உள்ளத்தின் நாவுகள்

jeyen

ஜெ,

ரிபப்ளிக் தொலைக்காட்சி வெளியிட்ட காஞ்சி சங்கராச்சாரியாரின் ‘வாக்குமூலம்’ ஆடியோவை கேட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். மிகவெளிப்படையாகவே இந்துமரபுகள் மீதான அவநம்பிக்கையை அவர் அதில் சொல்கிறார். இந்து தெய்வங்களை பழிக்கிறார். கடவுள்நம்பிக்கை இல்லாதவராகவே பேசுகிறார். அவர் இந்நிலையில் அந்த மடத்தின் தலைமைப்பொறுப்பை வகிக்கலாமா? அதை நீங்கள் துணிவுடன் சொல்லமுடியுமா?

எஸ்.சங்கர் நாடிமுத்து

***

அன்புள்ள சங்கர்.

இந்த அறைகூவலை பாய்ந்து ஏற்றுக்கொள்ளுமளவுக்கு முதிர்ச்சியற்றவனோ அல்லது துணிவுகொண்டவனோ அல்ல. சாமானியன். ஆகவே இந்தப்பதில்

சங்கரமடத்தின் தலைவராக அவர் இருக்கவேண்டுமா இல்லையா என்பதை அந்த மடத்தைச் சார்ந்தவர்களும் அதன் நம்பிக்கையாளர்களும்தான் முடிவுசெய்ய வேண்டும். அந்த அரசியலில் நான் இல்லை.

ஆனால் இந்நிகழ்வை ஒட்டி, தன் உள்ளத்தைக் கவனிப்பவர்களுக்கு, ஏதேனும் தியான மரபுகளில் சென்றுகொண்டிருப்பவர்களுக்குச் சொல்ல சில அவதானிப்புகள் என்னிடமுள்ளன. அவர்களில் சிலர் இந்த ஒலிப்பதிவைக் கண்டு அதிர்ச்சியுடன் என்னிடம் பேசினர். அவர்களுக்காக மட்டும்.

உண்மையான தீவிரத்துடன் இலக்கியத்தைப் பயின்றாலோ, தியானம் மேற்கொண்டாலோ உள்ளத்தைப்பற்றிய பல நுண்ணிய புரிதல்கள் உருவாகும். இக்குறிப்பில் நான் சொல்வன வெண்முரசின் வாசகர்களுக்குச் சற்றும் புதிதாக இருக்காதென நினைக்கிறேன். பொருளுணர்ந்து புராணங்களை வாசிப்பவர் எவரும் இதை அறிந்திருப்பார்கள் எனச் சொல்லத் துணிவேன்.

ஆற்றில் நீர் ஒருதிசையில் ஓடிச்செல்வதைக் கவனியுங்கள். சில குறுகிய இடங்களில், சில வளைவுகளில் நடுப்பெருக்கு முன்னால் செல்கையில் பக்கவாட்டில் நீர் பின்னால் வருவதைக் காணமுடியும். மானுட உள்ளம் என்பது ஒருபோதும் ஒற்றைப்பெருக்காகச் செல்வதில்லை. அது பலவாறாகப் பிரிந்தும் ஒன்றோடொன்று முட்டிமோதியும் செல்வது.

பொதுவாக முரணியக்கமே உள்ளத்தின் இயக்கமுறை. ஒவ்வொன்றும் அங்கே கிட்டத்தட்ட சமானமான விசையால் ஈடுசெய்யப்பட்டிருக்கும். ஒர் உன்னதத்தை நோக்கி நம் உள்ளம் எழுந்ததுமே ஆழ்ந்த கீழ்மை ஒன்றும் விழித்துக்கொள்கிறது. ஆகவேதான் நாம் நன்மையை மேலும் வெறியுடன் கவ்விக்கொள்கிறோம். உறுதியான  நம்பிக்கையை அடைந்ததுமே அதை கூரிய ஐயம் ஊடுருவிச் செல்கிறது. ஆகவேதான் நம்பிக்கையை நமக்குநாமே சொல்லியும் பிறரிடம் வாதிட்டும் மீண்டும் மீண்டும் நிறுவிக்கொள்கிறோம்.  வீரம் அச்சத்தால், கனிவு கசப்பால், பெருந்தன்மை வஞ்சத்தால் ஈடுசெய்யப்படுகிறது.

