஒன்றும் சொல்ல இயலாமலாகும்” என்றான். துச்சாதனன் துரியோதனனை வெறுமனே நோக்கிவிட்டு “ஆனால்…” என்றான்.

துரியோதனன் அவனை மறித்து “நான் பின்னிரவிலேயே உசாவி அறிந்தேன். அகிஃபீனாவும் சிவமூலியும் இணைந்து அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடுமையான குருதியிழப்பினால் உடல் மிக நைந்துள்ளது. துயிலினூடாகவே அவர் மீண்டெழ முடியுமென்பதனால் முற்றிலும் உடலை அணைத்து நீள்துயிலில் வைக்கப்பட்டிருக்கிறார். நாம் செல்வதையோ வணங்கி மீள்வதையோ அவர் உணரப்போவதில்லை. அவருடைய வாழ்த்துகளை நாம் பிறகு எவ்வாறு பெறுவோம்!” என்றான். “நாம் நமது உள்ளத்தால் அதை பெற்றுக்கொள்வோம். அவர் தாள்பணிந்து இப்போரை தொடங்குகிறோம் என்பதே நமக்கு போதுமானது. நமது நலம்நாடுபவர் என்பதனால் தன் ஆழ்ந்த உலகிலிருந்து அவர் நம்மை வாழ்த்துகிறார் என்று இப்போது கொள்வோம். இப்போது நாம் செய்யக்கூடுவது அது ஒன்றே.”

துச்சாதனன் திரும்பி தனக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த துச்சகனையும் துச்சலனையும் பார்த்தான். அவர்கள் முகத்திலும் குழப்பம்தான் தெரிந்தது. படுகளத்தின் வாயிலில் நின்றிருந்த காவலர்கள் தலைவணங்கி விலகினர். துரியோதனன் முன்னால் சென்று அவனை வணங்கி வரவேற்ற இளம் மருத்துவனிடம் “எவ்வண்ணம் இருக்கிறார்?” என்றான். “ஆழ்துயில்” என்று அவன் சொன்னான். “அவருக்கு உடலெனும் எண்ணமே இல்லாமலாக்குவதையே இத்தருணத்தில் நாங்கள் செய்யவேண்டும்.” துரியோதனன் “நாம் வருவதை அவருக்கு உணர்த்த இயலுமா?” என்று கேட்டான்.

“அரசே, அவரைத் தொட்டு உசுப்பி விழுப்புறச்செய்ய முடியும். சற்று அசைத்தாலே அவர் உடலில் உருவாகும் கடும்வலியினால் அவர் தன்னுணர்வு பெறவும் வாய்ப்புண்டு. ஆயினும் இங்கு நிகழ்வதென்ன என்றும் அவர் எவரென்றும் அறிந்துகொள்ளமாட்டார். ஏனெனில் அவர் உடலிலிருந்து உயிர் பெரும்பாலும் விலகி மூத்தோர் உலகிற்கு சென்றுவிட்டது. அதன் சிறு இணைப்பு மட்டுமே இவ்வுடலில் தங்கியுள்ளது” என்றான் மருத்துவன். “நேற்று நள்ளிரவில் அவர் நாடியைப் பற்றிய மூத்த மருத்துவர் முள்ளில் சிக்கிய பட்டாடை காற்றில் எழுந்து பறப்பதுபோலிருக்கிறது, ஒரு சிலமுட்களில் தைத்து அது படபடக்கிறது என்றார்.”

துரியோதனன் “அவர் எங்களை மறக்க வாய்ப்பில்லை” என்றான். மருத்துவன் “அரசே, இருப்புணர்வையும் சூழுணர்வையும் அடைபவை புலன்கள். அவருடைய ஐம்புலன்களும் அணைத்து வைக்கப்பட்டுள்ளன” என்றான். துரியோதனன் துச்சாதனனை நோக்கி தலையசைத்தான். துச்சாதனன் வெளியே சென்று அங்கு துச்சகனும் துச்சலனும் இருபுறமும் நிற்க கைகூப்பி நின்றிருந்த கர்ணனிடம் உள்ளே வரும்படி கைகாட்டினான். கர்ணன் தன் வலக்காலை எடுத்து வைத்து வணக்கத்தால் சற்றே ஒடுங்கிய தோள்களுடன், தணிந்த தலையுடன் படுகள வளையத்திற்குள் நுழைந்தான்.

