காஞ்சி முதல் ஊட்டிவரை

thiru-paadagam02 (1)

இருபதுநாட்களுக்குப்பின் இன்று [5-6-2018] நாகர்கோயில் வந்துசேர்ந்தேன். இமைக்கணம் முடிந்ததுமே வந்த நிலைகொள்ளாமை. எங்காவது செல்லவேண்டும் என்றிருந்தது. சினிமா வேலைக்காக ஒரு பயணம். அங்கிருந்து பெங்களூர் சென்றேன். நண்பர் தனா இயக்க நான் எழுதும் தேஹி என்ற கன்னடப்படத்தின் படப்பிடிப்பு சென்ற 21- 5-2018 அன்று தொடங்கியது. அதற்குச் சென்று இரண்டுநாள் அங்கிருந்தேன். படப்பிடிப்பு சூடு பிடித்தபின் எழுத்தாளர் அங்கிருப்பது தேவையல்ல, சுமையும்கூட. ஆகவே கிளம்பிவிட்டேன்

IMG_20180522_121730

தேஹி கேரள களரிக் கலை பற்றிய படம். கிஷோர் கதாநாயகனாக நடிக்கிறார். என் நண்பரும் களரி ஆசானுமாகிய ரஞ்சன் பெங்களூரில் ஒரு களரிநிலையம் நடத்துகிறார். அவர் அக்கலையின் அழகியலையும் தத்துவத்தையும் வெளிப்படுத்தும் படம் ஒன்றைத் தயாரிக்க விரும்பினார். ஒரு வடிவம் எழுதினோம். எம்.எஸ்.சத்யூ இயக்குவதாக இருந்தது. அவருக்கு இதயநோய் காரணமாக ஓய்வெடுக்கவேண்டும் என்ற கட்டாயம். ஆகவே நண்பர் தனா படத்தில் இணைந்தார். படப்பிடிப்பு முதற்கட்டம் முடிவடைந்துள்ளது. தேஹி என்றால் உடலுறைவது என்று பொருள். உடலுக்குள் உறையும் ஆத்மா தன்னை உடலென உணரும் நிலை அது

காஞ்சி பாண்டவதூதப்பெருமாளைப் பார்க்கவேண்டும் என்று தோன்றியது. காஞ்சி மடத்தின் ஊழியரும், மறைந்த ஜெயேந்திரரின் அணுக்கருமான சிவா என் நெடுநாள் வாசகர். அவரிடம் சொன்னேன். அவர் தங்குமிடம் ஏற்பாடு செய்தார். காஞ்சியில் நான்குநாட்கள் இருந்தேன். அங்கிருக்கையில் ஊமைச்செந்நாயை மலையாளத்தில் மொழியாக்கம் செய்தேன். நான் ஒவ்வொரு ஜூன் 10 அன்றும் பாஷாபோஷிணி வெளியிடும் ஆண்டுமலரில் மட்டுமே எழுதுவது வழக்கம். சென்ற சில ஆண்டுகளாக அக்கதைகளுக்கு அங்கே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே எழுதியாகவேண்டிய கட்டாயம்.

IMG_20180522_121528

ஆனால் மலையாளத்திற்கு கை வளையவில்லை.  கையால் எழுதுவதே கடினமாக இருந்தது. இரண்டுமுறை முயன்றுவிட்டு முடியவில்லை என்று விட்டுவிட்டேன். அதைச் சொன்னால் கே.சி.நாராயணன் எழுது, உன்னால் முடியும் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். 25 ஆம்தேதி இதழ் அச்சுக்குச் சென்றுவிடும். தத்தளித்து , ஒத்திவைத்து வேறுவழியில்லாமல் எழுதினேன். முற்றிலும் புதிய இடம், இதற்காகவே வந்திருக்கிறேன் என்னும் இரு எண்ணங்களும் எழுத ஊக்கின. ஒருவழியாக பத்துபக்கம் கடந்ததும் கை ஓடலாயிற்று. கைப்பிரதியில் நூறு பக்கம். எழுதிமுடித்தது 25 அன்று காலை. அன்று ஏதோ போராட்டம். இணையநிலையங்கள் இல்லை. ஆகவே ஸ்கேன் செய்து மின்னஞ்சலில் அனுப்ப முடியவில்லை. செல்பேசியில் புகைப்படமாக எடுத்து மின்னஞ்சலில் அனுப்பினேன். அவற்றை அச்சு எடுத்து அன்றே அச்சுக்கோத்து பிழைதிருத்தி படம் வரைந்து அச்சுக்கு அனுப்பியதாகச் சொன்னார்கள் – நள்ளிரவு 12 மணிக்கு.