எதிர்மறைவிசைக்கு மேல் நேர்நிலைவிசை கொண்டிருக்கும் வெற்றி என்பது மிகச்சிறிய இடைவெளியில் முன்செல்வது மட்டும்தான். அறமும், நன்மையும், கருணையும் ஒவ்வொரு தருணத்திலும் தங்கள் எதிர்விசைகளுடன் மோதி வென்று நிலைகொள்கின்றன. அறத்தோர் என்போர் அவ்வெற்றியை எப்போதைக்குமென அடைந்தோர் அல்லர், அதன்பொருட்டு எப்போதும் முயல்வோர் மட்டுமே.

தவம் காமகுரோதமோகங்களை இணையாகவே விழித்தெழுந்து உச்சவிசைகொள்ளச் செய்வதை மீண்டும் மீண்டும் புராணங்கள் சுட்டிக்காட்டுகின்றன. வெற்றிக்கு கணநேரம் முன்பு வீழ்ந்தவர்களை, முழுமையை ஒர் இமைப்பில் தவறவிட்டவர்களை நாம் அவற்றில் காண்கிறோம். சித்தர்கள் முதல் வள்ளலார் ,நாராயணகுரு வரையிலானவர்கள் பெருங்காமத்துடன் போரிட்டதன் சித்திரத்தை அவர்களின் பாடல்களே காட்டுகின்றன. உள்ளம் எளிதானதல்ல என்பதே இலக்கியங்களில் இருந்து யோகப்பயிற்சியிலிருந்து ஒருவன் கற்கவேண்டிய முதல்பாடம்.

சாதாரணமாக தியானமரபில் இதை விக்‌ஷேபம், ஸ்பூரணம் என்னும் இரு சொற்களால் குறிப்பிடுவதைக் கண்டிருக்கிறேன். நித்யா முறையே projection, manifestation என்னும் சொற்களாக மொழியாக்கம் செய்வார். உள்ளே மிகச்சிறு துளியாக இருக்கும் ஒன்று பலமடங்கு பெரிதாக வெளிச்செயலாக நிகழ்வது விக்‌ஷேபம். நாம் அத்தனைபேருமே அறிந்ததுதான் அது, நாம் பயங்கரமாக வெளிப்படுத்திய ஓர் உணர்வை உண்மையில் உத்தேசித்திருக்கமாட்டோம். தியானத்தின்போது வெளிப்படும் பல மீறல்களும் மிகைகளும் இருள்களும் மிகச்சிறு துளிகளாக உள்ளே உறைபவை. உள்ளே அருவமாக இலங்குவது வெளிப்பாட்டின் மூலமே உருவம் பெறுவதே ஸ்பூரணம். இரண்டும் நிகழாமல் எவரும் தியானத்தைத் தொடர முடியாது.

உள்ளமென நாம் முன்வைப்பது, நம் ஆளுமையென நாம் காட்டுவது, உண்மையில் நாம் நிகழ்த்தும் ஒரு புனைவுதான். அதை நாம் நம்முள் ஓடும் எண்ணங்களின் தொடர் வழியாக, நம் தர்க்கங்கள் வழியாக பயிற்சிசெய்து கொண்டே இருக்கிறோம். பெரும்பாலும் நம்மை எங்காவது முன்வைக்கத் தொடங்கும்போதே அப்புனைவை கட்டமைக்க ஆரம்பிக்கிறோம். சரசரவென்று சொற்களினூடாக உணர்ச்சிகளினூடாக நம் ஆளுமையை புனைந்துவிடுகிறோம். அவ்வளவு முழுமையாக. அதை நாமே நம்பி அழுகிறோம்,சினக்கிறோம், சிரிக்கிறோம்.

