மாந்தளிரே!

ஷ்யாம்
ஷ்யாம்

இசைகேட்க மிக உகந்த பருவம் என்பது இரண்டுதான் என்பார்கள். முதிராஇளமையின் கனவு நிறைந்த காலகட்டம். சிந்தை அணைந்து தனிமைசூழத் தொடங்கும் முதுமை. நான் இளமையில் கேட்ட நல்ல பாடல்கள் அனைத்தும் எங்கோ சேமிக்கப்பட்டுள்ளன. இத்தனைக்கும் இசையார்வம் கொண்டவனோ, நல்ல பாடல்களைத் தேடித்தேடிக் கேட்டவனோ அல்ல.என் ஆர்வம் முழுக்க அன்று வாசிப்பிலும் காட்டில் சுற்றியலைவதிலும்தான் இருந்தது. ஆனால் எல்லா நல்ல பாடல்களையும் நான் கேட்டிருக்கிறேன், நினைவில் வைத்திருக்கிறேன் என்பது நண்பர் சுகா , ஷாஜி போன்று பாடல்களே வாழ்வாகக் கொண்டவர்களுடன் பேசும்போது தெரியவரும். அது விந்தையாகவே இருக்கும். நான் கேட்காத ஓர் அரியபாடலை அவர்களால் சொல்லமுடிந்ததில்லை.

வழியோரம் கல்லெனக் கிடக்கும் தெய்வம் அறியாமல் கால்தொட்டால் எழுந்து வந்து வழிமறித்து நின்றுவிடும் என்பார்கள். அதைப்போல இரவின் தனிமையில் சில பாடல்கள் நினைவில் தட்டுப்படும். தேடித்தேடி சலித்து அவற்றை எடுத்துக்கேட்டால் இறந்துபோன ஒருவரை உயிருடன் மீண்டும் சந்திப்பதுபோன்ற பரவசம். காலத்தை கடந்து சென்றுவிட்டதுபோல. இளமையில்கேட்ட ஒரு பாடலில்தான் என்னென்ன இருக்கிறது. அதை முதலில் கேட்ட அந்தக் காலத்துளியே மீண்டும் வந்து நின்றிருக்கிறது. மாறிவிட்ட நிலத்துடன், மறைந்த மனிதர்களுடன், இல்லாதொழிந்த அனைத்துடனும்.

இன்று இப்பாடல். மாந்தளிரே மயக்கமென்ன, உன்னை தென்றல் தீண்டியதோ. ஷ்யாம் இசையமைப்பில் வந்தபாடல். மலையாளக் காதுகளுக்கு ஷ்யாம் நன்றாகவே அணுக்கம். எழுபதுகளின் இறுதியும் எண்பதுகளின் தொடக்கமும் மலையாளத்தில் ஷ்யாமின் உச்சகட்ட படைப்பூக்கக் காலம். சலீல் சௌதுரியின் இசைப்பள்ளியைச் சேர்ந்தவர். ஆகவே இந்திய மரபிசையின் இலக்கணங்களுக்குள் நிற்கும் பாடல்கள் அல்ல. மேற்கத்திய இசைக்கு அணுக்கமானவை. நாட்டாரிசைக்கூறுகள் பெரிதாக கிடையாது.விந்தையான திருப்பங்கள்கொண்ட மெட்டுகளும் இசையொழுக்கும் கொண்டவை அவருடைய பாடல்கள். அது இளையராஜாவின் பொற்காலம் என்பதனால் தமிழில் ஷியாமின் பல நல்ல பாடல்கள் கவனிக்கப்படவே இல்லை. ‘மழைதருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்” போன்ற சில பாடல்களே சிலரால் நினைவில் வைக்கப்பட்டுள்ளன.’

