பாட்டும் தொகையும் ஆவணப்படம் : கடிதங்கள்

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ளதால் விஷ்ணுபுர விழாவுக்கு வர இயலவில்லை.விழா குறித்த எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களின் கடிதங்கள் வாயிலாகவும்,உங்கள் கட்டுரை,

 

காணொளிகள் வாயிலாகவும் விழா பற்றித்.தெரிந்து கொள்ள முடிந்தது. ஒவ்வொருவரும் வேறுபட்ட கோணங்களில் விழாவைக் காட்டினார்கள்.இரண்டு நாட்களின் நேர நிர்வாகமும்,நிகழ்ச்சி நிர்வாகமும் பிற இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டுமல்ல,எல்லா விழாக்களுக்கும் ஒரு பாடம்.உச்சத்தை எட்டிவிட்டதாக அரங்கசாமியும், கிருஷ்ணனும் மகிழட்டும்.ஆனால் மெருகூட்டுவதற்கு முடிவேயில்லை.ராஜ் கௌதமன் பற்றிய ஆவணப் படம் ஒரு அற்புதம்.தமிழ் இலக்கியக் குடும்பத்தின் பலதலைமுறைகளைச் சேர்ந்தவர்களும் சங்கமித்த இந்த விழாக்கள்உங்களது பிறிதொரு சாதனை.நீங்கள் விதைத்தது வீண் போகாது.வாசிப்பின் தரம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது.

 

என் போன்ற விழாவுக்கு வர இயலாதவர்களுக்கு,சஞ்சயன், ஏகாக்ஷர்,குடாடர் போல விழா பற்றிய வர்ணனைகளை கொடுத்த

 

ஒவ்வொரு கடிதத்துக்கும் நன்றி.

 

சாந்தமூர்த்தி,

மன்னார்குடி.
 

அன்பிற்கினிய ஜெயமோகனுக்கு

 

வணக்கம் நலம்தானே?

 

ராஜ்கௌதமன் ஆவணப்படம் அருமையாக நேர்த்தியாக உள்ளது. வெற்றுப்புகழ் பாடாமல் அவரின் குறைகளையும்  தாங்கள் ஆய்ந்து கூறியிருக்கும் நடுநிலை போற்றத்தகக்து. அதிலும் ராஜ்கௌதமன் புறப்பார்வை அற்றவர். லட்சியத்தின் மீது நம்பிக்கை இல்லாதவரின் ஆய்வு எப்படி இருக்கும் என்றெல்லாம் தாங்கள் பேசியது குறிப்பிடத்தக்கது. அவை நூற்றுக்கு நூறு உண்மையே

 

வளவதுரையன்

 

 

அன்புள்ள ஜெ

 

விழாப் பதிவுகள் மிகக்கூர்மையாக தமிழகத்தின் தலைசிறந்த இலக்கியவிழாவை அறிமுகம் செய்தன

 

ராஜ் கௌதமன் பற்றிய ஆவணப்படம் மிகச்சிறப்பாக இருந்தது. முக்கியமான விஷயம் பேராசிரியர் அவருடைய சொந்த ஊருக்குச் சென்ற காட்சியைக் காட்டும்போது ஒரு வசனம் கூட ஒலிக்காமலிருந்தது. அவருடைய குரல் மட்டுமே கேட்கிறது. அங்குள்ளவர்கள் பேசியிருந்தால் அந்த பேச்சு வழியாக நம் கவனம் திசைமாறியிருக்கும். அந்த பேச்சும் மிகச்சம்பிரதாயமாகவே இருந்திருக்கும். ஆனால் அந்தக்குரலின் ஒலி இல்லாமலிருந்தமையால் முகபாவனைகள் மழை ஆகியவற்றை நன்றாகக் கவனிக்கமுடிந்தது. சினிமாக்கலை தெரிந்த ஒருவரின் ஆவணப்படம் என்று புரிந்தது

 

மாதவ்

 

 

அன்புள்ள ஜெ

 

விஷ்ணுபுரம் தயாரித்த நான்கு ஆவணப்படங்களையும் இப்போதுதான் பார்த்தேன். வெறுமே எழுத்தாளர்களின் வாழ்க்கையைப் பதிவுசெய்தல் என்பதுதான் நோக்கம். ஆனால் வெவ்வேறு வாழ்க்கைகள் சூழல்கள் அற்புதமாகப் பதிவாகியிருக்கின்றன. இவை காலப்பெட்டகங்கள் போல. ஞானக்கூத்தன் சென்னைக்காரர். தேவதச்சன் கோயில்பட்டி. வண்ணதாசன் நெல்லை. சீ முத்துசாமி மலேசியா. ராஜ்கௌதமன் புதுப்பட்டி. ஒவ்வொரு நிலத்துக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. இந்தக்க்லைஞர்கள் அந்நிலத்தின் பகுதியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். மிகப்பெரிய பணி இது.

நெல்லையின் வண்ணதாசனை நீரிலிருந்து ஆரம்பிக்கிறார்கள்.  வண்ணதாசனை தாமிரவர்ணி பெருக்கில் இருந்து பிரித்துக்காட்டமுடியாதுஆனால் தேவதச்சனின் நிலம் வரண்டது. அந்த ஆவணப்படம் மிட்டாய்செய்வதை காட்டுகிறது. கோயில்பட்டியே மிட்டாய்த்தொழில் கொண்டதுதான். தேவதச்சனும் தன் வாயில் சிறிய இனிப்புத்துண்டை போட்டிருப்பேன் என்று சொல்கிறார். அதன் வழியாக ‘மிட்டாய் செய்யும் இடம்’ என்பதே வேறு ஒரு அர்த்தம் கொள்கிறது

 

இந்த ஆவணப்படங்களில் தெரிந்தும் தெரியாமலும் வந்து சேர்ந்திருக்கும் டீடெயில்கள் பெரிய கலாச்சாரப்பதிவுகள். படங்களை எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

 

எஸ்.சிவக்குமார்

 

விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்

முந்தைய கட்டுரைநிலத்தில் படகுகள்
அடுத்த கட்டுரைவாசகனின் தொடக்கம்