பாண்டவதூதப்பெருமாளை 23 அன்றே சென்று தரிசனம் செய்தேன். பாண்டவர்களுக்காகத் தூதுசென்று துரியோதனன் அவையில் அமர்ந்து பேருருக் காட்டும் தோற்றம் என்பது புராணம்.20அடி உயரத்தில் மின்னும் கருமையுடன் அருள், அளி கைகளுடன் அமர்ந்தருளும் பெருமாள். அன்றே வெண்முரசின் அடுத்த நாவலுக்கான தலைப்பை வைத்துவிட்டேன். செந்நா வேங்கை. அதன்பின் அதையே சொல்லிச்சொல்லி உள்ளத்தில் உருவேற்றிக்கொண்டிருந்தேன். ஆனால் எழுதக்கூடவில்லை. ஒருநாள் இரண்டுபக்கம் எழுதினேன். அழித்துவிட்டேன். 26 அன்று காலை முதல் பகுதியை எழுதிவிட்டேன்.

a

வரவிருக்கும்போரை என் உள்ளம் மறுத்துக்கொண்டே இருக்கிறது. போர் சென்ற ஆண்டே தொடங்குமென நினைத்தேன். ஒத்திப்போட்டே மூன்று நாவல்களாகிவிட்டன. இந்நாவலும் போரில் தொடங்குமென எண்ணினேன். ஆனால் உள்ளம் அதை இனிய காட்சி ஒன்றில் தொடங்கியது. தொடக்கம் நிகழ்ந்ததுமே ஆறுதலடைந்தேன். வடிவம் கண்ணுக்குத் தோன்றிவிட்டது. இனி எழுதிவிடமுடியும்.

காஞ்சிபுரத்தில் உச்சகட்டவெயில். காலையில் சிவா வந்ததுமே வெளியே செல்வோம். காலையுணவு முடிந்து வருவதற்குள் உடல் வெந்து எரியத் தொடங்கிவிடும். அதன்பின் அறைவிட்டு வெளியே செல்வதே இல்லை. மாலை ஐந்து மணிக்குமேல்தான் கதவைத்திறப்பதே.குழாய்நீர் கொதித்தது. வெந்நீர் குழாயை விட குளிர்நீர்க் குழாய்யின் நீர் அதிகச்சூடு.  முழுப்பகலும் குளிரூட்டப்பட்ட அறைக்குள்தான். மீண்டும் மீண்டும் மொழியில் சென்று முட்டி, எரிச்சல் கொண்டு, மீண்டு வந்து மீண்டும் முயன்று சலித்துக்கொண்டிருந்தேன்

என்னை மிக எளிதாக கையிலேற்றிக்கொண்டு பறப்பது மொழி. என் கனவு வெளிஅது. உண்மையில் நான் அங்குதான் இயல்பாக வாழ்கிறேன், அன்றாடம்தான் எனக்கு கடினமானது. மிக இனியதும் எளிதானதுமானது எழுத்து. பெரும்பாலும் கலைஞர்களுக்கு கலைதான் மிகமிக எளிதானது. ஆனால் எப்போதாவது அது மூடிக்கொண்டுவிட்டதென்றால் என்ன செய்வதென்றே தெரிவதில்லை. எப்படி அதில் ஏறிக்கொள்வது என்று இத்தனைநாட்களில் ஒரு சிறு வழியைக்கூட கண்டடைந்ததில்லை. அது தானாகவே நிகழவேண்டியதுதான். அதுவரையிலான தவிப்பும், அச்சமும், ஐயமும், கொந்தளிப்பும் பிறருக்குச் சொல்லிப் புரியவைக்க முடியாதவை.

IMG_20180528_104918

காஞ்சியில் சாலையில் நடக்கும் வசதியே இல்லை. தமிழகநகரங்கள் அனைத்திலுமே நடந்துசெல்வதற்கான வழிகளே இல்லாமலாகிவிட்டன. பெரும்பாலானவர்கள் இருசக்கர வண்டிகளில்தான் செல்கிறார்கள் என்பது ஒரு காரணம். நெரிசல். நடைபாதை ஆக்ரமிப்புகள். நடைபாதையில் குப்பைக்கூடைகள், டிரான்ஸ்ஃபார்மர்கள், குப்பைமலைகள், ஓட்டை உடைசல்கள், இருசக்கர நிறுத்தல்கள், கடைகளின் உபரிப்பொருட்களை குவித்து வைப்பது என நடப்பவர்கள் சாலையில் இறங்கியாகவேண்டும். இருசக்கரவண்டிகள் வந்து அறைந்துசெல்கின்றன.

காஞ்சியின் பெரிய ஆலயங்களைச் சூழ்ந்து சமீபத்தில் கான்கிரீட் சாலைகள் போடப்பட்டுள்ளன.இது ஹெரிட்டேஜ்சிட்டி என அறிவிக்கப்பட்டுள்ளமையால் யுனெஸ்கோ நிதிக்கொடை பெற்று இவை போடப்பட்டுள்ளன, மிகச்சுமாராகப் போடப்பட்டிருந்தாலும் நடப்பதற்கு உகந்த பாதைகள். மக்கள் இப்போதே குப்பைகளையும் ஓட்டை உடைசல்களையும் இங்கே கொட்டிவைக்க ஆரம்பித்துவிட்டனர். ஆறேழுமாதம் நடக்கும்படி இருக்கும் என நம்பலாம்.

இரு பெரும் ஆலயங்களுக்குள் நடக்கலாம். வெட்டவெளி என்ற அனுபவமே காஞ்சியில் இவ்வாலயங்களுக்கு உள்ளேதான். தேவராஜப்பெருமாள் ஆலயமும்  ஏகாம்பரநாதர் அலயமும் பிரம்மாண்டமானவை. அவையே குட்டி ஊர்கள் என்று சொல்லுமளவுக்கு. பயணிகள், பக்தர்கள் நிறையபேர் இருந்தாலும் நாம் தன்னந்தனிமையை உணருமளவுக்கு ஏகாம்பர வெளி ஏராளமாகவே உள்ளே உள்ளது. மாபெரும் நீர்நிலைகள். அவை முறையாக நீர் நிறைத்துப் பேணப்பட்டால் எத்தனை அரிய காட்சியாக இருக்கும். வரதராஜப்பெருமாள் ஆலயத்தின் பின்பக்கம் நடக்கையில் அங்கே காலமே இல்லை என்ற எண்ணம் எழுந்தது. சோழனோ பல்லவனோ எதிரே வந்திருந்தால் வியப்பு கொள்ளமுடியாது.

நானும் சிவாவும் நாளுக்கொரு ஆலயம் என மாலையில் சுற்றிவந்தோம். காஞ்சி காமாட்சியம்மன் ஆலயம் காஞ்சி மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. திருப்பணிகள் செய்யப்பட்டு இன்று கட்டப்பட்டதுபோல தெரிகிறது. எப்படி ஆலயத்திருப்பணி செய்யப்படவேண்டும் என்பதற்கு முன்னுதராணமான ஆலயம் இது. முன்னர் எந்த கல்லில் ஆலயம் கட்டப்பட்டுள்ளதோ அதே கல்லால்தான் புதுப்பித்தல், தரையமைத்தல் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. மேலும் கட்டப்பட்ட அனைத்துமே ஆகம, சிற்ப முறைப்படித்தான். வண்ணங்கள் மிதமானவை. இதனாலேயே இங்கே கூட்டம் மிகுதி. ஏகாம்பரநாதர் ஆலயம் ஒரு பாழடைந்த தோற்றத்துடன் உள்ளது. சாதாரண மக்களுக்கு அது மெல்லிய ஒவ்வாமையை அளிக்கிறதுபோல. இங்குள்ள மங்கலத்தன்மை அவர்களை கவர்கிறது.

IMG_20180531_082722

26 ஆம்தேதி காஞ்சியில் இருந்து கிளம்பினேன். ஊட்டி சென்று நாவலின் எஞ்சிய பகுதியை எழுதலாமென திட்டம். நிர்மால்யா தவிர எவரிடமும் சொல்லவில்லை. குறிப்பாக ஈரோடு கிருஷ்ணனிடம். பெருங்களத்தூர் சென்று அங்கிருந்து ப்டுக்கைப்பேருந்தில் ஊட்டி. ஜூன் 4 வரை ஊட்டியில்தான் இருந்தேன். ஜூன் 3 ஆம்தேதி வரை அங்கிருப்பது நண்பர் எவருக்கும் தெரியாது

குருகுலத்தில் நான்கே பேர்தான்.  ஆகவே முற்றான அமைதி. நடுத்தரமான குளிர். இரவுகளில் மழை. காலையில் நல்ல வெளிச்சத்துடன் விடிந்தது. வெயிலுக்கு ஒருவகை பச்சைநிறம் என்று தோன்றியது. ஊட்டியில் நான் இத்தனைநாட்கள் தொடர்ந்து தங்கியது 1996ல் நித்யா இருந்தபோதுதான். அதன்பின் கூடிப்போனால் மூன்றுநாட்கள். இத்தனை தனிமையாக தங்கியதேயில்லை. இப்போது உணர்ந்தவை மூன்று. ஒன்று நாம் ஊரிலிருந்து இப்படி முற்றாக அயலான ஒரு சூழலுக்கு உடலால் வரும்போது உள்ள அளவிலும் ஊரிலிருக்கும் அனைத்தும் விலகிவிடுகின்றன. குடும்பம், அரசியல், செய்திகள் எல்லாமே. முழுமையாகவே அகன்றுவிட தனிமையில் இருந்தேன்.

இன்னொன்று, நம் ஊரில் கேட்டுக்கொண்டே இருக்கும் ஓசைகள் நம்மையறியாமல் நம் உள்ளத்துடன் உரையாடுகின்றன. நாம் பொருட்படுத்தாவிட்டாலும் எதிர்வினையாற்றுகிறது நம் ஆழம். ஓசை இருக்கலாம், குரல்கள் நம் அகத்தைக் குலைப்பவை. ஊட்டியில் குருவிகளின் ஓசை மட்டுமே. ஆழ்ந்த அமைதிஅளித்த பெருவிடுதலையில் திளைத்தேன். அங்கிருந்து கிளம்பும் எண்ணமே எழவில்லை. அங்கிருந்து கிளம்ப ஒரே காரணம்தான், அருண்மொழி. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப்பின் அவள் நினைவை தவிர்ப்பதே முழுநேர வேலை ஆகிவிடும். அதற்கு பேசாமல் வீடுதிரும்பிவிடலாம்.

மூன்றாவதாக, நம்மைச்சூழ இயற்கையின் பசுமையும் உயிர்ப்பெருக்கும் நிறைந்திருப்பது நாம் சித்தம்கூர்ந்து நோக்காதபோதும்கூட நம் ஆழத்தை வடிவமைத்துக்கொண்டே இருக்கிறது. சூழ இருக்கும் அழகற்ற,ஒழுங்கற்ற, செயற்கையான பொருட்கள் நம் அகத்தைக் கலைக்கின்றன. கூர்கொள்ளமுடியாமலாக்குகின்றன. குருகுலங்கள், ஆசிரமங்கள் இதன்பொருட்டே உலகமெங்கும் உருவாக்கப்பட்டன போலும்.

IMG_20180602_074641

ஒவ்வொருநாளும் காலையில் ஆறு மணிக்கே எழுந்து குருகுலத்திற்குள்ளேயே நடை.  குருகுலத்திற்குள் இவ்வளவு இடமிருப்பதை இப்போதுதான் உணர்கிறேன்  ஏழு ஏக்கர் நிலம். பெரும்பகுதி அடர்பச்சைப் புல் செறிந்த வெளி. பின்பு பகல் முழுக்க எழுத்து. மதியம் தூக்கம். பின்மதியத்தில் விழித்து ஓசையே இல்லாத சூழலை கேட்டுக்கொண்டு படுத்திருக்கையில் உள்ளத்தில் நிறையும் வெறுமையின் தித்திப்ப்பு. அது ஊரிலிருக்கையில் மிக அரிதாகவே அமையும், பெரும்பாலும் கடந்தகால ஏக்கத்துடன். ஊட்டியில் ஒவ்வொருநாளும் பத்துமணிநேரம் தூங்கினேன். வெதுவெதுப்பான படுக்கைக்குள் கருப்பையில் சுருண்டிருப்பதுபோல கிடந்து துயில்வது ஒருவகை ஊழ்கம்.

குருகுலத்தில் இருப்பவர்கள் தனிமையானவர்கள். பெரும்பாலும் அவர்கள் பேசுவதில்லை. எனவே மாலையில் நிர்மால்யா வந்தால்தான் பேச்சு.அங்கே குரல் காதில் விழுவது அரிதிலும் அரிது.  மிக எளிமையான உணவு. அந்தியில் கஞ்சிதான். தொட்டுக்கொள்ள எதுவுமே இல்லாமல் அரிசிக்கஞ்சி சாப்பிடுவது எனக்குப்பிடிக்கும். ஊட்டிக்குளிருக்கு மிகமிகச்சுவையானது கொதிக்கும் வெந்நீர்தான்.

