இரு வாசகர்கள்

1

அன்புள்ள ஜெயமோகன்,

நலமா?

தங்களின் “அறிதலும் தெரிதலும்” பற்றிய கட்டுரையை படித்தேன். 23 வயது இளைஞன் நான். தகவல்களின் ஒரு பெரிய அலை (noise என்றே அதை சொல்லவேண்டும்) என்னை எப்போதும் பின்தொடர்வதாக அறிகிறேன். தெரிந்தவை யாவும் அறிவல்ல என்னும் எண்ணம் முன்னமே எனக்குள் இருந்தபோதிலும், அறிதலின் வேர் கிடப்பது எங்கே என்று உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். இன்று யோசித்து பார்க்கையில் என் மன அறை ஒரு பெரும் குவியல்கூடமாக மட்டுமே உள்ளது தெரிகிறது. நான் படித்த புத்தகங்கள், தனியான இரவு பயணங்கள், ரயில் பயணங்களின் அதிகாலை குளிர் என்று என்னை உணர்ச்சிக்குள்ளாக்கிய யாவும் என்னிடம் ஏதோ சொல்ல முயன்றிருக்கின்றன. ஆனால் அந்த பரவசம் தான் சாராம்சம், அதை decode செய்ய நினைக்காதே, பின்பு அதன் இரசனை இழந்துவிடுவாய் என்று என்னையே நான் தடுத்துக்கொண்டு இருந்துவிட்டேன். அவை பெரும் தவறுகள் என்று இன்று உணர்கிறேன்.

இந்த எண்ணம் உள்ளூர என்னை மிகவும் துன்புருத்துவதாலேயே தங்களுக்கு எழுத முடிவு செயதேன். இவைகளை திரும்பப்பெற வழி இல்லை என்றபோதிலும் இனிமேல் விழித்துக்கொள்ளல் சாத்தியம் என்பது ஒரு சின்ன ஆறுதல்.

கடைசியாக, ஈரோடு புதுவாசகர் சந்திப்பு போல தற்போது நிகழ்வதுண்ட? அது பற்றிய அறிவிப்புகள் இங்கே கொடுக்கப்படுமா? பங்கெடுத்துக்கொள்ள விருப்பம்.

நன்றி

ஸ்ரீ

***

அன்புள்ள ஸ்ரீநிதி

ஈரோடு போன்ற கூட்டங்களை 2018 வாக்கிலேயே இனி வைக்கமுடியும் டிசம்பர் 17ல் விஷ்ணுபுரம் விருதுவிழா வருகிறது. இனி கவனம் முழுக்க அதில்தான்.

பயணம் மட்டும் அல்ல அனைத்துச்சுவைகளையும் கவனித்து பயின்றால் மட்டுமே மேம்படுத்திக்கொள்ள முடியும். இயல்பாக நல்ல சுவை அமைவதென்பது ஒரு வெறும் கற்பனை. சுவையை அறியும் நுண்ணுணர்வு இயர்கையாக அமைவது. அதன் நுட்பங்கள் அனைத்தும் பயிற்சியே.

ஜெ

***

அன்புள்ள ஜெமோவிற்கு,

என்றேனும் உங்களுக்கு கடிதம் எழுதுவேன் என்றும், அதுக்காக இப்போது உடனே எழுதிவிடக்கூடாது என்றும் அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.

வெண்முரசு தொடர்ந்து வாசித்து வருகிறேன். என் எல்லா மனநிலைகளையும் எதாவது ஒரு பாத்திரம் ஏந்தி எதிர்வந்து கொண்டேயிருக்கிறது, உற்சாகமும் சோர்வும் மாறி மாறி வரும் நேரங்களில் அதற்கு தகுந்த பாத்திரங்களை நினைவுபடுத்திக் கொள்கையில் நான் மேலும் அவர்களின் அருகே சென்றுவிடுகிறேன். மாறாக எதிர்மனநிலை பாத்திரங்களையும் யோசிப்பதுண்டு, இவன் என்ன செய்கிறான் என்பது சடாரென்று பிடிபடாத போது அவர்களாகவே மாறி சிந்திப்பதுண்டு.