அம்புப் படுக்கையில் கிடந்த பீஷ்மரைக் கண்டதும் கர்ணன் ஒரு கணம் துணுக்குறுவது தெரிந்தது. அந்த அம்புப் படுக்கை குறித்து அவன் முன்னரே கேட்டிருந்தபோதிலும்கூட அதை பார்த்தது அவனுக்கு நிலையழிவை உருவாக்கியது தெரிந்தது. துச்சாதனனுக்கேகூட முதற்கணம் உளம் அதிர்வுகொண்டது. குருதி வழிந்துறைந்த அம்புகள் நிலைத்த எரிதழல்கள் எனத் தோன்றின. அவர் ஒரு சிதையில் எரிந்துகொண்டிருப்பதாக எண்ணி அவ்வெண்ணத்தை விலக்கினான். கணம்கணமென காலமுடிவுவரை எரிக்கும் சிதை என மீண்டும் ஓர் எண்ணம் எழ தலையை திருப்பி நோக்கை அப்பால் நுடங்கிய கொடியை நோக்கி திருப்பிக்கொண்டான்.

துரியோதனன் மிகத் தாழ்ந்த குரலில் “அங்கரே, மூதாதையை மும்முறை வலம் வந்து வணங்குங்கள். அவர் தாளில் தலைவைத்து நீங்கள் இங்கு வந்து கௌரவப் படைகளின் தலைமுகப்பில் நின்று பாண்டவருடன் பொருதி வெற்றியை ஈட்டுவதற்கு அவருடைய வாழ்த்துகளை கோருங்கள்” என்றான். அத்தருணம் மருத்துவர்களினூடாக செவிகளுக்குச் சென்று கதைகளில் பதியும் என அறிந்திருந்தமையால் அவன் சொல்லெண்ணி முறைமை பிறழாது பேசினான். “பிதாமகர் பீஷ்மர் நின்றிருந்த இடத்தில் நீங்கள் உங்கள் வில்லுடன் நிற்கவிருக்கிறீர்கள். உங்கள் கைவில்லை அவர் காலடியில் வைத்து சொல் பெற்று மீளுங்கள்.”

கையில் விஜயத்துடன் கர்ணன் பீஷ்மரை வலம் வந்தான். அவன் உடல் பலமடங்கு எடைகொண்டுவிட்டதைப்போல ஒவ்வொரு அடியையும் மெல்ல இழுத்து தூக்கி வைத்து சுற்றி வந்தான். மூச்சு இறுகி நின்றிருப்பதை அவன் உடலிலிருந்த இறுக்கத்திலிருந்து உணரமுடிந்தது. துச்சாதனனால் பீஷ்மரின் காட்சியை அகவிழியிலிருந்து விலக்க இயலவில்லை. நோக்காதபோது அது மேலும் அழுத்தம் கொண்டது. எனவே மீண்டும் திரும்பி கைகூப்பியபடி பீஷ்மரின் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தான். அது மானுடஉடல்போல தோன்றவில்லை. சிலைத்தன்மை கொண்டுவிட்டிருந்தது. சிலைகளில் வந்து குடியேறும் தெய்வத்தன்மை ஒன்று தெளிந்திருந்தது. தென்கோமதியின் ஒழுக்கில் நீருக்குள் எழுந்த பாறையில் செதுக்கப்பட்ட பெருமாளின் கிடந்த திருக்கோலம்போல. தண்மையும் கருமையும் கனவெனக் கனிந்த தோற்றம்.

