நாயக்கர் கலை -கடிதம்

திருக்குறுங்குடி நரசிம்மர், நாயக்கர் காலம்
திருக்குறுங்குடி நரசிம்மர், நாயக்கர் காலம்

 

நாயக்கர் கலையும் நம் கலை ஆய்வாளர்களும்

இனிய ஜெயம்

சில நாட்கள் முன்பு  சிதம்பரம் , வைத்தீஸ்வரன் கோவில்  கும்பகோணம் ,தஞ்சாவூர் என ஒரு சிறிய பயணம் போனேன் .ஒவ்வொரு மன்னர் வம்சமும் ஒவ்வொரு மூர்த்தி வடிவை வளர்த்து எடுத்திருக்கிறார்கள் .அதில் சோழர்கள் வளர்த்து எடுத்த மூர்த்தி சதாசிவ மூர்த்தி . பல முகங்கள் [நூறு ]கொண்ட சிவன் . சிவனின் ஒவ்வொரு முகத்துக்கும் ஒவ்வொரு மூர்த்தி .அதன் படி சிவன் தன்னை வெளிப்படுத்திய அத்தனை முகங்களும் கொண்ட மூர்த்தியின் பெயர் சதாசிவ மூர்த்தி  .  சத்யோ ஜாதம், வாமதேவம் தத் புருஷம் ,அகோரம்  இவை நான்கும் சிவனின் முகங்கள் .இந்த நான்கும் கொண்ட சிவன் மூர்த்தம் , [வக்ச சிவம் என்பது இதன் பெயர் ] தஞ்சை பெரிய கோவில் கேரளாந்தகன் வாயில் மேல் உள்ளது ,  தஞ்சை கோவில் மைய விமானத்தில் இந்த நான்கு முகங்களும் திசைக்கு ஒரு முகம் என நான்கு சிவன் கொண்டு அமைந்திருக்கிறது . [எனில் அந்த விமானமே மாபெரும் சதாசிவ லிங்க வடிவம்]. வைத்தீஸ்வரன் கோவில் ராஜ கோபுரத்தில் முப்பத்தி இரண்டு  முகம் கொண்ட சிவன் சிலை உண்டு ,தாரா சுரத்தில் தக்ஷின பாரதத்தில் வேறு எங்கும் காணக் கிடைக்காத அர்த்தநாரி சூரியன் சிலை ஒன்று உள்ளது .

மேற்ப்படி தகவல்களை  குடவாயில் பாலசுப்ரமண்யம் கட்டுரைகள் சிலவற்றில் இருந்து குறித்து வைத்துக்கொண்டு ,இணையத்தில் அவற்றின் படங்களை தரவிறக்கிக்கொண்டு ,இந்த மூர்த்தங்களை காண கிளம்பினேன்  .வெறும் பத்து பதினைந்து பேர் மட்டுமே உலவிக்கொண்டிருந்த  தாராசுரகோவிலில்    நரசிம்மரை நரசிம்மர்  கொல்லும் வித்தியாசமான புடைப்பு சிற்பம் ஒன்றினை பராக்கு பார்த்துக் கொண்டிருக்கும் போது அருகிலிருந்த என்னைப்போலவே அதை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்த நண்பர் சொன்னார் அது சரபேஸ்வரர் .

பேசத் துவங்கினோம் அந்த நண்பர் கடுமையான குரு குல வழியில் பயின்று வருபவர் ஸ்தபதி . பல விஷயங்கள் குரு குல கல்விக்கு கட்டுப்பட்ட  பொது ஆட்கள் தெரிந்து கொள்ள கட்டுப்பாடுகள் மறுப்புகள் கொண்ட விஷயம் என்பதால் மிக பொதுவாக ,ஆர்வம் கொண்டவர்களுக்கு சொல்லத்தக்க விஷயங்களை மட்டுமே பகிர்ந்து கொண்டார் .

பதினெட்டாம் நூற்றாண்டை சேர்ந்த  பிப்பலாதர் எழுதிய வாஸ்து சாஸ்திர உபநிஷத் .  ஸ்தபதி கல்விக்கு வெளியே பலரும் அறிந்த நூல் . கோவிலுக்கான இடம் தேர்வு செய்வது முதல் ,கோவில் அதன் அனைத்து அங்கங்கள்  கொண்டு முழுமை அடைவது வரை  உள்ளடக்கமாக கொண்ட நூல் .அதர்வன வேதத்தை தனது சுருதியாக கொண்ட நூல் . அதன் ஒரு பகுதியாக சிற்ப உருவாக்கம் குறித்த விரிவான முழுமையான கல்வி அடங்கியது .

இந்த நூலை அடிப்படையாக வைத்து அவர் பேசும்போது சொன்னார் , சிற்ப வேலைக்கான கல் தேர்வு துவங்கி ,அடிப்படை ஓவியம் வரைவது தொடர்ந்து ,சிலைக்கு விழி திறப்பதன் வழியே அந்த சிலையை முழுமை செய்வது வரை ,சிற்பிக்கு [செய்யுளுக்கு யாப்பு போல ] கடுமையான கட்டுப்பாடுகள் மட்டுமே உண்டு . பின் சிற்பிக்கு அந்த கலைஞன் என்பவனுக்கு எதுதான் வெளிப்பாட்டு சுதந்திரம் ?

பாவங்களிலும் , நுட்பங்களிலும் நுட்பங்களிலும் காட்டும் வண்ணமயமான பேதங்களில்தான் அந்த கலைஞன் வாழ்கிறான் . எல்லோரா கஜசம்ஹார மூர்த்தி  ஒரு போர் புரியும் தெய்வம் , சிதம்பரம் ராஜ கோபுர அடித்தளத்தில் உள்ள கஜசம்ஹாரர் புடைப்பு சிற்பம்  நடனத்தில் இருக்கிறார் .இது பாவத்தில் [அல்லது ரசம்]  கொண்டு வரும் மாற்றம் .சில  படிமையில்  சிவனின் அருகிலிருக்கும் பார்வதி ,தனது மடியில் இருக்கும் முருகனின் விழிகளை மூடிக்கொண்டு இருப்பார் [குழந்தை பயந்து போகும் இல்லையா ] . சில படிமையில் பார்வதி அவள் மடியில் முருகனுடன் இலகுவாக அமர்ந்திருப்பாள் .சிவனின் முகத்தில் குமிண்சிரிப்பு [எல்லாம் ஒரு அலகிலா விளையாட்டின் பகுதியே ] .இது நுட்பத்தில் நிகழும் மாற்றம் . இப்படி ஒவ்வொரு கஜசம்ஹார மூர்த்தியும் ,சிற்ப இலக்கணப்படி ஒன்றே . சிற்பியின் மனோ தர்மப்படி பலவே . சிற்பியின் மனோதர்மத்தை பின்தொடர்பவர் மட்டுமே சிற்பத்துக்கான பார்வையாளர் .

அவர் சொன்ன விஷயங்களில் முக்கியமானது பிரமாணம் என்னும் வகைமை .இந்த பிரமாணம் சிற்ப இலக்கணம் தாண்டி ,ஒரு சிற்பி தனது சிற்ப வெளிப்பாட்டில்  எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது அன்பது குறித்த டூ ,டூ நாட் ,பட்டியல் அடங்கியது .  செய்யலாம் வரிசையில், அணிகலன்கள் என வரும்போது சிற்பி தனது மனோ தர்ம்மப்படி எந்த அளவு அந்த சிலையை [இலக்கண சுத்தமாக வெளிப்பட வேண்டிய விஷயங்கள் மறைக்கப்படாமல் ] அலங்கரிக்க இயலுமோ அதை செய்யலாம் .செய்யக்கூடாது வரிசையில் .ஒரு போதும் எந்த சிலையும் தனது நடு விரலில் எந்த அணிகலனும் அணிந்திருக்க கூடாது . என்பதை போல பல விஷயங்கள் உண்டு .இப்படி ஒவ்வொரு பங்க நிலைக்கும், பாவ நிலைக்கும் , தெய்வம் ,தேவர் ,மனிதர் ,அசுரர் ,யக்ஷி , காமன்  என ஒவ்வொரு மூர்த்தத்தின் உணர்வு வெளிப்பாட்டு நிலைக்கும்  பல டூ ,டூ நாட் உண்டு .