வாசித்தல் பழக்கம் என்றிருந்து இன்று பணிச்சுமையின் மனச்சோர்விலிருந்து ஆசுவாசப்படுத்தும் மருந்து என்றாகிவிட்டது. சிலசமயம் காய்ச்சலுக்கு இந்த பகுதியைப் படித்துக்கொள், முதுகு வலிக்கு இந்தப்பகுதி என வேடிக்கையாக சொல்லிக்கொள்வதுண்டு, தீவிரமாக யோசித்தால் இந்தப்பதிகம் படித்தால் நோய்தீரும் இந்த சுலோகம் சொன்னால் கடன்தீரும் என்பதெல்லாம் இதுமாதிரி தோன்றியது தானே.

உங்களில் முதல் வாசித்தது உலோகம் நாவல்தான் அப்போது நாவலின் வீச்சு வித்தியாசமானது என்பதைத்தவிர வேறேதும் நிற்கவில்லை. அறம் சிறுகதைகளும், யானை டாக்டரும் எனக்கு மிகவும் நெருக்கமானவை.

விஷ்ணுபுரம் இன்னும் படிக்கவில்லை அதை உள்வாங்கிக்கொள்ளும் அளவு இன்னும் எனக்கு வாசிப்புப்பயிற்சி இல்லை என்றே தோன்றுகிறது.

நண்பர்களிடம் வேடிக்கையாகச்சொல்வேன் ஜெமோவின் வாசகர்கள் அவரைத்தவிர வேற யாரையும் படிக்க வாய்ப்பில்லை, ஏன்னா அவரோட ஒரு பதிவை வாசித்து முடித்தவுடன் அடுத்த பதிவை போஸ்ட் பண்ணிடுவார், அப்புறம் எங்க.. தொடர்ந்து வாசகர்களோட இணைப்புல இருக்கறது ஜெமோ மட்டும்தான்னு.

எனக்கும் உங்களது சில கருத்துக்களில் வேறுபாடுகள் உண்டு, அது இல்லாமலிருக்க முடியாது. உங்களது சொற்களை, வாக்கியங்களை பெரும்பாலும் பயன்படுத்துவது வழக்கமாகிவிட்டது. நெருக்கமான உறவினர் போலவே உங்களை எண்ணத்தோன்றுகிறது. அதுவே உங்களை உரிமையோடு பகடி செய்யவும் தூண்டுகிறது.

மிகத்தீவிரமாக இலக்கியம் பற்றி பேசினால் மட்டுமே பதிலளிப்பீர்கள் என எண்ணவில்லை. நான் உங்களை நேரில் பார்க்கும் போது பேச எண்ணியவற்றை இங்கே எழுதியிருக்கிறேன்.

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். நன்றி.

அன்புடன்

தாமரைக்கண்ணன் LS

புதுச்சேரி

***

அன்புள்ள தாமரைக்கண்ணன்

நலம்தானே?

தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இலக்கியம் என்பது உரையாடல் அல்ல. அப்படி ஒரு சித்திரம் நம்மில் உள்ளது. இலக்கியவாசிப்பில் ஆசிரியனுக்கு இடமில்லை. படைப்பும் வாசகனும் மட்டுமே உள்ள வெளி அது. வாசகன் கற்பனையால் உருவாக்கிக்கொள்வது. அவனுக்கே உரியது. உரையாடல் இலக்கியவிமர்சகனுடன், அரசியல் சமூகவியல் ஆய்வாளனுடன். இலக்கியவாதி அந்த கோணத்தில் உரையாடும்போது அவனுடன் முரண்படுவதும் விவாதிப்பதும் நிகழலாம். வாழ்த்துக்கள்.

ஜெ

***

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 41
அடுத்த கட்டுரைமையநிலப் பயணம் – 1