அவர் முகத்தில் அவன் நினைவு தெளிந்த நாள் முதல் கண்டிருந்த சலிப்பு முற்றிலும் விலகி பேரழகு வந்தமைந்திருந்தது என துச்சாதனன் எண்ணினான். அது தன் உளமயக்கா என்று ஐயம் கொண்டான். இல்லை மெய்யே என்றது விழி. சீர்வளைவுகொண்ட புருவச்செதுக்குகள், மூக்கின் கூர்நிமிர்வு, கன்னங்களின் ஒத்திசைவு, உதடுகளின் பழுதற்ற பொருத்து, தாடியிழைகளின் வழிவு என ஒவ்வொரு உறுப்பும் முழுமையை கனவு கண்ட சிற்பியின் கையில் எழுந்தவைபோல் இருந்தன. அங்கே படுத்திருப்பவர் பீஷ்மர் அல்லவா? உடலில் எழுவது தன்னை உருமாற்றிக்கொள்ளுமா என்ன?

துயிலும் குழந்தைகள் பேரழகு கொள்வதை அவன் கண்டிருந்தான். ஆனால் முதியவர்கள் துயில்கையில் அவர்களின் உள்ளத்தில் திரண்டு எஞ்சியிருக்கும் மைய உணர்வே சிற்பநிலைப்பு கொண்டு வெளிப்படும். தனிமை, ஏக்கம், கைவிடப்பட்ட நிலை, பற்றற்று விடுபடும் விழைவு, விடுபட்டுவிட்ட நிறைவு என. இறந்த முதியவர்கள் முகங்களிலும் துயிலும் முதியோர் முகங்களிலும் அவன் கண்ட ஒவ்வொன்றும் மானுடநிலையின் ஒரு தருணம் கொண்டவை. ஆனால் பீஷ்மரின் முகம் மானுடர் எய்தமுடியாததாக இருந்தது. இந்த முகத்தை சிற்பிகள் நினைவில் நிறுத்துவார்கள். இதை மரத்திலும் கல்லிலும் வடிப்பார்கள். இனி ஊழிக்காலம் வரை என் கொடிவழியினரில் இந்த முகமே நிலைகொள்ளும்.

மூச்சு ஓடுகிறதா என்று அவன் விழி கூர்ந்தான். அதற்கான எந்த அசைவும் நெஞ்சிலும் கழுத்திலும் வயிற்றிலும் தெரியவில்லை. அவர் இடையில் ஒற்றைத் தோலாடையை சுற்றி தற்றுடுத்திருந்தார். அம்புக்கூர்களாலான மென்பரப்பின்மீது மிதந்து நின்றிருந்த உடலில் நூற்றுக்கணக்கான அம்பு முனைகள் சிறிய முழைகளாக பதிந்திருந்தன. சரிந்த மரத்திலிருந்து புதுமுளைகள் எழுவதுபோல. அவ்வெண்ணத்தால் துச்சாதனன் விதிர்ப்படைந்து துச்சகனின் கைகளை பற்றிக்கொண்டான். துச்சகன் “இந்திரனின் விழிகள்போல” என அவன் செவிமட்டுமே அறியும் குரலில் சொன்னான். துச்சாதனன் மேலும் விதிர்ப்படைந்தான்.

கர்ணன் மூன்றாம் முறை சுற்றிவந்து விஜயத்தை எடுத்து தலைக்குமேல் தூக்கி வாய்க்குள் வஞ்சினச் சொற்களை உரைத்து பீஷ்மரின் காலடியில் வைத்து பின்னர் அவர் கால்கள் தன் நெற்றியில் படும்படி தலைவணங்கினான். வில்லை அவன் திரும்ப எடுக்கக் குனிகையில் பீஷ்மரின் உதடுகள் மெல்ல அசைவதை துச்சாதனன் கண்டான். துரியோதனன் திரும்பி அவ்வசைவுகளைப் பார்த்து உடனே விழிதிருப்பி கர்ணனிடம் கையசைவால் ‘செல்வோம்’ என்றான். துச்சாதனன் “பிதாமகர் ஏதோ சொல்கிறார், மூத்தவரே” என்றான். “அவர் வாழ்த்துரைக்கிறார். நன்று. நாம் தேடிவந்தது அது” என்று துரியோதனன் சொன்னான்.

“அவர் சொல்வதை கேட்போம்” என்றான் துச்சாதனன். துரியோதனன் எரிச்சலுடன் “அங்கரை அவர் படைத்தலைமை கொள்ள ஆணையிட்டிருக்கிறார். அவர் அதற்குமேல் சொல்லாடுவது உடல்நிலைக்கு உகந்தது அல்ல. செல்வோம். இன்னும் சற்றுப்பொழுதில் முதலொளி எழுந்துவிடும். அப்போது அங்கர் படைமுகம் நின்றாக வேண்டும்” என்றான். கர்ணனின் தோளில் கைவைத்து “கிளம்புக!” என்றான். கர்ணன் “அவர் ஏதோ கூறுகிறார். அச்சொல் என்ன என்று அறியவேண்டும்” என்றான். துரியோதனன் “அதை நான் கேட்டுவிட்டேன்” என்றான்.

துச்சாதனன் உரத்த குரலில் “மூத்தவரே, பிதாமகர் கூறுவதென்ன என்று நாம் கேட்டாக வேண்டும். அது நம் கடமை” என்றான். நாகசீறல்போல் ஒலித்த தாழ்ந்த குரலில் துரியோதனன் “கிளம்புக! இது என் ஆணை!” என்றான். துச்சாதனன் தலைவணங்கி துச்சகனையும் துச்சலனையும் தோளில் தொட்டு வருக என தலையசைத்து வெளியே சென்றான். கர்ணன் “நில், இளையோனே!” என்று அவனிடம் சொன்ன பின் துரியோதனனிடம் “அவர் உரைக்கும் சொற்களை கேட்போம். அது எதுவாயினும் நாம் தலைக்கொள்ளவேண்டியதே. இறப்பின் தருணத்தில் இருப்பவர் இவ்வுலகுக்கே ஆணையிடும் தகுதி கொள்கிறார். ஏனெனில் இங்கிருந்து அவர் பெற்றுக்கொள்ள எதுவுமில்லை. அச்சொற்களன்றி இவ்வுலகுக்கு அளிப்பதற்கும் ஏதுமில்லை” என்றான்.

பீஷ்மரின் தலையருகே சென்று முழங்காலிட்டு அமர்ந்து தன் செவிகளை பீஷ்மரின் உதடுகள் அருகே வைத்தான் கர்ணன். பீஷ்மர் மீண்டும் எதையோ சொன்னார். கர்ணனின் முகத்தை துச்சாதனன் கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான். அதில் ஐயமும் குழப்பமும் மட்டுமே தெரிந்தது. துரியோதனன் சினமும் கசப்பும் கொண்ட முகத்துடன் இரு கைகளையும் சுருட்டி முஷ்டி பிடித்து தோள்களை இறுக்கியபடி நின்றான். அவன் நெஞ்சத்தசைகள் விம்மி இறுகி நெகிழ்ந்து அசைந்தன. பற்களைக் கடித்து இறுக்கியமையால் தாடை முறுகி புடைத்திருந்தது.

துரியோதனனை ஒருகணம் நோக்கிய பின் துச்சாதனன் தானும் முன்னால் சென்று முழந்தாளிட்டு பீஷ்மரின் வாயருகே செவியை கொண்டு சென்றான். பீஷ்மர் “அங்கன் தலைமை கொள்க!” என்றார். துச்சாதனனுக்கு மெய்ப்பு எழுந்தது. அது கேட்டதா தன் உளக்குரலா என அவன் ஐயுற “அங்கன் தலைமை கொள்க!” என்று பீஷ்மர் மீண்டும் சொன்னார். “அவன் புவியில் நிகரற்ற வீரன். அவனை எதிர்கொள்ளவிருப்பவனும் அவ்வாறே. அவர்கள் எதிர்நிற்கலாகாதென்று இதுவரை எண்ணினேன். அதை தவிர்க்க என்னால் இயலாதென்று இப்போது புரிந்துகொண்டேன். அது ஊழெனில் அவ்வாறே நிகழட்டும்.”