இதையும் ஒரு கலைஞன் எவ்வாறு வென்று முன்னால் செல்கிறான் என்பதை நாயக்கர் கால குறவன் குறத்தி சிலை ,கிருஷ்ணாபுரம் சிலைகள் ,நெல்லையப்பர் கோவில்  கிராத மூர்த்தியை அடிப்படையாக வைத்து சொன்னார் . இந்த பிரமாணங்கள் செய்யக் கூடாதன  என்னும் எல்லையில் எது எது தடையோ அனைத்தயும் உடைத்து முன்னால் செல்வது இந்த குறவன் குறத்தி சிலைகள் .   சிவன் மூர்த்தம் எவ்வாறு அமைய வேண்டும் என்றே இலக்கணம் பேசும் , அர்ஜுனனுடன் போர் செய்ய வரும் சிவன் எவ்வாறு இருக்க வேண்டும் என அதனிடம் அளவுகோல் இல்லை . இந்த சுதந்திரம் வழியேதான் சோழர் வளர்த்தெடுத்த சதாசிவம் முதல் ,நெல்லையப்பர் கோவில் கிராத நாதர் வரை, அர்ஜுனன்படிமை  முதல் கர்ணன் சிலை  வரை என  அனைத்தும் சாத்தியம் என்றானது .

இப்படி பல விஷயங்கள் பேசியவர் தன்னை வெளிப்படுத்த மறுத்தார் .அவரை நான் தொடர்வது அவர் விரும்ப வில்லை என்றார் .பெயர் மட்டுமே சொன்னார் . என்னை அவரது குலம் என்றெண்ணி பேசத் துவங்கி இருக்கிறார் .அப்படி இல்லை என்று அறிந்ததும் பெரும்பாலும் கணக்காக மட்டுமே பேசினார் .இருப்பினும்  இத் தருணத்தில் அந்த ஆசிரியர்க்கு நன்றி என்றே சொல்லத் தோன்றுகிறது . இதெயல்லாம் கற்க வேண்டும் எனில் இன்னும் எத்தனை ஆண்டுகளை செலவு செய்ய வேண்டும் ? செவிச்செல்வம்  அதற்கே நன்றி .

உங்கள் கட்டுரை வழியே நான் உணர்ந்தது இதுதான் . சிற்ப கலை சார்ந்து பொது வெளியில் பேச வேண்டிய இத்தகு இளைஞர்கள் எங்கே இருக்கிறாகள் என்றே தெரியவில்லை . மாறாக  நமதே ஆன ரசனை மரபு எது ? அதில் நமது சிற்ப மரபின் ஆழம் அகலம் என்ன   அது குறித்து எதுவுமே அறிந்து கொள்ளாமல்   ”அய்யய்யோ அது பரோக்கு” எனும் மதிப்பீட்டு விமர்சகர்களே இங்கே பேசிக்கொண்டு இருக்கிறார்கள் .

அப்புறம் ஒரு சிறு திருத்தம் .உங்கள் பதிவில் இருக்கும் அகோர வீரபத்ரர் சிலை இருப்பது மதுரையில் அல்ல நெல்லையில் .   நெல்லையப்பர் கோவில் சன்னத்திக்குள் நுழையும் முன் இடது புறம் இருப்பார் . அவரையும் தாண்டிய இடது புறத்தில்  கிராத மூர்த்தி இருப்பார் .    : )

கடலூர் சீனு

 

நாயக்கர் கலையும் நம் கலை ஆய்வாளர்களும்

 

 குடவாயில் பாலசுப்ரமணியம் 

முந்தைய கட்டுரைகவிதை மொழியாக்கம் -எதிர்வினை
அடுத்த கட்டுரைஅசடன் – மொழிபெயர்ப்பு – அருணாச்சலம் மகராஜன்