இந்தப் படத்தை இணையத்தில் தேடிப்பார்தேன். படம் பெயர் தேவதை. யூடியூபில் முழுப்படமும் கிடைக்கிறது. மொத்த குழுவுமே மலையாளிகள் என தோன்றுகிறது. நெசவாளர் பின்னணியில் எடுக்கப்பட்டது. இயக்கியிருப்பவர் பெயரைப் பார்த்தால் ஆச்சரியம், பி.என்.மேனன். அவரேதானா என சிலமுறை உறுதிசெய்துகொண்டேன்.

பி.என்.மேனன்
பி.என்.மேனன்

பி.என். மேனன் என்னும் பல்லிச்சேரி நாராயணன்குட்டி மேனன் [1928 – 2008]மலையாளத்தின் முதல்தலைமுறையின் சிறந்த இயக்குநர்களில் ஒருவர். இயக்குநர் பரதனின் தாய்மாமன். கேரளத்தில் கொச்சி அருகே வடக்காஞ்சேரி என்னும் ஊரில் பிறந்தார். திரிச்சூரில் ப்ள்ளிக்கல்வியை முடித்தபின் சென்னைக்குச் சென்று சென்னை ஓவியப்பள்ளியில் கே.சி.எஸ் பணிக்கரின் மாணவராக ஓவியம் கற்றார். வேலைதேடி அலைந்து சேலம் மாடர்ன் தியேட்டரில் எடுபிடிப்பையனாகச் சேர்ந்தார். அங்கே சில மாதங்களிலேயே ஓவியராக மாறிப் விளம்பர வடிவமைப்பில் பணியாற்றினார். சேலத்தில் இருந்து சென்னைக்கு வந்து நாகிரெட்டியின் திரைப்பட நிறுவனத்தில் ஓவியராகச் சேர்ந்தார்.

அக்காலத்தில் சினிமாவுக்கான சுவரொட்டிகளை வரைவதில் தேர்ந்தவராக அவர் அறியப்பட்டார். ஏராளமான நூல்களுக்கும் வார இதழ்களுக்கும் அட்டை வரைந்திருக்கிறார். பின்னர் கலை இயக்குநராக ஆனார். மலையாளத்தில் வெளிவந்த ‘நிணமணிஞ்ஞ கால்பாடுகள்’ படத்தில் முதல்முறையாக கலை இயக்குநராகப் பணியாற்றினார்.[ பாறப்புறத்து மத்தாய் எழுதிய தன்வரலாற்று நாவலை ஒட்டி எடுக்கப்பட்ட முக்கியமான படம் இது. ராணுவ வாழ்க்கையின் தனிமையின், சாகசத்தின் கதை]  அவர் இயக்கிய முதல்படம் ரோஸி. [1965] 1970ல் வெளிவந்த ஓளவும் தீரவும் தான் பி.என்.மேனனை மலையாளத்திரையின் முதன்மையான இயக்குநர்களில் ஒருவராக ஆக்கியது. எம்.டி.வாசுதேவன் நாயர் திரைக்கதை எழுதிய படம் அது

பி.என்.மேனன் இயக்கிய ‘செம்பருத்தி’ [எழுத்து மலையாற்றூர் ராமகிருஷ்ணன்] ‘காயத்ரி’ [எழுத்து மலையாற்றூர் ராமகிருஷ்ணன்] குட்டியேடத்தி [எழுத்து எம்.டி.வாசுதேவன் நாயர்] போன்ற படங்கள் மலையாள கிளாஸிக்குகளாகக் கருதப்படுகின்றன. கடம்பா, மலைமுகளிலே தெய்வம் போன்ற கலைப்படங்களையும் இயக்கியிருக்கிறார். ஐந்துமுறை மாநில அரசு விருதையும் இரண்டுமுறை தேசியவிருதையும் பெற்றிருக்கிறார்.