அவர் மூச்செறிந்து “அது நிகழட்டும். அவன் எண்ணியதே அமையட்டும்” என்றார். துச்சாதனன் அறியாமல் “எவர்? எவர் எண்ணியது?” என்றான். பீஷ்மர் விழிதிறந்து கர்ணனையும் துச்சாதனனையும் மாறி மாறி பார்த்தார். அவர்களை அவர் அடையாளம் கண்டுகொள்ளவில்லை எனத் தோன்றியது. பின்னர் மெல்லிய புன்னகையில் அவர் உதடுகள் விரிந்தன. “இன்று நான் கூறுவன அனைத்தும் வீண் சொற்கள்” என்றார். மூச்சிரைக்க “கர்ணன்! கர்ணன்!” என்றார். “இங்குளேன், பிதாமகரே!” என கர்ணன் தன் முகத்தை அவர் முகத்தருகே கொண்டு சென்றான். அவர் அருகணையும்படி தன் விழிகளால் காட்டினார். அவன் மேலும் அருகே செல்ல அவன் குழல் கற்றையை மெல்ல முகர்ந்தார். இனிய புன்னகையில் அவர் முகம் மேலும் அழகு கொண்டது.

“இளமையில் நான் சம்பாபுரிக்கு வந்து உன்னை பார்த்திருக்கிறேன். நீ சிறுவனாக இருக்கும்போது. மிக இளஞ்சிறுவன் அப்போது” என்றார். கர்ணன் “ஆம், பிதாமகரே. அதை நான் நன்கு நினைவுறுகிறேன். உங்கள் உயரமும் தோற்றமும் அன்று என்னை அஞ்ச வைத்தன. அண்ணாந்து நோக்கியபோது உங்கள் தலை விண் கதிரோனுக்கு அருகிலென எழுந்திருப்பதை கண்டேன். அங்கிருந்து இறங்கி வருபவர்போல் குனிந்து உங்கள் கைகளால் என்னை எடுத்தீர்கள். நெஞ்சோடணைத்து என் குழலில் முத்தமிட்டீர்கள்” என்றான். புன்னகையுடன் “ஆம்” என்றார் பீஷ்மர். அவருடைய நோய் முற்றாகவே அகன்றுவிட்டிருந்ததாகப் பட்டது.

பீஷ்மர் மீண்டும் கர்ணனின் குழலை முகர்ந்தார். “அன்றிருந்த அதே மணம் உன் குழலில் இன்றுமிருக்கிறது. என் கைகள் செயலற்றிருக்கின்றன. இல்லையேல் உன்னை நெஞ்சோடு அணைத்திருப்பேன். என் நெஞ்சில் உன் தலையை வை” என்றார். கர்ணன் கைகளை ஊன்றி தலைநீட்டி அவர் நெஞ்சில் தன் தலையை அழுந்தாமல் வைத்தான். அவர் மூச்சை இழுத்துவிட்டார். அவர் உடலில் இருந்த மெழுகுத்தன்மை விலகி அது குருதியோட்டத்தின் உயிர்த்தன்மையை கொள்வதாக துச்சாதனனுக்குத் தோன்றியது. அவர் அவ்வளவு நேரம் பேசலாமா என ஐயம்கொண்டு மருத்துவனை நோக்கினான். ஆனால் அவனும் கைகளைக் கட்டியபடி வெறுமனே நோக்கி நின்றிருந்தான்.

பீஷ்மர் நினைவுகளால் முகம் மலர்ந்து “மேலும் பலமுறை உன்னைக் காண வந்திருக்கிறேன். அதன் பின்னர் உன்னை தொட்டு எடுக்க துணியவில்லை. ஏனெனில் முதன்முறை உன்னை என் கைகளில் எடுத்தபோது நீ என்னை அறிந்துகொண்டாய் என்பதை நானும் உணர்ந்தேன். அயலவன் ஒருவனால் தூக்கப்படும் குழந்தை கொள்ளும் திமிறல் உன் தசைகளில் இருக்கவில்லை. கருவறைக்குள் குழவி என என் நெஞ்சில் ஒடுங்கி தோளில் தலை சாய்த்திருந்தாய். உன் நெஞ்சுமட்டும் துடித்துக்கொண்டிருந்ததை இப்போதும் நினைவுகூர்கிறேன்” என்றார்.

