மெலட்டூர் பாகவதமேளா

 

nara

 

திருவிழாக்கள் சார்ந்து மிகநீண்ட நினைவுகள் எனக்குண்டு. எஞ்சிய வாழ்நாள் முழுக்க கடந்தகால ஏக்கம் கொள்ளும் அளவுக்கு. அக்காலத்தில் பங்குனி பாதிமுதல் சித்திரை முடிய கிட்டத்தட்ட நாற்பத்தைந்து நாட்கள் குமரி மாவட்டத்தில் திருவிழாக்கள் மட்டுமே நிகழும். நூற்றுக்கணக்கான கோயில்களில் சித்திரை விழாக்களுக்குக் கொடியேறும். கதகளி ஓட்டன்துள்ளல் போன்ற மரபுக்கலைகள். சங்கீத,சமூகசீர்திருத்த நாடகம், கதாபிரசங்கம், மெல்லிசை முதலிய புதிய கலைகள். அன்றெல்லாம் எங்கள் கையில் அத்தனை நிகழ்ச்சி அறிவிப்புகளும் சேர்த்துக் கட்டப்பட்டு புத்தகம் போலவே இருக்கும். கும்பலாகக் கிளம்பினால் ஒவ்வொரு திருவிழாவாக பங்கெடுத்து ஊர்சுற்றி பத்து பதினைந்து நாட்களுக்கு ஒருமுறைதான் வீடு திரும்புவோம்

 

அன்றெல்லாம் விளவங்கோடு, கல்குளம் பகுதிகளில் எங்கு சென்றாலும் அப்பாவுக்குத் தெரிந்தவர் வீடுகளோ எங்கள் உறவினர் வீடுகளோ இருந்தன. திருவிழா முடிந்ததும் அவர்களின் திண்ணைகளில் தூங்கி ஆற்றிலோ குளத்திலோ நீராடி ,அங்கேயே சாப்பிட்டுவிட்டு மீண்டும் திருவிழா. கலையெனும் போதை, இளமையின் மாபெரும் போதை. மானசீகமாக நாடகங்களில் நடிப்போம், மெல்லிசையில் பாடுவோம். கதகளிக் கலைஞராகுவோம். செண்டை கற்றுக்கொள்ள முடிவெடுப்போம். மண்ணுக்கும் எங்களுக்கும் தொடர்பே இருக்காது. பத்துநாள் திருவிழாவின் பத்தாம்நாள் துயில்நீப்பே பெரும் போதையென்றாகி எண்ணங்கள் ஒழுங்ககன்று சித்தம் மிதந்துகிடக்கும். விழாக்கள் நடுவே உள்ள நாட்களின் வெறுமை பித்துப்பிடிக்கச் செய்யும்.

 

வைகாசி மழை தொடங்கும்போது மெல்ல மூளை குளிர்ந்து எடை கொண்டு மண்ணுக்கு வந்து படிவுறும். மெய்யுலகம் கண்ணுக்குத் தட்டுப்படத் தொடங்கும். குமரி மாவட்டத்திலும் கேரளத்திலும் அன்றெல்லாம் ஜுன் 10-15 வாக்கில்தான் பள்ளிக்கூடங்கள் தொடங்கும் கொட்டும் மழையில் சேம்பிலைகளையும் வாழையிலைகளையும் தலைக்குப் பிடித்துக்கொண்டு பள்ளி செல்வோம். அது ஒரு பாவனைக்குடைதான் மழை அருவி போல் அறைந்து உடலை முழுக்காட்டியிருக்கும் .புத்தகங்கள் பாலிதீன் தாளுக்குள் இருக்கும். வகுப்பில் அனைவருமே ஈர உடைகளுடன் தான் இருப்பார்கள். வகுப்பு முடிகையில் காய்ந்து இடைவேளையில் மீண்டும் நனைந்து மீண்டும் காய்ந்து கொண்டிருப்போம். காய்தல் உவத்தலுடன் கற்றோம்

 

இன்று எண்ணிப்பார்க்கையில் அன்றெல்லாம் ஆடி, பங்குனி, சித்திரை என ஆண்டில் ஏறத்தாழ அறுபது நாட்கள் அனைவருக்கும் முழுவிடுமுறையாக இருந்திருக்கின்றன. ஆடியில் விதைப்புக்குப் பின்னும் சித்திரையில் அறுவடைக்குப் பின்னரும் வேலைகள் இல்லை. மேலதிகமாக ஓணம் என்னும் பத்து நாள் கொண்டாட்டம். கிறிஸ்துமஸ் என்னும் இரண்டுநாள் களியாட்டம். உழைப்பு மட்டுமே வாழ்க்கை என்று இன்றிருக்கும் நிலை அப்போதில்லை. கடும் உழைப்பு இருந்தது. வறுமை இருந்தது. ஆனால் வாழ்வில் ஒரு பெரும்பகுதி களியாட்டங்களுக்காகவும் கொண்டாட்டங்களுக்காகவும் செலவிடவும் பட்டது.