ஆனால் தேவதை படம் சுமாராகவே எடுக்கப்பட்டுள்ளது. அதன் கதை நன்று. திரைக்கதை மிகச் சம்பிரதாயமாக உள்ளது. பி.என். மேனனின் படம் என்றே சொல்லமுடியாது.ஆனால் மலையாளத்தனம் நிறையவே உள்ளது. படுதோல்விப்படமாக இருந்திருக்கவேண்டும். அந்தப்பாட்டு கூட எவர் நினைவிலும் இல்லை. அதன் ஒலிப்பதிவுவடிவமும் சரியில்லை. ஆனால் மெட்டில் நம்மை பாதிக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது

shyam-philips-3
ஷ்யாமின் இயற்பெயர் சாமுவேல் ஜோசஃப். தமிழ்நாட்டில் மைலாப்பூரில் 1937ல் பிறந்தார். தந்தை தங்கராஜ் ஜோசப் பள்ளிஆசிரியர். தாய் மேரி தங்கராஜ். ஆசிரியரான அன்னை தேவாலயத்தில் ஆர்கன் வாசிப்பவர். அன்னையிடம் இசை கற்றார். எட்டுவயது முதல் பாடகராகவும் வயலின் கலைஞராகவும் புகழ்பெற்றார். தன்ராஜ் மாஸ்டரின் மாணவர். தன்ராஜ் மாஸ்டரின் நண்பரான ஆர்.கே. சேகர் [ஏ.ஆர் ரஹ்மானின் தந்தை]யுடன் அறிமுகமானார். எம்.பி.சீனிவாசனின் ஒருநாடகத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை ஆர்.கே.சேகர் வாங்கித்தந்தார்.

இசையமைப்பாளர் எஸ்.பி.வெங்கடேஷின் தந்தை பழனி அந்நாடகத்தில் மாண்டலின் வாசித்தார். அவர் அறிமுகப்படுத்த இசையமைப்பாளர் சி. என் பாண்டுரங்கனிடம் சென்றுசேர்ந்தார். அவர் இசையமைத்த பாடலுக்கு வயலின் வாசித்தார் வி.தட்சிணாமூர்த்தி, எம்.எஸ்.பாபுராஜ் ஜி.தேவராஜன் போன்ற மலையாள இசையமைப்பாளர்களுடன் பணியாற்றினார். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அணுக்கமானவரானார். விஸ்வநாதன் அவர் பெயரை ஷியாம் என்று மாற்றினார். சலீல் சௌதுரியின் அறிமுகம் அவர் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை உருவாக்கியது. சலீல் சௌதுரியின் செம்மீன் படத்தில் முக்கியமான வயலின் இசை பகுதிகள் முழுக்க ஷ்யாம் வாசித்தவைதான். சலீல் சௌதுரியை தன் குருவாக ஏற்றுக்கொண்டார். 12 ஆண்டுக்காலம் சலீல் சௌதுரியின் இசை ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார்.

கூடவே சட்டமும் பயின்றார் ஷ்யாம். ஆனால் படிப்பை முடிக்காமல் திரையிசையில் மூழ்கினார். 1968ல் எதிரிகள் ஜாக்கிரதை என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். 232 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஷ்யாமின் பாடல்களில் பல மலையாளப் பண்பாட்டின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டவை. கேரளத்தில் இன்றும் பெரிதும் கொண்டாடப்படும் இசையமைப்பாளராகத் திகழ்கிறார். தமிழில் மனிதரில் இத்தனை நிறங்களா, தேவதை , கள்வடியும்பூக்கள் போன்ற சில படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

இப்பாடல் சென்றகாலம் வழியாகக் கொண்டு சென்றது.பி.என்.மேனனின் படங்கள், சியாமின் பாடல்கள் வழியாக ஓர் இரவு

கலைஞனின் தொடுகை
இணைகோட்டு ஓவியம்
புலி!
பிச்சகப் பூங்காட்டில்
அன்றுகண்ட முகம்

முந்தைய கட்டுரைவிண்விளி- கிறிஸ்துவின் இறுதிச்சபலம்
அடுத்த கட்டுரைவெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல்