‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 46

45. நீர்ப் பசுஞ்சோலை

flowerசோலைத்தழைப்புக்கு மேல் எழுந்துநின்ற தேவதாருவின் உச்சிக்கவட்டில் கட்டப்பட்டிருந்த காவல்மாடத்தில் மடியில் வில்லையும் இடக்கையருகே அம்புத்தூளியையும் வைத்துக்கொண்டு கஜன் பின்உச்சிவெயில் நிறம் மாறுவதை பார்த்துக்கொண்டிருந்தான். காற்றில் அக்காவல்மாடம் மெல்ல ஆடியது. அவன் அங்கு அமர்ந்த முதல் நாள் காடு கோதையில் செல்லும் பெருங்கலம்போல் மெல்ல அசைவதாகத் தோன்றி உளநடுக்கு கொண்டான். எழுந்து நின்று கண்கள் சுழல தலை நிலையழிய இருமுறை குமட்டினான். அவன் அருகே நின்றிருந்த தீர்க்கன் தன் பெரிய கைகளால் அவன் புயங்களைப்பற்றி “எதையாவது பற்றிக்கொள். காட்டிலிருக்கும் ஏதேனும் ஒரு புள்ளியை கூர்ந்து நோக்கு” என்றான்.

அப்பால் தெரிந்த பிறிதொரு தேவதாருவை கூர்ந்து பார்த்தபோது தன்னுடைய காவல்மாடம் அசைவதாகத் தெரிந்தது. அக்கணமே அவன் உடலுக்குள் இருந்த நீர்த்துளிகள் உணர்ந்த நிலையழிவு சீரமைந்தது. சற்று நோக்கியபின் ஒவ்வொன்றும் அவன் சித்தத்திற்கு தெளிவாயின. “அமர்ந்துகொள்” என்று தீர்க்கன் சொன்னான். அவன் அமர்ந்தபின் புன்னகைத்து “விந்தை” என்றான். “நாம் வெளியே பார்க்கும் ஒவ்வொன்றையும் இப்படித்தான் ஒப்பீடுகளாக அறிந்துகொண்டிருக்கிறோம் என்று சொல்வார்கள்” என்று தீர்க்கன் சொன்னான்.

கஜன் “இங்கிருந்து கைகளை விரித்தால் பறவையாக மாறி இந்த பச்சை அலைகளுக்கு மேல் பறந்து போய்விட முடியுமென்று தோன்றுகிறது” என்றான். “அதுவும் இங்கு வரும் பெரும்பாலானவர்க்கு தோன்றுவதே. முன்பு ஓரிருவர் அவ்வாறு பாய்ந்து உயிர் துறந்ததுண்டு” என்றான் தீர்க்கன். கஜன் தன் அடிவயிற்றில் ஒரு அதிர்வை உணர்ந்து காவல்மாடத்தின் மூங்கில் விளிம்பிலிருந்து சற்று உள்ளே நகர்ந்துகொண்டான். “அந்த அச்சம் இருக்கும்வரை நீ பாய்ந்துவிடமாட்டாய். அல்லது இவர்களிடமிருந்து அகிபீனா வாங்கி இழுத்தால் அது நிகழலாம்” என்றான்.

கஜன் “அகிபீனாவா? இவர்களா?” என்றான். “அகிபீனா உண்டு, சிவமூலியும் உண்டு” என்றான் தீர்க்கன். அவன் “காவலர்கள் அதையெல்லாம் இழுக்கலாமா?” என்று கேட்டான். “கூடாது. ஆனால் இப்புவியில் ஒப்புக்கொள்ளப்பட்ட செயல்கள் மட்டும்தான் நிகழ்கின்றனவா என்ன? அவ்வாறென்றால் இப்புவி எத்தனை சலிப்பூட்டுவதாக இருக்கும்? இத்தனை மீறல்களுக்குப் பிறகும் இங்கு பெரிதாக செய்வதற்கொன்றுமில்லை” என்று தீர்க்கன் சொன்னான். “ஏன் இவர்கள் உளம்மயக்குப் பொருட்களை நுகர்கிறார்கள்?” என்று கஜன் கேட்டான். தீர்க்கன் இதழ்கள் கோட “சின்னாள் இங்கு இரு, அப்போது தெரியும்” என்றான்.

“ஏன்? இங்கு அச்சமூட்டும் ஏதேனும் உண்டா?” என்று கஜன் கேட்டான். “அச்சமூட்டும் ஏதேனும் இருந்திருந்தால் இவர்களுக்கு இந்த உளமயக்குகள் தேவைப்பட்டிருக்காது. இங்கு எதுவுமே இல்லை” என்றான் தீர்க்கன். “வானம். கீழே இந்தப் பசுமை. ஒவ்வொரு நாளும் கதிரெழுதல், கதிரமைதல். மாதங்களில் பாதி நாள் நிலவு. எஞ்சிய நாட்கள் விண்மீன். எப்போதும் காற்று. பிறகென்ன வேண்டும்?” என்று கஜன் கேட்டான். தீர்க்கன் “இளையவனே, இவையனைத்தும் ஒவ்வொரு மானுடருக்கும் அளிக்கப்பட்டுள்ளது. எந்த மானுடனாவது இவற்றில் நிறைவடைந்திருக்கிறானா? இவற்றை பொருட்படுத்துபவர்கள் மிகச் சிலரே. பிறருக்கு வேறேதோ தேவைப்படுகிறது. காமம், செல்வம், வெற்றி, புகழ். வாளில்லாமல் வாழத்தெரிந்தவர்கள் இங்கு மிக அரிது” என்றபின் “கையிலோ உள்ளத்திலோ” என்று முனகிக்கொண்டன்.

“ஆனால் எனக்கு இந்த இடம் பிடித்திருக்கிறது” என்றான் கஜன். பெருமூச்சுடன் “அது நன்று” என்று தீர்க்கன் சொன்னான். “அந்த உவகை எஞ்சியிருக்கும்வரை இங்கிரு. அதில் ஒரு துளி குறையத்தொடங்கினாலும் உடனே கிளம்பிவிடு.” குழப்பத்துடன் “எங்கு?” என்று கஜன் கேட்டான். “எங்கு மறுகணம் உன் தலையை எவரேனும் வெட்டிவிட வாய்ப்பிருக்குமோ, எங்கு சற்று தேடினால் ஒரு பெரும்புதையல் கிடைக்கும் வாய்ப்புள்ளதோ அங்கு. குறைந்தது அங்கு ஒவ்வொரு நாளும் முந்தைய நாள் நிகழாத ஒன்று நிகழும் வாய்ப்பிருக்க வேண்டும். அங்கு. அங்கு மட்டும்தான் மானுடர் மகிழ்ச்சியாக வாழமுடியும்” என்றான் தீர்க்கன்.

கஜன் திரும்பி பச்சை இலைகளின்மேல் காற்று செல்லும் ஒழுக்கை நோக்கியபின் திரும்பி “ஏன் இவற்றைப் பார்த்தபடி வாழ்ந்துவிட முடியாதா என்ன?” என்றான். “முடியும்… கவிஞர்களால், முனிவர்களால் முடியும் என்று சொல்லப்படுகிறது. அப்படி எவரையும் நான் பார்த்ததில்லை” என்றபின் தீர்க்கன் எழுந்து சோம்பல்முறித்து “நான் சென்று ஓய்வெடுக்கிறேன். நீ இங்கிரு” என்றான். “நானா?” என்றான் கஜன். “ஏன்?” என்று தீர்க்கன் கேட்டான். “நான் இப்போதுதான் வந்திருக்கிறேன்.” கஜன் தோளில் தட்டி “நீயே மிகை இங்கு” என்றபின் தீர்க்கன் இறங்கிச்சென்றான்.

அன்றுமுதல் கஜன் அங்கே அமர்ந்திருக்கலானான். அவனுக்கு காவல்பரணில் அமர்ந்திருப்பது பிடித்திருக்கிறது எனத் தெரிந்ததும் அவனை ஒவ்வொருவரும் விரும்பி அழைத்து அமரச்செய்தார்கள். அவனுக்கு நல்லுணவு கொண்டுவந்து அளித்தனர். அவன் கீழே இறங்கவே விரும்பவில்லை. கொட்டகைகளில் துயில்கையிலும் உச்சிமாடத்தையே கனவு கண்டான். புலரியையும் அந்தியையும் ஒருபோதும் தவறவிடவில்லை.

அன்று அந்தி முதல் அங்கு அரசகுடிகளின் நிலவாடல் நிகழுமென்று பத்து நாட்களுக்கு முன் காவலர்தலைவர் சொன்னபோதுதான் அவன் அறிந்தான். அப்போது அவனுக்கு அது பெரிதாகத் தோன்றவில்லை. ஆணைகளை பிறப்பித்துக்கொண்டிருந்த அவர் ஒருகணம் அவனை கூர்ந்து பின்னர் “உனக்கு அளிக்கப்பட்ட காவல்மாடம் எது?” என்றார். “மூன்றாவது காவல்மாடம்” என்று அவன் சொன்னான். “நன்று, அங்கிரு. பிறிதொருவர் வந்து உன்னை விடுவிக்கும்வரை மாடத்திலிருந்து எதன்பொருட்டும் கீழிறங்காதே” என்றபின் அவர் திரும்பிக்கொண்டார்.

திரும்பிச் செல்லும்போது தீர்க்கனிடம் “நிலவு நாட்களில் இங்கு அரசியும் இளவரசியும் வருவதுண்டா?” என்று கேட்டான். தீர்க்கன் “இங்கா?” என்றபின் அவன் என்ன கேட்கிறான் என்று புரிந்துகொண்டு சிரித்தான். “இளையவனே, இந்தக் காவல்மாடம் அமைக்கப்பட்டபின் மிக அரிதாகவே எவரேனும் இதற்குள் நுழைந்திருக்கிறார்கள். நான் அறிந்து இருமுறை மச்ச இளவரசர் உள்ளே வந்திருக்கிறார். இளவரசர் உத்தரர் அவருடைய கனவுகளில் இங்குதான் இருக்கிறார் என்று நினைக்கிறேன். சென்ற முறை இளவரசி இங்கு வந்து பாம்பால் கடிபட்டார் என அறிந்திருப்பாய். அதன்பின் இனி எவருமே இங்கு வரமாட்டார்கள் என்றுதான் நினைத்தேன். மீண்டுமொரு களியாட்டு இங்கு இத்தனை விரைவில் ஒருங்கு செய்யப்படுமென்று எண்ணவில்லை” என்றான்.

உடன்வந்த கீரகன் “நாமறியாத ஏதோ விந்தை இதற்குள் உள்ளது” என்றான். “இது அந்த ஆணிலியின் ஏதோ சூழ்ச்சி என ஐயுறுகிறேன்” என்றான் தீர்க்கன். காமிகன் கஜனின் தோளைத் தட்டி “நீ நல்லூழ் கொண்டவன். நீ வந்த உடனே இப்படி ஒரு வாய்ப்பு அமைகிறது. வழக்கமாக இங்கு காவல் பணி என்று படைக்கலம் தூக்கி வரும் இளைஞர்கள் விழி விரித்து வெறுமையைப் பார்த்து சலித்து எதைப் பார்த்தாலும் எதுவும் சித்தத்தில் பதியாதவர்களாக மாறி அகிபீனாவுக்குப் பழகி நடக்கும் பிணமென்று மாறி இங்கிருந்து செல்வார்கள். உனக்கு சொல்வதற்கு ஒரு நிகழ்வாவது வாழ்க்கையில் எஞ்சுகிறது” என்றான்.

“என்ன நிகழும்?” என்று கஜன் கேட்டான். “கொலை” என்று அவன் சொன்னான். கஜன் அவன் கையை பற்றி ஆர்வத்துடன் “கொலையா?” என்றான். அவன் நகைத்து தீர்க்கனின் தோளில் முட்டி “கறந்தபால்போல வெண்மையாக இருக்கிறானே இவன்?” என்றபின் அவனிடம் “இளையவனே, இங்கு நிகழவிருப்பது ஒன்றே ஒன்றுதான். இங்குள்ள அத்தனை உயிர்களும் அன்றாடம் செய்துகொண்டிருப்பது. அவர்கள் அளவுக்கு உளம் உவந்து உடல் விடுதலைகொண்டு அதைச் செய்ய மனிதரால் இயலாது. நகரங்களில் அறவே இயலாது என்று அறிந்திருக்கிறார்கள். ஆகவே காட்டில் அதை முயலலாமே என்று நினைக்கிறார்கள். ஆனால் நகரங்களில் இருக்கையில் அவர்கள் அகம் காடாக இருக்கிறது. இங்கு காட்டிலிருக்கையில் அவர்கள் அகம் நகரமாக இருக்கும்போலும்” என்றான்.

ஒவ்வொரு நாளும் முழுநிலவை கஜன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தான். நோக்கி நோக்கியே நிலவை முழுமைப்படுத்திவிடமுடியும் என்பதைப்போல. தீர்க்கனிடம் “இன்னும் எத்தனை நாட்கள்?” என்று கேட்டான். “நிலவை வைத்தே கணக்கிடு” என்று தீர்க்கன் சொன்னான். “நிலவில் இந்தக் காடு எப்படி இருக்குமென்று எண்ணிப்பார்க்க விந்தையாக இருக்கிறது. நிலவில் நாம் நன்கறிந்த முற்றத்து மரம்கூட ஆழமான அறியமுடியாமை ஒன்றை சூடிக்கொள்கிறது. அறியமுடியாமையால் ஆனது இக்காடு…” பின்னர் தனக்குள் என “ஒருவேளை தன்னை இது அப்போது ஒவ்வொரு இதழாக விரித்துக்கொள்ளத் தொடங்கிவிடுமோ?” என்றான். தீர்க்கன் “கனவுகாண முடிந்தால் கரும்பாறையையே ஊடுருவி உள்ளே சென்றுவிடலாம். அதற்குரிய அகவை உனக்கு” என்றான்.

முழுநிலவு நாளன்று அவன் காலையில் விழிப்புணர்ந்ததே உள்ளத்தில் எழுந்த முரசொலியுடன்தான். “ஆம்!” என்று அவன் சொல்லிக்கொண்டான். பாய்ந்து எழுந்து கொட்டகையைவிட்டு வெளியே சென்று முகம் கழுவிக்கொண்டிருந்த சக்ரரிடம் “இன்று முழுநிலவு” என்றான். “ஆம், அதற்கென்ன?” என்றார். “இன்று அரசகுலத்தார் கானாட வருகிறார்கள்” என்றான். “ஆம், நமக்கு சற்று பணி மிகுதி… எவருக்கும் இன்று துயில் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்” என்றபடி அவர் கொப்பரையுடன் சென்றார். சூனரிடம் “இன்று அரசர் வருவாரா?” என்று அவன் கேட்டான். “அவர் எப்போதும் கள்நிறைந்த காட்டில் வாழ்பவர்” என்ற சூனர். “எவர் வந்தால் நமக்கு என்ன? சவுக்கடி படாமல் ஒழிந்து இந்நாளை கடந்தோம் என்றால் நாளை வழக்கம்போலத்தான்” என்றார்.

எவரும் அவன் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளவில்லை. ஆண்டுக்கணக்கில் எதுவும் நிகழாமல் சலிப்படைந்திருந்தவர்கள் அது நிகழ்ந்தபோது பதற்றமும் எரிச்சலும் கொண்டார்கள். அதை எவ்வகையிலேனும் கடந்துசெல்ல விழைந்தார்கள். அவர்கள் அந்த செயலின்மைக்கு பழகிவிட்டிருந்தனர். அவர்களின் உடல்கள் இறந்த மரத்தில் முளைத்த காளான்கள்போல வெளுத்திருந்தன. “அந்த ஆணிலி ஏதோ செய்கிறான். அவன் எவருமறியாமல் இரவுகளில் இக்காட்டுக்குள் உலவுகிறான் என்கிறார்கள்” என்றார் தப்தர். “யார்? அவளா?” என்றான் கஜன். “இக்காட்டுக்குள் அவள் ஆணென்றாகிவிடுவதாக சொல்கிறார்கள். அவள் இங்கே அரசநாகத்தின் விரைவுகொண்ட கைகளுடன் நாணலையே அம்புகளாக்கி வேட்டையாடுவதை கண்டிருக்கிறார்கள்.”

தாழ்ந்த குரலில் சூரர் “அது மானுடப்பிறவி அல்ல. ஏதோ கந்தர்வன். அவர்களால் மட்டுமே ஆணென்றும் பெண்ணென்றும் ஆகமுடியும்” என்றார். அனைவரும் அமைதிகொண்டனர். கஜன் “அது ஏன் நம் நகர்புகுந்திருக்கிறது?” என்றான். “நம் இளவரசியை அது கைப்பற்றிவிட்டது. இங்கு இத்தனை காவலுக்குப் பின்னும் இளவரசியை கடித்த நாகம் எப்படி வந்தது? இங்கே காட்டின் ஆழத்திலிருந்து அந்த கந்தர்வன் எப்படி தோன்றினான்?” கஜன் “இளவரசி அவனுக்கு எதற்கு?” என்றான். நாமர் சிரித்து “மூடா, கந்தர்வர்களுக்கு மானுடப்பெண்கள்மேல் காமம் உண்டு. ஒருநாள் பருந்து கோழிக்குஞ்சை என இளவரசியை கவ்விக்கொண்டு அவன் சிறகுவிரிப்பான்…” என்றார்.

அன்று பரண்மேல் ஏறியபோது கஜனின் கால்கள் நடுங்கி வழுக்கின. இருமுறை அவன் சறுக்கி கீழே வந்தான். அவனைக் கண்டதும் சலிப்புடன் எழுந்து உடல்வளைத்து கோட்டுவாயிட்ட தீர்க்கன் “முன்னரே வந்துவிட்டாயா? நன்று” என்றபடி வில்லை ஒப்படைத்தான். கஜன் தயங்கியபடி “இன்று பகல் முழுக்க எனக்கு இங்கே காவல்பணி உள்ளது. அந்தியில் என்னை விடுவிப்பார்கள். அந்திக்குப்பின் நான் காட்டுக்குள் செல்ல முடியுமா?” என்று கேட்டான். “காட்டுக்குள் செல்ல உனக்கு அரசக் காவலர்களின் ஒப்புதல்குறி தேவை. அது இல்லாது காட்டில் செல்லும் எவரையும் வெட்டி வீழ்த்துவதற்கு ஆணை உள்ளது” என்றான். கஜன் “நான் கேட்டுப்பார்க்கலாமா?” என்றான்.

“நம் காவலர்கள் எவரையும் வெட்டப்போவதில்லை. அவர்கள் படைக்கலத்தை முதுகு சொறிவதற்கு மட்டுமே நெடுங்காலமாக பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் வருபவர்கள் அப்படி அல்ல. இந்த நாட்டில் எவருக்கேனும் இன்னமும் படைவீரர்களுக்குரிய சீற்றமும் இறுக்கமும் உண்டென்றால் அது அரச மெய்க்காவலர்களுக்குத்தான். கீசகருடன் வரும் மெய்க்காவலர்களை எதன்பொருட்டும் அணுகாதே. அவர்கள் ஒவ்வொருவரும் குருதி அளித்து பயிற்றுவிக்கப்பட்ட புலிகளைப்போல” என்றான் தீர்க்கன். கஜன் தலையசைத்து பேசாமல் இருந்தான். “இதற்குள் என்ன நிகழ்ந்தால் உனக்கென்ன? பேசாமல் கொட்டகைக்குச் சென்று மரவுரியை இழுத்து தலைக்குமேல் போர்த்திக்கொண்டு படுத்து துயில். கனவில் இதைவிட அடர்ந்த காடொன்றை காண்பாய்” என்றான் தீர்க்கன். இதழ்கள் வளைய நகைத்து “வெளியே சொல்ல முடியாத அளவுக்கு இனிய நிகழ்வுகள் அங்கு நிகழும்” என்றபின் அகிபீனா சுருட்டிய இலை ஒன்றை பந்தத்தின் கங்கில் பற்றவைத்து புகையை இழுத்தான்.

கஜன் அவனிடமிருந்து நோக்கை விலக்கி காட்டை பார்த்தான். இத்தனை அழகிய காட்டின் மடியில் இந்த அளவுக்கு உளம் கசந்தவர்களாக மானுடர்கள் மாறுவதேன் என்று எண்ணிக்கொண்டான். பின்னர் தோன்றியது, அது சமைத்துக் குவிக்கப்பட்ட அறுசுவை உணவின்முன்பு அமர்ந்து ஒரு துளியேனும் எடுத்து அருந்துவதற்கு ஒப்புதலில்லாமல் வாழ்வதன் வஞ்சம் என. ஒருபோதும் மீட்பில்லாமல் சங்கிலியால் பிணைக்கப்பட்ட ஒருவன் வெறியனோ பேதையோதான் ஆகமுடியும்.

கஜன் அப்போதே முடிவெடுத்துவிட்டான், காட்டிற்குள் சென்று பார்ப்பது என. அடுத்த கணம் தலை போகும் வாழ்க்கை என்று தீர்க்கன் அவனிடம் சொன்ன சொல் எண்ணத்தில் எழுந்தது. அதை இந்தக் காட்டிலேயே நான் அடையப்போகிறேன். அவ்வெண்ணம் வந்ததுமே அவன் முகம் மலர்ந்துவிட்டது.

அதை பார்த்த தீர்க்கன் “அழகிய இளம்பெண்ணொருத்தியை நான் இப்போது பார்க்கிறேன்” என்றான். கஜன் “எங்கே?” என்றான். “உன் உள்ளத்தில் நீருக்கடியில் கிடக்கும் பொன்நாணயம்போல தெரிகிறாள்” என்றான். கஜன் முகத்தை விலக்கிக்கொண்டு சிரிப்பை அடக்கினான். “அது நன்று. உண்மையில் பெண்களை அடைவதைவிட இவ்வாறு எண்ணிஎண்ணி மகிழ்வது இனிது. என்னிடம் பிரம்மன் கேட்டிருந்தால் ஊனுடலுடன் பெண்ணை படைத்திருக்க வேண்டாம். ஆண்களுக்கு எழும் வெறும் கனவாகவே அவர்களை விட்டிருக்கலாமென்று சொல்லியிருப்பேன். இன்னும் பல நூறுமடங்கு காவியங்களும் பாடல்களும் எழுதப்பட்டிருக்கும்” என்றபின் தீர்க்கன் சரடில் தொற்றி இறங்கினான்.

flowerதொலைவில் முரசு ஒலியும் கொம்பின் ஒலியும் எழுவதை கஜன் கேட்டான். வில்லை கையிலெடுத்துக்கொண்டு மூங்கில் விளிம்பைப் பற்றியபடி நோக்கினான். முதல் காவல்மாடத்திலிருந்த காவலன் தன்னுடைய கொம்பை எடுத்து ஊதி இளவரசர் உத்தரர் வருவதை அறிவித்தான். அவன் திரும்பி மேற்கு வானை பார்த்தான். வான் வளைவில் நீலத்தாலம்போல விளிம்புகளில் வெண்சுடர் அதிர சூரியன் தெரிந்தது. அந்தியிறங்க இன்னும் நெடுநேரம் ஆகும். அதற்குள்ளாகவே இளவரசர் வந்துவிட்டாரா அல்லது அவரது வருகையை அறிவிக்கிறார்களா? ஆனால் தொலைவில் அவன் உத்தரனின் கொடியை பார்த்தான். முதற்கணம் அங்கிருந்து எங்காவது ஒளிந்துகொள்ள வேண்டுமென்று தோன்றியது. பின்னர் நேருக்கு நேர் நின்று முகம் காட்டினால்கூட உத்தரன் தன்னை அடையாளம் கண்டுகொள்ளப் போவதில்லை என்று எண்ணிக்கொண்டான்.

உத்தரனின் கொடியுடன் குதிரை வீரனொருவன் முன்னால் வர தொடர்ந்து கொம்பூதியும் முரசறிவிப்பாளனும் இரு புரவிகளில் வந்தனர். பெரிய கரிய புரவியொன்றில் உத்தரன் அமர்ந்து வந்தான். முதலில் கஜனால் அதை விழி ஏற்க முடியவில்லை. உத்தரனின் கால்களை கீழே புரவியுடன் சேர்த்துக் கட்டியிருக்கிறார்களா என்றுதான் அவன் பார்த்தான். உத்தரனின் கால்கள் புரவி பயின்றவனின் கால்கள்போல அதன் விலாவை கவ்வியிருக்கவில்லை. வலது கால் கலைந்த காக்கைச்சிறகில் ஒற்றைஇறகுபோல பிசிறி நீட்டி அவ்வழியிலிருந்த இலைகளிலும் புதர்களின் கிளைநீட்சிகளிலும் முட்டிக்கொண்டு வந்தது. கடிவாளத்தையும் மணிக்கட்டில் இருமுறை சுழற்றி வைத்திருந்தான். புரவியின் அசைவுக்கும் அவன் உடல் அசைவுக்கும் தொடர்பே இருக்கவில்லை. ஆனால் அந்தப் பெரும்புரவி அவனை ஆய்ச்சியர் தலையில் பாற்குடம் என மிக இயல்பாக ஏந்திக்கொண்டு வந்தது.

அதற்குப் பின்னால் ஒரு கபிலநிறப் புரவியில் தோள்வரை குழல் சரிந்த கரிய உடல்கொண்ட ஒருவன் வந்தான். தொலைவிலேயே அவன் சிற்பங்களுக்குரிய, நன்கு செதுக்கி அமைக்கப்பட்ட முகம் கொண்டிருப்பதை கஜன் கண்டான். அவன் முகத்திலிருந்தும் தோள்களிலிருந்தும் விழிகளை விலக்க முடியவில்லை. அணுக அணுக மேலும் அழகுகொண்டு திருமகள் ஆலயங்களில் முகமண்டபத்தில் செதுக்கி வைக்கப்பட்டிருக்கும் உருவெனத் தோன்றினான். அவர்களுக்குப் பின்னால் மேலும் எட்டு புரவிகளில் காவல் வீரர்கள் வந்தனர். அவர்கள் நாண் இழுத்து அம்பு தொடுக்கப்பட்ட விற்களையும் நீண்ட வேல்களையும் ஏந்தியிருந்தனர். தொடர்ந்து ஏவலர்கள் எளிய புரவிகளில் மூட்டைகளும் பொதிகளுமாக வந்தனர்.

உத்தரன் காட்டின் முகப்பு முற்றத்தை அடைந்ததும் கடிவாளத்தைப் பிடித்து இழுத்து உரத்த குரலில் “ஹேய் ஹேய்” என்று கூச்சலிட்டு அதை நிறுத்தினான். தவறாக இழுக்கப்பட்டமையால் தலைவளைத்து மெல்லச் சுழன்று இருமுறை பொய்யாக காலெடுத்து வைத்து உடலை ஊசலாட்டியபின் புரவி நின்றது. இருமுறை தும்மி பிடரிகுலைத்தபின் தலைதூக்கி விழிகளை உருட்டி அச்சூழலை நோக்கியது. பின்னால் வந்த அழகன் குதித்து ஓடி வந்து கரிய பெரும்புரவியின் பின்பக்கத்தை மெல்லத் தட்டி ஏதோ சொன்னான். புரவி இரு கால்களையும் சற்று அகற்றி உடலை தாழ்த்தியது. காலை தூக்கிச் சுழற்றி இறங்கிய உத்தரன் நிலையழிந்து விழப்போனான். அவனை அவ்வழகன் பற்றிக்கொண்டான்.

நெடுந்தொலைவு புரவியில் அமர்ந்து வந்தமையால் இரு கால்களும் உளைச்சலெடுக்க உத்தரன் அவற்றை நன்கு அகற்றி வைத்து தவளை எழுந்து நடப்பதுபோல நடந்து அருகிலிருந்த சாலமரத்தின் வேர்ப்புடைப்பை நோக்கி சென்றான். இரு புரவிகளையும் அவ்வழகன் கொண்டுசென்று வேரில் கட்டி அவற்றின் கழுத்தையும் காதுகளையும் கைகளால் நீவி சீராட்டினான். அவை திரும்பி அவனை தங்கள் வாழைமடல்போன்ற நாக்குகளால் நக்கின. ஏவலர் புரவிகளிலிருந்து இறங்கி ஓடிச்சென்று உத்தரன் அருகே பணிந்து நிற்க அவன் கையசைத்து ஆணைகளை இடத் தொடங்கினான்.

மரப்படிகள் ஒலிக்க மேலே ஏறி வந்த தீர்க்கன் “அதற்குள் வந்துவிட்டார்” என்றான். “ஆம், இன்னும் மாலையொளியே மங்கவில்லை” என்று கஜன் சொன்னான். “இங்கே இப்போது என்ன செய்யப்போகிறார்?” என்றான் தீர்க்கன். கஜன் சிரித்து “அந்தியில் கிளம்பினால் அங்காடிகள் வழியாக வரமுடியாது. அந்தக் கரிய புரவியில் அவர் ஏறிச் செல்வதை நகர் மக்கள் அனைவரும் பார்க்கவேண்டும் என்பதற்காக உச்சிப்பொழுதிலேயே கிளம்பியிருப்பார். பெரும்பாலும் நகரத்தின் அனைத்து தெருக்கள் வழியாகவும் சுற்றித்தான் இங்கு வந்திருப்பார்” என்றான். தீர்க்கன் புன்னகைத்து “அவர் அமர்ந்திருப்பதைப் பார்த்தாலே தெரிகிறது” என்றான்.

“இன்று நகர் முழுக்க இதைப் பற்றித்தான் பேசிச் சிரித்துக்கொண்டிருப்பார்கள்” என்றான் கஜன். தீர்க்கன் அவன் வில்லை வாங்கிக்கொண்டான். “நான் கிளம்பலாமா?” என்று கஜன் கேட்டான். “ஆம், கிளம்பு” என்றபின் “அங்கு சென்று அரசகுலத்தோர் வருவதை வேடிக்கை பார்க்கவேண்டியதில்லை. கொட்டகைக்குள் சென்று உணவருந்திவிட்டு உறங்கு. எவரும் பார்க்கமாட்டார்கள். உன் மூத்தவனாக இதை சொல்கிறேன்” என்றான். கஜன் சரி என்று தலையசைத்துவிட்டு முடிச்சுகளில் கால்வைத்து கயிற்றினூடாக கீழிறங்கி தரையை அடைந்தான். தரையில் ஒரு மெல்லிய ஆட்டம் இருப்பதை உணந்ததும் உடல் தரையை அறிந்து காவல்மாடத்தின் ஆட்டத்தை உதறி நிலைகொண்டது.

காட்டின் காவல்முற்றத்தை அடைந்தபோது அங்கு பணியாளர்கள் பொதிகளையும் மூங்கில்பெட்டிகளையும் இறக்கி வைத்துக்கொண்டிருந்தார்கள். அவன் நேராக உத்தரன் அருகே சென்று வணங்கி “நிஷத இளவரசருக்கு அடியவனின் வணக்கம்” என்றான். உத்தரன் புருவம் சுருக்கி அவனைப் பார்த்து “இந்தக் காட்டிற்குள் யானைகள் உண்டா?” என்றான். கஜன் “இல்லை. இங்கு கொலைவிலங்குகள் எதுவும் இல்லை” என்றான். இதழ்களை வளைத்த உத்தரன் “கொலைவிலங்கில்லாத காடு காடல்ல, வெறும் சோலை. காடு ஒரு கண்ணென்றால் யானை அதன் கருவிழி. புரிகிறதா?” என்றான்.

கஜன் “ஒரு காட்டிற்கு ஒரு யானை போதுமென்கிறீர்களா?” என்றான். உத்தரன் கையை ஓங்கி “எதிர் சொல்லெடுக்கிறாயா? கவிச்சொல்லை புரிந்துகொள்ளும் அறிவில்லாத மூடா, விலகிச்செல்” என்றான். அதற்குள் அப்பால் நின்ற அந்தக் கரிய அழகன் அவனை கைகாட்டி அழைத்து “புரவிக்கான புல் இங்கு எங்கே இருக்கிறது?” என்றான். “இங்கு புல்லை வெட்டி வைக்கும் வழக்கமில்லை. இந்தக் காடு முழுக்க புல்தான். புரவியை அவிழ்த்துவிட்டால் அது மேயுமல்லவா?” என்றான். “இரவில் அறியா நிலத்தில் புரவிகள் புல் மேய்வது அரிது” என்றான் அக்கரியவன். “நான் புல் அரிந்துகொண்டு வந்து போடுகிறேன்” என்று கஜன் சொன்னான். “நான் பிறரிடம் சொல்லிக்கொள்கிறேன், நீர் என்னுடன் இரும்” என்றான் கரியவன். “என் பெயர் கிரந்திகன். புரவிச்சூதன்.” கஜன் தன்னை அறிமுகம் செய்துகொண்டான்.

“இந்தக் காட்டில் எத்தனை காலமாக பணியாற்றுகிறீர்?” என்று கிரந்திகன் கேட்டான். “நானா?” என்றபின் “நெடுங்காலமாக” என்றான். “உம்மைப் பார்த்தால் நெடுங்காலமாக இப்புவியில் வாழ்பவர் போலவே தோன்றவில்லையே?” என்று கிரந்திகன் சொன்னான். பின்னாலிருந்த புரவியிலிருந்து இறங்கி அருகே வந்த முக்தன் “இங்கு வந்துவிட்டாயா? தீர்க்கன் எங்கிருக்கிறான்?” என்றான். முகம் மாறி சிறிய பதற்றத்துடன் “அவர் மேலே, காவல்மாடத்தில்” என்று திக்கினான் கஜன். “சென்ற வாரம்வரை இளவரசரிடம் ஊழியனாக இருந்தான். அங்கு இருந்து பித்துப்பிடிக்கிறது என்று சொன்னதனால் இவனை இங்கு பணிக்கு அனுப்பினேன்” என்றான். “நெடுங்காலம் என்றால் ஒரு வாரம் என்று பொருளா?” என்றான் கிரந்திகன். முக்தன் சிரித்து “இங்கமர்ந்திருந்தால் ஒவ்வொரு நாளும் ஒரு ஆண்டுக்கு நிகர்” என்றான்.

முந்தைய கட்டுரைநம் நாயகர்களின் கதைகள்
அடுத்த கட்டுரைபச்சைக்கனவு –கடிதங்கள் 3