பலசமயம் அந்த ஆளுமைக்கும் நாம் என பொதுவாக நாம் நம்புவதற்கும் சம்பந்தமே இருக்காது. பொதுவாக அமைதியானவர்களாக இருப்போம், ஒரு தருணத்தில் ஈவிரக்கமற்ற கொலைகாரர்களாக நம்மைக் காட்டியிருப்போம். ஏதேனும் ஒரு தருணத்திலாவது மிகையான தன்னிரக்கத்தை புனைந்துகொண்டு கைவிடப்பட்டவர்களாக, வஞ்சிக்கப்பட்டவர்களாக, தோற்கடிக்கப்பட்டவர்களாக  தன்னைப் புனைந்துகொள்ளாத எவரேனும் நம்மிடையே உண்டா?

காதலியிடம் நாம் புனைந்துகொள்வது ஒர் ஆளுமை என்றால் எதிரிக்கு பிறிதொன்று. நண்பனுக்கு மற்றொன்று. எண்ணிப்பாருங்கள், எவரென்றே தெரியாத ரயில் பயணத்துணைவனிடம் அக்கணத்தில் தோன்றிய சம்பந்தமே இல்லாத ஓர் ஆளுமையை நம் உருவம் என நாம் புனைந்து முன்வைத்துவிடுகிறோம் அல்லவா?

நம் அந்தரங்கப் பகற்கனவுகளில் நாம் யார்? எத்தனை முகங்கள் நமக்கு. எப்படியெல்லாம் அது புகையென உருமாறிக்கொண்டே இருக்கிறது. மெய்யாக நாம் யார் என்றால் இவையனைத்துமேதான். இவையனைத்துக்கும் நடுவே உள்ள சமரசமையம்தான்.

இதனால்தான் உளப்பகுப்பாய்வே பயனற்றது என்ற இடத்திற்கு இன்றைய உளவியல் வந்துசேர்ந்துள்ளது. உளப்பகுப்பாளனிடம் ஆய்வுக்குட்படுபவர் உண்மையில் தன்னை வெளிப்படுத்துவதில்லை, புனைந்துகொள்கிறார். ஒவ்வொருமுறையும் புதிதாகப்புனைகிறார். புனைவை வளர்த்துக்கொண்டே செல்கிறார். உண்மையா பொய்யா என்ற கேள்விக்கே இடமில்லை. உண்மையும் பொய்யும் புனைவே. மனவசியப்படுக்கையில் அரைமயக்க நிலையில் பேசுபவர்கூட தன் அனுபவங்களையும் உணர்வுகளையும் புனைந்துதான் முன்வைக்கிறார்.

அப்புனைவினூடாக அறியாமல் வெளிப்படும் துண்டுதுணுக்குகளைக் கொண்டே அவரை உளப்பகுப்பாளர் புனைந்துகொள்ளவேண்டும். அது அவருடைய புனைவாகவே எஞ்சும். அதனால் பயனே இல்லை. ஆகவே உளப்பகுப்பாய்வால் செய்யக்கூடுவது ஒன்றே. உள்ளம் சார்ந்த புறவயமான ஒரு சட்டகத்தை அந்த ‘நோயாளி’ மேல் போட்டு அதற்குள் அவர் தன்னை பொருத்திக்கொள்ளும்படிச் செய்யலாம்.அதைத்தான் உண்மையில் செய்கிறார்கள்

அது நோயாளியை நிலைகொள்ளச்செய்யும். அவர் தன்னை மாற்றிக்கொண்டே இருப்பதை விடுத்து ‘தலையில் அடிபட்டவர்’ ‘இளவயதில் பாலியல்சுரண்டலுக்காளானவர்’ ‘பெரிய விபத்தொன்றைப் பார்த்தவர்’ என்றெல்லாம் அவர் தன்னைத்தானே வரையறைசெய்துகொள்கிறார். அதற்கான எளிய மாற்றுவழிகளையும் உரிய சொற்களையும் உளப்பகுப்பாளர் அளிக்கமுடியும். அதுவே உளச்கிழ்ச்சை.

மிக எளிமையாக இதை மதுவருந்துபவர்களை நோக்கினால் அறியலாம். மது அருந்தியவர் அதுவரை அவர் கவனமாகப் பேணிவந்த ஒரு புனைவை மீறுகிறார். இன்னொரு புனைவை அங்கே அப்போது உருவாக்க ஆரம்பிக்கிறார். அதில் ஈடுபட்டதுமே மேலும் மேலுமெனச் சென்று விடுகிறார். எளிமையான  ‘குடும்பஸ்த’ எழுத்தாளர் கலகக்காரர் ஆகிறார். புரட்சியாளர் ஆகிறார். பாலியல்குற்றவாளியாகிறார். அழுகிறார், கொந்தளிக்கிறார், உக்கிரமாக வாதிடுகிறார், சீறி எழுகிறார்.

அவை அவருக்குள் ‘ஓளிந்திருக்கும்’ உண்மைவடிவங்களா என்ன? அவை அவருடைய புனைவுகள். அவர் அவற்றை வேறெவற்றுக்கோ ஈடாகச் செய்கிறார். அவரை அன்று மேலதிகாரி வசைபாடியிருக்கலாம். மாமியார் அவமதித்திருக்கலாம். அந்தச் சபையில் இருக்கும் இன்னொரு எழுத்தாளர் எப்படியோ அவரைச் சீண்டியிருக்கலாம்

சங்கராச்சாரியாருக்கு உள்ளத்தைக் கலக்கும் மயக்கமருந்துகள் அளிக்கப்பட்டபின் அந்தப் பேச்சு பதிவுசெய்யப்பட்டுள்ளது. நான் இத்தகைய போதைமருந்துகளின் விளைவுகளை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். இரண்டுநாட்களுக்கு முன்னர்கூட பார்த்தேன். அவை உள்ளத்தின் தர்க்கக் கட்டுப்பாட்டை அவிழ்த்துவிடுகின்றன. உள்ளத்தை தன்னிச்சையாக ஒழுகச்செய்கின்றன.

பெரும்பாலும் அந்தத் தருணத்தில் உள்ளத்தின் ஏதோ ஒரு பகுதி வெளிப்படுகிறது. அதற்கான தூண்டுதல் என்ன என்பதெல்லாம் கண்டுபிடிக்கவே முடியாதவை. அதை ஓரளவுக்கு இன்னொருவர் பேச்சின் மூலம் தொடங்கிவைக்கமுடியும். வெளிப்பட்டதுமே அதைப்புனைந்து புனைந்து செல்கிறார்கள். அந்த உணர்வுகளும் பேச்சுக்களும் அவரை அடித்துச்செல்கின்றன.

பெரும்பாலும் தன்னிரக்கம். அவ்வப்போது கசப்பு. இனம்புரியாத வெறுப்புகள். சிலசமயங்களில் உலகையே ஆரத்தழுவும் பேரன்பு. அனைத்தையும் அள்ளி முன்னால் வைக்கும் கருணை. அபூர்வமாக கொலைவெறி. அவ்வாறு வெளிப்படும் அந்த ஆளுமை அந்த மனிதனின் கட்டமைப்பில் எந்தத் துளி என நான் அமர்ந்து வியந்துகொண்டிருப்பேன்.

இக்காரணத்தால்தான் நீதிமன்றம் போதைப்பொருட்களைச் செலுத்திப் பெறப்படும் வாக்குமூலத்தை சான்றாக எவ்வகையிலும் எடுத்துக்கொள்வதில்லை. உண்மையில் ஒருவரின் அந்தரங்கத்தில் இப்படி ஊடுருவ அரசுக்கும் காவல்துறைக்கும் உரிமையுண்டா என்பதே பெரிய கேள்வி. குற்றப்புலனாய்வுக்கு அது தேவை என்றே கொண்டாலும்கூட  அக்குற்றத்தின் சான்றுகளைப் பெற்றபின்னர் அவ்வழக்குக்கு அப்பால் சென்று அவரை அவர்கள் சித்தரித்துக்கொள்வது பெரும் அறமீறல். அதை ஊடகங்களுக்கு அளிப்பதென்பது ஒருவகை படுகொலை.

சங்கராச்சாரியாரின் பேச்சில் வெளிப்பட்டது அவருடைய உண்மையான சுயமா? அப்படி ஒன்று மனிதனுக்குள் இல்லை என்று சொல்லவருகிறேன் – நவீன உளவியலின்படியும் இந்திய மெய்யியல் மரபின்படியும்.  அதுவும் அவருடைய ஆளுமையின் ஒரு துளி, அவ்வளவுதான்.  அவரால் வெல்லப்பட்டதாக இருக்கலாம், கடக்கப்பட்டதாக இருக்கலாம். வென்றுகடந்தபின்னரும் எஞ்சும் சிறுதுளியில் இருந்து பேருருக்கொண்டதாக இருக்கலாம். அத்தகைய பலநூறு துளிகளின் முரணியக்கமே மனம்.

பெரும்பாலான தருணங்களில் எது நாமோ அதற்கு எதிரானதே இவ்வாறு நம்மிலிருந்து எழுகிறது. இது நாம் செய்துகொள்ளும் ஒரு சமநிலை. நான் வன்முறையை ஏற்றவன் அல்ல. என் முழு உளவல்லமையாலும் அதைக் கடக்க நாற்பதாண்டுகளாக முயல்பவன். ஆனால் சிலதருணங்களில் உக்கிரமான கொலைவெறியை என் உள்ளம் ஆடிமுடிப்பதை நான் கண்டிருக்கிறேன். அதுவும் நானே. காந்திகூட இதற்கு விதிவிலக்கில்லை .மேனகை விஸ்வாமித்திரரின் உள்ளாழத்திலிருந்தே உருக்கொண்டெழுகிறாள். ஒருகணம், ஒரு சிறுவிதை.

நான் ஒழுக்கத்தில் நம்பிக்கை கொண்டவன். ஆனால் என் மேல் அந்த மருந்து செலுத்தப்படுமென்றால் கட்டற்ற காமத்தின் ஒருமுகத்தை நான் எனக்கென எடுத்துச் சூடிக்கொள்ளக்கூடும். கொடூரமான கொலைகாரனாக நான் என்னை காட்டிவிடக்கூடும்.எது என் மைய ஓட்டமோ அதற்கு நேர் எதிராக என் விளிம்புகள் திரும்பி ஓடக்கூடும். ஏனென்றால் நான் என் புனைவின் தியானநிலையில் அவ்வாறு உருகி உருமாறி மீள்கிறேன்

சங்கராச்சாரியார் நல்லவர் என்றோ அல்லவர் என்றோ நான் சொல்லவரவில்லை. அவரை எனக்குத்தெரியாது. அவர்மேல் எளிய சாதி, மதநம்பிக்கைகளுக்கு அப்பால் சென்று பெருமதிப்பு கொண்டுள்ள நண்பர்கள் சிலர் எனக்குண்டு. நான் சொல்லவருவது, இத்தகைய எளியபுரிதல்களுக்கு அப்பால் சென்று நாம் பார்க்கமுடியும் என்றுதான். அதுதான் இலக்கிய வாசிப்புடையவனின் வழி.

அத்தகைய புரிதலுள்ள ஒருவன் உள்ளம் என்பது மிக அந்தரங்கமான பெருவெளி என்றும் அது எவருடையதென்றாலும் அதை சில்லறைத்தனமாக முச்சந்திக்குக் கொண்டுவந்து எளிமைப்படுத்தி விவாதிப்பதும் அதைக்கொண்டு கெக்கலிப்பதும் கீழ்மையென்று உணர்வான். மானுட உள்ளம் என்ற ஒன்றின் ஒரு துளியே அதுவும்.  எனவே அது நம் உள்ளமும்கூடத்தான். அதை மதிக்கக் கற்போம்.

ஜெ

முந்தைய கட்டுரைகல்வியும் வாழ்வும் -கடிதம்
அடுத்த கட்டுரைகன்யாகுமரியில் இன்று