நண்பர் மணி [நிர்மால்யா] எனக்கு முப்பதாண்டுக்கால நண்பர் ஆனாலும் அவருடன் நான் செலவிடும் பொழுதுகள் குறைந்து வருகின்றன.சென்ற ஆண்டுகளில் நாங்கள் ஊட்டியில் ஏதேனும் நிகழ்ச்சியில்தான் சந்திக்கிறோம். அப்போது மணி பறந்துகொண்டிருப்பார். பேசவே பொழுதிருக்காது. எந்த வேலையும் இல்லாமல் நாளும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். இந்த தங்குதலின் மிக இனிய அனுபவம் அவருடன் செலவிட்ட பொழுதுகள்.

IMG_20180602_074559

பெரும்பாலும் குருவின் சமாதியருகே அமர்ந்திருந்தேன். அது காட்டெருதுக்கள் வழக்கமாக மேயும் இடம். ஒருமுறை கண்மூடியிருக்கையில் ஒரு மூச்சொலி. நாலைந்துமுறை கேட்டபின் நோக்கினால் மிக அருகே ஒரு மாபெரும் தலை. காட்டுஎருது கூட்டம் என்னைச் சூழ்ந்து நிற்க, தலைவன் அருகே வந்து என்னை ஆராய்ந்துகொண்டிருந்தான். ஏராளமான காதுகள் என்னை நோக்கி கோட்டப்பட்டிருந்தன. ஆர்வமும் அச்சமும் கொண்ட பெரிய கண்கள் கரிய கண்ணாடி உருளைகள் போல மின்னின. பின்னகர முடியாது, சமாதியின் சுவர். மெல்ல பக்கவாட்டில் நகர்ந்தேன். தலைவன் “ஒன்றுமில்லை, சாதாரண மனிதன்” என்று திரும்பி தன் மந்தையிடம் சொன்னது. அவை நிதானமாக வால் சுழற்றி கடந்துசென்றன

நித்யா தங்கியிருந்த அறை நான் தங்கியிருந்த அறைக்கு அப்பால். மையக்கட்டிடத்தில் இரவில் நான் மட்டுமே. குருவின் தனியறையே ஒரு நூலகம். அங்கே சென்று அமர்ந்துகொள்வதும் ஆழ்ந்த நிலை ஒன்றை அளிப்பதாக இருந்தது. அவருடைய தனிப்பட்ட நூல்தேர்வு அந்த அறையில் தெரியும். அவர் அடிப்படையில் வேதாந்தி, கல்வியால் உளவியலாளர். ஆனால் அவருடைய முதன்மைத்தெரிவு எப்போதும் கவிதையாகவே இருந்தது. சலீம் அலியின் பறவை குறித்த நூலையும் நீட்சேயின் இவ்வாறு பேசினான் ஜரதுஷ்டிரன் நூலையும் கவிதை நிரையில் வைத்திருந்தார்.

IMG_20180605_212954

மூன்றாம்தேதி கிருஷ்ணன், நரேன், பாரி, ஈஸ்வரமூர்த்தி, அந்தியூர் மணி ஆகியோர் வந்திருந்தனர். இறுதிநாள் என்பதனால் நான் சற்று நிலைமீண்டு விட்டிருந்தேன். நீண்ட நடைசென்றோம். இரவில் பேசிக்கொண்டிருந்தோம். அவர்கள் நான்காம்தேதி புலரியில் கிளம்பிச் சென்றனர். நான் உச்சிப்பொழுதில் கிளம்பி கோவை வந்து ரயிலில் ஊர் திரும்பினேன். வெண்முரசு பதினைந்து பகுதிகள் எழுதியிருந்தேன்.

நான் வந்தபோது வீட்டிலும் எவருமில்லை. வெளியூர் சென்றிருந்தார்கள். டோரா என்னைக்கண்டதும் கூத்தாட்டமிட்டாள். இருபதுநாட்கள். வீடு அப்படியே இருப்பதுபோலவும் மாறிவிட்டிருப்பதுபோலவும் தோன்றியது. அருண்மொழி மாலையில்தான் வருவாள் என்பதனால் அதுவரை தூங்கி நாளைக் கடத்தவேண்டும் .என் எழுத்துமேஜை முன் அமர்ந்தேன். அந்த கணிப்பொறி முற்றாக பிறிதொன்று என்று கை மறுத்தது. இனி இதை இல்லத்துக்குப் பழக்கவேண்டும்

முந்தைய கட்டுரைதும்பையும் காந்தளும்- வெண்பா கீதாயன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 7