 

இன்று உணவு உடை உறைவிடம் அனைத்தும் அன்றிருந்தோர் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு பெருகிவிட்டன. சட்டென்று வாழும் உலகமே பெரிதாகிவிட்டது. இன்றிருக்கும் போக்குவரத்தும், பயணங்களுக்கான வாய்ப்புகளும், தொலைக்காட்சி சினிமா இணையம் என்று வெவ்வேறு வகையான கேளிக்கைகளும் திகைப்பூட்டும் அளவுக்கு பிரம்மாண்டமானவை. நானே அன்றிருந்த ஜெயமோகனாக இன்று இதைப்பார்க்கையில் வேற்றுக்கிரகத்தில் நிகழும் ஒரு விந்தை வாழ்க்கை இது என்று தோன்றுகிறது. ஆனால் சுற்றிலும் கேளிக்கையும் கொண்டாட்டமும் மிகவும் குறைந்துவிட்டது. அனைவருமே தீவிரமாக எங்கோ சென்றுகொண்டிருக்கிறார்கள். எல்லா இடங்களும் சதுரங்கக் களங்களாகிவிட்டிருக்கின்றன

IMG_7379

ஒவ்வொருவரும் தனியர். மனிதஇயல்பு கூடினால் மட்டுமே கொண்டாடும் தன்மை கொண்டது. தனித்து அமர்ந்து அறியும் இனிமைகள் உண்டு, நுண்ணிதின் சென்று ரசிக்கும் கலைகளும் உண்டு. ஆனால் கொண்ட்டாட்டமென்பதும் களியாட்டமென்பது கூட்டாக மட்டுமே செய்யத்தக்கவை. கிராமங்கள் தங்களை கண்கூடான சிறு சமூகங்களாக தொகுத்துக்கொண்டவை அதில் ஒவ்வொருவரையும் பிறருக்குத் தெரியும். ஆகவே மிக எளிதில் விழாக்களில் பண்டிகைகளில் ஒருங்கு கூட முடிந்தது. கொண்டாட முடிந்தது.

 

சென்ற இருபதாண்டுகளாக திருவிழா என்பது எனக்கு நினைவில் மட்டுமே இருப்பதாக மாறிவிட்டது. என்றோ ஒருமுறை பயணத்தில் பழைய நினைவுகளை கிருஷ்ணனிடம் சொல்லிக்கொண்டிருந்த போது அவர்  “இப்போதெல்லாம் நீங்கள் திருவிழாக்களில் கலந்து கொள்வதில்லையா?” என்று கேட்டார். அப்போதுதான் ஒரு திடுக்கிடலுடன் உணர்ந்தேன், கல்லூரி நாட்களுக்குப்பிறகு கிட்டத்தட்ட முழுமையாகவே திருவிழாக்களிலிருந்து அகன்று விட்டிருக்கிறேன் என்று.

 

காசர்கோடிலும், தர்மபுரியிலும், பின்னர் ஊருக்குத் திரும்பி பத்மநாபபுரத்திலும் நாகர்கோயிலிலும் வாழ்ந்த காலங்களில் நண்பர்களுடன் இருப்பதே கொண்டாட்டம் . மரபான திருவிழாக்களில் அயலவனாக வெறுமே வேடிக்கை பார்க்கவே செய்வேன். ஏனென்றால் நான் அறிவியக்கத்தில் ஈடுபட்டிருந்தேன். வாசிப்பதும் விவாதிப்பதும் எழுதுவதுமே வாழ்க்கை. பிற அனைத்தும் பொருளற்றவை. அந்த விலக்கம் காரணமாக மிக அரிதாகவே திருவிழாக்களில் கலந்துகொண்டிருக்கிறேன். அதிலும் எந்த வகையான் கொண்டாட்டமும் இருக்கவில்லை.

 

அப்போது கிருஷ்ணனிடம் சொன்னேன், தமிழகத்திலுள்ள திருவிழாக்கள் அனைத்திலும் ஒருமுறை கலந்துகொண்டாலென்ன என்று .மதுரை சித்திரைத்திருவிழா, காஞ்சி கருடசேவை போன்ற புகழ்பெற்ற விழாக்கள் அனைத்திலும் பங்கெடுக்க வேண்டுமென்ற ஒரு முன்வரைவை போட்டோம். அதன் பிறகு வெண்முரசு எழுதத்துவங்கி அந்த திட்டம் ஒத்திப்போய்விட்டது. ஆனால் செல்வோம்.

1

சென்ற சில ஆண்டுகளாகவே டோக்கியோ செந்தில் மன்னார்குடி வெண்ணெய்த் தாழி விழாவிற்கு எங்களை அழைத்துக்கொண்டிருந்தார் நண்பர்கள் சென்று வந்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். இம்முறை ஒருகணத்தில் செல்வதாக முடிவெடுத்து சென்று மீண்டது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. ஒருவகை காலப்பயணம். மன்னார்குடியில் அவருடைய தொன்மையான வீடு, சிலநூற்றாண்டு பழக்கமுள்ள திருவிழாச் சடங்குகள், காலமே அற்றவர்கள் என ஊர்களிலிருந்து பெருகி திரண்டு தெருக்களை நிறைத்த மக்கள்.

 

இம்முறை எந்த விலக்கமும் தோன்றவில்லை. நவீன எழுத்தாளன் என்றோ மூளைபெருத்தவன் என்றோ அல்ல. அந்த மக்கள்த்திரளில் ஒருபகுதியாகவே உணர்ந்தேன். அது அளித்த பரவசம் ஒரு காவியத்தில் திளைப்பதற்கு நிகர். இந்த கொண்டாட்ட மனநிலையை வெண்முரசு உருவாக்கியதென்று தோன்றுகிறது. வெண்முரசு முழுக்க விழாக்கள், பண்டிகைகள் ,ஊர்வலங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. பெரும் மக்கள்த்திரள் அலையலையாக அடித்துக்கொண்டே இருக்கும் ஒரு கடற்கரை என்றே  வெண்முரசை வாசகன் உணரமுடியும். அதில் ஒருவனாக நின்று எழுதியமையால் இம்முறை ஒவ்வொரு கொண்டாட்டத்திலும் என்னை மறந்திருந்தேன்.

 

ஆகவேதான் சிலநாட்களிலேயே ராகவ் மெலட்டூரில் பாகவதமேளா பார்க்க அழைத்த போது கிளம்பிச் செல்லலாம் என்று முடிவெடுத்தேன். சென்ற முறை மன்னார்குடிக்கு வந்தது அருண்மொழிக்கு மிகப்பெரிய உளக்கிளர்ச்சி அளிக்கும் அனுபவமாக இருந்ததனால் அவளும் வருகிறேன் என்றாள். தஞ்சை அவளுடைய மண். அங்கே அவளுக்கு எல்லாமே இனிது. சைதன்யாவும் விடுமுறைக்கு வந்திருந்தாள். ஆகவே நாங்கள் குடும்பமாகக் கிளம்பிச் செல்ல முடிவெடுத்தோம்

 

அன்று மதியம் சென்னையிலிருந்து எழுத்தாளர் சரவணன் சந்திரன் அகரமுதல்வன், நண்பரும் கவிஞருமான வாஸ்தோ , மதுரை நண்பர் இளங்கோவன் ஆகியோர் வந்திருந்தார்கள். [வாஸ்தோ ஒரு மோட்டார் பைக் காதலர். என்றாவது இவரை வைத்து ஒரு நாவல் எழுதுவேன் என நினைக்கிறேன்].

 

ஆறரை மணிக்கு அவர்கள் கிளம்பிச் சென்றபிறகு சென்று பேருந்தை பிடித்தோம். தஞ்சையில் விடியற்காலை நான்கு மணிக்கு சென்று இறங்கினோம். மெலட்டூர் தஞ்சையிலிருந்து 30 கி.மீ தள்ளி இருக்கிறது. ராகவ் காரில் வந்து எங்களை அழைத்துச் சென்றார். அன்று மாலையே ஈரோட்டிலிருந்து கிருஷ்ணனும் பாரியும் மணவாளனும் அந்தியூர்மணியும் விஜயராகவனும் வந்திருந்தனர். கோவையிலிருந்து தாமரைக்கண்ணன், நரேன் திருக்குரளரசி செல்வேந்திரன் குழந்தைகளுடன் வந்திருந்தனர். மறுநாள் காலையில் சென்னையிலிருந்து ராஜகோபாலன் மனைவியுடன் வந்திருந்தார். பாண்டிச்சேரியில் வரும் மே 13 அன்று கம்பன் பற்றிப் பேசுகிறேன். அதற்கான அழைப்பிதழுடன் அரிகிருஷ்ணன், மணிமாறன் ஆகியோர் வந்திருந்தனர். திருச்சியிலிருந்து சக்தி கிருஷ்ணன், ஜெயகிருஷ்ணன் வந்திருந்தனர். வழக்கமான கடலூர் சீனு, மாயவரம் யோகேஸ்வரன், பிரபு மயிலாடுதுறை என நண்பர்கள்.

 

நாங்கள் செல்லும் போது பதினைந்து பேர் விடிய விடிய பேசி களைத்து சமுக்காளங்களில் தூங்கிக்கொண்டிருந்தனர். ராகவின் இல்லம் பழமையானது பெரிய உள் அங்கணமும் சுற்றி திறந்த கூடமும் கொண்ட தஞ்சை பாணி இல்லம். 100 பேர் கூட தங்க இடம் இருந்தது. அவர்கள் மெலட்டூரின் மிகப் பழமையான குடும்பம். மெலட்டூர் ஆலயத்தின் திருப்பணிகளில் பெரும்பாலானவை அவர்கள் குடும்பத்தால் செய்யப்பட்டவை. ராகவின் தந்தை மட்டுமே இப்போது அங்கே தங்கியிருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு திருமணம் போல சமையற்காரர்களையும் வேலையாட்களையும் ஏற்பாடுசெய்து எங்களை உபசரித்தார்கள்.

 

மெலட்டூர் மாலி
மெலட்டூர் மாலி

சற்று ஓய்வெடுத்தபின் அங்கணத்தின் ஊஞ்சலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். காலப்பயணம் செய்து பழைய தஞ்சை ஒன்றுக்கு வந்துவிட்டது போல் தோன்றியது. அரசியல் சினிமா இரண்டையும் தவிர்த்துவிடவேண்டுமென்று முன்னரே முடிவு செய்திருந்தமையால் முழுக்க முழுக்க தத்துவம், இலக்கியம் .ஆனால் பெரும்பகுதி வேடிக்கை விளையாட்டு.

 

ராகவின் இல்லத்தில் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நண்பர்கள் வந்துகொண்டிருந்தனர். ஆர்.எம்.எஸ்ஸில் வேலைபார்க்கும் இளங்கோவன் நண்பர் ஆடலரசனுடன் வந்திருந்தார். பழைய என்.எஃப்.டி.இ நினைவுகளை அலசி கொஞ்சம் கடந்தகால ஏக்கம் கொண்டு புலம்பினோம். ஊழியர் குறைந்து தொழில்நுட்பம் மிகுந்தோறும் அன்றிருந்த தொழிற்சங்க அரசியல், துறைசார்ந்த நட்புச்சூழல் மறைந்துவிட்டது. அகரம் கதிர் அவரது மனைவி கும்பகோணத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தமையால் கும்பகோணம் மகாமகக்குளத்தினருகே குடியிருந்தார். 1997-ல் அகரம் தான் விஷ்ணுபுரத்தை வெளியிட்டது . அப்போதிருந்தே தொடரும் நட்பு.

 

அன்றுமாலை மணிகண்டன் அருண் என இரண்டு நண்பர்கள் திருவாரூரிலிருந்து வந்து சந்தித்தனர் மணிகண்டன் ஆசிரியராக பணியாற்றுகிறார். இருவரும் மிகச் சிறந்த வாசகர்கள். வெண்முரசு தொடர்ந்து படித்து வருபவர்கள். மே நான்கு ஐந்து ஆறு தேதிகளில் ஊட்டி நிகழ்ச்சி. ஆகவே பலர் இங்கே வரமுடியவில்லை. வந்திருந்தால் கல்யாணமண்டபம்தான் ஏற்பாடுசெய்யவேண்டும் என்றார் கிருஷ்ணன். நண்பரும் பாடகருமான ஜெயக்குமார் பரத்வாஜ் வந்தார். அவர் அன்று பாகவதமேளாவில் பாடவிருந்தார். அவருடன் அன்று இரணியனாக வேடமிடப்போகும் அரவிந்த் சுப்ரமணியம் வந்தார்.

 

கிளம்பி வரும்போதே தஞ்சையின் உச்சகட்ட வெயிலைப்பற்றி பலரும் சொல்லியிருந்தார்கள். பகலில் உணவுக்குப்பிறகு சற்று துயின்றபோது அத்தனை மின்விசிறிகள் சுழன்று கொண்டிருந்த போதும் கூட உடல் உருகுவதுபோன்ற வெக்கையை உணர்ந்தேன். பயணக்களைப்புமட்டும் இல்லையென்றால் தூங்கியிருக்க முடியாது. தஞ்சையின் இல்லங்கள் அனைத்திலும் கோடை காலத்தில் வீட்டுக்குமுன் கீற்றுக்கொட்டகை போடுவதைப்பற்றி தி.ஜானகிராமன் ஏன் எழுதியிருக்கிறாரென்று தெரிந்தது. பகலில் வேறெங்கும் அமர்ந்திருக்க முடியாது. குளுகுளுவென்ற கீற்றுக்கொட்டகை என்ற ஜானகிராமனின் பரவசத்தை நினைத்து புன்னகைத்துக்கொண்டேன். உள்ளிருந்து வெளியே வருவதன் வெப்ப வேறுபாட்டைத்தான் குளுமை என்று எழுதியிருக்கிறார் போலும்.

IMG_7343 (1)

மாலையில் வெயில் சற்று அடங்கியதும் கிளம்பி மெலட்டூரை சுற்றி வந்தோம் மெலட்டூரில் ஒரே சுற்றுத்தெருவின் ஓர் எல்லையில் பெருமாள் கோயிலும் மறு எல்லையில் சிவன் கோயிலும் இருக்கின்றன. தொன்மையான சிறிய கோயில்கள். சிவன் கோயில் 12 ஆம் நூற்றாண்டில் விக்ரமசோழன் காலத்தில் கட்டப்பட்டது என்று கல்வெட்டு சொல்கிறது. ஆனால் கான்கிரீட் தளமிட்டு, தகரக்கொட்டாய் போட்டு, மிட்டாய் வண்ணம்பூசி ‘புதுப்பித்து’ வைத்திருக்கிறார்கள். இங்குள்ள சிவனுக்கு உன்னதபுரீஸ்வரர் என்று பெயர். மெலட்டூர் என்ற பெயர் மேல்நாட்டூர் என்பதன் மரூ ஆக இருக்கலாம். மிலாடுடையார் [மேல்நாடுடையார்] போன்ற பெயர்கள் தஞ்சையில் உண்டு. உயரமான இடம் ஆதலால் இப்பெயர் வந்திருக்கலாம் – இது ஆய்வாளர் நாகசாமி ராகவிடம் சொன்னது.

 

விஜயநகரத்தின் வீழ்ச்சிக்குப்பின் ஆந்திரம், கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு குடியேற்றங்கள் பெருகின. தஞ்சையின் அரசர் அச்சுதப்பநாயக்கர் [1560 -1614] காலகட்டத்தில் ஆந்திராவில் நடனத்தின் ஊரான குச்சிபுடி ஊரிலிருந்து 501 குடும்பங்கள் இங்கே குடியேறின. அவர்களுக்கு இந்தச் சிற்றூர் இறையிலியாக வழங்கப்பட்டது. அந்த அக்ரஹாரமே இன்றும் உள்ளது. அவர்களே பாகவதமேளாவை ஆடுபவர்கள். இங்குள்ள வரதராஜப்பெருமாள் கோயில் மராட்டிய மன்னர் துக்கோஜி [1677–1736]  காலகட்டத்தில் இங்கே காஞ்சிபுரம் அத்திகிரியில் இருந்து குடியேறியவர்களால் அமைக்கப்பட்டது.

 

மிகப்பெரிய குளம் நீரில்லாமல் கிரிக்கெட் மைதானமாக மாறி இருப்பதைக்கண்டேன்.அந்திமங்கலில் பையன்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.இங்குள்ள எந்தக்குளத்திலும் நீரில்லை. ராகவின் அப்பா வயல்களில் எண்ணைப்பனை நட்டிருப்பதாகச் சொன்னார். தஞ்சை பொலிவிழந்து வருகிறது. கணிசமான ஊர்களில் கைவிடப்பட்ட தன்மை தெரிகிறது. குறிப்பாக அக்ரஹாரங்கள் பெரும்பாலும் ஒழிந்து கிடக்கின்றன. ஏராளமான இடிந்த வீடுகள். எஞ்சியவற்றில் பெரும்பாலும் வயதானவர்கள் மட்டுமே வாழ்கிறார்கள். தஞ்சைவேளாண்மை நீரில்லாமையால், விளைபொருட்களுக்கு விலை இன்மையால்,வேளாண் உழைப்பாளிகள் குறைவதனால் இன்று கிட்டத்தட்ட அழிந்தே விட்டது

.

பாகவதமேளா 1888நிகழ்ந்தமைக்கான சான்று உள்ளது. 1938 வரை தொடர்ச்சியாக நிகழ்ந்தது. சூலமங்கலம், சாலியமங்கலம், நல்லூர், ஊத்துக்காடு தேப்பெருமாநல்லூர் போன்ற ஊர்களில் நிகழ்ந்திருக்கிறது. இப்போது மெலட்டூரில் மட்டுமே தொடர்ச்சியாக நிகழ்கிறது. குச்சிபுடி நடனம் ,இசை நாடகம் என்னும் இரு செவ்வியல்கலைகளின் கலப்புக்கலை. குச்சிப்புடி பரதநாட்டியம் போன்றது. லாஸ்யம் என்று பரதமுனிவரால் சொல்லப்படும் ஆடல்வகை ஒவ்வொரு வட்டாரத்திற்கும் சிறிய வேறுபாடுகளுடன் இந்தியாவெங்கும் உண்டு. இங்கே பரதநாட்டியம், ஆந்திராவில் குச்சிப்புடி, கேரளத்தில் மோகினியாட்டம், ஒடிசாவில் ஒடிசி. பெரும்பாலும் கைமுத்திரைகள், மெய்ப்பாடுகள், பேசுபொருட்கள் பொதுவானவை

bb

பாகவத மேளா இரண்டு குழுக்களாக நிகழ்கிறது. நடராஜன் என்பவரின் குழு மே முதல்வாரம் நிகழ்த்துகிறது. இது மாலி [மகாலிங்கம்] என்பவரின் குழு. அவருடைய மகனும் பேரனும் இதில் நடிக்கிறார்கள். மாலி ஐம்பதாண்டுகளாக பாகவதமேளாவில் நடிப்பவர். [Melattur Bhagavata Mela Natya Vidya Sangam (Melattur Mali Troupe]அன்று நரசிம்ம ஜெயந்தி .ஆந்திர அரசின் சபாநாயகர், நல்லி குப்புசாமி செட்டி, அனிதாரத்தினம் போன்ற சிறப்பு விருந்தினர்கள் வந்து விழாவைத் தொடங்கி வைத்து பேசினர். சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ரேவதி ராமச்சந்திரன் விருதுபெற்றார். பாடகராகிய முரளி ரங்கராஜனுக்கும் விருது அளிக்கப்பட்டது. பார்வையாளராகச் சென்றிருந்த என்னையும் மேடையேற்றி பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். இப்படியே போனால் பொன்னாடை போர்த்தாத இடங்களில் புண்பட்டுவிடுவேன் என்று அருண்மொழி சொன்னாள்.

 

பாரம்பரிய முறைப்படி வாழைத்தண்டுகளை நட்டு அவற்றின்மேல் நெய்ப்பந்த விளக்குகளை ஏற்றி நடுவே பாகவத மேளா நிகழ்ந்தது. மின்விளக்குகளும் ஓரளவு உண்டு. மேடை இல்லை. பார்வையாளர்கள் சூழ்ந்திருந்து எல்லாக்கோணங்களிலும் நாடகத்தை பார்க்கும்படி அமைக்கப்பட்டிருந்தது. நாடகப்பிரதியில் சம்ஸ்கிருத நாடக அமைப்பு அப்படியே பின்பற்றப்பட்டிருந்தது. சூத்ரதாரன் வந்து மேடையேறி முகமன் செய்த பின்னர் மையக்கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றாக மேடைக்கு தனித்தனியாக வந்து ஆடி தங்களை வெளிப்படுத்தி  அறிமுகமாயினர்.பிரவேசம் என்று இதை சொல்கிறார்கள். இதில் பெண் கதாபாத்திரம் திரைக்குப்பின் வந்து ஆடி திரையை விலக்கி தான் முகத்தைக் காட்டியது. கதகளியில் திரநோட்டம் என்று சொல்லப்படும் இந்த ஆடல் முறை மையக்கதாபாத்திரங்களுக்குரியது. கதகளியில் எதிர்மறைக் கதாபாத்திரங்களே பெரும்பாலும் மையக்கதாபாத்திரங்கள்

 

பாகவத மேளா ஒரு நடன இசை நாடகம். ஓபரா என்று சொல்லலாம் நடனம் பெரும்பாலும் குச்சிபுடியின் முத்திரைகள் அடவுகள் சார்ந்தது. கர்நாடக இசை மரபைச் சேர்ந்த பாடல்கள் .வசனங்களும் பாடல்களும் அனைத்தும் தெலுங்கில். நாங்கள் பார்த்த பிரஹலாதசரித்திரம் நாடகம் வெங்கட்ராம சாஸ்திரியால் இருநூறாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. ஹிரண்யனாக நடித்த அரவிந்த் சுப்ரமணியம் சென்னையில் பல்மருத்துவராக பணியாற்றுகிறார். பல்மருத்துவத்தில் உயர்கல்வி கற்கிறார்.   இவருடைய தந்தை சுப்ரமணியமும் பாகவதமேளாவின் நடிகர். தந்தையிடமிருந்தும் பின்னர் யுவகலாபாரதி விஜய் மாதவனிடமும் நடனம் கற்றிருக்கிறார். இவருடைய தம்பி ஆனந்த் சுப்ரமணியமும் பாகவதமேளா நடிகர்தான்.

b

லீலாவதியாக நடித்தவர்  ‘பரதம்’ எஸ்.நாகராஜன். மாலியின் மருமகன் இவர். 1989 முதல் பெண் கதாபாத்திரங்களை நடித்துவருகிறார். கலைமாமணி ஹேமா பரதனிடமிருந்து பரதத்தை முறைப்படி கற்றவர். கனரா வங்கியில் மேலாளராகப் பணியாற்றுகிறார். பிரஹலாதனாக நடித்த சிறுவன் மாலியின் பேரன்.  தொழில்முறை நடிகர்கள் அல்ல என்றாலும் பல ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் முறையான பயிற்சி எடுத்தமையால் மிகத்தேர்ந்த நடனக்கலைஞர்கள் நடிகர்கள் போல அவர்கள் நடித்தனர்.

 

 

இசை நாடகங்களுக்கே உரித்தான உச்சகட்ட உணர்ச்சிகள் வழியாகவே நகரும் கதை. மெய்ப்பாடுகள் மிக தெளிவாகவும் உரத்தும் வெளிப்பட வேண்டும். உணர்வுகள் முகங்களிலும் கை முத்திரைகளிலும் தொடர்ந்து வெளிப்பட்டு எழுந்தபடியே இருக்க வேண்டும். நடனம் தொடர்ச்சியாக அரங்கை அழகுற வைக்கிறது. நாடகத்தின் மிகப்பெரிய சிக்கலே நாடக உச்சம் அமையாத காட்சிகள் எதார்த்தமாக இருக்கையில் மிகக் கீழே இறங்குவதுதான். நாடகநடிகர்கள் சட்டென்று மனிதர்களாக, அரங்கு வெறும் இடமாக நமக்குத்தெரியத் தொடங்குகிறது. ஆனால் நடனம் அனைத்து அசைவுகளையும் ஒத்திசைவும் நேர்த்தியும் கொண்டதாக்கி இயல்பான விஷயங்களைக்கூட அழகுற மாற்றிவிடுகிறது. இசை உணர்வுகளை மேலும் துல்லியப்படுத்துகிறது. இசையும் நடனமும் இணைந்து வெளிப்படாவிட்டால் மிகையென்றோ செயற்கை யென்றோ சொல்லத்தக்க உணர்வுகள் அவை.

 

செவ்வியல் கலைக்கு அன்றாடம் ஒரு பொருட்டல்ல. உச்சங்களின் நுட்பங்களால் ஆனது செவ்வியல். எனவே உச்சங்களிலிருந்து உச்சங்களுக்கு செல்வது. தவிர்க்க முடியாத அன்றாடங்களை மிகக்குறைவான குறிப்புணர்த்தல்கள் மற்றும் உருவக நடிப்புகள் வழியாக கடந்து சென்றுவிடும். ஹிரண்யன் பாத்திரமேற்றவர் ஒரு பேருருவ அசுரகதாபாத்திரத்தை மானுட உடலில் எழுப்பி கண்முன் நிற்கச் செய்தார். லீலாவதியாக நடித்தவர் அரசி ஒருத்தியை அன்றாடம் நாம் காணும் அன்னையின் தளத்திற்கு கொண்டு வந்து விரித்துக்கொண்டே சென்றார். பிரகலாதனுக்கு அவர் உணவூட்டியது, விளையாடியது தந்தையின் கோபத்திலிருந்து பாதுகாத்தது, கணவனின் அழிவை எண்ணிப்பதறியது ஒவ்வொன்றும் வேறு ஒரு வகை அழகியலுடன் விரிந்து கொண்டே சென்றது.

 

ஐந்து மணிநேரம் நிகழ்ந்த பாகவத மேளா எனக்கு ஒருகணமும் சலிப்பூட்டாத அழகனுபவமாக இருந்தது. நெடுங்காலமாக நாம் மேடைநாடகங்களை செவ்வியல் கலைகளை தவிர்த்து வந்திருக்கிறோம். திரும்பத் திரும்ப திரைக்காட்சிகளை மட்டுமே காட்சிக் கலையாக அறிந்துவந்திருக்கிறோம். அதற்கு நம் உள்ளமும் விழிகளும் மிகவும் பழகி நுண்ணுணர்வுடையவர்களுக்கு இன்று மிகவும் சலித்துவிட்டிருக்கின்றன. அதிலும் இணையம் வந்த பிறகு சென்ற சில ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் பெரும்பகுதி நேரத்தை ஏதேனும் திரைகாட்சிகளை தொலைபேசியிலோ கணிப்பொறியிலோ பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

 

ஆகவே மேடைக்கலை கண்முன் மனிதமுகமும் உடலும் நிகழ்த்தும் காட்சியென எழுகையில் முற்றிலும் புதியதாக, பெரும்பரவசத்தை ஊட்டுவதாக அமைந்தது. அங்கு திரளாகக்கூடியிருந்த பார்வையாளர்களின் உணர்ச்சிகளும் அதையே காட்டின. அவர்கள் அந்த நாடகத்தால் அல்ல, நாடகம் என்னும் கலையாலேயே பரவசம் அடைந்திருந்தனர். வருங்காலத்தில் இங்கு மேடைக்கலை மேலும் முக்கியத்துவம் பெறுமென்றே தோன்றுகிறது. ஒருவேளை அனைத்து தொல்கலைகளும் அப்போது வீறு கொண்டெழவும் கூடும்.

 

டி.எஸ்.எலியட் அவருடைய இசைக்கூடங்களின் இறப்பு [Death of the music hall]  என்னும் கட்டுரையில் இசைநாடகமே ஐரோப்பா உருவாக்கிய கலைஉச்சம் என்கிறார். இலக்கியம், தத்துவம், ஓவியம், நடிப்பு ,இசை ஆகிய அனைத்தும் ஒருங்கிணையும் ஒரு கலைவடிவம் அது. ஒற்றைப்புள்ளியில் அவை ஒன்றுகூடி அறிதலின், கலையின் உச்சங்களை எளிதில்  நிகழ்த்திவிடுகின்றன. பெருங்காவியங்க்ளில் அவ்வப்போது நிகழும் உச்ச தருணம் அது. மிக எளிதாக ஒரு மேடையில் பலமுறை நாம் அதை அடையும் வாய்ப்பு இசை நாடகங்களில் அமைகிறது. ஓபரா அழியுமென்றால் ஐரோப்பிய கலைமரபின் சிகரங்கள் அழிந்துவிடும் என்று எலியட் சொல்லுகிறார்.

a

தமிழகத்தில் நமக்கு தெருக்கூத்து பிரபலமான இசைநாட்க வடிவம் ஆனால் செவ்வியல் அம்சம் குறைவாகவும் பெரும்பாலும் நாட்டுப்புறத்தன்மை கொண்டதாகவும் அது இருக்கிறது. தெருக்கூத்தின் பல கலைக்கூறுகளை உள்வாங்கி செவ்வியல் நாடக வடிவை நோக்கிச் சென்ற வடிவம் என்று பாகவத மேளாவைச் சொல்லலாம். இன்று இரண்டு ஊர்களில் மட்டும் எஞ்சியிருக்கும் இந்தக் கலை தமிழகத்தின் செல்வங்களில் ஒன்று. நள்ளிரவில் பரவசத்துடன் பாகவத மேளாவைப்பற்றி பேசியபடி திரும்பி வந்தோம். மறுநாள் எழுந்து மீண்டும் பேசிக்கொண்டிருந்தோம். நண்பர்கள் உச்சகட்ட பரவசத்துடன் இருந்தனர்.

 

ஆனால் இத்தகைய செவ்வியல்கலைகளை ரசிக்க ஒரு குறிப்பிட்ட மனநிலையை உருவாக்கிக் கொள்ளவேண்டும். இது அனைத்துச் செவ்வியலுக்கும் பொருந்தும். நவீனக் கலைகளுக்குரிய சுருக்கம், புறவயத்தன்மை கொண்ட யதார்த்தம் ஆகிய இரு பண்புகளும் இவற்றில் இருப்பதில்லை.நவீனக் கலைகள் கொண்டுள்ள இறுக்கமான ஒருமைக்குப் பதில் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு தொகுப்புத்தன்மை இவற்றிலிருக்கும். முதிரா வேடிக்கைகள், நாட்டார் அம்சங்கள் ஆகியவை ஊடுகலந்திருக்கும். ஷேக்ஸ்பியர் நாடகங்களின் கோமாளிகள் வரும் காட்சிகளை நினைவுகூர்க

 

அத்துடன் இரு முக்கியமான அம்சங்கள் இதில் இருக்கும். பிரெக்ட் epic theatre என இக்கூறுகளை வரையறுத்திருக்கிறார். தனது மாற்று அரங்கு நாடகங்களுக்கு கொண்டுசென்றுமிருக்கிறார். ஸ்டாலினிவ்ஸ்கியின் அரங்கு போல பார்வையாளர்களை மெய்யென நம்பச்செய்யும் யதார்த்தக்களமாக இவை இருக்காது. இது நாடகம், இவர்கள் நடிகர்கள் என சொல்லிக்கொண்டே இருக்கும். பாகவதமேளாவில் இரணியன் இயல்பாக மைக்கை கழற்றி கையில் எடுத்துக்கொண்டு வசனம்பேசுவதைக் காணலாம். மீசை கழன்றால் எடுத்துப் பொருத்திக்கொண்டு மேலே செல்வார்கள். எவரும் சிரிப்பதில்லை.

IMG_7584

இன்னொன்று இதன் ’தன்சுட்டி’த்தன்மை. மெடாஃபிக்‌ஷன் என்றே சொல்லலாம். நாடக இயக்குநர் உள்ளே வரக்கூடும். பாடகர் தோன்றக்கூடும். நரசிம்மத்தை உள்ளூர் அர்ச்சகர்கள் துணியால் கட்டி பிடித்திருக்கிறார்கள். நடிகர் நாடகத்திற்குள் சென்று உச்சக்கொந்தளிப்பை அடைகிறார். இரணியன் நாடகத்திற்கு உள்ளிருந்து பார்வையாளர் நடுவே வருகிறார். இரணியனை மெய்யாகவே நரசிம்மர் கொல்ல முயல செத்துக்கிடந்த இரணியன் எழுந்து ஓடிவிடுகிறார். அவரை கோயில்முன் படுக்கவைத்து ஆறுதல்படுத்துகிறார்கள்.

 

செவ்வியலின் கலை என்பது புதியதைக் கண்டடைவதில் அல்ல. அறிந்தவற்றை விரித்துவிரித்துச் செல்வதில், உச்சங்களில் உலவுவதில் உள்ளது. நாம் சினிமாவுக்குப் பழகிவிட்டிருக்கிறோம். அது நவீனக் கலை. அதை ரசிக்க யதார்த்த உணர்வே போதும். பொதுப்பார்வையாளனுக்குரியது அது. செவ்வியல்கலை தனக்கான பயின்ற ரசிகனை தேடுகிறது. ஒர் எட்டடிக்கு எட்டடி சதுரத்தில் மாகிஷ்மதியை கற்பனை செய்பவருக்குள்ளது. கற்பனையின் உள்ளும்புறமும் செல்லத் தெரிந்தவர்களுக்குரியது. இது நமக்குத்தெரிந்திருந்தாலே நாம் அறியாமையால் கொள்ளும் மனவிலக்கத்தைக் கடந்துவிடலாம். வழக்கமான பொதுரசிகர் சொல்லும் கருத்துக்களைச் சொல்லாமல் காதையும் கண்ணையும் திறந்துவைத்திருந்தால் நுண்ணுணர்வுள்ளவர்கள் செவ்வியல் கலைக்குள் சென்றுவிடமுடியும்.

 

ஏனென்றால் செவ்வியல்கலை என்பது அடிப்படையில் வாழ்க்கை பற்றிய ஒரு தொகுப்புநோக்கு, வாழ்க்கையின் உச்சங்களை நோக்கிய பயணம், அதன் சாராம்சம் நோக்கிய ஆய்வு. இரணியன் பிரகலாதன் கதையை உயர்ந்த இலக்குகொண்ட மகனுக்கும் ,ஆணவம்மிக்க தந்தைக்க்கும், நடுவே சிக்கிக் கொண்ட அன்னைக்குமான கதையாக எளிதில் நோக்கமுடியும். எங்கே உனது நரசிம்மம் என கேட்காத தந்தை உண்டா என்ன? என் தந்தை கேட்டார். நான் சுட்டிய தூணில் நரசிம்மம் எழவும் செய்தது, அதைக்காண அவர் இருக்கவில்லை.

 

தலைச்சங்காடு ராமநாதன்
தலைச்சங்காடு ராமநாதன்

நண்பர் யோகேஸ்வரின் இல்லம் மாயவரம் அருகே தலைச்சங்காடு என்ற ஊரிலிருந்தது. அவர் தலைச்சங்காடு ராமநாதன் புகழ்பெற்ற தவிலிசைக்கலைஞர். நானும் அருண்மொழியும் நண்பர்களும் அவர் இல்லத்தில் மதிய உணவுக்குச் சென்றோம். அங்கே கும்பகோணம் நண்பர் வந்திருந்தார். சேலத்தில் பணியாற்றுபவர்

 

மாலை ஐந்துமணிக்குக் கிளம்பி தஞ்சை பெரிய கோவிலை அடைந்தோம். அன்று சித்திரை முழுநிலவு நாள் பெரிய கோவில் திருவிழா நெரிசல் நிறைந்திருந்தது. அனிதா ரத்தினம் அங்கு ஒரு இசை நாட்டிய நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்தார் அதை சிறிது நேரம் பார்த்தோம். பொன்னொளியில் இருள் வானத்திரையில் எழுந்திருந்த பெரிய கோவிலை பார்த்தபடி அமர்ந்திருந்தோம். இரவு பதினொரு மணிக்குத் திரும்ப நாகர்கோயில் பேருந்து ஏறினோம்.

 

ஒவ்வொரு நாளும் பிறிதென நிகழும் அன்றாடத்தின் உலகிலிருந்து அழியாத கலையின் உலகுக்கு, நினைவென கனவென மாறிவிட்டிருக்கும் இறந்த காலத்திற்கு சென்று மீண்ட ஒர் அனுபவம்.

 

பாகவதமேளா  காணொளிப்பதிவு

 

கலைஞர்கள்

 

இயக்குநர் மகாலிங்கம் [மாலி]

 

கோணங்கி- பரதம் மகாலிங்கம்

 

கணபதி -பரதம் சுவாமிநாதன்

 

கட்டியங்காரன்- எஸ் கோபி

 

இரணியன்- அரவிந்த் சுப்ரமணியன்

 

லீலாவதி -பரதம் நாகராஜன்

 

பிரஹலாதன் – ஹரிஹரன்

 

அசுரர்கள் – ஆனந்த் சுப்ரமணியம் ,சூரியா சுவாமிநாதன்

 

சகிகள் ராகவன், ஆனந்தன்

 

சுக்ராச்சாரியர் – பரதம் அருணாச்சலம்

 

பாம்பாட்டி –ராகவன்

 

விஷகாரி –ராகவன்

 

மல்யுத்த வீரன் –சூரியா

 

பூமிதேவி –ஆனந்த் சுப்ரமணியன்

 

நரசிம்மம் – பரதம் ராமசாமி

 

பாடகர் – முரளி ரங்கராஜன், அரவிந்த் , ஜெயக்குமார் பரத்வாஜ்

 

நட்டுவாங்கம் ஹரிஹரன் ஹேரம்பநாதன்

 

வயலின் ஆண்டான்கோயில் குருமூர்த்தி

 

குழல் சுதாகர்

 

ஒபனை டி கே.வி கதிரவன்

 

பாகவதமேளா கலைஞர்கள் இணைப்பு

http://melatturbhagavatamela.org/artist.php

 

பாகவதமேளா முகநூல்பக்கம்

 

https://www.facebook.com/Melattur-Bhagavata-Mela-Natya-Vidya-Sangam-Melattur-Mali-Troupe-145878468800115/

 

பாகவதமேளா செல்வேந்திரன் பதிவு

 

முந்தைய கட்டுரைஓஷோவின் கீதை உரை
அடுத்த கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-41