கர்ணனும் அக்கனவுக்குள் இருந்தான். “முத்தமிட்டு உன்னை தூக்கியபோது உன் இமைகள் சரிந்து உதடுகள் சற்றே திறந்து அரைத்துயிலிலென நீ இருப்பதை கண்டேன். உன்னை உன் அன்னை புதர்களுக்கப்பால் பெயர் சொல்லி அழைத்தாள். உன்னை நிலத்தில் இறக்க நான் முயன்றபோது என் தோளில் சரிந்திருந்த என் முடிக்கற்றையை பற்றிக்கொண்டு தலையசைத்து இறங்க மறுத்தாய். உன் கைகளைப் பிரித்து மெல்ல இறக்கி நிலத்தில் விட்டேன். இரு கைகளையும் விரித்தபடி மீண்டும் ஓடி வந்து என் ஆடையை பற்றிக்கொண்டாய். பூனைக்குட்டிகள் அவ்வாறு நம் ஆடையை பற்றிக்கொள்ளும். அப்போது நம் உள்ளம் கனிவது நாம் எவராயினும் நம் அகத்தில் அன்னை ஒருத்தி வாழ்வதனால்தான் என்பார்கள்.”

“உன் அன்னை புதர்களிலிருந்து தோன்றுவதற்கு முந்தைய கணத்தில் நான் சிறு செயல் ஒன்றால் உன் நோக்கை திருப்பினேன். உன் சிற்றுடலிலும் பெருவில்லவன் ஒருவன் வாழ்ந்ததனால் அவ்வசைவை நோக்கி நீ இயல்பாகத் திரும்பிய அக்கணத்தில் பின்னால் திரும்பி புதர்களுக்குள் நான் மறைந்துகொண்டேன்” என்றார் பீஷ்மர். “உன் அன்னை ஓடிவந்து உன்னைத் தூக்கி எடுத்து ஏன் அங்கு நிற்கிறாய் என்றும் எதை பார்க்கிறாய் என்றும் கேட்டாள். நான் மறைந்த திசையை சுட்டிக்காட்டி நீ அங்கே அங்கே என்றாய். பின்னர் உன் நாவிலிருந்து அச்சொல்லை கேட்டேன். நீ பிதாமகர் என்றாய்” என்றார்.

அவர் மெல்ல சிரித்ததை துச்சாதனன் வியப்புடன் நோக்கினான். “நீ உன் சிறிய சிவந்த உதடுகளால் சொன்னதை இப்போதும் அருகென காண்கிறேன். பிதாமகர் என்று.” அவர் உடல் நகைப்பில் மெல்ல அசைந்தது. “எத்தனை அழகிய சொல். என் மைந்தா, அன்று நீ மானுட உடலில் தெய்வமெழுந்ததுபோல் பேரழகு கொண்டிருந்தாய். அந்த அழகை அகவை ஏறுந்தோறும் பெருக்கிக் கொண்டாய். எத்தனை பேரழகன்!” அவர் விழிகளை மூடி உதடுகள் அசைய “அழகன்! அழகன்!” என்றார். விழிகளைத் திறந்து “ஆனால் உன்னை காணும்போதெல்லாம் என் அகம் எரியும். அத்தனை விழிகளும் உன் அழகை பார்க்கின்றன என்பதை என்னால் எண்ணிக்கூட நோக்க முடியாது” என்றார்.

“உன் அழகு மிகமிக மென்மையானது என்று தோன்றும். அதைக் கண்டு தெய்வங்கள் பொறாமை கொள்ளும் என்று எண்ணுவேன். எங்கோ எதுவோ சீற்றம் கொள்கிறது என அஞ்சிக்கொண்டே இருந்தேன். சுடுசொல்லெடுப்பேன். என் விழிகளை திருப்பிக்கொண்டு உளக்கடுமை கொள்வேன். மைந்தா, உன் அன்னை என்ன செய்திருப்பாள் என என்னால் உணரமுடிகிறது. ஒவ்வொருநாளும் உனக்கு அவள் கண்ணேறு கழித்திருப்பாள்.” அவர் பெருமூச்சுவிட்டார். “பேரழகு கொண்டவரை தெய்வங்கள் வாழவிட்டதில்லை. அவர்கள் வாழ்வதெல்லாம் அவ்வழகு அழிந்து வெறும் கருத்தென எஞ்சிய பின்னரே.”

ஆனால் கர்ணன் அந்த மாறாத கனவுப் புன்னகையில் இருந்தான். அவர்கள் அறியாது காலெடுத்து துரியோதனன் அருகணைந்தான். அவன் வியப்பில் சொல்லமைந்திருந்தான். பீஷ்மரின் முகமும் உணர்வுகளும் மாறிவிட்டிருந்தன. “நான் பிற எவரையும்விட உன்னிடத்திலேயே மிகுதியான உரிமை எடுத்துக்கொண்டேன். ஏனெனில் நீ மூத்தவன். பிற அனைவரையும்விட உயர்ந்தவன். உனக்கு உரிய அனைத்தையும் தெய்வங்கள் எங்கோ வகுத்திருக்கும் என்று எண்ணினேன்.” பின்னர் விழிகளை மூடி பெருமூச்செறிந்தார். அவர் முகத்தில் எழுந்தது துயரா அல்லது மானுட உணர்வல்லாத வேறேதுமா என்று துச்சாதனன் எண்ணினான்.

“நீ நானே” என்று பீஷ்மர் சொன்னார். “ஆம்” என்று கர்ணன் சொன்னான். “நானிருக்கையில் நீ வேண்டியதில்லை என எண்ணினேன்.” அவர் முகம் துயர்கொண்டதுமே உடலின் ஆற்றலும் மறையத் தொடங்கியது. மூச்சிளைப்பில் மார்பு ஏறியிறங்கியது. “செல்க! நான் ஒழிந்த அவ்விடத்தில் அமைக! என் ஊழே உனக்கும் அமையக்கூடும். நான் என் வஞ்சினங்களில் சிக்கிக்கொண்டவன். என் நோன்புகளால் தளையிடப்பட்டவன். நீயும் உன் வஞ்சினங்களிலிருந்தும் நோன்புகளிலிருந்தும் விடுபடக்கூடும்.”

“நான் வெல்வேன்!” என்றான் கர்ணன். “அவ்வாறே ஆகுக!” என்று பீஷ்மர் கூறினார். பின்னர் கண்களை மூடி பெருமூச்சுவிட்டு “அவ்வாறே ஆகுக!” என்றார். மீண்டும் அவர் எதையோ சொல்லக்கூடும் என்பதுபோல கர்ணன் அவர் முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தான். துரியோதனனும் துச்சாதனனும் உடற்தசைகளில் எங்கும் சிற்றசைவுகூட இல்லாமல் அவரைப் பார்த்தபடி நின்றனர். பந்தங்களின் அசைவொலி மட்டும் எழுந்துகொண்டிருந்தது. பீஷ்மரின் மூச்சு சீரடைந்தது. முகம் உணர்வுகளனைத்தையும் இழந்து வெண்பளிங்குச் சிலை என்றாகியது.

பெருமூச்சுடன் அசைந்த கர்ணன் கையூன்றி எழுந்தான். துரியோதனனும் பெருமூச்சுவிட்டு “நன்று! அவர் உங்களை வாழ்த்தியிருக்கிறார். நீங்கள் அஸ்தினபுரியின் படைத்தலைமை கொள்வதற்கும் ஒப்புதல் அளித்திருக்கிறார்” என்றான். கர்ணன் ஒன்றும் சொல்லாமல் தன் வில்லருகே சென்றான். முகம் முதல் முழங்கால்வரை அனைத்துறுப்புகளும் மண்படிய விழுந்து பீஷ்மரை வணங்கி விஜயத்தை கையிலெடுத்துக்கொண்டான். துரியோதனனையும் துச்சாதனனையும் தம்பியரையும் நோக்காமல் நீள்காலடி எடுத்து நடந்து வெளியே சென்றான்.

துச்சாதனனின் அருகே வந்த துரியோதனன் “பிதாமகரின் ஆணை எழுந்தது நன்று. இனி நாம் துரோணரிடமே அதை கூற முடியும். அங்கர் படைத்தலைமை கொள்ளட்டும். அதை துரோணரும் மீற முடியாது” என்றான். துச்சாதனன் “ஆம்” என்றான்.

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைகண்டத்தட்டுகள் உரசிக்கொள்ளுதல்  
அடுத்த கட்டுரைஅன்புராஜ் – கடிதங்கள் – 2